சென்னையில் பில்டர்ஸ் தொழில் பார்க்கும் தம்பியின் அழைப்பு. நாளைக்கு வீட்டுக்கு வருகிறேன். ஊட்டி போகனும். கார் ரெடி பண்ணி வை என்றான். கூடவே அவன் அம்மணியும் வருவதாகச் சொன்னான்.
கோவையில் டிராவலிங் கம்பெனியில் கார் வாடகை பேசினேன். நாள் ஒன்றுக்கு 800 ரூபாய். 12 மணி நேரக் கணக்காம். கிலோ மீட்டருக்கு 6.50 ரூபாய். ஏசி என்றால் ஒரு ரூபாய் அதிகம். டிரைவருக்கு நாள் ஒன்றுக்கு 150 மற்றும் சாப்பாட்டு செலவு நம்முடையது. ஆக நாள் ஒன்றுக்கு 1600+150+100 சேர்த்து 1850.00ரூபாய். அதை விடுத்து கிலோமீட்டருக்கு காசு வேறு. 300 கிலோமீட்டர் தூரத்துக்கு 2250.00 ரூபாய் தனி. மூன்று நாட்கள் 5550ம் 2250ம் சேர்த்தால் 7800 ரூபாய் காருக்கு மட்டும் செலவாகும். அசந்து விட்டேன். அட நொக்கா மக்கா, இங்கே இருக்கும் ஊட்டிக்குச் சென்று வர மூன்று நாளுக்கு கிட்டத்தட்ட எட்டாயிரம் ரூபாயா ?
எனது நண்பர் வேறொரு கார் கம்பெனியை அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கார் கம்பெனியில் வாடகைக்கு கார் எடுத்த விபரத்தைக் கீழே பார்க்கவும். இதயமே நின்று விடும். படித்துப் பாருங்கள். டிராவலிங்க் கம்பெனிகள் எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்று பாருங்கள். இந்தக் கார் கம்பெனியில் கார் எடுக்க வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்ளவும். நம்பர் தருகிறேன். பயன்படுத்திக் கொள்ளவும்.
டாட்டா இண்டிகோ, ஏசி கார். நாள் ஒன்றுக்கு (24 மணி நேரம்) 1450 ரூபாய் வாடகை. டீசல் செலவு நம்முடையது. கார் வரும்போது டீசல் நிரப்பி வரும். காரை விடும்போது டீசலை நிரப்பிக் கொடுக்க வேண்டும். டிரைவர் பேட்டா, சாப்பாட்டு செலவு கிடையாது. இது தான் நான் வாடகை பேசி எடுத்த காரின் வாடகை விபரம். முதல் நாள் பத்தரைக்கு கிளம்பி மூன்றாம் நாள் நான்கு மணிக்கு வீடு திரும்பியதால் வாடகையும் டீசலும் சேர்த்து ஊட்டிக்குச் சென்று வந்த கார் செலவு 3995.00 ரூபாய். கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் மிச்சமானது.
தம்பியும் அவன் மனைவியும் விடிகாலையில் வீட்டில் ஆஜர். டேய் கிளம்புடா என்றான். அடேய் விளங்காத பயலே.. உனக்குதானடா ஹனிமூன் டிரிப். தனியாப் போயிட்டு வா என்றேன். முடியாது என்று மறுத்து விட்டான். சப்ளையர் ஒருவர் மதியம் பதினொன்றரைக்கு சந்திக்க வருவதாக கூறியிருந்தார். எல்லாம் சொல்லிப் பார்த்தேன். முடியாது என்று மறுத்துவிட்டான். மகள், மகன், மனைவி, தம்பி, தம்பி மனைவியுடன் ஊட்டிக்குப் பயணம்.
வழியில் டீ கூட குடிக்கவில்லை. வயிற்றைப் பிரட்டிவிடுமென்று தம்பி தடுத்து விட்டான். இரண்டரை மணி நேரத்தில் ஊட்டியை அடைந்தோம். மிகவும் நல்ல ஹோட்டலாக செல்லுங்கள் என்று டிரைவரிடம் சொன்னேன். அவர் சென்ற இடம் ஹோட்டல் நஹர். காரிலேயே உட்கார்ந்து கொண்டேன். நீங்கள் சாப்பிட்டு வாருங்கள். எனக்கு தயிர்சாதம் கட்டி வாருங்கள். காரிலேயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன். தம்பி விடவில்லை. காரின் பின்புறம் டிக்கியில் மடித்து வைத்திருந்த சக்கர நாற்காலியினை எடுத்து வந்து உட்கார வைத்து ஹோட்டலின் உள்ளே அழைத்துச் சென்றான்.
நான் எங்கும் செல்வது கிடையாது. காரணம் என் உடல் பிரச்சினை. முடிந்த அளவுக்கு மறுத்து விடுவேன். சாருதான் என்னை முதலில் வெளிக் கொணர்ந்தவர். ஒரு நாள் சாரு என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது தங்கம், வீல்சேர் இருக்கிறதா உங்களிடம் என்று கேட்டார். இல்லை சார். நான் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்றேன். அடப்பாவி என்று அதிர்ந்தார். இதை அவர் நண்பர் நிக்கியிடம் சொல்லி இருக்கிறார். அவர் உடனே செக்கை நீட்டியிருக்கிறார். அடுத்த ஒரு வாரத்தில் மனுஷ்யபுத்திரனிடமிருந்து சக்கர நாற்காலி வந்திறங்கியது.
