குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, June 10, 2008

அன்பு மகனுக்கு கடிதம் 5 10.06.2008

ரித்தி உனக்கு ஸ்கூல் ஆரம்பித்துவிட்டது. உன் வாழ்க்கையின் முக்கியமான பகுதியில் இருக்கிறாய். கற்றல் தான் வாழ்வின் பெரும்பகுதியினை ஆக்ரமித்துள்ளது. கற்றல்... ஆராய்தல்... தெளிதல்.. அதற்கேற்ப வாழ்க்கையினை அமைத்தல். நன்கு படிப்பாய் என்று தெரியும். கீழே சில விஷயங்களை சொல்லி இருக்கிறேன். புரிந்தால் படித்து தெரிந்து கொள்ளவும்.

பள்ளி பஸ் கட்டணம் பாதி அளவுக்கு உயர்த்தி இருக்கின்றார்கள். கேட்டால் மேனேஜ்மெண்ட் முடிவு. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள். கல்விக் கூடங்களை நடத்துவது டிரஸ்ட். பொதுச் சேவை நிறுவனம் என்பார்கள். லாபம் இன்றி நடத்துவதாக டீடில் எழுதி இருப்பார்கள். ஆனால் கட்டிட நிதிக்கு என்று தனி வசூல், டியூசன் பீஸ் என்று தனி வசூல். புத்தகத்துக்கு என்று தனி வசூல். பதிப்பாளர்கள் 20 லிருந்து 40 பெர்சண்ட் வரை கமிஷன் தருகிறார்கள் பள்ளிகளுக்கு. பொதுச் சேவை நிறுவனங்களுக்கு எதுக்குப் லாபம் என்று தெரியவில்லை. அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு அடிமாட்டுச் சம்பளம் தருவார்கள். டிரஸ்ட்டில் வரும் வருமானத்துக்கு 80ஜி என்ற சட்ட விதிப்படி வருமான வரி விலக்கும் உண்டு. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கேட்பார் இல்லை. அரசியல்வாதிகள் இது உங்களுக்கான அரசு என்பார்கள். ஆனால் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. இப்படி எல்லாம் நாடகம் போடுபவர்களை உனக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடிதமெழுதுகிறேன்.

ரித்தி உனக்குப் புரியுமோ இல்லையோ தெரியாது. ஆனால் அனைவரும் தவறு செய்யவேண்டுமென நோக்கோடுதான் செயல்படுகிறார்கள். யாரும் உண்மையாக இல்லை. பணம் ஒன்று தான் குறிக்கோள். அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.

நமது அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதற்கு உனக்கு விளக்கம் சொல்கிறேன். கேள்..

என் வண்டிக்கு பெட்ரோல் போடுகிறேன் அல்லவா. அதுக்கு வரி உண்டு. இந்த வரியும் மற்ற பொருட்களுக்கு போடப்படும் வரியும் வித்தியாசமானவை. எப்படி என்று கேட்கின்றாயா ? சொல்கிறேன் கேள்.

செருப்பு வாங்கினோம் என்றால், செருப்பின் விலையில் 10% வரி என்று போடுவார்கள். செருப்பு ரூபாய் 100 என்று வைத்துக் கொள்வோம்.வரி 10 ரூபாய். மொத்தம் 110 ரூபாய் ஆகும்.

ஆனால் பெட்ரோலுக்கு அப்படி இல்லை. ஒரு ரூபாயில் 52 பைசா மத்திய அரசுக்கும் 12 பைசா மாநில அரசுக்கும் வரியாக செலுத்த வேண்டும். ஆக 64 பைசா வரி போக பெட்ரோலின் உண்மையான விலை 26 பைசாதான். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் வரி மட்டும் 64 ரூபாய். பெட்ரோலின் உண்மையான விலை 26 ரூபாய்தான். புரிகிறதா உனக்கு?மக்களிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் வரி வசூலித்து அதுக்கு நிதி, இதுக்கு நிதி, அந்த வளர்ச்சி திட்டம், இந்த வளர்ச்சித் திட்டம், ரோடு போடுகிறோம் அது இதுவென்று சொல்லிச் சொல்லி ஏமாற்றுகிறார்கள். எல்லாவற்றிலும் இவர்களுக்கு பணம் வரும்.

