குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, October 22, 2021

வினோதய சித்தம் திரைப்படம் விமர்சன ஆய்வு

அமெரிக்காவிலிருக்கும் நண்பரின் வேண்டுகோளுக்காக நேற்று இரவு வினோதய சித்தம் படத்தினைப் பார்த்தேன்.

படம் ஜீ5-யில் வெளியாகி உள்ளது. பல இடங்களில் தெளிவான திரைப்பட ஃபைல்களும் கிடைக்கின்றன. டிஜிட்டல் உலகிது. உரிமையாளரை விட பிறருக்குதான் நன்மை. ஃபேஸ்புக் கண்டெண்டுகளை தனதாக்கி கொள்வதைப் போல. 

கண்டெண்ட் உருவாக்குபவர்களுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லாமல் செய்யும் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றின் மீது அதீத பிரியம் கொள்ளும் மடச்சாம்பிராணிகள் இருக்கும் வரை வாழ்க்கை சுகபோகம் தான். இது அவர்களின் பிரச்சினை இல்லை, நம்பும் மனிதர்களின் மனப்பிறழ்வு நோய்.

சரி படத்துக்கு வந்து விடலாம்.

படம் என்ன சொல்கிறது?

தம்பி ராமையா ஒரு குடும்பத்தின் தலைவர். பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர். கண்டிப்பானவர். மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என வாரிசுகள். மகனுக்கு அமெரிக்காவில் பணி. மகள்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கோவை செல்லும் ராமையா, வீட்டுக்கு வரும் போது ஆக்ஸிடெண்டில் இறக்கிறார். அதன் பிறகு காலம் (டைம்) சமுத்திரக்கனி வடிவில் வருகிறது. தம்பி ராமையாவின் கடமைகள் நிறைவேற்ற மீண்டும் உயிர்ப்பிக்கிறது. ராமையா உயிர் பெறுகிறார். தன் இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வீட்டுக்குள் வருகிறார் 90 நாட்கள் கெடுவுடன்.

மகள் இன்னொருவனுடன் சென்று விடுகிறாள். சின்ன மகள் ராமையாவின் ஆசைக்காக அவரின் நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். மகனோ அமெரிக்காவில் பணி இழந்து வரும் போது ஒரு பெண்ணுடன் வருகிறான்.

காதலித்தவன் உடன் சென்ற மகளை ஏற்று திருமணம் செய்விப்பது, இளைய மகளின் திருமணம் நிறுத்தப்பட்டு படிப்பினைத்தொடர அனுமதிப்பது, கிறிஸ்டியன் மருமகளை ஏற்றுக் கொள்வது, கம்பெனியில் ஜி.எம் போஸ்ட் நிராகரிக்கப்பட்டு பிறகு மேனேஜிங்க் டைரக்டர் வாய்ப்பு பெறுவது, மனைவியின் பார்க்கின்ஸன் நோய்க்கு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்வது என தன் கடமைகளை முடித்து விட்டு காலக்கெடுவுக்குள் இறந்து போய் விடுகிறார் தம்பி ராமையா.

தம்பி ராமையா தற்போது இருக்கும் நிறுவனத்திற்கு இண்டர்வியூவுக்காகச் செல்கிறார். அங்கு மதனகோபால் என்ற நபரும் வருகிறார். அந்த இண்டர்வியூயில் மதனகோபால் கலந்து கொண்டால், இவருக்கு வேலை கிடைக்காது என்பதனால், பொய் தகவலைக் கூறி இண்டர்வியூவில் கலந்து கொள்ள முடியாமல் செய்கிறார் தம்பி ராமையா. இதற்குப் பதிலாக தம்பி ராமையா ஆர்வத்துடன் எதிர்பார்த்த ஜி.எம் போஸ்ட்டுக்கு ஒரு இளைஞரை நியமிக்கிறார் இயக்குனர். அவர் மதனகோபாலின் மகன் வேணு என்கிறார் காலம்.

அடுத்து சந்தியா. தம்பி ராமையா காதலித்து கை விட்ட பெண். அவர் தற்போது மேகாலயாவின் கவர்னர் ஆக இருக்கிறார் என்கிறார் காலம். 

கணக்கு நேராகி விட்டது.

படம் அவ்வளவுதான்.

இணையதளங்களில் இப்படத்தினைப் பாராட்டித் தள்ளி இருக்கிறார்கள். பலராலும் சிலாகிக்கப்பட்டிருக்கிறது.

சரி இனி ஆய்வுக்குப் போகலாம்.

*  *  *

படத்தின் கிளைமேக்ஸில் தம்பி ராமையா காலத்துடன் சொர்க்கத்துக்குச் செல்வார். அப்போது,

”ஏம்பா சொர்க்கத்தில் என்ன மொழிப்பா?”

”அங்கே மொழி எல்லாம் இல்லை”

“அப்போ நரகத்திலே?”

”அங்கே இருந்துதானே உங்களைக் கூட்டிட்டு போறேன்”

பூமியை நரகம் என்கிறார் சமுத்திரகனி (1)

* * *

தம்பி ராமையாவின் மனைவி,  தன் இளைய மகளிடம், ”பதினாறு வயதில் அப்பாவின் ஆசைக்காக திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு மாமனார், மாமியார், புருஷன், என் பிள்ளைகள் என அவர்களுக்கு என்ன பிடிக்குமுனு பார்த்துப் பார்த்துச் செய்தேன். ஆனால் இப்ப வரைக்கும் எனக்கு என்ன பிடிக்கும் என எனக்குத் தெரியாமலே போய் விட்டது” என்கிறார்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் பெண்கள் அடிமையாக வாழ்கிறார் என்கிறார் சமுத்திரக்கனி (2)

* * *

பதின்ம வயதில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுய சிந்தனை உள்ளது, அவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாமே சரியாகத்தான் இருக்கும் என்பதால் பெற்றோர்களின் ஆசைகளை அவர்களின் மீது திணிக்காமல் அவர்களை அவர்களாகவே வாழ விடுங்கள் என்கிறார் சமுத்திரக்கனி (3)

* * *

மூத்த பெண் பிள்ளை காதலித்தது, மகன் கிறிஸ்டியன் பெண்ணைக் காதலித்தது அனைத்தும் தம்பி ராமையாவின் மனைவிக்கு முன்பே தெரியும். எல்லாம் தெரிந்தவராய் நடந்து கொள்ளும் தம்பி ராமையாவுக்குத் தெரியாது. தம்பி ராமையாவின் மனைவி ரொம்ப நல்லவர். அதாவது மனைவி தன் கணவனிடம் எல்லாவற்றையும் மறைத்து விட்டு குடும்பத்தை நிர்வகித்து வருகிறார் என்கிறார் சமுத்திரக்கனி (4)

* * *

மதன கோபாலை ஏமாற்றியதற்காக அவரின் மகன் வேணு கோபாலுக்கு ஜி.எம். பதவி கிடைத்தது. மதன கோபாலை ஏமாற்ற வில்லை என்றால் தற்போது கிடைக்கும் சம்பளத்தை விட மிக உயர்ந்த சம்பளத்துடன் வேலை இருந்ததாகவும், அது மதனகோபாலுக்கு கிடைத்து விட்டதாகவும் சொல்கிறார் சமுத்திரகனி.  அதாவது உனக்கு கிடைக்க வேண்டிய பெரிய வேலை உன்னால் உனக்கு கிடைக்காமல் போனது என்கிறார் சமுத்திரக்கனி (5)

* * *

சந்தியாவை திருமணம் செய்யாமல் போனதால் தான் அவர் மேகாலயாவின் கவர்னர் ஆக இருக்கிறார். அவருக்கு நன்மைதான் செய்திருப்பதாகச் சொல்கிறார் சமுத்திரகனி (6)

* * *

மேலே குறிப்பிட்டிருக்கும் 6 குறிப்புகளை மீண்டும் படித்துப் பாருங்கள். இனி விளக்க உரையைப் பார்க்கலாம்.

* * *

1வது குறிப்பு:-

பூமியை நரகம் என்றால் இங்கு வசிப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகளா?  கொலை செய்தவர்களா? மாபாதகம் செய்த தீயவர்களா?

மனிதராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டுமென்கிறார்கள் முன்னோர்கள். 

ஆனால் இயக்குனர் பூமியை நரகம் எனச் சொல்கிறார். 

இதன் அர்த்தம் என்னவாக இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தோமென்றால் பாபிகளே என்று கூக்குரல் இடும் மதம் நினைவுக்கு வருகிறது. இல்லையென்று உங்களால் மறுக்க முடியாது சமுத்திரக்கனி. நீங்கள் பிற மதத்தினை நாசூக்காக கிண்டல் செய்து அதை படத்தினைப் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைக்க முனைந்திருக்கின்றீர்கள்.

1வது குறிப்பின் வசனத்தின் அடிக்காரணம் : மதம் எனப் புரிந்து கொள்ளுங்கள். (எவ்வளவு காசு வாங்கினீர்கள்?)

* * *

2வது குறிப்பு:-

உண்மையில் மனிதப்படைப்பின் நோக்கம் உயிர்களைப் படைப்பதற்காகத்தான் என்கிறது இயற்கை. ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு தன் குடும்பத்திற்காகத்தான் வாழ வேண்டும். வேறு எதற்காக வாழணும் என்று சமுத்திரக்கனி சொல்வாரா?

ஆசைகள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு ஆசைகளும் நிறைவேறிய பிறகு அடுத்து என்ன என்ற தேடுதல் அற்றுப் போய் வெறுமை மண்டி விடும். அதற்காகத்தான் மனித உணர்வுக்குள் பாசம், பற்று என்ற உணர்வுகளை மனத்தில் உருவாக்கி குடும்பப்பிணைப்பினை இரும்பினை விட கடினமானதாக வைத்திருக்கிறது இயற்கை.

ஒவ்வொரு விலங்கிற்கும் இந்த உணர்வு உண்டு அல்லவா? மனிதர்கள் ஆறறிவினால் வாழ்க்கை நியதிகளை ஒழுங்குபடுத்தி இருக்கின்றார்கள். 

மனிதர்களுக்கு தனிப்பட்ட ஆசைகள் என்ற ஒன்று இல்லவே இல்லை. இரண்டு நபர்கள் இணைந்து, கூட்டாக உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படும் பிள்ளைகள் பின்னாட்களில் அதே வேலையைத்தான் செய்ய வேண்டும். தன் கடமையைச் செய்ய வேண்டும். பெண்களுக்கு மட்டுமே தனிப்பட்ட ஆசைகள் இருப்பதாகவும், ஆண்களுக்கு அது இருக்கவே கூடாது என்பது போலவும் அல்லவா இயக்குனர் சொல்கிறார்.

உங்கள் படத்தில் தம்பி ராமையா உழைப்பது யாருக்காக? அவர் ஏன் தன் காதலியை விட்டு விட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? அவரின் ஆசை என்னவானது? ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை நீங்கள்? பேச மாட்டீர்கள். ஏனென்றால் உங்களின் டார்கெட் ஆண்கள் அல்ல. பெண்கள். பெண்கள் வழி மாற்றப்பட்டால் சமூகக் கட்டமைப்பு குலையும்.  அதை நீங்கள் உங்கள் படத்தின் வழியாகச் சொல்லி மூளைச்சலவை செய்திருக்கின்றீர்கள். 

பெண்களுக்கு தனிப்பட்ட ஆசைகள் இருப்பதாகவும், அது திருமணத்தினால் பறிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டதாகச் சொல்லக் காரணம் என்ன?  

பெண்கள் சமூகத்தில் தனிமையில் வாழ வேண்டும். இப்படியே பெண்ணியம் பேசிப் பேசி ’சிங்கிள் மதர்’ என்ற ஒரு இனத்தையே உருவாக்கி வைத்துள்ளார்கள் சினிமாக்காரர்களும், பல இலக்கியவியாதிகளும். அரசியல்வாதிகளைக் கூட நம்பி விடலாம். ஆனால் இவ்வகையான ஆட்கள் மனித குலத்திற்கே ஆபத்தானவர்கள். சிங்கிள் மதர் என்றால் எளிதாகக் கைப்பற்றி அனுபவித்து விட்டு தூக்கி எறிந்து விடலாம் அல்லவா? 

இதைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் நடிகைகள் ஸ்ரீபிரியா, கஸ்தூரி மற்றும் தினமலர் அந்து மணியிடம் விசாரணை செய்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல தினமலர்-வாரமலர் குற்றாலம் டூர் சென்று வரும் பெண்களை விசாரணை செய்து பாருங்கள். 

