குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, July 29, 2025

கோவை புத்தக திருவிழா - தாத்தா - ஈகை பற்றிய புது விளக்கம்

வருடா வருடம் மகனுக்கும் மகளுக்கும் புத்தகத் திருவிழாவில் சுமார் 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த வருடம் மகன் படிக்கச் சென்றிருப்பதால், மகள் கோவை கொடிசீயாவில் நடந்து கொண்டிருந்த புத்தகத் திருவிழா 2025க்கு போக வேண்டுமென்று சொல்லி இருந்தார்.  ஞாயிற்றுக் கிழமை ஹாஸ்டலுக்குச் சென்று, அவரை அழைத்துக் கொண்டு நேரடியாக புத்தகத் திருவிழாவுக்குச் சென்று விட்டோம்.

இந்த வருடம் புத்தக விற்பனை மந்தமாக இருக்கிறது எனச் சொன்னார்கள். அரங்குகளில் கூட்டம் இல்லை. பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள். ஆளுக்கொரு தின்பண்டப் பையைக் கொடுத்து அதைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு புத்தக கடைக்குள்ளும் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

மகள் படிப்பதற்கு நல்ல நாவல் பரிந்துரைக்கவும் எனக் கேட்டார். கி.ராஜநாராயணனின் நாவல், சிறுகதை தொகுப்பு ஒன்றினைப் பார்த்தேன். வாங்கிக் கொடுத்தேன். 

முதலில் அகிலனின் சித்திரப்பாவையை எடுத்தேன். அதை விட மண்ணின் வாழ்வியல் தடத்தைப் பதித்த எழுத்துகள் மகளுக்கு தெரிய வேண்டுமென்ற ஆவலில், வாங்கிக் கொடுத்தேன்.

அடுத்து பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மடத்தின் புத்தக் கடைக்குச் சென்று நிவேதிதா பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். 

பின்னர் மகள் பல ஆங்கில புத்தகங்களை வாங்கினார்.  இறுதியில் முத்து காமிக்ஸ் சென்றோம். 

வழமை போல பல புத்தகங்களை வாங்கினார். நான் வீல்சேரில் அமர்ந்திருந்தேன். அப்போது அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் ஒரு சிறு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கினான். 20 ரூபாய் இருக்கும். அவனிடம் அது என்ன காமிக்ஸ் என்று காட்டச் சொன்னேன்.

”தாத்தா, அப்பாகிட்டே 200 ரூபாய் கேட்டேன். அவர் 100 ரூபாய் தான் கொடுத்தார். காமராஜர் வாழ்க்கை வரலாறு வாங்கலாம்னு வந்தேன். ஆனால் அது விலை அதிகமாக இருக்கு, அதனால இதை வாங்கினேன்” என்றான்.

மகளுக்கு அவன் என்னை தாத்தா என்று சொல்லுகிறானே என ஒரே சந்தோஷம். 

அவனிடம் இங்கே இருக்கும் காமிக்ஸ் புத்தகத்தில் உனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள் என்றேன். மறுத்தான். மகள் அவனை வற்புறுத்தி ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கிக் கொடுத்தாள். அவனை அழைத்துக் கொண்டு மீனாட்சி புத்தகக் கடைக்குச் சென்று, காமராஜரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எடுத்து அவனிடம் கொடுத்த போது வாங்கவே மாட்டேன் என சொல்லி விட்டான். 

விலை அதிகமாம். அந்த புத்தகத்தின் விலை 400 ரூபாய்.

”ஏற்கனவே காமிக்ஸ் வாங்கிக் கொடுத்திட்டீங்க, இது வேணாம்” என்று மறுத்தான். 

அவனை சரி செய்து புத்தகத்தை வாங்கி அவன் கையில் கொடுத்து விட்டு, ”நல்லா படி” எனச் சொல்லி விட்டு வந்தேன். அவன் மீண்டும் ”நன்றி தாத்தா” என்றான். 

மகளுக்கும், மனைவிக்கும் ஒரே சிரிப்பு.

அப்படியே ஒவ்வொரு புத்தக கடையாக வலம் வந்து கொண்டிருந்த போது, சுப அறவாணனின் மனைவி, அவரின் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் எனச் சொல்லி கேட்டார். அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கி புரட்டிக் கொண்டிருந்த போது, அருகில் ஒரு பெரியவரும், அவரின் பேத்தியும் கையில் நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தனர். 

