குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சூடானவைகள். Show all posts
Showing posts with label சூடானவைகள். Show all posts

Thursday, February 19, 2009

கண்களுக்குள் மோதல்

அஹிம்சையின் மூலம் நாட்டுக்கே விடுதலை வாங்கித் தந்த மஹாத்மா காந்தியை தேசத்தலைவராகக் கொண்ட இந்திய அரசியலமைப்பின் சட்டத்துறையின் இரு கண்கள் தங்களுக்குள் மோதிக்கொண்ட வேதனையினை என்னவென்று சொல்வது. அறப்போராட்டத்தின் மூலமாக மட்டும்தான் எதையும் சாதிக்க இயலும் என்று நிரூபணம் செய்த நாட்டின் பிரஜைகள் வருந்தக் கூடிய அளவில் சட்டத்தின் பாதுகாவலர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்ட சம்பவம் சட்டத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கும் செயலாகும். நாளைய நீதிபதிகள் வன்முறையினை தேர்ந்தெடுக்கலாமா? சட்டத்தின் பாதுகாவலர்களுடன் வன்முறை தேவையா ? அஹிம்சை வழிப் போராட்டத்தினை மறந்து விட்டார்களா இருவரும் ? வேதனை தரும் இச்சம்பவம் மீண்டும் நடக்கலாமா? வக்கீல்கள் உணருவார்களா ? காவல்துறையும் தனது கடமையை உணர்ந்து செயல்படுவார்களா? சட்டத்துறையும் காவல்துறையும் தான் இந்தியாவின் ஆன்மா. ஆன்மாக்களுக்குள் மோதல் போக்குத் தேவையா ? அவரவர் தத்தமது கடமையினை உணர்ந்து செயல்படுவார்களா ? அன்பு சகோதரர்களே வேண்டாம் வன்முறை. வாழ்க்கை என்பது எல்லோரையும் சந்தோஷமாக வாழ வைப்பது தானே. ஏன் இந்த சண்டை? யாருக்காக இந்த சண்டை. இதனால் மக்களுக்கு என்ன பயன் ? உங்களையே நம்பி இருக்கும் பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்வது ? எங்களைப் பாதுகாக்க தங்களது வாழ்வினையே அர்ப்பணித்த இருவரும் சமாதானமாகி விடுங்கள். அரசியல் சித்து விளையாட்டில் எல்லோரையும் பழி வாங்கி விடாதீர்கள். ஒவ்வொரு இந்திய மக்களின் வேதனையினை நான் ஒரு பிரஜை என்ற முறையில் இங்கு பதிவு செய்கிறேன் வேதனையுடன்.

Wednesday, October 8, 2008

உயிர்கள் படும் வேதனை

எனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சொன்ன சில விஷயங்கள் என் மனதை அம்பு போல் துளைத்து விட்டது. விஷயம் இதுதான். மாட்டுச் சந்தைகளில் மாடுகள் ஏலம் போடுவது பெரிய திருவிழா மாதிரி நடக்கும். மீடியாக்களில் செய்திகள் வெளியிடுவார்கள். அந்த மாட்டுச்சந்தைகளில் மாடுகளை மனிதர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அதை வார்த்தைகளில் சொல்வது எளிதல்ல. சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன்.

1. பல் போன மாடுகளுக்கு, இறந்த மாட்டின் பற்களை எடுத்து வந்து, கோணி ஊசியால் துளை போட்டு அந்த பற்களை பதிப்பார்களாம். மாட்டின் விலை பற்களை வைத்துக் கணக்கிடுவார்கள்.

2. மாட்டின் கால்களை கட்டி போட்டு விட்டு அதன் வாலை பிடித்து கடித்து வைப்பார்கள் முழுவதும். மாட்டை தொட்டவுடன் துள்ளுவதற்காக. ஏனென்றால் மாடு இளமையாக இருப்பதாக காட்டி அதிக விலை விற்க வேண்டுமென்பதற்காக.

3. முட்டும் மாட்டின் கொம்புகளில் விடாமல் அடித்துக்கொண்டே இருப்பார்கள். வலி தாங்காமல் அந்த மாடு முட்டாது.

4. மாட்டின் வயிறு புடைத்தது போல் இருக்க, மோட்டார் மூலம் தண்ணீரை வலுக்கட்டாயமாக செலுத்துவார்கள். புடைத்த வயிறுடன் காட்ட வேண்டுமென்பதற்காக.

5. மாடு வாங்கும் போது சுழி முதன்மையாக இருக்கும். வேண்டாத சுழி இருக்கும் மாட்டை, கட்டி போட்டு நெருப்பை பத்த வைத்து கோதுமை மாவின் உதவியால் சுழி இல்லாதவாறு செய்து விடுவார்கள்.

மாடாய் பிறந்து வளர்ந்து மனிதனுக்கு எல்லா உதவிகளையும் செய்து, அவன் செய்யும் கொடுமைகளை எல்லாம் தாங்கி அதன் பின்னர் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு அவன் வயிற்றுக்குள்ளே பிரியாணியாக செல்லும் மாடுகளை நினைத்தால் ...

இதை விடவா மனிதன் துன்பப்படுகிறான்... சொல்லுங்கள்...