குருடு ஆயிலை சுத்திகரித்த பின்பு பெட்ரோலுக்கான ஒரு லிட்டர் விலை இவ்வளவு அதற்கு இவ்வளவு வரி என்று போட்டால் என்ன ? போட மாட்டார்கள். ஏனென்றால் இந்த எரிபொருள் அத்தியாவசிய தேவை. மக்களின் அன்றாடத் தேவையில் கை வைத்தால் வேறு வழியின்றி மக்கள் வாங்கித்தான் ஆவார்கள் என்ற எண்ணம் தான்க் ஆரம். அதிக வரி விதித்தால்தான் அரசியல்வாதிகள்க சொகுசு வாழ்க்கை நடத்த முடியும்.

அடுத்த ஒரு அக்கிரமம் பற்றிச் சொல்கிறேன் கேள்.

தா.பாண்டியன் என்ற கட்சித்தலைவரின் பேட்டியினைக் காண நேர்ந்தது. சில அதிர்ச்சி தரும் விஷயங்களை சொன்னார்.

இந்தியாவுக்கு தேவையான குரூடு ஆயிலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம் அல்லவா. ஆனால் இந்தியாவில் இருந்து குருடூ ஆயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார். இந்தியாவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அரசாங்கம் எண்ணை துரப்பண பணிகளை கொடுத்து இருக்கிறதாம். அவர்கள் உலக பெரும் பணக்கார எண்ணெய் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்களாம். வெளி நாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்தால் வரக்கூடிய லாபத்தை பணமாக மட்டும்தான் எடுத்துச் செல்லலாம் என்று முன்பு ஒரு சட்டம் இருந்ததாம். அதை வெளியில் சொல்லாமல் மாற்றி விட்டதாகவும், இப்போது வரக்கூடிய லாபத்தை பொருளாகவும் எடுத்துச் செல்லலாமென்றும் மாற்றி வைத்திருப்பதாகவும், அதனால் அந்த எண்ணெய் நிறுவனம் இந்தியாவில் இருந்து குருடூ ஆயிலை அவர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் சொன்னார். இந்தியாவுக்குத் தேவையான குரூடு ஆயிலை வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்திருக்கும் அவலத்தைப் பார் ரித்தி.

இதை விட இன்னொரு கூத்தினை சொல்கிறேன் கேள். சமீபத்தில் ஒரு டாலருக்கு சமமான இந்திய ரூபாய் 38 ஆக இருந்தது இப்போது 43 ரூபாய் ஆகப்போகிறது. காரணம் என்னவென்றால் ரிசர்வ் பேங்க எத்தனையோ கோடி டாலர்களை மிகச் சமீபத்தில் வாங்கியதாகவும் அதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து விட்டதாகவும் பாண்டியன் அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் தான் ரூபாயின் மதிப்புக் குறைந்து விட்டதாகவும் சொன்னார். நமது இந்திய நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்புக் குறைந்தால் தான் லாபம் வருமாம். என்ன ஒரு நாட்டுப் பற்று... பார்....

இப்படி அரசியல்வாதிகளும், பிசினஸ் செய்பவர்களும் சொல்லி வைத்து இந்தியாவைக் கூட்டுக் கொள்ளை இடுகின்றார்கள். ஏழை மக்களை நினைத்துப் பார் ரித்தி. ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் அவர்களை நீ முன்னேற்ற வேண்டும். நீ பெரியவனாக ஆகி, நாட்டை ஆளும் பொறுப்பு கிடைத்தால் அரசியல் சட்டத்தையும் , தொழில் சட்டத்தையும் அடியோடு மாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்த சிலவற்றை வரும் கடிதங்களில் எழுதுகிறேன். அது உனக்கும் பயன்படுமென்றால் உபயோகப்படுத்திக் கொள்.

இப்படிக்கு
உன் அன்பு அப்பா...