குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label திருவாரூர். Show all posts
Showing posts with label திருவாரூர். Show all posts

Tuesday, December 10, 2013

திருவாரூர் பயணத்தின் போது

அவசர வேலையின் காரணமாக திருவாரூர் சென்றேன். கோவையிலிருந்து கரூர் வரைக்கும் சாலை அற்புதமாய் இருந்தது. குறுகிய சாலைகள் எல்லாம் அகலமாய் இருந்தன. இருப்பினும் குறுக்கே நெடுக்கே விருட் விருட் என்று செல்வது மட்டும் குறையவே இல்லை. உயிரை முடி போல நினைக்கும் மனோபாவம் எப்படி சில மனிதர்களுக்கு ஏற்பட்டது என்பது புரியாத புதிர்தான். 

கரூர் பேருந்து நிலையம் எதிரில் இருக்கும் வள்ளுவர்(சங்கீதா) ஹோட்டலில் சூடான தோசை இரண்டினை சாப்பிட்டு விட்டு கிளம்பினேன். முன்பெல்லாம் வள்ளுவர் ஹோட்டல் பரோட்டா என்றால் எனக்கு மிகப் பிரியம். குருமாவும் பொலு பொலுவென உதிரும் பரோட்டாவும் வாயில் ஜொள்ளைக் கிளப்பும். எனது மாமனார் வீட்டிலிருந்து கோவைக்கு வந்தால் அவர்களுடன் கரூர் வள்ளுவர் ஹோட்டல் பரோட்டாவும் வரும். சமீபத்தில் அப்படி வந்த பரோட்டாவைச் சாப்பிடும் போது எரிச்சல் மண்டியது. பட்சணங்களின் விலையோ யானை விலை.

 கரூரிலிருந்து திருச்சிக்குச் செல்லும் வழியில் குளித்தலை தாண்டிச் செல்லும் சாலை குண்டும் குழியுமாய் இருந்தது. முன்பெல்லாம் சாலையோரத்தில் அதிக மரங்கள் இருந்தன. இப்போதோ வெறிச்சோடிப் போய் கிடந்தது. சாலையை அகலப்படுத்தியன் காரணமாய் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன போலும். காவிரி ஆற்றங்கரையோரமாய் சென்று கொண்டிருந்த போது காவிரி ஆற்றுக்குள் நிறைய லாரிகள் நின்று கொண்டிருந்தன. பாளம் பாளமாய் கீறி மண் அள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.  நிறைய லாரிகள் ஈக்கள் போல திரிந்தன.பரந்து விரிந்து கிடக்கும் காவிரி ஆறு தண்ணீரை மட்டும் கொடுக்கவில்லை.

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் சாலையைப் பிடித்து சென்று கொண்டிருந்த போது எதிரே இரண்டு கல்லூரி மாணவர்கள் அடிபட்டுக் கிடந்தார்கள். ஒருவருக்கு காலில் பாதியைக் காணவில்லை. இன்னொருவர் நடுரோட்டில் கிடந்தார். சுற்றிலும் கூட்டம். பல்ஸர் பைக் நசுங்கிப் போய் கிடந்தது. 108 ஆம்புலன்ஸில் அவர்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்னே ஒரு பைக் கிராஸ் செய்து சென்றது. அதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் கையில் போனுடன் கிட்டத்தட்ட 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தனர். விரைந்து கொண்டிருக்கும் பல விதமான வாகனங்களில் ஒரு நொடி மாறினாலும் சில்லுச் சில்லாய் சிதறி விடுவார்கள். ஏன் தான் இப்படி இருக்கின்றார்களோ தெரியவில்லை. 

நான் படித்த பூண்டி வாண்டையார் கல்லூரியில் கல்வி பயின்ற தமிழகத்தின் மிகப் பிரபலமான டான்ஸ் மாஸ்டரின் மகன் பைக் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார். இன்றைக்கும் பூண்டி ஆற்றங்கரையில் அவரின் நினைவாக பஸ் நிறுத்தமொன்று இருக்கிறது. இப்படியான நினைவகங்கள் பெருகக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. 

வீடு வரும் வரை அந்த ஆக்சிடெண்டின் பாதிப்பு இருந்தது. யார் பெற்ற பிள்ளையாக இருந்தால் தான் என்ன? அது ஒரு ஜீவன் தானே? அவர்களின் குடும்பமும், அவர்களும் என்ன பாடுபடுவார்கள் என்று நினைத்தாலே மனது வலிக்கிறது. வாலிப முறுக்கில் இப்படியான சின்னத்தனமான காரியங்கள் எவ்வளவு பெரிய இழப்புகளை தந்து விடுகின்றன என்பதை குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள். பெற்றோர்கள் பசங்களுக்கு பைக் வாங்கிக் கொடுக்கும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.