பூமியில் பூகம்பம் வந்தால் அது நரகமாகி விடுமா? பூகம்பம் வருகிறது என்பதற்காக பூமியை விட்டு ஓடி விட முடியுமா? வேறு வழி இல்லை. வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

ஒருவனை அழிக்க வேண்டுமென்றால் ஆசையைத் தூண்டி விடு என்பார்கள். இயக்குனர் பெண்களுக்கு அவர்களின் ஆசை என்பது  போல ஒரு மாயையை உருவாக்குகி இருக்கிறார். 

வேலை செய்து வாழ்க்கைக்காக. வேலைக்காக ஒரு மனிதன் வாழ்ந்தான் என்றால் அது அவன் கொண்ட நோய். புரிதல் தன்மை இல்லாதவன் அவன்.  

திருமணமான ஆணும் பெண்ணும் எல்லா ஆசைகளையும் விட்டு விட்டு தன் குடும்பத்திற்காகத்தான் வாழ்வார்கள். இயற்கை விதி அது. இதில் பல முரண்பாடுகள், அக்கிரமங்கள் இருக்கும்.  அவை விதி விலக்குகள். விலக்குகளை விதிகளாக மாற்றிப் பேசுவது மடமை. இல்லறம் அன்றி நல்லறம் ஏதுமில்லை. இல்லறவியல், அகநானூறு என்று பாடல்கள் புனைந்த பெருமைக்குரியது தமிழ் கலாச்சாரம். 

உங்களின் நோக்கம் குடும்ப அமைப்பைச் சீரழிப்பதுதானே சமுத்திரக்கனி?

* * *

3வது குறிப்பு:-

இளம் வயதினர் உணர்வுகளின் பிடியில் இருப்பார்கள். அவர்களின் சிந்தனைகள் எதிர்காலத்தில் இருக்காது. உணர்வுகள் நிகழ்காலத்தில் நிகழ்பவை. வாழ்வியல் அனுபவம் கொண்ட மூத்தோர்களின் வழி காட்டுதல் மிக அவசியமானவை. 

அதற்காகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வயது நிர்ணயம் செய்யவில்லை.  வயது என்பது அனுபவம். வெறும் அனுபவம் என்று கடந்து போய் விட முடியாது. சூழலியல் அனுபவம் என்பது வெகு முக்கியம்.

வாழ்வியல் அமைவிடங்கள். கலச்சாரம், சமூகம் இவைகளின் பிரதிபலிப்பாகத்தான் மூத்தோர்களின் அனுபவம் இருக்கும். சல்லிப்பயல்களைப் பற்றி இங்கு சிந்திக்க கூடாது. பெரும்பான்மை பற்றிய சிந்தனை வர வேண்டும்.

மூத்தோர்கள் சொற்கள் தான் எதிர்காலத்தின் வழித்தட அறிவிப்புப் பலகைகளாக இருந்து வருகின்றன. 

இங்கு சித்தர்கள், ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, புத்தர், சூஃபிக்களுக்கு வேலை இல்லை.  அவர்கள் மனித மனத்திற்கான ஆய்வாளர்கள். கரை புரண்டோடும் மன வெள்ளத்தினை சரியான பாதை நோக்கித் திருப்பி விடுபவர்கள். 

பிள்ளைகள் ஆசைப்படுவதை படிக்க வையுங்கள், அவர்களின் முடிவு சரியாகத்தான் இருக்கும் என்கிறார் சமுத்திரக்கனி.  எது சரி? எது தவறு என்று அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை செய்து ஒரு செயலைச் செய்வதுதான் புத்திசாலித்தனம். 

உணர்வுகளால் உருவாகும் முடிவுகள் எதிர்காலத்தில் ஆபத்தினை உருவாக்கி விடும். பெரும்பாலும் சிக்கல்களைத்தான் தரும். இஞ்சினியரிங்க், ஐ.டி படிப்புகள் படித்தவர்களின் தற்போதைய நிலை என்னவென்று நான் சொல்லித்தான் தெரியவில்லை.

உணர்வுகளைத் தூண்டி விட்டு, மடை மாற்றப்படும் பிள்ளைகள் இப்போது தற்கொலைகள் செய்து கொள்கிறார்கள். ஆதரவு சொல்லக்கூட ஆட்கள் இல்லை. ஆதரவற்றவர்களின் இறுதிப்புகலிடம் தற்கொலை. ஆதரவு சொல்லவும் கட்டண மருத்துவர்கள் வந்து விட்டார்கள். 

