உழவர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிய பிறகு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். கூடவே மனைவியும், மகளும். மீன்கடையில் அழகழகாக மீன்களை அடுக்கி வைத்திருந்தனர். சனிக்கிழமை கவுச்சி சாப்பிடாமல் இருங்கள் என்ற எனது அஸ்டாராலஜிஸ்ட் நண்பரின் கட்டளையினை இன்று ஒரு நாள் மீறித்தான் பார்ப்போமே என்று மனைவியிடம் மெதுவாக அம்மணி, இப்படி இப்படி என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய, முறைத்தாள்.
சரணாகதி தத்துவத்தை உதிர்த்தேன், வேறு வழியின்றி மீன் சமைத்துத் தர சம்மதித்தாள். சட்டத்தையும் சில சமயம் வளைத்து விடலாமல்லவா? எங்கள் வீட்டுச் சட்டம் வயிற்றுக்காக சற்றே வளைந்து கொடுத்தது. அதனால் கிடைக்கப்போவது மீன் குழம்பு.
சங்கரா மீன் வாங்கிக் கொண்டிருக்கும் போது அருகில் அடுக்கி வைத்திருந்த நண்டு சோகமாக என்னையே பார்ப்பது போல தோன்றியது. எனக்கு ஒரு வழக்கமிருக்கிறது. யாரேனும் சோகமாக முகத்தை வைத்திருந்தால் எனக்கு பார்க்க பொருக்காது.உடனடி நிவாரணம் செய்ய முற்படுவேன். அந்த வழக்கத்தின் காரணமாக நண்டின் சோகத்தை போக்க விரும்பினேன். அம்மணியை நோக்கி ஒரு ரொமாண்டிக் லுக் விட, அடுத்த நிமிடம் நண்டும் மெனுவில் சேர்ந்தது.
உள்ளுக்குள் ஒரே கும்மாளம். ஆகா இன்னிக்கு மீன் குழம்பும், நண்டு வறுவலும் கிடைக்கப்போவதை எண்ணி எண்ணி மனசு எக்காளமிட்டது.
மீன் குழம்பினை எப்படிச் செய்வதுன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க..
கொஞ்சம் தளர நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை கிளறி விட்டு, அதனோடு சிறிய வெங்காயம் மற்றும் நடுவில் கீறிய இரண்டு பச்சை மிளகாயையும் போட்டு வெங்காய வாசம் போகும் வரை வதக்கி அத்துடன் தட்டி வைத்த பூண்டும், இரு நறுக்கிய தக்காளியுடன் துளியூண்டு உப்பும் சேர்த்து வதக்கிய பிறகு மல்லித்தூள், மிளகாய்தூள் சேர்த்து வாசம் போகும் வரை, அதாவது எண்ணெய் மசாலிவிலிருந்து பிரியும் வரை வதக்கிய பிறகு புளி சேர்த்து நன்கு கொதிக்க வைத்த சாற்றில் சங்கரா மீனைச் சேர்த்து இரு கொதி விட்டு இறக்கி வைத்து மேலே மல்லித்தழை தூவி, சிறிது நேரம் சென்ற பிறகு சுடு சோற்றில் குழம்பினை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கம் அவ்விடத்தில் இருக்கும்.
இப்போ நண்டு வறுவல் எப்படிச் செய்வதுன்னு சொல்றேன்.
அரை மூடி தேங்காய், நான்கு பல் பூண்டு, இரண்டு வெங்காயம், அரை டீஸ்பூன் சோம்பு, நான்கு சிவப்பு மிளகாய் இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டு அத்துடன் கழுவிய நண்டினை சேர்த்து பிசைந்து தேவையான அளவு உப்புச் சேர்த்து வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் மசாலாவுடன் இருக்கும் நண்டினை சேர்த்து ஒரு கிளறு கிளறி மூடி வைத்து விடவேண்டும். சிறிது நேரத்தில் நண்டு வெந்து விடும். மசாலா நன்கு சிவக்கும் வரை பிரட்டி எடுத்தால் வாசம் ஊரையே தூக்கும்.
அந்த மசாலாவின் சுவையே தனி. எந்த நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காத அருமையான சுவை.