Tuesday, August 12, 2008

சாகப்போகும் மனிதர்கள் மற்றவர்களைச் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்

மனிதா... ஓடுகிறாய்... ஓடுகிறாய்... ஓடிக்கொண்டே இருக்கிறாய். எங்கே ஓடுகிறாய் சாவதற்குள் உன் ஓட்டம் நின்று விடுமா மனிதா இல்லை ஓடிக்கொண்டிருப்பாயா ? பேங்கில் பணம் சேர்த்து வைத்து விட்டாயா ? சொத்து நிலம் வாங்கி குவித்து விட்டாயா ?
குவி குவி... நீயா அனுபவிக்க போகிறாய். நீ தேடித் தேடி சேர்த்து வைத்தது எல்லாம் நாளை எவனுக்கோ போகப்
போகிறது. போகட்டும். அதனால் என்ன ? ஆனாலும் நீ ஓடுவதை நிறுத்தி விடாதே.. வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும்... மனிதா மனிதனுக்கு உள்ள அகந்தையினால் பார் ஆயிரக் கணக்கில் ஜார்ஜியாவில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். போர் ... போர்.. எதற்கு மனிதா... எதற்கு.... ? யார் வாழ இந்தப் போர் ?? எவன் இருக்கப்போகிறான் சாகாமல்... நடக்கட்டும் நடக்கட்டும்.. போர் நடக்கட்டும். ஆனாலும் நீ ஓடுவதை நிறுத்தி விடாதே. உனக்கு நேரம் இருந்தால் கீழே உள்ள பாடலை படித்துப் பார். படித்து விட்டு திரும்பவும் ஓடு... நிற்காதே. நின்றால் சாவு உன்னைப் பிடித்து விடும்.

படம் : நீங்கள் கேட்டவை
பாடியவர் : ஜேசுதாஸ்

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

பிறக்கின்ற போதே ...............
பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன ...............
ஆசைகள் என்ன ஆணவம் என்ன உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது ..........
உடம்பு என்பது உண்மையில் என்ன கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்...........
காலஙக்ள் மாறும் கோலங்கள் மாறும் மானிடம் என்பது பொய்வேஷம்
தூக்கத்தில் பாதி
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்
பேதை மனிதனே
பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்.

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்

Thursday, August 7, 2008

இந்திய இறையாண்மைக்கு வேட்டு

”நாங்கள் விரைவில் புதிய நீர்க்கொள்கையை அறிவிக்கப் போகிறோம். இதன்படி எங்கள் மாநிலத்தில் பாயும் நதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்க, இனி எங்கள் சட்டமன்றத்தின் அனுமதி கட்டாயம் பெற்றாக வேண்டும்' என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் “

அண்டை மாநிலத்திலிருந்து இப்படி ஒரு அறிக்கை. இதுவரை தமிழகத்தில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை. முல்லைப் பெரியார் அணையில் உச்சநீதி மன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டது கேரளா. கேட்க நாதியில்லை. இந்த அறிக்கையினை மற்ற மாநிலங்களும் பயன்படுத்தினால் விளைவு தமிழ் நாடு சுடுகாடாகும் நிலை.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள நீர் ஒப்பந்தம் இதுவரையில் நல்ல முறையில் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்கள் பக்கத்து மாநிலங்களின் உரிமையில் கை வைப்பது என்பது உள் நாட்டுக்குள் மாநிலப் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது இவர்களுக்கு தெரியாதா ? தெரிந்தும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பது தான் விளங்கவில்லை.

இப்படிப் பட்ட விஷயங்கள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மத்திய அரசுக்கு தெரியாதா ? தெரிந்தும் ஏன் இதுவரை மெளனம் காக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இந்திய யூனியன் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. மாநிலங்கள் அடித்துக் கொள்ளும் முன்பு நடவடிக்கை எடுப்பது நல்லது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காமல் இருந்தால் போதும். செய்வார்களா ?

Saturday, June 28, 2008

பிளாஸ்டிக் பைகள்

போன் பேசிக்கொண்டிருந்த போது கூச்சலும் சத்தமும் கேட்க என்னவென்று பார்த்தால் மாணவர்களின் அணிவகுப்பு. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் என்று கோஷம் இட்டனர் மாணவர்கள். விழிப்புணர்வு பிரச்சாரமெல்லாம் நன்றாகத்தான் செய்கிறார்கள்.

தவற்றுக்கு ஆரம்பம் எதுவோ அதை வசதியாக மறந்து விடுகிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றுச் சொன்னால்,

தமிழ்நாடு அரசு குடிகார கடைகளையும் பார்களையும் நடத்துகிறது. குடித்து விட்டு வெளியில் வந்தால் காவல் துறையினை வைத்து கைதும் செய்கிறது. தமிழ் நாட்டின் சட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். பிள்ளையை கிள்ளி விட்டு, அதன் கண்ணில் மிளகாய்ப் பொடியினையும் தூவி விடுவது போல அல்லவா இருக்கிறது.

பிளாஸ்டிக் பை தயாரிக்கும் நிறுவனங்களை ஒழித்துக் கட்டினால் போதும். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தேவையே இல்லை. பிளாஸ்டிக் பைகளை கொடுக்கும் கடைகளை நிரந்தரமாக மூடச் செய்துவிடுவோம் என்று அரசாணை வெளியிட்டால் போதும்(!!??)பிளாஸ்டிக் பைகள் காணாமலே போய்விடும். அதை விடுத்து என்னனென்னவோ கூத்துகள் எல்லாம் நடத்துகிறார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் ஹோட்டல் ஹோட்டலாக பிளாஸ்டிக் பைகளுக்காக ரெய்டு நடத்தினார்கள். நான் பார்சல் சாப்பாடு வாங்க ஹோட்டலுக்கு சென்றேன். இலையில் சாப்பாடு கட்டினார்கள். சாம்பார், ரசமெல்லாம் எதில் கட்டுவார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பிளாஸ்டிக் பையில் கட்டி வந்து கொடுத்தார் சர்வர். ஏனய்யா இது மாத்திரம் பிளாஸ்டிக் இல்லையா என்று கேட்க இதுக்கு மாத்திரம் அனுமதி உண்டென்றார் அவர்.

