குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, October 29, 2008

சாருவுக்கு கடவுளின் மொழி கட்டுரைக்காக எழுதிய கடிதம்

என் வசத்திலேயே இல்லை

வாத்தியாரே....

நான் இன்று என் வசத்திலேயே இல்லை. நான்ஸி அஜ்ரமின் குரலோடு மிதந்து கொண்டிருக்கிறேன். மிதந்து கொண்டிருக்கிறேன். காற்றோடு காற்றாக.. காற்றின் ஊடே மிதந்து கொண்டிருக்கிறேன். மனசு லேசாகி விட்டது. கண்ணை மூடினால் இசைவெள்ளம் என்னைச் சூழ்கிறது. மிதக்கிறேன்.. மிதக்கிறேன்..

என் மனசுக்கு இதமாய் ஹிந்துஸ்தானி இசையும், புல்லாங்குழலும் அதன் தனி இசையும் எங்கோ ஒரு அத்துவானக் காட்டில் ஒற்றையாய் பறந்து கொண்டிருக்கும் என் மனதில் கேட்கும் இசையாய் சிலிர்ப்பினை உண்டாக்கும். பிறந்து பத்து நாளேயான வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பின் இசை போன்ற அனுபவத்தையும், பரவசத்தையும் தருகிறார் நான்சி அஜ்ரம். என் தாயின் மடியில் தலை வைத்து உறங்கும் அந்த வேளையில் அவளின் விரல்கள் தலைமுடிக்குள் அலைந்து கொண்டிருக்கும் போது உயிரையே தடவும் உணர்ச்சி உருவாகும். அவ்வித உணர்ச்சியினை உண்டாக்குகிறது நான்ஸி அஜ்ரமின் குரல். என் அன்பு மகளின் இதயத்துடிப்பினையே இதுவரை இசைக்கெல்லாம் இசையாக நினைத்திருந்தேன்.என்னைத் தாலாட்ட என் மனைவியின் நெஞ்சின் துடிப்பு ஒன்றே போதுமானதாயிருந்தது. அந்த வரிசையில் நான்ஸி அஜ்ரமின் பாடல்கள் சேர்ந்து விட்டன. நான்ஸி அஜ்ரமை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்.

காதல்... காதல்... காதல்...
காதல் போயின் சாதல்.......... என்றான் பாரதி.

அவன் சொல்ல வந்த அர்த்தம் புரியவில்லை. இன்று தான் புரிந்து கொண்டேன்.

காதலின் வேதனையை நான்ஸி அஜ்ரம் பாடும் தொனி சித்ரவதைகள் எல்லாவற்றிலும் முதலிடத்தைப் பிடிக்கும் என்று என்னுள் உணர நேர்கிறது. சமீபத்தில் ஹாஸ்டல் என்ற திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. மனிதர்களைச் சித்ரவதைப் படுத்தும் படம். வேதனை... வேதனை... வேதனை... எழுத்தில் எழுத இயலா வேதனை... படமாக்கியிருக்கும் விதம் மனதில் ரத்தம் சொட்ட வைக்கும். சித்ரவதையின் உச்ச கட்டமாய் சிலிர்த்து நிற்கும் உடம்பு..... கூர்மையான ஊசியை வைத்து நறுக் நறுக்கென இதயத்தைக் குத்தி, இதயத்தில் இருந்து வழியும் சூடான ரத்தம் வழியும் போது உண்டாகும் வலியினை விட உச்சகட்டமானது நான்ஸி அஜ்ரமின் காதல் வேதனைக் குரல்.

காதல் கொண்டுள்ள மனிதன் தான் வேதனை உலகின் உச்சகட்ட வேதனையை அனுபவிக்கிறான்.... ரத்தமின்றி, ஆயுதமின்றி மனிதனை சித்ரவதை செய்யும் காதல் தான் அணு ஆயுதத்தை விட கொடுமையான ஆயுதம் என்பதில் வியப்பேதும் இல்லை.

அன்பன்,
தங்கவேல் மாணிக்கம், கோயமுத்தூர்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.