குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, October 11, 2008

கந்தசாமி முத்துவைக் கலங்க அடித்த கதை

முக்கியமான வேலையாக வெளியில் சென்ற போது எதிரே வண்டியில் கந்தசாமி.

”எங்கேப்பா தங்கம்?”

“வண்டி சரி பண்ணனும், அதான்“ இழுத்தேன்.

”சரி நானும் வருகிறேன்“ சொல்லியபடி என்னுடன் மெக்கானிக் ஷாப்புக்கு வந்தார்.

மெக்கானிக் முத்து தீபாவளிக்கு வாங்கிய பேண்ட் சர்ட்டினைக் காட்டினார். மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்தவனாகிய அடியேன் வழக்கம்போல விலை பற்றிக் கேட்க,

“ஜீன்ஸ் 1200, சர்ட் 800 “ என்றார் முத்து.

அசந்து போனேன். 1200 எனது ஒரு மாத நெட் வாடகை. 800 ஒரு மாத மளிகை சாமான் பட்ஜெட். கந்தசாமி என் முகத்தைப் பார்க்க, நானும் பார்க்க பெருமூச்செறிந்தேன்.

”தங்கம், உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” வில்லங்கத்தை அங்கேயே ஆரம்பித்தார் கந்தசாமி.

ஏதாவது வில்லங்கமா சொல்லி ஏதாவது பிரச்சினையைக் கொண்டு வந்து விடப்போகிறார் என்றெண்ணி பயந்து கொண்டே ஈனஸ்வரத்தில் “ சொல்லுங்க”

”இந்த ஜீன்ஸ் விலை 300 ரூபாய் இருக்கும். சர்ட்டின் விலை 250 ரூபாய் இருக்கும். ஆனா பாரு, 1450 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குறாங்க மக்கள்” என்றார்.

அதிர்ச்சியாகி ”என்ன கந்தசாமி, ஒரேயடியாய் கபடி ஆடுறீங்க” என்றேன்.

இதைக் கேட்ட முத்துவோ அதிர்ச்சியில் சிலையாகி விட்டிருந்தார்.

”ஆமாப்பா, நான் டெக்ஸ்டைல் துறையில் வேலை பார்த்தது தான் உனக்குத் தெரியுமே. ஐந்து டாலர், எட்டு டாலருக்கு மேலே ஜீன்ஸ் பேன்டெல்லாம் கிடையாதுப்பா. அவ்வளவு தான் அடக்க விலை. வெளி நாட்டுக்கு இன்வாய்ஸ் அனுப்பும்போது பார்த்திருக்கிறேன். சரக்கு அனுப்பும் கம்பெனிக்கு 20% லாபம் சேர்த்துதான் விலை குறிப்பிட்டிருப்பார்கள்”

“அப்போ, 250 லிருந்து 400 வரைதான் என்று சொல்கின்றீர்களா? “ என்றேன்.

”ஆமாப்பா. அவ்வளவுதான் விலை. பிராண்டுக்கு என்று ஒரு விலை சேர்த்து வெளி நாட்டுக்காரன் கொள்ளை கொள்ளையா அடிக்கிறான்கள். நம்ம ஊரு ஜவுளி கடையெல்லாம் நாளுக்கு ஒரு நடிகையை வைத்து விளம்பரம் செய்யுறாங்க. அதுக்கெல்லாம் எப்படி காசு வரும். இதோ இப்படித்தான்”

நம்பமுடியாமல் அவரையே பார்த்தேன்.

முத்துவோ புலம்ப ஆரம்பித்தார். ”அழுக்கு உடையோடு கஷ்டப்பட்டு, ஸ்பேனர் பிடித்து உழைத்துச் சம்பாதிக்கிற காசையெல்லாம் இப்படித் திருடுறாங்களே” என்று புலம்ப ஆரம்பித்தார்.

வந்த வேலை முடிந்த திருப்தியில் கந்தசாமி என்னை மெக்கானிக் ஷாப்பில் விட்டு விட்டு கிளம்பினார்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகிவிட்டது முத்துவின் நிலை.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.