”நாங்கள் விரைவில் புதிய நீர்க்கொள்கையை அறிவிக்கப் போகிறோம். இதன்படி எங்கள் மாநிலத்தில் பாயும் நதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுக்க, இனி எங்கள் சட்டமன்றத்தின் அனுமதி கட்டாயம் பெற்றாக வேண்டும்' என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் “
அண்டை மாநிலத்திலிருந்து இப்படி ஒரு அறிக்கை. இதுவரை தமிழகத்தில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை. முல்லைப் பெரியார் அணையில் உச்சநீதி மன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டது கேரளா. கேட்க நாதியில்லை. இந்த அறிக்கையினை மற்ற மாநிலங்களும் பயன்படுத்தினால் விளைவு தமிழ் நாடு சுடுகாடாகும் நிலை.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள நீர் ஒப்பந்தம் இதுவரையில் நல்ல முறையில் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்கள் பக்கத்து மாநிலங்களின் உரிமையில் கை வைப்பது என்பது உள் நாட்டுக்குள் மாநிலப் பிரச்சினைகளை உருவாக்கும் என்பது இவர்களுக்கு தெரியாதா ? தெரிந்தும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பது தான் விளங்கவில்லை.
இப்படிப் பட்ட விஷயங்கள் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மத்திய அரசுக்கு தெரியாதா ? தெரிந்தும் ஏன் இதுவரை மெளனம் காக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இந்திய யூனியன் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. மாநிலங்கள் அடித்துக் கொள்ளும் முன்பு நடவடிக்கை எடுப்பது நல்லது. தும்பை விட்டு வாலைப் பிடிக்காமல் இருந்தால் போதும். செய்வார்களா ?