போட் ஹவுசில் அன்றைய தினம் நிறைய மக்கள் குவிந்திருந்தார்கள். ஆளாளுக்கு மொபைல் போன், கேமராக்களுடன் தான் திரிகிறார்கள். மனிதர்களுக்கு தன் இருப்பை உலகுக்கு காட்ட வேண்டுமென்ற ஆவல்(ஆதிக்க மனப்பான்மையாக இருக்குமோ?). ஃபோட்டோக்களாக எடுத்துக் கொண்டிருந்தனர். சுற்றுலா வந்ததன் நோக்கத்தை முற்றிலுமாக மறந்து விட்ட மனிதப் பிறவிகள். இயற்கையை அதன் அமைதியோடு மனதுக்குள் உணர்ந்தால் தான் அதன் மகத்துவம் புரியும். ஆனால் இவர்கள் செய்த காரியங்கள் புற அழகிற்கும், நாக்குச் சுவைக்கும் அடிமையாய்ப் போன மனித அகதிகள் போன்றவர்கள் இவர்கள் என்பதனை உணர்த்தின.
சுற்றி வர கடைகள். எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம். அமைதியான, அழகான அந்த இடத்தை வணிக அரங்கம் போல உருமாற்றியிருந்தார்கள். மக்கள் கடைகளில் குவிந்திருந்தார்கள். சோளம், ஐஸ் கிரீம் என்று தின்பண்டங்களின் விற்பனை சூடு பறந்தது. குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் நேற்றைய குழந்தைகளும் இன்றைய குழந்தைகளும் வீல் வீல் என்று சத்தமிட்டபடி விளையாடினார்கள். தம்பியின் வற்புறுத்தல் காரணமாக போட்டில் ஏறினேன். வீல் சேர் அனாதையாக நின்றது.
தூரத்தில் இருந்து வீல் சேரைப் பார்த்தேன். ”வீடு வரை உறவு. வீதி வரை மனைவி. காடு வரை மக்கள். கடைசி வரை யாரோ“ கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது. சில இடங்களில் சில தேவையற்றுப் போகும். மனிதனும் தன் வயதான காலத்தில் மற்றவருக்கு பயனில்லாப் பொருளாய் ஆகிவிடுகிறான். உலகம் பொருள் சார்ந்த வாழ்க்கையின் பால் நடைபோடத் துவங்கி விட்ட காரணத்தால், மனித உணர்வும், உணர்ச்சியும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. அவை மனோ தத்துவ மருத்துவர்களால் மறு சீரமைப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. புறவுணர்வு வாழ்க்கையின் பால் மூழ்கிக் கிடக்கும் மனிதனுக்கு அகவுணர்வு வாழ்க்கையின் மகத்துவம் புரிதலில்லை. அதை சில ஆன்மீகவாதிகள் என்போர் காசாக்கி வருகின்றனர். அவ்விடத்திலும் கூட்டமுண்டு. அவ்விடமும் வணிக அரங்காக மாற்றமடைந்திருக்கும். ஏனென்றால் உலக மாந்தர்கள் நுகர்வோர் வாழ்வினை மட்டுமே நாகரீகத்தின் உச்சக்கட்டமாக நினைக்கின்றார்கள். இவர்களின் பொழுது போக்கு மல்டி பிளக்சுகளிலும், உயர்தர ஹோட்டல்களிலும் ஒளிந்து கிடக்கிறது. அங்குச் செல்லத் தேவையான பொருளாதாரத்திற்காக தன் வாழ்வையே பலியாக்கும் விட்டில் பூச்சிகளாய் இன்றைய மனிதர்கள் உலா வருகிறார்கள்.
அமைதியான தண்ணீர். பச்சை நிறத்தைப் பிரதிபலித்தது. சுற்றிலும் மரங்கள். தண்ணீரில் படகுகள் மிதந்தன. வாழ்க்கையில் மனிதர்கள் மிதப்பது போல. படகும் மக்களை சுமந்து கொண்டு தண்ணீரில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. மக்கள் தன் மக்களை சுமப்பது போல.
தனி போட் எடுத்துக் கொண்டு நானும், தம்பியும், எனது மனைவியும், தம்பி மனைவியும், என் மகள் மற்று மகனுடன் போட்டில் பயணித்தோம்.
வலிந்து வலிந்து போட்டைத் தள்ளும் மனிதரைப் பார்த்தேன். உள்ளம் நிலை கொள்ள வில்லை. வலித்தது. ஒரு ஜாண் வயிற்றுக்காக கைகள் வலிக்க வலிக்க, மூச்சுத் திணற திணற கால்களை உதைத்துக்கொண்டு கண்கள் வெளிவரும் அளவுக்கு இரு கைகளாலும் துடுப்பினால தண்ணீரைத் தள்ளிக் கொண்டு வந்தார். மனதுக்குள் வலித்தது. மனித வாழ்க்கை இவ்வளவு குரூரமானதா ?
ஏன் ???????????????????????????????????????????????????????????
1 comments:
me the firstu
good post
Senthil Coimbatore
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.