பொது மக்களா பிளாஸ்டிக் பைகளை வாங்கி வைத்து பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகள் கொடுக்கும் கடைகளை அல்லவா இவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். பிரபலமான ஷாப்பிங் மால்களில் போய் பிரச்சாரம் செய்ய வேண்டியது தானே. அங்கே சென்றால் கிழித்து விடுவார்கள்.

சரி... கார் கண்ணாடிகளில் கருப்பு ஃபிலிம் ஒட்டக்கூடாது என்றார்கள். இப்போது என்ன நடக்கிறது என்று ரோட்டில் பார்த்தால் அல்லவா தெரிகிறது பொது மக்கள் அரசாணைக்கு கொடுக்கும் மரியாதை என்னவென்பதை. சட்டத்தை பாதுக்காக்கும் காவலர்கள் சாலை தோறும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றார்கள். என்ன செய்கிறார்கள் அவர்கள் ?????

பிரச்சாரமாம், விழிப்புணர்வாம், சட்டமாம். விதியாம். புண்ணாக்கு....

என்னய்யா கூத்து இது.... இப்படியுமா மக்களை முட்டாளாக்குவார்கள். கேவலம்... கேவலம்.
இளிச்சவாயன் எவனாவது கிடைத்தால் அவன் தலையில் மிளகாய் அரைப்பதும், ஃபைன் போடுவதும் ... கேவலம் ... கேவலம்...

Thursday, June 5, 2008

ஏமாளி மக்களா நாம் ?

பணவீக்கம் என்பது என்ன ?

கடந்த வருடம் இதே தேதியில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருள் இந்த வருடம் 110 ரூபாய் விற்றால், 10% பண வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். வெளி நாட்டு இணையதள செய்தி ஒன்று இந்தியாவின் பணவீக்க விகிதம் 10 சதவீதத்தை தொட்டு விட்டதாக சொல்கிறது. ஆனால அரசு 7.8% என்று சொல்கிறது. எது உண்மை ? செய்தி சொல்லுவதா ? இல்லை அரசு சொல்லுவதா ? தெரியவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலை இப்போது அதிகப்பட்சமாக உயர்ந்து இருக்கிறது. இனிமேலும் பணவீக்க விகிதம் உயரத்தான் போகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. காங்கிரஸ் அரசு ஓட்டு பெறுவதற்காக விலையேற்றத்தை தள்ளி வைத்து விட்டு, கர்நாடகத்தில் தோற்றபின் அதிரடியாக விலையேற்றம் செய்கிறது. யாருக்கு இப்போ நஷ்டம்? ஒரு சாதாரண ஓரளவு படித்த குடும்பப் பெண் நிதி நிலைமைக்கு ஏற்ப செலவை சரி செய்வாள். அது கூட தெரியாமல் சரியான நேரத்தில் விலையேற்றாம் செய்ய மறுத்து விட்டது காங்கிரஸ் அரசு. பலன்... கடுமையான விலையேற்றம். அடுத்த ஆட்சி பிஜேபி தான் என்று காங்கிரஸ்காரர்கள் கட்டியம் செய்து அதன் படி நடக்கின்றார்கள்.. வரட்டும் .. பிஜேபி.... அவர்களாவது ஏதாவது செய்கிறார்களா என்று பார்க்கலாம்.

அரசின் அடுத்த கேடு கெட்டதனம் ஒன்று இருக்கிறது. அதைச் சொன்னால் அதிர்ச்சி தான் வரும். இந்தச் செய்தியினை நான் ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்து அதிர்ந்தே போனேன். அரசின் இந்த கேடு கெட்ட தனத்துக்கு அளவே இல்லையா... எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா ? அதுவும் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் தான் அடிக்கின்றார்கள். என்ன அது என்று கேட்க தோன்றுகிறது அல்லவா ? சொல்கிறேன்... கேளுங்கள்....

ஒரு லட்ச ரூபாயை பேங்கில் போட்டால் வட்டி வருஷத்துக்கு 8500 ரூபாய் தருகிறது வங்கி. இந்த வட்டிக்கு 1% வரி போடுகிறது அரசு. சரி அதனால் என்ன என்கின்றீர்களா. இதே பணத்தை பங்குச் சந்தையில் போட்டால் வரும் வருமானத்துக்கு வட்டி இல்லை. இது எப்படி இருக்கிறது பாருங்கள்.. பண முதலாளிகளுக்கு வரும் வருமானத்தில் வட்டி இல்லை. மிடில்கிளாஸ் மக்களின் பாடுபட்டு சேர்த்த பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு. எரிச்சலா இல்லை உங்களுக்கு....

மிடில்கிளாஸ் மக்கள் யாராவது பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வார்களா.. மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பணம் பாதுகாப்பாய் இருக்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு அடாவடியாக அரசு மிடில் கிளாஸ் மக்களின் தலையினை உருட்டி சம்பாதிக்கிறது. கோடிகளில் புழங்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலாளிகள் வரிப்பணம் கட்ட வேண்டாமாம். வாயையும் வயிற்றினையும் கட்டி காசு சேர்த்து வைக்கும் மிடில்கிளாஸ்ஸின் பணத்துக்கு வட்டி போடுகிறது அரசு...

எதற்கு என்று கேட்கின்றீர்களா ? அரசியல்வாதிகளின் சம்பளத்தை உயர்த்தவும், சட்டசபையினிலும், நாடாளுமன்றத்திலும் கூச்சலும் குழப்பமும் செய்யவும் தான். ஆனால் படிக்காசு எல்லாம் பத்திரமாக அவர்களுக்கு சென்று சேர்ந்து விடும்.

