குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label டிவி. Show all posts
Showing posts with label டிவி. Show all posts

Friday, April 27, 2012

போலி பிஸ்கட்டுகள் ஜாக்கிரதை

எனது நண்பரொருவர் வீட்டுக்கு வந்த போது பிரிட்டானியா மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட் மற்றும் சில தின் பண்டங்களை வாங்கி வந்தார். அன்று மாலை டீயுடன் மூன்று பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டேன். இரவு வயிறு மந்தமாக இருந்ததால் ஒரே ஒரு தோசையுடன் இரவு உணவை முடித்து விட்டேன். நடு இரவில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. எழுந்து உட்கார்ந்ததும் வியர்த்தது. வயிற்றுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுத்தேன். மாலை நான்கு மணிக்கு சாப்பிட்ட பிஸ்கட் இரவு 11 மணி வரை ஜீரணம் ஆகாமல் இருந்தது.

மறு நாள் காலையில் நண்பருக்கு போன் செய்து பிஸ்கெட் எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டேன். பிரபல பேக்கரி ஒன்றின் பெயரைச் சொன்னார். யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை.

டீத்தூளில் கலப்படம், பாலில் உரக்கலப்படம், பிஸ்கட்டில் போலி,இட்லி மாவில் சோடியம் என்று இன்னும் என்னென்ன செய்திருக்கின்றார்களோ தெரியவில்லை. கடைகளில் வாங்கிச் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருளிலும் விஷம் விஷம் விஷம்.

மனச்சாட்சியைத் தொலைத்து விட்டு மனிதர்கள் மிருகமாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நவ நாகரீக இந்தியப் பொருளாதார சந்தையின் பின் விளைவுகள். சாட்டிலைட் டீவிக்கள் வீட்டின் வரவேற்பறையில் விளம்பரங்களின் போதை மருந்தை தெளிப்பதன் விளைவு மனிதர்கள் தேவையற்ற பொருட்களுக்கு ஆசைப்படுகின்றார்கள். அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. நேர்மையாக உழைத்தால் உழைப்பவனுக்கு பைசா லாபம் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். வேறு வழி இன்றி இப்படியான நச்சுக் கொலைகளில் இறங்குகின்றனர்.  

இந்திய மக்கள் பேராசையின் பிடியில் சிக்க வைக்கப்படுகின்றார்கள். எல்சிடி டிவி இருந்தாலே அவன் பணக்காரன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் எல்யிடி டிவி, பிளாஸ்மா டிவி என்று அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்கள். 40,000 ரூபாய் கொடுத்து வாங்கிய எல்சிடி இனி குப்பைக்குச் செல்லும். எல்யிடிக்கு அடுத்து என்ன டிவியோ? தினமொரு புதுப் பொருள் உதிக்கின்றது. பழைய பொருள் மார்க்கெட் போகின்றது. செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சந்திக்கும் நண்பர்கள் இன்னுமா பழைய போனை வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று நிச்சயமாய் கேட்பார்கள். அவர்கள் வைத்து இருக்கும் புது போனும் அடுதத ஆறு மாதத்தில் பழைய போனாகி விடும். இப்படியே தங்களிடம் இருக்கும் பணத்தினை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் அசுரக் கைகள் மக்களின் மூளைகளை காலி செய்து கொண்டிருக்கின்றன.

இத்துடன் இது முடியவில்லை. மேலும் மேலும் மனித குலத்திற்கு தீங்குகள் வரிசை கட்டி வந்து கொண்டே இருக்கும். 

வாழ்வதற்கு என்னென்ன தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் சந்தோஷ வாழ்க்கை வாழ்கின்றார்கள். ஞாயிறு தோறும் குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்லுபவர்களின் குடும்பங்களில் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

வாழ்க்கையிலும் போலிகள் புக ஆரம்பித்திருக்கின்றன. ஆகவே நண்பர்களே போலிகள் ஜாக்கிரதை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, October 6, 2008

உங்களில் யார் பிரபுதேவா ?

ஸ்ரீதர் - டான்ஸ் மாஸ்டரின் மேற்பார்வையில் உங்களில் யார் பிரபுதேவா நடனப் போட்டிக்குத் தேர்வானவர்களுக்கு நடனப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு துரதிர்ஷடமான நேரத்தில் விஜய் டிவியைப் பார்க்க நேர்ந்தபோது கண்களில் பட்டது இந்தக் காட்சி.

சல்சா என்பது ஒரு வகை நடனமாம். மேல் பகுதி உடம்பு ஆடாமல் இடுப்பு மட்டும் அசைய வேண்டுமாம். மைக்கில் இன்ஸ்டரக்‌ஷன் கொடுத்தவாறு ஆடிக்காட்டினார் ஒருவர். கிட்டத்தட்ட நூறு ஆண்களும் பெண்களும் இருக்கும். தனித்தனியாக ஆடினர். ஸ்ரீதர் மைக்கில் அடுத்து யாருக்கு யாரெல்லாம் பிடிக்குமோ அவரவர்கள் ஜோடியாய் நின்று ஆட வேண்டும் என்றார்கள். ஹி..ஹி... அவனவன் கிடைத்தது சான்ஸ் என்று இடுப்பில் ஒரு கை. தோளில் ஒரு கை என்று அணைத்துப் பிடித்தவாறு ஆட ஆரம்பித்தார்கள். பின்புறங்கள் அழகாக ