குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, October 16, 2021

பெருந்தகை குணவதி ஞானசெளந்தரி நினைவு அஞ்சலி


(திருமதி ஞானசெளந்தரி)

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகமனர்ந்து 

நல்விருந்து ஓம்புவான் இல் 

அறத்துப்பால் - இல்லறவியல் - விருந்தோம்பல் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகையாளர் இல்லறத்தின் செழுமை பற்றி எழுதி இருக்கிறார். 

திருக்குறளில் ஒரு அதிகாரத்துக்கு விருந்தோம்பல் என ஏன் பெயர் வைத்தார் என்று எனக்குள் கொஞ்ச காலம் மனக்கிலேசமாக இருந்தது. விருந்தோம்பல் இல்லறத்துக்கு அவ்வளவு முக்கியமா என்று கூட சிந்தித்தேன்.

பக்தவசலம் முதலமைச்சராக இருந்த போது இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. திமுக கோயம்புத்தூரில் இந்தி எதிர்ப்புப் போராடத்தை முன்னின்று நடத்த ஒரு இளைஞரை நியமித்தது. அவரின் தீவிர போராட்டத்தின் வீச்சு தாளாமல் அன்றைய முதல்வர் பக்தவச்சலம், அந்த இளைஞரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்.  அவர்தான் துடிப்பும், தீரமும், திண்மையும் நிறைந்த கொங்கு மண்ணின் ஆன்மீகச் செம்மல் சாமி என்று அழைக்கப்படும் மாமனார் ஞானசம்பந்தம் அவர்கள். அவர்களின் இல்லறத்தை சிறக்க வந்த குணவதியாளர் அத்தையார் ஞானசெளந்தரி.

ஒரு மாலை நேரத்திலே, திருச்சியிலிருந்து இளங்கோ என்ற மாமனாரின் நண்பர் என்னைச் சந்திப்பதற்காக வந்திருந்தார்.  வீட்டிற்குள் நுழைந்தவுடன் தண்ணீருடன், விதவிதமான தின்பண்டங்கள் வந்து விடும். அடுத்து பக்குவமான பதத்தில் சர்க்கரையிட்டு நுரை பொங்க மணமணக்கும் காஃபி. நாக்கில் பட்டு உடம்பெல்லாம் காஃபியின் சுவையினை சிலிர்க்க வைக்கும் கைப்பக்குவம்.

காஃபியை அருந்தி விட்டு பேசிக் கொண்டிருக்கும் இடைவேளையில் சமையலறையிலிருந்து வாசம் வந்து கொண்டிருக்கும். அது என்னவாக இருக்குமென மனம் யோசித்துக் கொண்டிருக்கையில் தேங்காய் சட்னி, கொத்தமல்லிச் சட்னியுடன் வித விதமான பஜ்ஜிகள் தட்டில் ’என்னை எடுத்து சாப்பிட்டு விட்டு பின்னர் பேசேன்’ என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும்.

பஜ்ஜி சொன்னால் நம்மால் தட்ட முடியுமா? இல்லை நாக்கைத்தான் கட்டுப்படுத்த முடியுமா? கொலஸ்ட்ரால், வயிற்றுப் பிரச்சினை, ஜீரணமாகாது போன்றவைகள் எல்லாம் காணாமல் போய் விடும். எண்ணை இல்லாமல் பக்குவமாய் சமைக்கப்பட்ட பஜ்ஜிகள் நாக்கினை தூண்டில் போட்டு இழுக்கும். அத்தையாரின் கைப்பக்குவம். ஹோட்டல்களில் கிடைக்காத, அறுசுவை கலைஞர்களால் இயலாத சுவையில் இருக்கும் ஒவ்வொன்றும்.

விருந்தினரை வரவேற்கும் பாங்கு. அவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு உபசரிக்கும் தன்மை. 

பஜ்ஜிகளை உண்ட பிறகு பேசிக் கொண்டிருந்தேன். நேரமாயிற்று. டிஃபன் வந்து விட்டது. சுடச்சுட தோசை. வயிறு புடைத்து விட்டது. 

தன் வீட்டிற்கு வரும் உறவினர்களைக் கொண்டாடும் பண்பு, உபசரிக்கும் பாங்கு, இன் முகம் தவழ உணவு பரிமாறும் தாயுள்ளம் நிறைந்த குணவதி அவர். விருந்தோம்பல் இல்லறத்தின் மாண்பு என்று அத்தையாரிடம் கற்றுக் கொண்டேன். வள்ளுவர் சும்மா எழுதி வைக்கவில்லை. அதற்கு அர்த்தம் உண்டு என்பதை அவர் நிருபித்தார்.

நேற்று அவரில்லா வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தேன் நீண்ட நேரம். காஃபி குடிங்க எனச் சொல்ல யாருமில்லை. பலகாரம் கொண்டு வந்து தர அவரில்லை. 