ஏனென்றால் பெண்களை ஆசை அது இதுவென்றுச் சொல்லிப் பிரித்து விட்டால் ஆண்கள் தனியனாக வாழ வேண்டும். ஆண்களும் பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்கள் சென்று சேரும் இடமெல்லாம் அயோக்கியர்கள் கூடாரம்.

அப்போதுதான் டாஸ்மாக்குகள் வருமானம் பல்கிப் பெருகும். மருத்துவ மாஃபியா கல்லா கட்டும். ஹோட்டல்களுக்கு வியாபாரம் ஆகும். மீடியாக்களில் வரும் விளம்பரங்கள் காசாகும். அவ்வாறு காசு ஆனால் தான் நாடு செழிக்கும்.

குடும்பம் சிதைக்கப்பட்டு, இளம்பிள்ளைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்தால் தான் வியாபாரம் பெருகும். 

படிப்பு என்பது வேலைக்கான தகுதி சமுத்திரக்கனி. அது வாழ்க்கைக்கான தகுதி அல்ல. 

பதவி என்பது ஈகோவிற்கான முதலீடு. தனி மனிதனுக்கு உதவாது. 

பணம் வாழ்க்கைக்காக. வாழ்க்கை பணத்துக்காக அல்ல.

கோடானு கோடி பணம் குவித்திருப்போர் பலரும் தங்கள் இறுதியில் சேவை செய்கிறார்கள்.

தன் தேவைக்கும் மேலே இருக்கும் பணம் வெறும் எண்கள் மட்டுமே. 

மனம் ஆசைப்படுவதை எல்லாம் செய்ய ஆரம்பித்தால் தெருவில் ஒருத்தனும் உயிரோடு இருக்க முடியாது சமுத்திரகனி.

சும்மா வெள்ளை அடிக்காதீர்கள். உங்கள் நோக்கம் குடும்பக் கட்டமைப்பினை சிதைப்பது அல்லவா?

* * *

4வது குறிப்பு:-

இல்லறத்தின் மாண்பினை உங்கள் மனைவி அறிவார் சமுத்திரகனி. முதலில் உங்கள் மனைவியிடம் தெளிவு பெறுங்கள். இல்லையென்றால் உங்கள் படத்தினை தயாரித்த நல்லம்மை ராமனாதனிடம் சென்று கேளுங்கள். நல்லம்மை அம்மையார் தன் கணவனிடம் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றாரா என்று கேளுங்கள். 

அபிராமி ராமநாதன் வியாபாரம் செய்கிறார். 

சினிமா என்பது வியாபாரம் என்பதை என்று மக்கள் புரிந்து கொள்கின்றார்களோ அன்றைக்குத்தான் விடிவுகாலம் பிறக்கும். இல்லையெனில் நாட்டை ஆள ஓட்டுப் போட்டு விடும் ஈனத்தனம் நடந்து கொண்டே தான் இருக்கும்.

அடிக்குறிப்பு: வியாபாரத்துக்கும் தொழிலுக்கும் வித்தியாசம் உண்டு. டாடாவிடம் ஒரு முறை நீங்கள் ஏன் அம்பானி போல உலகப் பணக்காரர்கள் வரிசையில் வரமுடியவில்லை என்று கேட்கின்றார்கள். அதற்கு அவர் அம்பானி வியாபாரம் செய்கிறார், நான் தொழில் செய்கிறேன் என்கிறார். 

அம்பானியின் வியாபாரம் என்பது தெருவில் கடை விரித்து  நடத்தப்படுபவை. ஆனால் தொழில் என்பது தொழிலாளர்களுக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும் செய்யப்படுபவை.

ஒரு மனைவியானவள் தன் கணவனிடம் குடும்பத்தில் நிகழப்போகும் மாற்றத்தினை முன் அறிவித்து சரி செய்வாள். சரி தவறு எவை என்று தன் குடும்பத்திற்குச் சொல்லத் தெரிந்திருத்தல் வேண்டும்.

நீங்கள் உங்கள் படத்தில் காட்டிய மனைவிக்குப் பெயர் மனைவி அல்ல. அவள் மனிதப் பிறவியே அல்ல. கணவன் மனைவுக்குள் உண்மை இல்லை எனில் அது இல்லறமே இல்லை. அதற்குப் பெயர் கள்ளத்தனம். ஓடி ஓடி உழைத்து வீட்டுக்கு கொண்டு வரும் கணவனுக்கு மனைவி செய்யும் துரோகம். 