அந்த அம்மா என்னிடம் ”அய்யா, இவரைப் பாருங்கள், இந்த புத்தகங்களை சிறைச்சாலை வாசிகளுக்கு படிக்க வாங்கிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

குள்ள உருவம், நரைத்த தலைமுடி, கனத்த கண்ணாடி, அருகில் அவரின் பேத்தி, அவர்கள் இருவரையும் பார்த்தேன். மனம் நெகிழ்ந்தது. 

நுழைவாயிலின் ஒரம் சிறைச்சாலை வாசிகளுக்கு புத்தகங்கள் தானம் செய்ய கேட்டு, ஒரு பாக்ஸ் இருந்ததைப் பார்த்தேன்.

நல்ல இதயங்களும், நான்கு பேருக்கு உதவ வேண்டுமென்றவர்களும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைத்ததில் மகளுக்கு நிரம்பவும் சந்தோஷம்.

நான் கலீல் ஜிப்ரானின் புத்தகங்கள் சிலவும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புத்தகமும், தினவு இதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து விட்டேன்.

அந்த அரசுப் பள்ளி மாணவனைப் பற்றிய நினைவு வந்தது. பசங்க வேலைக்குச் சென்றதும், வருடம் தோறும் கொஞ்சம் பணத்துடன் புத்தக விழாவுக்குச் சென்று பசங்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தர வேண்டுமெனெ நினைத்துக் கொண்டிருந்த போது, கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன்.

”உன்னைக் காட்டிலும் எனக்கு மிகவும் தேவையானதை எனக்கு கொடுப்பது அல்ல ஈகை, என்னைக் காட்டிலும் உனக்கு மிகவும் தேவையானதை எனக்குத் தருகிறாயே அது தான் ஈகை.”

மண்டையில் சுத்தியலால் தட்டியது போல வலித்தது. 

அடச்சே, இது என்ன இப்படி சொல்லி இருக்கிறாரே என்ற எண்ணமும், தொடர்ந்து பல நினைவுகளும் ஊடாடின.

தமிழர் வரலாற்றில் தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று சொல்லி இருக்கிறார்கள். பாத்திரம் அறிந்து தானம் செய் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை ஏன் சொன்னார்கள் என்பதற்கான காரணங்கள் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடும் வார்த்தைகள் கலீல் ஜிப்ரான் சொன்னது.

மகாபாரதத்திலே கர்ணன் தான் செய்த புண்ணியங்களை கூட தானம் செய்திருந்தாலும், அன்னதானம் செய்யாத காரணத்தினாலே, அவனுக்கு சிவலோகத்தில் அனுமதி கிடைக்காமல், வைகுண்டத்திலே அனுமதி கிடைத்தது என்றுச் சொல்வார்கள். தர்மத்தையே பெயராக கொண்ட தர்மத்தில் சிறந்தவன் தர்மன் என்றெல்லாம் படித்திருக்கிறோம்.

இப்படி ஈகையிலும் கூட வகைகள் உள்ளன.

ஆனால் தமிழர்கள் இவை எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக இருப்பதும், கலீல் ஜிப்ரான் என்ற மேலை நாட்டுக்கார எழுத்தாளரின் வார்த்தைகள் எழுதப்படும் முன்பே,  அவர்கள் செயல்படுத்தியதும் நினைவிலாடியது.

தனக்குத் தேவையான தேரை, படர வழியின்றி காற்றில் அலைந்து கொண்டிருந்த முல்லைக் கொடி படர்ந்து தழைக்கக் கொடுத்து விட்டு, நடந்து வந்தவர் பாரி வள்ளல் என்ற தமிழ் மன்னன்.
 
கர்ணன் என்ற புராண கதைப் பாத்திரம் கூட தமிழ் மன்னனிடம் தோற்று விட்டது அல்லவா?

பாரி வள்ளல் தன்மைக்கு முன்னால் நாமெல்லாம் செய்யும் ஈகை ஈகையா? 

* * * 

உலகில் சொல்லப்பட்ட எல்லா நாகரீகத்தினையும் விட, உயர்ந்த நாகரீகத்தையும், பண்பாட்டையும் கொண்ட தமிழர்கள் கீழடி நாகரீகத்தை வெளியிட மறுத்து விட்டார்கள் இந்திய ஒன்றிய மோடி அரசு. அதிகாரங்கள் மாறும் போது, தடை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அறம் எப்போதும் விழித்திருக்கும்.

யாரும் இங்கே தப்பவே முடியாது. செய்யும் செயலின் பலன்கள் அவரவரைச் சார்ந்தது.

வளமுடன் வாழ்க.


29.07.2025












0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.