விருந்தினராக வருபவர்களை முகம் மலர்ந்து வரவேற்று அமையும் வீட்டில் செல்வம். அருளும் மகாலட்சுமி நிலையாக வசிப்பாள் என்றுச் சொல்கிறார் வள்ளுவர். லட்சுமி வாசம் செய்யும் அந்த வீட்டின் இல்லற விளக்கினை தூண்டி விடும் தாயுள்ளம் இறைவனிடம் சென்று விட்டது.

ஒருவர் வீட்டுக்குச் செல்வது என்றால் மகிழ்ச்சி வர வேண்டும். இப்போதெல்லாம் அப்படியா இருக்கிறது? எந்த பெண் தன் உறவினரை வரவேற்கிறாள்? இல்லை குழந்தைகளாவது வரவேற்கிறதா? ஏன் இங்கு வந்தாய் என்பது போல பேசுவார்கள். 

’வீட்டில் வேலை இல்லாமல் இங்கு வந்து நம்ம கழுத்தை அறுக்கிறது’ என்பது போல கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் எத்தனையோ பெண்களைப் பற்றி நாமெல்லாம் வாழ்க்கையில் கண்டிருக்கிறோம்.

அந்த வீட்டில் சந்தோஷம் இருக்குமா? செல்வம் இருக்குமா? முகமலர்ந்து உபசரிக்கும் பண்பற்ற பெண்களால் இல்லறம் தான் நல்லறமாக இருக்குமா? உறவுகளையும், நட்புகளையும் கொண்டாடும் தன்மையற்ற பண்புகளை பெண்கள் இப்போதெல்லாம் அது பெண்ணியம் என்பதாய் நினைக்கின்றார்கள்.

ஒரு பெண் தன் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளமாக விட்டுச் செல்லுவது தன் குழந்தைகளை. அக்குழந்தையின் குணமே அப்பெண் வாழ்ந்ததின் அர்த்தத்தைச் சொல்லும். 

அத்தைக்கு உடம்பு சரியில்லை. பெண்பிள்ளைகள் இல்லை. ஒரே ஒரு மகன் மட்டுமே. உணவு கொடுப்பதில் இருந்து,  அவரின் ஒவ்வொரு தேவையையும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார் அத்தையின் அன்பு மகன். 

சமீபத்தில் வீட்டுக்குச் சென்றிருந்தேன். உடல் மெலிந்து இருந்தார். அந்த நேரத்தில் கூட அவர் ’காஃபி போட்டுக் கொடு, அந்தப் பலகாரத்தைக் கொண்டு வந்து கொடு’ என்று மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் அவரின் மகன் சொன்ன வார்த்தை

“சரி. மம்மி”

காஃபி கொண்டு வந்து கொடுத்தார். பலகாரங்கள் கொடுத்தார். சாப்பிட்டு விட்டுப் போகலாமென்றார். 

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு

இல்லறத்தின் சிறப்பு நற்குணம் வாய்ந்த மனைவி என்பார்கள். அதை விடச் சிறப்பு நன் மக்கட்களைப் பெறுவது என்கிறார் வள்ளுவனார். அத்தகைய ஒரு மகனை பெற்று தன் குணம் கொஞ்சம் கூட குறையாமல் வளர்த்திருக்கிறார் அவர். 

மிகச் சிறந்த இல்வாழ்க்கைக்கு அவரின் புதல்வரே சாட்சி.

அழகு குறைந்தவுடன் மனைவியைக் கண்டு கொள்ளாத இந்தக் கலியுகத்தில் இல்லறத்தின் மாண்பினை எனக்கு ஒரு சம்பவம் நினைவுபடுத்தியது.

”மகளோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை மாப்ளை, நைட்டெல்லாம் தூங்க முடியவில்லை. எனக்கு உடம்பு சரியில்லாத போது, அவதானே என்னைக் கவனித்துக் கொண்டாள். இப்போ அவளுக்கு நான் தானே பார்க்கணும்? குளிக்க வைப்பதில் இருந்து, உடை மாற்றி, தலை சீவி முடிந்து, பொட்டிட்டு அமர வைத்து உணவு கொடுத்து, உறங்க வைப்பது வரை நாந்தான் மாப்பிள்ளைப் பார்க்கிறேன்” என்றார்.

கேட்டவுடன் எனக்குள் சொல்ல முடியா உணர்வு உண்டானது. இல்லறத்தின் உயர்வு இதுதான். 

விட்டுக் கொடுத்துச் செல்லும் பாங்கு, உறவுகளையும், நட்புகளையும் கொண்டாடி வரவேற்று உபசரிக்கும் தன்மை என இனிமை நிறைந்த இல்லறத்தினை நடத்தி வந்த அத்தையை இனி என்று காண்பேன்?

இல்லறம் அன்றி இவ்வுலகில் நல்லறம் ஏதுமில்லை.

அத்தையாரின் ஆத்மா சாந்தியடையட்டும் என எல்லாம் வல்ல இறை சக்தியினை வேண்டிக் கொள்கிறேன்.

* * *

15.10.2021

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.