குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, August 17, 2008

நான் என்ன செய்ய ? பகுதி 1

என் நண்பரின் ஆபீஸுக்குள் நுழைந்த போது கம்ப்யூட்டரில் ”எவனோ ஒருவன் வாசிக்கிறான்” என்ற பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. அலைபாயுதே படத்தில் வரும் அந்தப் பாடல். எனக்கு அந்தப் பாடல் பிடிக்காது.

கம்ப்யூட்டரின் முன்பு நண்பரின் ஆபீஸில் வேலை செய்யும் ஃப்ரான்சிஸ்கா அமர்ந்திருந்தாள்.

“என்ன ஃப்ரான்சிஸ்கா ? பாட்டெல்லாம் சோகமாக இருக்கிறதே ? என்ன விஷயம்” என்று கேட்டேன்.

”ஒன்றுமில்லை சார்..”

சிரித்தேன்.

”ஃப்ரான்சிஸ்கா என்னை என்ன மடையன் என்றா நினைக்கிறாய் ? “

“இல்லை சார். “ இல்லை என்று சொல்லும் போதே ஏதோ இருக்கிறது என்று எனக்குள் தோன்றியது. இதற்குமேல் கேட்க எனக்கு சங்கோஜமாக இருந்ததால் விட்டு விட்டேன்.

காலை நேரம். மதியம் சாப்பாடு பற்றி பேச்சு வந்தது.

“சார் மதியம் எங்கே சாப்பிடுவீங்க?”

“ஆஸ்ரமத்தில் சாம்பாரா சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சு ஃப்ரான்சிஸ்கா, அதனாலே இன்றைக்கு மட்டன் சாப்பிடனும் என்று ஆசை”

“சார்.. எங்க வீட்டில மட்டன் குழம்பும் வறுவலும் செய்கிறார்கள். எடுத்துட்டு வரட்டுமா ? சாப்பிடுவீர்களா ?“

மட்டன் குழம்பு, வறுவல் என்றவுடன் எனக்கு நாக்கில் ஜொள்ளு ஒழுகியது. அதை வெளிக்காட்டாமல்,

“உங்களுக்கு எதுக்கு சிரமம் “ என்றேன்.

“ சிரமம் என்றெல்லாம் இல்லை சார். சாப்பிடுகிறீர்கள் என்றால் சொல்லுங்கள். எடுத்து வருகிறேன்.”

“ சரி. கொஞ்சமா எடுத்துட்டு வாங்க. கொஞ்சம் ரசம் மறக்காமல் எடுத்து வாருங்கள்” என்றேன்.

ஃப்ரான்சிஸ்கா சாப்பாடு எடுத்து வர கிளம்பி விட்டாள். நான் கணிணியில் சீரியஸாகி விட்டேன். அதுவரை எனது நண்பர் வரவில்லை. செல்லுக்கு கூப்பிட்டால் தொடர்பில் இல்லை என்று வருகிறது.

ஒரு மணி இருக்கும். கையில் பெரிய பையுடன் வந்தாள்.

தட்டில் சோறு போட்டு மட்டன் குழம்பும் வறுவலுடன் ஆம்லெட்டையும் எடுத்து வைத்தாள். கண்ணில் நீர் வழிய சாப்பிட்டேன். அம்மா கையில் சாப்பிட்டது போல இருந்தது. எனக்குள் சொல்லொண்ணா இன்பம்.

சந்தோஷத்தில் “ ஃப்ரான்சிஸ்கா சாப்பாடு அருமை. உங்க கைக்கு ஒரு முத்தம் தரலாம் போல இருக்கு” என்றேன்.

“ம்.. ஆசையைப் பாருங்க” என்று பளிப்புக் காட்டினாள் ஃப்ரான்சிஸ்கா.

என் முகம் சுருங்கியதைப் பார்த்தவள், “சரி போகட்டும். இந்தாருங்கள்” என்று கை நீட்ட ஒரு முத்தத்தை பதித்தேன் அவள் கையில்.

சிரித்தாள். நானும் அசடாக சிரித்து வைத்தேன்.

