கந்தசாமி என்ற எனது நண்பர். அடிக்கடி விதண்டாவாதமாக ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். அவரின் பேச்சினைக் கேட்டால் ரத்தம் கொதிக்கும்.
ஆனால் நான் அப்படி இல்லை. பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுத்துண்டு எனக்கு என்று இருக்க வேண்டுமென அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். என்ன அர்த்தமென்றால், சில பாம்புகளுக்கு தலையில் விஷம் இருக்குமாம். சில பாம்புகளுக்கு வாலில் விஷம் இருக்குமாம். நடுத்துண்டில் விஷம் ஏதும் இருக்காதாம். அதைச் சாப்பிட்டால் பிரச்சினை இருக்காது. இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் இருக்குமிடத்திற்கு தகுந்த வாறு மாறிக்கொள்ள வேண்டுமென்பது தான். அய்யா அப்படித்தான். ஆனால் கந்தசாமி இருக்காரே அவர் ஒரு விதமான கேரக்டர். வேலை பார்ப்பது ஒரு மில்லில். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். பேச ஆரம்பித்தாப் எப்போதும் மற்றவர்களை குறைச் சொல்லிக்கொண்டிருப்பார். விதண்டாவாதமாக ஏதாவது சொல்லி வைப்பார். வேறு வழி. எனக்கு எழுத வராது என்பதால் அவர் சொன்ன சில விதண்டாவாதங்களை நினைவுக்கு கொண்டு வந்து எழுதி வைக்கிறேன். பிடித்திருந்தால் படித்து வைக்கவும்.
கந்தசாமியிடம் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவ்வளவும் அத்துப்படி. விஷய ஞானமுள்ளவர். அவருக்கு இப்போதைய தலையாய பிரச்சினை மின்சார வெட்டு. என்னைப் பார்க்கும்போதெல்லாம் கொந்தளிப்பார்.
” என்னப்பா இது. இப்படியெல்லாம் பேசுகிறாய் “ என்றால் போதும் தொலைந்தேன். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். எதிர்த்து ஏதாவது சொல்லபோனால் கொலை வெறியுடன் கருத்துக்கள் அம்புகளாய் சீறும். இப்படிப்பட்ட ஆளிடம் நட்புத் தேவையா என்றால் எனக்குத் சொல்லத் தெரியவில்லை. மனிதர் ரொம்ப நல்லவர். பேச்சுதான் ஒரு மாதிரியாய் இருக்கும்.
அப்படித்தான் நேற்று அவரைச் சந்தித்த நேரத்தில், ஒரு விஷயம் சொன்னார். ”தமிழ் சமூகத்திற்கு சுரனையே இல்லை”.
”என்னப்பா திடீரென்று இப்படி பாய்கிறாய் ? “
“ஆமாம் தங்கம். தமிழகம் என்றால் சினிமா. சினிமா என்றால் தமிழகம். சரிதானே ?”
ஏதோ வில்லங்கமாக வரப்போகிறது என்ற யோசனையுடன் ஆமோதித்து வைத்தேன்.
“பின்னே என்னப்பா, கிழவர்கள் காதலையெல்லாம் ரசிக்கிறார்கள் தமிழர்கள். அதுவும் பொருந்தாக் காதல். கிழவனும் குமரியும் “ என்றார்.
“ ஏய்... நீ எங்கே வருகிறாய் என்று தெரிகிறது. இப்படியெல்லாம் சத்தமா பேசி வைக்காதே.. பின்னி பெடலெடுத்து விடுவார்கள்”
சிரி சிரியென்று சிரித்தார். மனதுக்குள் என்னனென்ன நினைத்தாரோ தெரியவில்லை. நான் மெதுவாக அவரிடமிருந்து கழண்டு கொண்டேன்
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.