இப்படிப்பட்ட வசதிகள் இருப்பது தெரியாமல் கல்லூரிப்படிப்பின் போது தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரம் கல் ரோட்டில் தவழ்ந்து சென்று படித்தது நினைவுக்கு வந்தது. மழை பெய்தால் சகதியில் தான் தவழ்ந்து போவேன். கட்டிடத்தின் வெளிப்புறமாய் இருக்கும் பைப்பில் கால்களையும், கைகளையும் கழுவிக்கொண்டு மாடி ஏறுவேன்.
சக்கர நாற்காலி வந்தவுடன் எனக்கு கால் முளைத்து விட்டதாய் கருதினேன். அதற்கு காரணம் சாரு நிவேதிதாவும், அவரின் நண்பர் நிக்கியும் மனுஷ்யபுத்திரன் ஆகிய மூவரும். சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்த போது சக்கர நாற்காலி வெகுவாக உதவியது. ஊட்டியில் சக்கர நாற்காலியின் பயனால் போட்டிங்க், வாக்கிங் என்று இயற்கையை என்னுள் உணர முடிந்தது. எங்கு சென்றாலும் சாருவும், நிக்கியும், மனுஷ்யபுத்திரனும் கூடவே வருவதாகவே இருக்கும். சாரு, நிக்கி மற்றும் மனுஷ்யபுத்திரன் மூவருக்கும் நன்றிகள்.
சரி விஷயத்துக்கு வருகிறேன். சாப்பாட்டில் உப்பும், மணமும் இருந்தது. சுத்தம் இருந்தது. சுவை எங்கே??? தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அது தான் பெரிய ஹோட்டலின் நிலமை போல. ஊறுகாய் மட்டும் சுறுக்கென இருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மனைவி கண்ணில் ஜாடை காட்டினார். அடிப்பாவி. அதற்குள்ளாகவா ? என்று நினைத்து கண்ணாலேயே மிரட்டினேன். அருகில் தம்பி உடகார்ந்திருந்தான். எதிரில் தம்பி மனைவி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் மனைவியை மிரட்டிதை தம்பி மனைவி பார்த்து விட என்ன ? என்ன ? என்று விசாரிக்க அப்போதான் எனக்கு உண்மை தெரிந்தது. எனக்குப் பின்னாலே ஒரு ஜோடி உட்கார்ந்து இருந்தது. அந்தப் பெண் சரியான அழகு. மாநிறத்தில் கைகளில் மெஹந்தி போட்டு பார்க்க படு அசத்தலாக இருந்தாள் போலும். என் மனைவிக்கு அவளை உடனடியாக என்னிடத்தில் காட்ட வேண்டும் என்ற ஆவல். விஷயத்தைக் கேள்விப்பட்ட நான் மெதுவாக (சபை நாகரீகம் !) திரும்பினேன். அந்தப் பெண்ணின் நெஞ்சின் மீது பார்வை பதிந்தது. திக்கென்றது. இதென்னடா வம்பு பார்வை அங்கே போவுது என்றபடி தலையைத் திருப்பி விட்டேன். அந்த அம்மணி மார்பைக் காட்டும்படி டிரெஸ் செய்திருந்தார். பார்ப்பவரின் பார்வை அங்கே செல்வது இயல்பு. நாகரீகம் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகள் என்னென்ன விளைவுகளை உண்டு பண்ணுகிறது என்று நினைத்தபடி,
மெதுவாக தம்பியின் காதைக் கடித்தேன். அவன் அலட்டிக் கொள்ளாமல் திரும்பிப் பார்த்தான். சென்னையில் இருக்கிறான் அல்லவா ? இதைவிட எதையெதையோவெல்லாம் பார்த்திருப்பான் போல. சாப்பிட்டு முடித்த பின்னர்
லாட்ஜில் இரு அறைகள் எடுத்தோம். சற்று நேரம் ஓய்வுக்குப் பின்னர் போட் ஹவுஸ் சென்றோம். அங்கு மக்கள் கூட்டம். போட்டிங் வர மறுத்தேன். தம்பி விடவில்லை. மறுபடி வீல்சேரில் அமரவைத்து போட்டிங் அழைத்துச் சென்றான். அவ்விடத்தில் என் தகப்பனாய் மாறி விட்டான் என் தம்பி. மகனும், மகளும் அருகருகே நடந்து வந்தனர். இடது பக்கம் மனைவி, வலது பக்கம் தம்பி மனைவி. சேரைத் தள்ளியபடி தம்பி. தம்பியின் பின்புறமாய் டிரைவர். மக்கள் எங்களை வேடிக்கை பார்த்தனர்.
தொடரும்.............
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.