ஆனால் அப்பெண்ணை நீங்கள் தியாகி என்கின்றீர்கள். உள் நோக்கம் புரிகிறது சமுத்திரகனி

* * *

5 மற்றும் 6வது குறிப்பு:-

உன்னால் தான் உனக்கு கிடைத்திருக்க வேண்டிய பெரிய சம்பளத்துடனான வேலை கிடைக்காமல் சிறிய சம்பளத்தில் வேலை செய்கிறாய் என்கிறார் சமுத்திரக்கனி. 6வது குறிப்பில் உன்னால் கை விடப்பட்ட பெண் இப்போது கவர்னராக இருப்பதால் நீ அவளுக்கு நன்மை தான் செய்திருக்கிறாய் என்கிறார்.  தம்பி ராமையா செய்தது இரண்டு தவறு என்றால் அதற்கான பலனை அடைவதுதான் சரி என்றால் சந்தியாவின் தற்போதைய வாழ்க்கை கவர்னர் என்பதால் சமமாகி விட்டது என்கிறார் சமுத்திரக்கனி. உயர் பதவி ஒருவருக்கு கிடைத்து விட்டால் ஏமாற்றிய பாவம் சேராது என்கிறார் போலும்.

உங்களின் அறம் புரிகிறது சமுத்திரக்கனி.

அறம் பற்றிப் பேச சமுத்திரகனிக்கு தகுதி இருக்கிறதா என்றால் இல்லை என்பேன். ஏனெனில் அவர் இன்னும் திருந்தியபாடில்லை. 

மக்களால் மறக்கப்பட்டு ராதிகாவிடம் சென்று சீரியல் இயக்கும் வாய்ப்பினைப் பெற்று, அதன் பிறகு படம் இயக்கி வெற்றி பெற்று, நடிகனாக மாறி மக்களின் அபிமானத்தைப் பெற்றாலும், தனக்கு இச்சமூகம் எந்த வித பிரதிபலனும் பாராமல் கொடுத்தவைகளை வைத்து சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் படைப்புகள் மூலம் எதிர்வினை ஆற்றுகிறார்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அறத்தின்  வழி வாழ்க்கை நடத்தி இருந்தால் அது அவனின் வாரிசுகள் வழியாகத்தான் நிரூபிக்கப்படும். 

எம்.ஜி.ஆர் அவ்வாறு வாழ்ந்தாரா என்று இவ்விடத்தில் யோசிக்க வேண்டும். ஜெயலலிதா அவ்வாறு வாழ்ந்தாரா என்று சிந்தனை செய்தல் அவசியம். அவ்வாறு சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால் வாழ்க்கையின் அடித்தளம் எதுவென்று புரிந்து விடும்.

* * *

நீண்ட பதிவாகி விட்டது. ஐந்து மணிக்கு ஆரம்பித்தேன். இப்போது ஏழு மணி ஆகி விட்டது. இரண்டு மணி நேரம் விழுங்கி இருக்கிறது இப்பதிவு. எனக்கு மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரத்தை நான் இழந்திருக்கிறேன் இப்பதிவினால் என்பதையும், நீங்கள் படிக்கும் நேரத்தினையும் இழந்திருக்கின்றீர்கள் என்பதையும் விட இப்பதிவு உங்கள் மனதுக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்னவென்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்.

உங்களிடம் கேட்க வேண்டியது ஒன்று மட்டுமே?

குடும்ப அமைப்பு தேவையா? தேவை இல்லையா? இதற்கான பதிலை நீங்களே உங்களுக்குள் உங்கள் அனுபவ அறிவு, படிப்பறிவு கொண்டு தேடிக் கொள்ளுங்கள்.

* * *

என்ன இருக்கிறதோ அதை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் என்கிறார் நண்பர். ஆனால் நான் படைப்பினை ரசிப்பதை விட அதன் உள் நோக்கம் என்னவென்பதை ஆராய்பவன். காரணமின்றி காரியமில்லை அல்லவா? 

காலம் என்பது எதிர்காலத்திலும் இல்லை, இறந்த காலத்திலும் இல்லை. அது இந்த நொடியில் இருப்பது. ஆகவே இப்படத்தின் கருவே முற்றிலும் தவறான புரிதல் கொண்டது. அதுமட்டுமல்ல காலம் என்பது உயிர்களுக்கு மட்டுமே. 

உண்மையில் காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை. 

* * * 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.