இரவு நேரம். மணி பத்து இருக்கும். அப்போது ” சார் உங்களுக்கு போன் வந்திருக்கிறது “ என்றான் கார்த்தி. போனில் என் நண்பர்..
“சார். லாராவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருக்கிறேன். அவள் உங்களைப் பார்க்கனும்” என்று சொல்கிறாள்.
அடித்துப் பிடித்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றேன். அங்குள்ள நர்ஸ், டாக்டர்ஸ் எல்லாம் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அவர்கள் ஏன் அப்படி பார்க்கிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை.
என் நண்பர் வந்து லாரா இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். கொடி போல துவண்டு கிடந்தாள் லாரா. லாராவுக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. முனகிக் கொண்டிருந்தாள். அவள் அக்கா அருகில் நின்று அழுது கொண்டிருந்தாள். என்னை சோகத்துடன் பார்த்தாள். எனக்கு மயக்கம் வரும் போல இருந்தது. லாரா நன்றாகத்தானே இருந்தாள். ஏன் திடீரென்று இப்படி ஆனாள்.அருகில் நாற்காலியினை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தேன்.
நான் ஆபீஸ் வந்து வண்டியை நிறுத்தும் முன்பு அருகில் வருவாள்.
“சார் வாங்க..” என்று சொல்லிச் சிரிப்பாள்.
மாடர்ன் டிரஸ்ஸில் தேவதை போல வந்து நிற்பாள். பக்கத்துக் கடைக்காரன்கள் எல்லாரின் வயிற்றிலும் புகை வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். புத்தகங்களை எடுத்துக் கொண்டு கதவை திறந்து பிடித்த படி நிற்பாள்.
”லாரா.. சாப்பாடு ஆயிடுச்சா” என்று கேட்டபடி சேரில் அமர்வேன்.
“ம்.. நீங்க சாப்பிட்டீங்களா ? “ என்பாள். என் அம்மாவை அவள் ரூபத்தில் பார்ப்பேன். அப்படி ஒரு அன்பு என் மீது.
அப்படி சுறுசுறுப்பாய் இருந்தவளா இப்படி மயங்கிக் கிடக்கிறாள். என் நெஞ்சில் பாராங்கல்லை வைத்தது போல வலித்தது.
”தங்கம்..தங்கம்..தங்கம்....தங்கம்...” மந்திரம் போல ஜெபித்துக் கொண்டிருந்தாள். எனக்கு தலை கிறுகிறுத்தது.
என் நண்பர் அருகில் வந்து ” லாரா..லாரா.. இங்கே பாரு தங்கம் வந்திருக்கிறார் “ என்று இரு முறை சொன்னார். லேசாக கண் விழித்தாள். என்னைப் பார்த்தாள்.
நான் லாரா என்றேன் மெதுவாக. கண்ணில் கண்ணீர். என்னைப் பார்த்ததும் படக்கென்று எழ முற்பட்டாள். அவள் அக்கா வந்து எழ விடாமல் தடுத்தாள்.
”சார். எனக்கு ஒன்றுமில்லை. அழாதீங்க...” என்று சொல்லி சிரித்தாள். முகத்தில் களைப்பு தெரிந்தது.
அடுத்து அவள் செய்தது என்ன ??? ( தொடரும் )