குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, November 3, 2008

சந்தவை தயாரிப்பில் நான்

ஒரு மாலை நேரம்.கணிப்பொறியில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தேன். கிரைண்டர் சத்தமிட்டது. ச்சே இவளுக்கு எப்ப பாரு இதே வேலை. எரிச்சலாக இருக்க, கதவை சாத்த முயற்சித்த போது, அம்மணி ( அதாங்க என் மனைவி)

"என்னங்க இங்க வாங்க " என்று அழைக்க,

ச்சே இவளுக்கு இதே வேலையாப் போச்சு எப்ப பாரு எதையாவது சொல்லி மூடை கெடுத்து விட்டு..ச்சே ச்சே. எதுக்குடா கல்யாணம் பன்னினோம் என்று ஒரே வெறுப்பா இருந்தது. வேறு வழி இல்லாததால் அழைப்புக்கு உடன்பட வேண்டியதாகி விட்டது.கோர்ட்டு சம்மன் எல்லாம் தூசு பண்ணிடலாம். ஆனா இந்த அம்மணிகள் உத்தரவு இருக்கே கேட்டவுடன் குலை நடுங்க செய்கின்றன..

" எதுக்கு வரச் சொன்னே " கோபத்துடன் நான்.
" இதை பிடிச்சு திருகுங்க " என்றாள். எனக்கு சரியான கோபம். வேலையைக் கெடுத்து விட்டாளே என்று.
" இதுக்கா கூப்பிட்டே , ஏன்டி உசுரே எடுக்கிறே "
" உஸ், பேசாம சொல்லுறதை செய்யுங்க " என்றாள். பார்வையா அது. அப்படி ஒரு கொடூரமய்யா அது..
அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். ஹிட்லராம் ஹிட்லர். அவனெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. இந்த அம்மணிகள் தானய்யா கொடுங்கோலர்கள். மனசாட்சியே இல்லாத இடி அமீன்கள்.

சமயலறையில் ஒரு வஸ்து இருந்தது. மாமியார் உபயமாம். மாமியார்கள் தானைய்யா எமன். ஏற்கனவே ஒன்று தலைமீது ஏறீ உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடுது. இதுல இது வேற. பார்க்க ஸ்பீல்பெர்க் படத்தில் வருமே ஒரு இயந்திரம், பூமிக்குள் இருந்து வெளியே வந்து ஆட்கள் எல்லாம் பிடித்து முழுங்குமே, மூனு காலு கூட இருக்குமே, அது போல இருந்தது.

இடியாப்ப உரல் பாத்து இருக்கீங்களா ? அது போல தான் இருந்தது அந்த வஸ்து. ஆனா அதை மூன்று கால்களுக்கு இடையில் பொருத்தி மேலே திருகு போல இருந்தது அதை திருகினால் உரலுக்குள் சென்று அழுத்துகிறது. உரலுக்குள் மாவை வைத்தால் பிழிந்து கம்பி போல வெளியே தள்ளுகிறது.

அம்மணி இட்லி போல (எங்க வீட்டு இட்லி வைத்து தான் எல்&டி பெரிய பெரிய கட்டிடம் எல்லாம் கட்டுறாங்க) இருந்ததை எடுத்து உரலுக்குள் வைத்து

" ம், திருகுங்க " என்றாள்.

ராணுவ உயர் அதிகாரி கூட இப்படி எல்லாம் உத்தரவு போட மாட்டார்களய்யா. அங்கே வேலை பிடிக்கலைன்னா ராஜினாமா செய்து விடலாம். இங்கே முடியுமா ? விதி.. யாரோ நம்ம மன்றத்துல கல்யாணம் செய்யபோறதா எழுதி இருந்தாங்க . சமயம் பார்த்து அது நினைவுக்கு வர, அவரை நெனச்சு பாவமா இருக்க, நொந்தபடி அந்த கம்பியை பிடித்து திருகினால், அட நொக்காமக்கா, இட்லியா அது இல்லை வெள்ளை குண்டா. திருகவே முடியலை. கையெல்லாம் எரிச்சல் வர, ஆம்பளை இல்ல, முக்கி முக்கி ( சத்தம் வெளியே தெரியாமல் தானய்யா )ஒரு வழியா திருகி முடிக்க, வெள்ளை வெளேரென்று அது கீழே இருந்த தட்டில் சுருள் சுருளாக விழுந்தது. அதற்குள் எனக்கு வேத்து விருவிருத்து போயிருச்சு.

ஒரு வழியா இருந்த வெள்ளை குண்டுகளை எல்லாம் உரலுக்குள் திணித்து அம்மணி " ம்... " என்று உத்தரவு இட நான் விக்கி விதிர்த்து முக்கி முனகி கை எரிச்சல் பட பிழிந்து முடித்தேன்.

அருகில் அமர்ந்து இந்த சமையல் போரை பார்த்துக்கொண்டு இருந்த என் ஒன்றரை வயசு மகளுக்கு தட்டில் அந்த சந்தவையை போட்டு கொடுக்க, கீழே அமர்ந்து கொண்டு சிறிய கையால் எடுத்து வாயில் வைத்து ஒரு உறிஞ்சு உறிய, வாய்க்குள் வைத்து மென்றபடி என்னை பார்த்து சிரித்தது. கை எரிச்சல் எல்லாம் போயே போச்சு...

இது தான் வாழ்க்கையா ?

ஆமா சந்தவை எப்படி தயாரிப்பது என்று உங்களுக்கு சொல்லனும் இல்லையா...

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - இரண்டு கப்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசியையை மூன்று மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து, ஏலக்காயை மறக்காமல் போட்டு நைசாக ( சந்தனம் போல ) அரைத்து எடுத்து, கடைசியில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துகொண்டு, இட்லி பாத்திரத்தில் குழியில் ஊற்றி பத்து நிமிடம் வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் எடுத்து, சூடாக அந்த வஸ்துவுக்குள் வைத்து பிழிந்தால் சூடான மணமான சந்தவை தயார். இதனுடன் தேங்காய் பால் அல்லது சட்னி சேர்த்து சாப்பிட்டால் அருமை...

--------------------------------------------------------------
05-08-2007 அன்று தமிழ் மன்றத்தில் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு
--------------------------------------------------------------

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.