”அவ்வளவுதானா? ரசம் எப்படி இருக்குன்னு சொல்லவில்லையே“ என்றாள்.

“உண்மையை சொல்லனுமா. பொய் சொல்லனுமா“ என்று கேட்க

“உண்மையைச் சொல்லுங்க” என்றாள்.

“சுமார் தான் ஃப்ரான்சிஸ்கா“

“நான் தான் வைத்தேன். எனக்கு ரசம் வைக்கத் தெரியாது. மட்டன் குழம்பு, வறுவல் என் அம்மா செய்தார்கள்“ என்றாள்.

எனக்கு சுறுக்கென்றது. ”சாரி ஃப்ரான்சிஸ்கா. ரசம் கூட பரவாயில்லை” என்று சொல்லி வைத்தேன். சிரித்தாள்.

சில நாட்கள் கடந்தன. ஃப்ரான்சிஸ்கா தனியாக இருக்கும் போது ”எவனோ ஒருவன் வாசிக்கிறான்” பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாக என் நண்பர் சொன்னார்.

ஃப்ரான்சிஸ்கா எவரையாவது காதலிக்கும் போல என்றும் சொன்னார். நானும் ஆமோதித்தேன்.

ஒரு ஞாயிற்று கிழமை நாளில் எனது நண்பரும் ஃப்ரான்சிஸ்காவும் மதுரைக்கு சென்று வந்தனர். நான் மாலையில் வந்தேன் என் நண்பரைப் பார்க்க. என்னுடன் தனியாகப் பேச வேண்டும் என்று சொன்னார். பாருக்கு சென்றோம்.

“சார். உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்” என்றார்.

“சொல்லுங்கள்” என்றேன்.

”“ஃப்ரான்சிஸ்கா உங்களைக் காதலிக்கிறாள்“ என்றாள்.

“என்ன ??? “ எனக்குள் அதிர்ச்சி.

“ஆமாம் சார். பஸ்ஸில் இருவரும் செல்லும் போது அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தாள். என்ன ஃப்ரான்சிஸ்கா என்று கேட்ட போது அவள் உங்களைப் பற்றி தான் பேசினாள். சாப்பிட அழைத்தபோது மறுத்து விட்டாள். இன்று பாஸ்டிங் இருப்பதாக சொன்னாள். அவள் வாரத்தில் நான்கு நாட்கள் பாஸ்டிங் (பட்டினி) இருப்பாள். என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறாள். ஏன் என்று கேட்க வில்லை. இன்று தான் எனக்கு விடை கிடைத்தது சார். நீங்கள் நடக்க வேண்டுமென அவள் பாஸ்டிங் இருப்பதாக இன்று சொன்னாள் சார். எனக்கு கண்ணீரே வந்து விட்டது சார்.”

மனதுக்குள் பூகம்பம் அடித்தது. மனசு வேற பாரமாகிவிட்டது. என் நண்பர் சொல்லி விட்டு கண்களை துடைத்துக் கொண்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

”ஆனால் என்னால் அவளைக் காதலிக்க முடியவில்லையே சார். நான் என்ன செய்ய ?“

”சார் ப்ளீஸ் சார். பாவம் சார் ஃப்ரான்சிஸ்கா. உங்களையே வாழ்வாக எண்ணி இருக்கிறாள். என்று சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

ஃப்ரான்சிஸ்காவுக்கு மேல் படிப்புக்கு ஆர்டர் வர சென்று விட்டாள் வேலைக்கு வரவில்லை. நான் அவளுக்கு அளித்த பரிசில் எங்களது ஆத்மாவுக்கு என்று எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு அழுதாள்.

என்றோ ஒரு நாள் ஃப்ரான்சிஸ்காவின் நினைவு வர அந்தப் பாடலை கேட்டேன். இப்பொழுது நான் நான் மட்டும் அந்தப் பாடலைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் தனியாக. பாடல் வரிகள் கீழே...


எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதை தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதலுக்காகவோ அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குயிலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு இதுபோல மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்


நன்றி :
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மணிரத்னம்,
பாடலாசிரியர் : வைரமுத்து.
__________________