குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, April 1, 2021

நிலம் (81) - நத்தம் நிலங்கள் உரிமை யாருக்கு? முழுமையான விளக்கம்

நத்தம் பூமி அரசுக்குச் சொந்தமா? என்ற பதிவு எழுதி இருந்தேன். அதில் அரசுக்கு நத்தம் பூமியில் உரிமையில்லை என்று மட்டும் எழுதி இருந்தேன். விபரங்கள் எழுத வில்லை.

சமீபகாலமாக எனக்கு வரும் பல்வேறு அழைப்புகள் நத்தம் பூமி உரிமைத் தொடர்பாக இருக்கிறது. காலம் காலமாக குடியிருந்து வரும் இடங்களை வி.ஏ.ஓ மற்றும் உள்ளாட்சியினைச் சேர்ந்த தலைவர்கள், கவுன்சிலர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆக்கிரமிப்புச் செய்வதும், அதில் முறைகேடுகள் செய்வதுமான பல்வேறு சம்பங்களை என்னைத் தொடர்பு கொள்ளும் நபர்களின் மூலமாக அறிய நேர்ந்தேன்.

இதை சட்டபூர்வமாக விரிவாக பார்க்கலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இரவிச்சந்திரபாபு அவர்களின் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தது. அவ்வழக்கின் மனுதாரர் இளங்கோவன் என்பவர் சுமார் 1.30 ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூமியில் பரம்பரையாக குடியிருந்து வருகிறார். இந்த மனுதாரருக்கு பல்வேறு இடங்களில் நிலங்கள் இருக்கின்றன. ஆகவே அரசு வருவாய் துறையினர் இளங்கோவனிடம் இந்த இடத்தினை நிலம் இல்லா ஏழைகளுக்கு வழங்க இருப்பதாகவும், ஆகவே உடனே காலி செய்யும்படியும் சொல்லி இருக்கின்றார்கள். இதற்கு உள்ளாட்சி அமைப்பினரும் உடந்தை.

இந்த இடத்தில் ஒரு குறிப்பு : பல கிராம பஞ்சாயத்து தலைவர்களும், நகரப் பஞ்சாயத்து தலைவர்களும், பஞ்சாயத்துக் கூட்டத்தில் நத்தம் நிலங்களின் உரிமை பஞ்சாயத்தாருக்கு இருப்பது போலவும், அதை பொதுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என்பது போலவும் தீர்மானங்களை நிறைவேற்றி, அதை வி.ஏ.ஓ மூலம் ரெவின்யூ அதிகாரிகளின் வழியாக பட்டாக்களையும் மாற்றி இருக்கின்றார்கள். எனக்கு அழைத்த பலர் இந்தச் சம்பவத்தை விவரித்திருக்கிறார்கள்.

இனி தொடரலாம்.

இப்படியான சூழலில் வழக்கு மேல் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வருகிறது. 

இனி வழக்கில் என்ன சொல்லப்பட்டது எனப் பார்க்கலாம்.

நீதிமன்றத்தின் முன்னால் இரண்டு கேள்விகள் இருந்தன. 

ஒன்று -  கிராம நத்தம் அல்லது நத்தம் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட சொத்திற்கு அரசுக்கோ அல்லது கிராம / நகர பஞ்சாயத்து அமைப்புக்கோ உரிமை இருக்கிறதா?

இரண்டு - அவ்வாறு இருப்பின் குடியிருந்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலுமா?

இக்கேள்விகளின் பதிலை இனி பார்க்கலாம்.

சென்னைப் பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் அகராதியில் கிராம நத்தம் என்றால் கிராமத்தின் வசிக்கும் பகுதி அல்லது பிராமணர் அல்லாதவர்கள் வசிக்கும் பகுதி அல்லது வீட்டு மனைகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, சென்னை சட்டம் 3/1905 (Tamilnadu Land Encroachment Act 1905) ன் படி கிராம நத்தத்திலிருக்கும் உரிமையானது அரசுக்கு மாறுதல் செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் நத்தம் என்பது கிராமப்பகுதிகளாக வகை பிரிக்கப்பட்டன. அதில் குடியிருந்து வருபவர்கள் எவ்வளவு நிலத்தின் மீது அனுபோகத்தில் இருக்கிறார்களோ அதை அளந்து, தீர்வை விதித்து அவர்களுக்கு உரிமை உடையதாக்க வேண்டுமென்கிறது மூன்றாம் சட்டத்தின் ஏழாம் பிரிவு. அதை அரசு தன் உடமையாக கருதக்கூடாது.

பெரும் பணக்காரர்களாக இருந்தாலும், கிராம நத்தத்தில் குடியிருப்பவர்கள் பல நிலங்களை உடையவர்களாக இருந்தாலும், அரசு அதைக் கையகப்படுத்த முடியாது. அது குடியிருப்பவர்களுக்கு மட்டுமே உரிமையானதாகும்.

கிராம பஞ்சாயத்தார் ரெவின்யூ விவகாரங்களில் தலையிட்டு சொத்தின் உரிமை மாற்றம் செய்வதற்கு பஞ்சாயத்து தீர்மானங்கள் மூலம் ஏதும் செய்ய முடியாது. அவ்வாறு செய்வது சட்ட விரோதம்.

இந்த வழக்கின் ஆதாரமாக தில்லைவனம் எதிர் மாவட்ட ஆட்சித்தலைவர் செங்கை அண்ணா மாவட்டம் (வழக்கு எண்:1998-3-LW-603)  மற்றும் எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் கடத்தூர் டவுன் பஞ்சாயத்து எதிர் பி.சுவாமிநாதன் (வழக்கு எண் 2004-3-LW- 278) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் நிலத்தின் உரிமையாளர் விவசாயம், குடோன் மற்றும் இதர வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றைச் செய்து கொள்ளலாம். இதற்கு அரசு எந்த வித தடங்கலும் ஏற்படுத்த முடியாது.

ஆகவே நண்பர்களே, இப்போது உங்களுக்கு கிராம நத்தம் என்றால் என்ன, அதன் உரிமையாளர் யார் என்ற விபரங்கள் தெரிந்து இருக்கும்.

இந்த விபரங்கள் தெரியாத அப்பாவிகளை ரெவின்யூ அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பினரும் மிரட்டி சட்ட விரோதமாக ஆக்கிரமிப்புகளை உருவாக்கி ஏமாற்றி வருகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு வி.ஏ.ஓ புதிதாக பொறுப்பேற்கும் கிராமத்தில் இருக்கும் பட்டா வழங்கப்படாத நத்தத்தில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பட்டா வழங்கி ஊழல் செய்திருக்கிறார்.

மனுக்கள் போட்டால் எந்த வித காரியமும் நடக்காது. இப்படிச் சட்டத்திற்குப் புறம்பான வழியில் பிறரின் சொத்தின் உரிமையைத் திருடும் நோக்கில் செயல்படும் எவராக இருப்பினும் அவரைச் சட்டத்தின் முன்பு நிறுத்தி பணி நீக்க ஆணை பெறல் வேண்டும்.

மிகச் சரியான ஆவணங்களையும், வழக்கும் போட்டு நிவாரணம் பெற பாதிக்கப்பட்டவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைக் கட்டணம் உண்டு. ஏனென்றால் தினமும் உங்களைப் போல எனக்கும் பசி எடுக்கும் அல்லவா?

இப்பதிவினை பலருக்கும் பகிர்ந்து விடுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்

எனது யூடியூப் சானல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்திருங்கள்.

https://www.facebook.com/goldonlineproperties

https://www.youtube.com/c/goldonline0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.