குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, April 23, 2008

மசால் வடையின் மகத்துவம்

--------------------------------------------------------------------------------

மசால் வடை. நாக்கில் எச்சில் வரவைக்கும் பதார்த்தம். இதிலும் பலவகை உண்டு. இருப்பினும் மசால் வடை என்றதும் கடலைப்பருப்பும் அதன் சிவந்த நிறமும் நினைவுக்கு வரும். மசால் வடை தயாரிக்க என்ன என்ன பொருட்கள் வேண்டும்.

கடலைப்பருப்பு ? இரண்டு கோப்பை
பெரிய வெங்காயம் ? மூன்று எண்ணிக்கை
பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் ? ஐந்து எண்ணிக்கை
இஞ்சி , பூண்டு ? தேவையான அளவு
சோம்பு ? தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி ? தேவையான அளவு
எண்ணெய் ? தேவையான அளவு
உப்பு ? தேவையான அளவு
அடுப்பு, கரண்டி, கேஸ் மற்றும் ஆடுகல்.

இவைகளைக் கொண்டுதான் மசால் வடையினை தயாரித்து ருசிக்க முடியும். கடலைப்பருப்பு ? மகாராஷ்டிராவில் இருந்து வருகின்றது. பெரிய வெங்காயம் பெல்லாரியில் இருந்து வருகின்றது. மிளகாய், சோம்பு சேலத்தில் இருந்து வருகிறது. எண்ணெய் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றது. உப்பு ? தூத்துக்குடி. அடுப்பு, கரண்டி தயாரிக்க இரும்புத்தாது ஒரிசாவில் இருந்து வருகின்றது. இப்படி ஒவ்வொரு பொருளும் உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்து வருகிறது. அப்படி வந்தால் தான் மசால் வடையினை ருசிக்க முடியும்.

தமிழன், கர்நாடகத்தான், மலையாளி, தெலுங்கர், மராட்டியர், பார்சி, முஸ்லீம், குஜராத்தி என்று வேற்றுமை பார்த்து அவரவர் பொருட்களை வேறு பகுதிகளுக்கு அனுப்பாமல் இருந்தால் மசால் வடை கிடைக்குமா ? ருசிக்கத்தான் இயலுமா ?

இவன் தமிழன் இங்கு வந்து அதிகாரம் பன்னுகின்றானா ? இவன் முஸ்லிம் பாகிஸ்தானில் இருந்து வந்து ஆட்டம் போடுகின்றானா ? மும்பையில் இருந்து வந்தவனுக்கு எவ்வளவு கொழுப்பு இந்த ஆட்டம் போடுகின்றான் என்று யோசித்தால் மசால் வடை கிடைக்காது.

இந்த அளவுக்கு துவேஷத்தை வளர விட்டது யார் ? ஏன் ? எதற்கு ? யோசிக்கனும். அவனவனுக்கு வயிற்று பிழைப்பு இருக்கின்றது. குடும்பம் இருக்கின்றது. அதைக் காப்பாற்ற அவரவருக்கு தெரிந்த வழியில் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு எங்கெங்கோ செல்கின்றனர். கால நிலைக்கு ஏற்ப எங்கிருந்தோ வருகின்ற பறவைகள் வேடந்தாங்கலில் தங்கிவிட்டுச் செல்கின்றன. அதன் வருகையினை ரசிக்கும் மனிதனுக்கு தன்னைப் போல ரத்தமும் சதையும் படைத்த மனிதன் வருவதை விரும்பவில்லை.

குஜராத்தில் பிறந்து எங்கோ பிழைக்கப்போகும் மனிதனுக்கு முக்கியம் அவனது மதமா ? இல்லை இனமா ? அவனது பசிதான் அவனுக்கு முக்கியம். பசி தீர்க்கத்தான் உழைக்கின்றான். வேறு வேறு இடங்களுக்கு செல்கின்றான். இதில் என்ன வேறுபாடு இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் பசி எடுக்குமா ? இல்லை இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பசியே எடுக்காதா ?