கட்டிடம் கட்டும் சித்தாளின் கூலி, வயலில் வேலை பார்க்கும் பெண்ணின் கூலியினை உயர்த்த யாராவது இதுவரை குரல் கொடுத்து இருப்பார்களா ? சொல்லுங்கள்.... ப

பணவீக்கம் அதிகமானால் அதிகச் செலவு செய்ய வேண்டுமே ? என்ன செய்வது... சம்பளத்தில் பண வீக்கத்துக்கு ஏத்தவாறு அதிகம் கொடுப்பார்களா ? கேளுங்கள் ? யாராவது வாயைத் திறக்கனுமே ? அரசியல் வாதிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்..

பணவீக்கம் உயர்ந்தால் பேங்கில் போடப்படும் பணத்துக்கும் 7.8% பணவீக்கம் விகிதப்படி பணம் கொடுத்தால் அல்லவா பொதுமக்கள் சமாளிக்க முடியும். இலலையெனில் பணவீக்க விகிதத்துக்கு ஏற்றபடி சம்பளமும் உயர்த்தப்பட வேண்டும் அல்லவா ? யார் தான் செய்வார்கள் ?

சொல்லனும்னு தோணுச்சு சொல்லிவிட்டேன்...

Wednesday, April 23, 2008

மசால் வடையின் மகத்துவம்

--------------------------------------------------------------------------------

மசால் வடை. நாக்கில் எச்சில் வரவைக்கும் பதார்த்தம். இதிலும் பலவகை உண்டு. இருப்பினும் மசால் வடை என்றதும் கடலைப்பருப்பும் அதன் சிவந்த நிறமும் நினைவுக்கு வரும். மசால் வடை தயாரிக்க என்ன என்ன பொருட்கள் வேண்டும்.

கடலைப்பருப்பு ? இரண்டு கோப்பை
பெரிய வெங்காயம் ? மூன்று எண்ணிக்கை
பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் ? ஐந்து எண்ணிக்கை
இஞ்சி , பூண்டு ? தேவையான அளவு
சோம்பு ? தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி ? தேவையான அளவு
எண்ணெய் ? தேவையான அளவு
உப்பு ? தேவையான அளவு
அடுப்பு, கரண்டி, கேஸ் மற்றும் ஆடுகல்.

இவைகளைக் கொண்டுதான் மசால் வடையினை தயாரித்து ருசிக்க முடியும். கடலைப்பருப்பு ? மகாராஷ்டிராவில் இருந்து வருகின்றது. பெரிய வெங்காயம் பெல்லாரியில் இருந்து வருகின்றது. மிளகாய், சோம்பு சேலத்தில் இருந்து வருகிறது. எண்ணெய் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றது. உப்பு ? தூத்துக்குடி. அடுப்பு, கரண்டி தயாரிக்க இரும்புத்தாது ஒரிசாவில் இருந்து வருகின்றது. இப்படி ஒவ்வொரு பொருளும் உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்து வருகிறது. அப்படி வந்தால் தான் மசால் வடையினை ருசிக்க முடியும்.

தமிழன், கர்நாடகத்தான், மலையாளி, தெலுங்கர், மராட்டியர், பார்சி, முஸ்லீம், குஜராத்தி என்று வேற்றுமை பார்த்து அவரவர் பொருட்களை வேறு பகுதிகளுக்கு அனுப்பாமல் இருந்தால் மசால் வடை கிடைக்குமா ? ருசிக்கத்தான் இயலுமா ?

இவன் தமிழன் இங்கு வந்து அதிகாரம் பன்னுகின்றானா ? இவன் முஸ்லிம் பாகிஸ்தானில் இருந்து வந்து ஆட்டம் போடுகின்றானா ? மும்பையில் இருந்து வந்தவனுக்கு எவ்வளவு கொழுப்பு இந்த ஆட்டம் போடுகின்றான் என்று யோசித்தால் மசால் வடை கிடைக்காது.

இந்த அளவுக்கு துவேஷத்தை வளர விட்டது யார் ? ஏன் ? எதற்கு ? யோசிக்கனும். அவனவனுக்கு வயிற்று பிழைப்பு இருக்கின்றது. குடும்பம் இருக்கின்றது. அதைக் காப்பாற்ற அவரவருக்கு தெரிந்த வழியில் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு எங்கெங்கோ செல்கின்றனர். கால நிலைக்கு ஏற்ப எங்கிருந்தோ வருகின்ற பறவைகள் வேடந்தாங்கலில் தங்கிவிட்டுச் செல்கின்றன. அதன் வருகையினை ரசிக்கும் மனிதனுக்கு தன்னைப் போல ரத்தமும் சதையும் படைத்த மனிதன் வருவதை விரும்பவில்லை.

குஜராத்தில் பிறந்து எங்கோ பிழைக்கப்போகும் மனிதனுக்கு முக்கியம் அவனது மதமா ? இல்லை இனமா ? அவனது பசிதான் அவனுக்கு முக்கியம். பசி தீர்க்கத்தான் உழைக்கின்றான். வேறு வேறு இடங்களுக்கு செல்கின்றான். இதில் என்ன வேறுபாடு இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் பசி எடுக்குமா ? இல்லை இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பசியே எடுக்காதா ?