கிடைக்கப்போகும் மீன் குழம்பும், நண்டு வறுவலும் எண்ணங்களில் விரவ, வண்டியை விரட்டினேன்.
”ஏங்க, வெங்காயம், பூண்டு, தக்காளி நறுக்கி தருகின்றீர்களா” என்று மனைவி கேட்க, வேறு வழி. மீன் குழம்பு வேண்டுமே, நண்டு வறுவல் வேண்டுமே. மறுக்க முடியுமா? (நேரம் பார்த்து காரியத்தை நடத்திக் கொள்வது இப்படித்தான் போலும். தலையணை மந்திரமாக இருக்குமோ??)
சின்ன வெங்காயம் உரித்து இரண்டாக வெட்டினேன். பூண்டினை தோல் உரித்து வைத்தேன். தக்காளிகளை சிறிய சிறிய பீஸ்களாக நறுக்கி வைத்தேன். தேங்காயை திருகி எடுத்து வைத்தேன்.
முக்கால் மணி நேரத்தில் நண்டு மசாலாவின் வாசனையும், மீன் குழம்பு வாசனையும் என்னைச் சூழ்ந்தது. சாப்பாடு தயார் என்றார் மனைவி. இன்று ஒரு கட்டு கட்டி விட வேண்டுமென்று நினைத்தபடி அறையிலிருந்து வெளி வந்தேன்.
மூன்று தட்டுகளில் சூடாக சாதம் எடுத்து வைத்தார். மகனும், மகளும் ”அப்பா நண்டினை எடுத்துக் கொடு “ என்றார்கள். பிள்ளைகள் இருவரும் சாப்பிடட்டும் பின்னர் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றுச் சொல்லி விட்டு, நண்டு மசாலாவைச் சோற்றில் சேர்த்து பிசைந்து ஊட்டி விட்டேன். நண்டின் சதையினை எடுத்து ஊட்டி விட்டேன். ஆர்வமாக “ அப்பா நல்லா இருக்கு” என்று சொல்லியபடியே சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும், நாங்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தோம். ரித்தியும், அம்முவும் நல்லா சாப்பிட்டாஙகல்ல என்று சொல்லியபடி மீன் குழம்பினை சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டேன். அதிகம் சாப்பிட இயலவில்லை. மனைவியோ ஒரு கரண்டி சாதத்தைக் கூட சாப்பிடவில்லை. பிள்ளைகள் இருவரும் சாப்பிட்ட அழகும், அவர்களின் சந்தோஷமும் இருவருக்கும் சாப்பிட்ட நிறைவினைத் தர, நண்டும் மீன்குழம்பும் சட்டியில் இருந்தன, ஆனால் எங்களுக்குத்தான் சாப்பிடப் பிடிக்கவில்லை.
4 comments:
// பிள்ளைகள் இருவரும் சாப்பிட்ட அழகும், அவர்களின் சந்தோஷமும் இருவருக்கும் சாப்பிட்ட நிறைவினைத் தர, நண்டும் மீன்குழம்பும் சட்டியில் இருந்தன, ஆனால் எங்களுக்குத்தான் சாப்பிடப் பிடிக்கவில்லை. //
படித்ததும் கண்கள் கண்ணீரால் நனைத்தன. பெற்றோர் அன்பு இதுதான். தங்கள் குழைந்தைகள் சாப்பிடுவதை பார்ப்பதே ஒரு சுகம்.. அனுபவித்தவர்களுக்குதான் அந்த சுகம் தெரியும். நன்று நண்பரே.. இராகவன், நைஜிரியா
படித்து முடித்தும் மனதை என்னவோ செய்தது. மிக நல்ல பதிவு.
ரேகா ராகவன்.
மீனை வாங்கிட்டு எங்க இனைய பக்கத்திர்க்கு வாங்க எப்படி சமைக்கலாம் என்பதை பார்த்து சமைத்து சாப்பிடுங்க
இவன்
WWW.TAMILKUDUMBAM.COM
பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க
ராகவன், ரேகா ராகவன், தமிழ்குடும்பம் மூவருக்கும் நன்றிகள்.
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.