மதம் எதுவும் தனிமனிதனுக்கு உதவிக்கு வரப்போவதில்லை. அது எந்தக் காலத்திலும் நடக்கவும் போவதில்லை. ஜாதி ஜாதி என்று பேசுபவர்களும் அந்த ஜாதி பேச்சால் ஒன்றையும் சாதிக்க முடியாது. பேசுபவன் தான் ஜாதி பேசுபவன் தான் ஜாதியை தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடவுள் மனிதனை காப்பாற்றுவார் என்று பேசுவோர் இன்று கடவுளுக்காக சண்டையிட்டுக்கொள்கின்றனர். பத்வா என்கின்றனர். தீவிரவாதம் என்கின்றனர். எதுக்கு இதெல்லாம் ? அந்த மதம் வந்து எதையாவது தீர்த்து வைக்கப்போகின்றதா ? இல்லவே இல்லை.

மனிதனை ரட்சிக்க வந்தவர் கடவுள். அவர் சொன்னது தான் வேதம். அதுதான் கட்டளை என்கின்றார்கள். எம் மதத்தை துவேசிக்கும் எவரையும் விட்டுவைக்க மாட்டோம் என்று சண்டையிட்டுக்கொள்கின்றனர். இவர்களையா வந்து என்னைக் காப்பாற்று என்று கடவுள் சொன்னார். இவர்களுக்கு உழைக்காமல் உட்கார்ந்து அதிகாரம் செய்து வயிறு வளர்க்கவேண்டும். அதற்கு மதச்சண்டைகள், ஜாதிச் சண்டைகள் என்று மனிதனை மனிதனை அடித்துக்கொள்ள வைத்து அவர்கள் இன்பமாக பொழுதைக் களிக்கின்றனர்.

இங்கிலாந்து ஒரு காலத்தில் நாடுகளை அடிமைபடுத்தி ஆண்டுவந்தது. எவராவது பொதுமக்களா ஆசைப்பட்டார்கள். எவனோ ஒருவனின் ஆசையும், அதிகாரமும், திமிரும்தான் மக்கள் நாடுகளுக்குள் சண்டையிட்டு சாக காரணமாக இருந்திருக்கின்றார்கள். யோசிக்க வேண்டாமா மனிதர்கள்.

முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து வரும் பெட்ரோலைத்தான் முஸ்லிமை வெறுக்கும் மனிதன் பயன்படுத்துகின்றான். இந்துத்துவம் பேசுவோர்கள் பெட்ரோலைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா ? மற்றவர்கள்தான் இவர்களின் கொள்கைகள், கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

ஆக, மனிதன் மதம், ஜாதி வேறுபாடின்றி ஒருவரோடு ஒருவர் இணைந்து உழைத்தால் தான் மனித சமுதாயத்துக்கு நல்லது. அதனன்றி ஊர், மாநிலம், நாடு என்று வேறுபாடு பார்த்தால் என்றும் உருப்பட முடியாது.

இதோ இன்னும் சிறிது நேரத்தில் பசி எடுக்கப் போகின்றது. எவனோ ஒரு இந்துவின் வயலில் விளைந்த அரிசியைத்தான் சோறாக்கி சாப்பிட வேண்டும். எவனோ ஒரு முஸ்லிமின் கறிக்கடையில் தான் கறி வாங்கவேண்டும். எவனோ ஒரு கிறிஸ்தவனின் கடையில் தான் மளிகைச்சாமான்கள் வாங்க வேண்டும்.

எதற்கு மதமும், ஜாதியும் சண்டையும் ? மனிதர்கள் ஒன்றுபட்டு சாவதற்குள் சந்தோஷமாக வாழ முயற்சிப்போம். தினமும் இறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் நாம். வாழும் வரை நாமும், நம்மை சுற்றி இருப்போரையும் சந்தோசப்படுத்தி வாழ்வோம் . இல்லையெனில் யாருக்கும் தொல்லை தராமல் வாழ்வோம்.

மனிதனால் தயாரிக்கப்படும் மசால் வடை சொல்லும் மகத்துவத்தை அதனை படைக்கும் மனிதன் உணராமல் இருப்பது தான் வேதனை.