மதம் எதுவும் தனிமனிதனுக்கு உதவிக்கு வரப்போவதில்லை. அது எந்தக் காலத்திலும் நடக்கவும் போவதில்லை. ஜாதி ஜாதி என்று பேசுபவர்களும் அந்த ஜாதி பேச்சால் ஒன்றையும் சாதிக்க முடியாது. பேசுபவன் தான் ஜாதி பேசுபவன் தான் ஜாதியை தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடவுள் மனிதனை காப்பாற்றுவார் என்று பேசுவோர் இன்று கடவுளுக்காக சண்டையிட்டுக்கொள்கின்றனர். பத்வா என்கின்றனர். தீவிரவாதம் என்கின்றனர். எதுக்கு இதெல்லாம் ? அந்த மதம் வந்து எதையாவது தீர்த்து வைக்கப்போகின்றதா ? இல்லவே இல்லை.

மனிதனை ரட்சிக்க வந்தவர் கடவுள். அவர் சொன்னது தான் வேதம். அதுதான் கட்டளை என்கின்றார்கள். எம் மதத்தை துவேசிக்கும் எவரையும் விட்டுவைக்க மாட்டோம் என்று சண்டையிட்டுக்கொள்கின்றனர். இவர்களையா வந்து என்னைக் காப்பாற்று என்று கடவுள் சொன்னார். இவர்களுக்கு உழைக்காமல் உட்கார்ந்து அதிகாரம் செய்து வயிறு வளர்க்கவேண்டும். அதற்கு மதச்சண்டைகள், ஜாதிச் சண்டைகள் என்று மனிதனை மனிதனை அடித்துக்கொள்ள வைத்து அவர்கள் இன்பமாக பொழுதைக் களிக்கின்றனர்.

இங்கிலாந்து ஒரு காலத்தில் நாடுகளை அடிமைபடுத்தி ஆண்டுவந்தது. எவராவது பொதுமக்களா ஆசைப்பட்டார்கள். எவனோ ஒருவனின் ஆசையும், அதிகாரமும், திமிரும்தான் மக்கள் நாடுகளுக்குள் சண்டையிட்டு சாக காரணமாக இருந்திருக்கின்றார்கள். யோசிக்க வேண்டாமா மனிதர்கள்.

முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து வரும் பெட்ரோலைத்தான் முஸ்லிமை வெறுக்கும் மனிதன் பயன்படுத்துகின்றான். இந்துத்துவம் பேசுவோர்கள் பெட்ரோலைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா ? மற்றவர்கள்தான் இவர்களின் கொள்கைகள், கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

ஆக, மனிதன் மதம், ஜாதி வேறுபாடின்றி ஒருவரோடு ஒருவர் இணைந்து உழைத்தால் தான் மனித சமுதாயத்துக்கு நல்லது. அதனன்றி ஊர், மாநிலம், நாடு என்று வேறுபாடு பார்த்தால் என்றும் உருப்பட முடியாது.

இதோ இன்னும் சிறிது நேரத்தில் பசி எடுக்கப் போகின்றது. எவனோ ஒரு இந்துவின் வயலில் விளைந்த அரிசியைத்தான் சோறாக்கி சாப்பிட வேண்டும். எவனோ ஒரு முஸ்லிமின் கறிக்கடையில் தான் கறி வாங்கவேண்டும். எவனோ ஒரு கிறிஸ்தவனின் கடையில் தான் மளிகைச்சாமான்கள் வாங்க வேண்டும்.

எதற்கு மதமும், ஜாதியும் சண்டையும் ? மனிதர்கள் ஒன்றுபட்டு சாவதற்குள் சந்தோஷமாக வாழ முயற்சிப்போம். தினமும் இறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் நாம். வாழும் வரை நாமும், நம்மை சுற்றி இருப்போரையும் சந்தோசப்படுத்தி வாழ்வோம் . இல்லையெனில் யாருக்கும் தொல்லை தராமல் வாழ்வோம்.

மனிதனால் தயாரிக்கப்படும் மசால் வடை சொல்லும் மகத்துவத்தை அதனை படைக்கும் மனிதன் உணராமல் இருப்பது தான் வேதனை.

நீதிமன்றம் - தீர்ப்புகள் - சில கேள்விகள்

--------------------------------------------------------------------------------
இறைவனுக்கு அடுத்த படியாக கருதப்படும் இடம் நீதிமன்றங்கள். நீதிபதிகள் இறைவனின் உருவமாகவே பார்க்கப்படுக்கிறார்கள் சாதாரணமான மக்களால்.பல குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பார்கள்.
நீதி மன்றம் குறித்து, எனக்குள் சில கேள்விகள்.

1. வக்கீல்களின் கட்சி சார்பு நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?
2. காலம் கடந்து வழங்கப்படும் தீர்ப்புகள் என்ன விதமான தாக்கங்களை உருவாக்கும் ?
3. அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் தாமதமாவது எதனால் ? அதை அனுமதிப்பது ஏன் ?
4. கீழ்கோர்ட்டில் ஒரு தீர்ப்பு, மேல் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு, சில சமயம் வழக்கு தள்ளுபடி ? ஏன் இந்த நிலை ? யாரால் ?
5. நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசுகளை நீதிமன்றம் என்ன செய்யும் ?
6. ஒரு குற்றம். இரு பக்கமும் வக்கீல்களின் வாதம். ஆனால் யாராவது ஒருவர் குற்றத்துக்கு தண்டனை பெறுவார். அவருக்கு வாதாடின வக்கீலும் குற்றத்துக்கு துணை போனவர் தானே ? இவருக்கு ஏன் தண்டனை இல்லை ?

-----------------------------------------------------------------------------------

Tuesday, April 22, 2008

மாதர் சங்கங்கள், பெண்ணுரிமைவாதிகளின் கவனத்திற்கு

இன்றைய உலகில் ஊடகத்தின் வாயிலாகத்தான் மனிதன் உலக நடப்புகளை அறிய நேரிடுகிறது. ஊடகமானது வாழ்வின் வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஒலி, ஒளி ஊடகங்கள் இன்று பெண்ணை சித்தரிக்கும் விதம் மாதர் சங்கங்களும், பெண்ணுரிமை பேசுபவர்களுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், இவர்கள் ஊடகங்களுக்கு எதிரான போக்கை கடை பிடிப்பதில்லை. ஆனால் மாதர் சங்கங்களும், வாதிகளும் வாய் கிழிய பேசுவார்கள். அவரவர்களுக்கு பிழைப்பும், புகழும் அதன் மூலம் வெளி வட்டாரத்தொடர்புகளும் வேண்டும்(சிலரைத் தவிர).

செய்திதாள்களில் பெண் எப்படி சித்தரிக்கப்படுகிறாள் ? வார, மாத இதழ்களில் பெண்களின் உருவங்கள் எங்கெங்கு பயன்படுத்தபடுகின்றன ? தொலைக்காட்சிகளில் பெண்கள் நிலைமை என்ன ? திரைப்படங்களில் பெண்கள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றனர் ? என்று இவர்களுக்கு தெரியும். அதனால் என்ன பலன் ?

இவர்களின் போராட்டங்கள், அறை கூவல்கள் ஏன் நமநமத்து போகின்றன ? ஊடகங்கள் பெண்களை வியாபார பொருளாக்கி விற்பனை செய்கின்றன அதன்மூலம் பத்திரிக்கையும் விற்கபடுகின்றன. இவர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெண்களை விற்பனை செய்வதில் இரு ஊடகங்களுக்கும் இடம் உண்டு. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என்று பெண்களின் பேட்டி என்று வரும் போட்டோக்களை பாருங்கள். டிவிகளும், சினிமாக்களும் பெண்களைத்தான் விற்பனை பொருளாக காட்சிக்கு வைத்து, மற்றவர் பயன்படுத்தி கொள்ள வழி வகுக்கின்றன. இணையங்களில் பாருங்கள்,பெண்கள் எப்படி எல்லாம் கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்தபடுகின்றனர் என்று.

இந்த ஊடகங்களுக்கு எதிரான போராட்டங்களை மாதர் சங்கங்களும் , பெண்ணுரிமைவாதிகளும் செய்கின்றனவா ? இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

கற்பை பற்றி பேசினார் என்று வாய் கிழிய கூப்பாடு போட்ட இவர்கள், ரஜினியின் சிவாஜியில் ஸ்ரேயாவை உரித்து காட்டினார்களே அப்போது ஏன் பேசவில்லை. ஸ்ரேயாவிற்கு எதிராகவும், அவர்களின் பெற்றோர்க்கு எதிராகவும் ஏன் போராட்டங்களில் ஈடுபடவில்லை (பிரபலமானவர்களை எதிர்த்தால் தான் அடுத்து வரும் இயக்குனர்கள் பெண்களை ஓரளவாவது ஒழுங்காக படமெடுப்பார்கள்). ஆனால் மேடையில் பேசுவார்கள். பிளாக்கில் டிக்கெட் வாங்கி வாயில் ஜொள்ளு வழிய படம் பார்ப்பார்கள். இவர்கள் எல்லாம் தலைவிகள், பெண்ணுரிமைவாதிகள் என்று கூறிக்கொள்வார்கள்.

ஷகீலாவின் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டருக்கு இவர்கள் கண்டனமாவது தெரிவிக்கலாம் அல்லவா? அல்லது அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்கும் பெண்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தலாம் அல்லவா ?

கவர்ச்சி படம் வெளியிடும் பத்திரிக்கைகளை வாங்கவும், அதை படிக்கும் தன் குடும்ப உறுப்பினர்களை தடுக்கட்டும். கவர்ச்சி படம் வெளியிடும் பத்திரிக்கைகள் மேல் இவர்கள் வழக்கு தொடரட்டும். இதெல்லாம் செய்ய மாட்டார்கள். பேசுவார்கள் வாய் கிழிய.

இவர்கள் செய்ய வேண்டியது முதலில் இவர்கள் இனத்துக்கு எதிரானவர்கள் மேல் போராட்டங்களையும், புறக்கணிப்புகளையும் நடத்த வேண்டும். கவர்ச்சியாக நடிக்கும் பெண்களுக்கு எதிராக வழக்குகள், போராட்டங்களை தொடரவேண்டும். சரக்கு இல்லை என்றால் கடை இல்லை. கடை இல்லை என்றால் விற்பனை இல்லை. விற்பனை இல்லை என்றால் வாங்குவார் இல்லை.

பிறகு பெண்களுக்கு எதிரான வலிமையான ஒலி-ஒளி ஊடகங்களை இவர்கள் எதிர்த்து, ஊடகங்களை சரி செய்யட்டும். தானாகவே பெண்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். அதை விடுத்து வெற்று சவடால்களும், அறைகூவல்களும் தேவையா ?

யோசிப்பார்களா இவர்கள் ? இல்லை என்னை ஏசுவார்களா ? ஊதவேண்டியதை ஊதிவிட்டேன். என் கடமை அல்லவா இது...

சட்டங்கள் தர்மத்தை பாதுகாக்கின்றனவா ?

மஹாபாரதத்தில் பாண்டவர்களின் மாளிகைக்கு வந்த துரியோதனன் பொய் தடாகம் என்று எண்ணி நீரில் வழுக்கி விழுந்ததை பார்த்த பாஞ்சாலி சிரித்தாள். அதனால் தான் பாரதப் போரே வந்தது என்று சொல்லுவார்கள்.

ஒருவரின் கேளிக்கையான செய்கை மற்றவருக்கு நகப்பை தரும். அதனால் பாஞ்சாலி சிரித்தாள். இது அவளுக்கு தர்மம். ஒரு பெண் ஒரு அரசனை பார்த்து சிரிப்பது அந்த ஆண் மகனுக்கு இழிவு. அதனால் கோபம் கொண்டான். இது துரியோதனனின் தர்மம் ?

எந்த தர்மத்தின் படி பாரதப் போரில் செத்தார்கள் ?

சோரம் போன மனைவியை கையும் களவுமாக பார்த்த கணவன் அவளை அங்கேயே வெட்டுகிறான். அதானால் அவனுக்கு நீதிமன்றம் தண்டனை அளிக்கிறது. இதில் கணவனுக்கு மனைவி செய்தது துரோகம். அதனால் அவன் வெட்டினான். இது கணவனின் தர்மம். ஆனால் சட்டம் என்ன சொல்லுகிறது. கொலை செய்தால் தண்டனை என் கிறது.

சட்டத்தின் நாதம் தர்மம். இந்தியாவில் தர்ம சக்கரம் தான் தேசிய சின்னம். தர்ம சக்கரம் தாம் தேசிய கொடியில் பட்டொளி வீசி பறக்கிறது.

தர்மம் எது ? அதன் பாதை எது ? சோ அவரின் மஹாபாரதம் பேசுகிறது என்ற புத்தகத்தில் "தர்மத்தின் பாதை சூட்சுமமானது " என்று எழுதியுள்ளார்.

தர்மம் எது ? சட்டங்கள் தர்மத்தை பாதுகாக்கின்றனவா ?

அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து

திண்ணை இணைய இதழில் வெளிவந்த கட்டுரை.....

அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து

அரசியல்வாதிகளுக்கு பொது மக்களின் மூலம் பெரும் ஆபத்து காத்து இருக்கின்றது. மீடியாக்களால் சூழப்பட்ட உலகம் இது. பத்து நிமிடத்தில் எந்த ஒரு செய்தியையும் உலகின் எந்த ஒரு மூலைக்கும் கொண்டு செல்ல முடியும். அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்கள், அட்டூழியங்களை தினமும் கேட்டு உள்ளுக்குள் வன்மத்தை வளர்த்து வருகிறார்கள் மக்கள். அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கும் லஞ்சமும் பொது மக்களுக்கு உள்ளூர நீருபூத்த நெருப்பு போல கோபத்தை வளர்த்து வருகின்றது.
படிக்காதவர்கள் குறைந்து கொண்டு வருகின்றார்கள். அந்த காலம் அல்ல இது, சிவப்பு கலரையும், தொப்பி, கண்ணாடி, குல்லாக்களையும் காட்டி ஓட்டு வாங்குவதற்கு. ஆபாசமாக பேசியும் திட்டவும் முடியாது. அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் பொதுமக்களால் கல்லால் அடித்து விரட்டப்படும் நாட்கள் தொலைவில் இல்லை. ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால் காரணம் இருக்கின்றது.
இன்றைய இந்தியாவில் கூட்டமாக கொலை செய்யும் முறை தலைதூக்கி இருக்கின்றது. சட்டத்தினை தன் கையில் எடுத்து அரசியல்வாதிகளால் ஆரம்பித்து வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் இன்று அவர்களுக்கு எதிராக திரும்ப இருக்கின்றது. ஆபத்தை உணர்ந்து திருந்தவில்லை எனில் நடுச்சாலையில் ஒரு நாயைப்போல அடிபட்டு இறக்கும் சூழ்னிலை விரைவில் வரத்தான் போகின்றது.
எம் எல் ஏக்கள் தங்களது தொகுதிக்கு தன்னால் முடிந்த வரை நல்லது செய்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படப்போகின்றது. இல்லையெனில் அரசியல் அனாதையாக ஆக்கப்படப்போகின்றார்கள். பொது மக்கள் செயல்படாத அரசியல்வாதிகளை பெண்டுகளட்டப்போகின்றார்கள்.
அரசியல்வாதிகளால் தட்டி கொடுத்து வளர்க்கப்பட்ட வன்முறைக்கலாச்சாரத்தை இப்போது பொதுமக்கள் தமது கையில் எடுத்துக்கொண்டு விட்டனர். செயலிழந்த அரசியல்வாதிக்கு தர்ம அடி காத்து இருக்கின்றது. மக்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள் என்றால் படுகேவலமான முறையில் மரணமும் காத்து இருக்கின்றது.
பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஜெயித்த பின்பு ஓடி ஒளியமுடியாது. வேறு தொகுதிக்கும் மாற முடியாது. அங்குள்ளவர்களால் தர்ம அடி கிடைப்பது நிச்சயம்.
உத்திரப்பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் பொதுமக்கள் பொங்கி எழுந்து சட்டத்தை தன்கையில் எடுத்து வெறி ஆட்டம் போட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் ?
நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால் தீர்ப்பினை அவர்களே கொடுக்க துவங்கி விட்டனர். ஒரு சாமானியன் வழக்கு என்று நீதிமன்றம் ஏறினால் அவன் அனைத்தையும் இழந்து தான் நீதியினை பெறமுடியும்.
கீழ் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு , மேற்கோர்ட்டில் ஒரு தீர்ப்பு என்று நீதி தள்ளாடுகின்றது. தாமதமாகும் நீதி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன ? இரண்டும் ஒன்றுதான். அதனன்றி சட்டத்தை சட்டையாக அணிந்து இருக்கும் காவல் துறையினரின் அராஜக போக்கு காவல் துறையின் மீது கண் மூடித்தனமான கோபத்தை சாமானியனுக்கு ஏற்படுத்தி விடுகின்றது.
பணக்காரன் ஒருவன் காவல் நிலையம் சென்றால் அவனுக்கு கிடைக்கும் மரியாதை, ஏழைக்கு கிடைப்பதில்லை. எந்த ஒரு காவல் நிலையத்திலாவது மரியாதையாக பேசுகின்றார்களா என்றால் இல்லை என்பதே உண்மை.
மேற்கு வங்கத்தில், பிர்புமில் பொதுமக்கள் ரேசன்கடையினை அடித்து தகர்த்துள்ளனர். நான்கு ரேசன் டீலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். பதினோறு மாதமாக ரேசன்கிடைக்கவில்லை, பட்டினி கிடக்கிறோம் என்று காரணம் சொல்லுகின்றார்கள் கலவரத்தில் ஈடுபட்டோர். ரேசன்கடையில் மக்களுக்கு வழங்க வரும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கள்ள மார்க்கெட்டுக்கு செல்கின்றன. தடுக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்க்கின்றது. எம் எல் ஏவுக்கு பங்குபணம் செல்லுகின்றது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழைய மொழி. பொறுத்தார் பட்டையக் களட்டுவர் என்பது புது மொழி ஆகப்போகின்றது.
காவல்துறையினர் அரசியல்வாதிகளுக்கு குடை பிடிப்பதையும், கார் கதவினை திறந்து விடுவதையும் தான் கடமை என செய்கின்றார்கள். தவறு செய்தவர்கள் யாராயினும் பிடித்து இழுத்து வந்து தண்டனை பெற்று தருவதில் காவல்துறைக்கு நேரம் போதவில்லை.
கடமை என்னவென்பதை மறந்து விட்டு எதை எதையோ செய்கின்றார்கள். ஒருவனை அடிக்கவும், மிரட்டவும் அதிகாரம் பெற்றவர்கள் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போல எவரை பார்த்தாலும் அப்படியே செய்கின்றார்கள்.
வக்கீல்களின் இதயம் கெட்டுவிட்டது. இன்றைய அரசியல்வாதிகளில் பெரும் பாலோர் வக்கீல்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. நீதி நேர்மை என்றே புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும். ஆனால் உண்மை என்ன ? வக்கீல்கள்தான் இன்றைய இந்தியா இப்படி கெட்டுபோக காரணமாய் இருக்கின்றார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. தவறே செய்யாத வக்கீல்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒரு துளி விஷம் எப்படி அனைத்தையும் விஷமாக்குகின்றதோ அப்படித்தான் இந்த விஷயமும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்பவர்களுக்கு ஆஜராகி வாதாடுகின்றார்கள் பெரும் புகழ் பெற்ற வக்கீல்கள். இவர்களுக்கு பணம்தான் குறி. நீதி என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குதான். குடிபோதையில் காரை ஓட்டி ஏழு பேர் இறக்க காரணமாய் இருப்பவனுக்கு ஒரு புகழ் பெற்ற வக்கீல் ஆஜராகின்றார். கேட்டால் தொழில் தர்மம் என்பார். எது தொழில் தர்மம் ? இதுவா ? காசு கொடுத்தால் போதும், கொடுப்பவனுக்கு ஆதரவாக ஆஜராவார்கள் இவர்கள். அதுவுமன்றி சட்டத்தை வளைக்கவும் இவர்களின் புகழை பயன்படுத்துவார்கள். ஏனெனில் தோற்றுவிட்டால் தொழில் நடக்காதே.
கேரளாவில் திருட்டுக்குற்றம் சாட்டி ஒரு கும்பல் இரண்டு பெண்களை துவம்சம் செய்தது. காவல்துறையினர் தான் காப்பாற்றினார்கள்.
பீகாரில் திருட்டுக்குற்றம் சாட்டி சாலையில் வைத்து ஒரு மனிதன் மிகவுக் கொடூரமாக தாக்கப்பட்டான். பீகாரில் காவல்துறையினரின் அலட்சியப்போக்கால், திருடர்கள் என்று சந்தேகப்பட்டு பொது மக்கள் பத்து பேரை அடித்தே கொன்று இருக்கின்றார்கள்.
தமிழகத்தில் ரயில்கள் தாமதமாக வருவதாக சொல்லி ரயில் மறியல் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள் பொது மக்கள். இவர்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனவா ? இல்லை போராட்டம் செய்தனவா ? இல்லை. பொங்கி எழுந்த பொது மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றே கருத வேண்டி இருக்கின்றது.
பொது மக்களுக்கு நீதியின் மேலும் நீதிமன்றத்தின் மேலும் உள்ள நம்பிக்கை வெகுவாக குறந்து வருகின்றது. சட்ட பாதுகாவலர்கள் அவர்களின் கடமையினை செய்ய மறந்து விட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதால் தடி எடுத்தவனெல்லாம் தாண்டவராயன் ஆகிவிட்டான். தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து விட்டது. அரசியல்வாதிகளுக்கு பல்லக்கு தூக்குவதுதான் காவல்துறையின் வேலையாக இருக்கின்றது. அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறுகின்றனர். பதவி ஆசையும், அதிகாரம் அவர்களை ஆட்டி வைக்கின்றது. பொது மக்களால் அவர்களின் ஆட்டம் அடக்கப்பட போகின்றது என்பது உண்மையாகி வருகின்றது..
திருந்தவேண்டும் இல்லையெனில் திருத்துவார்கள்…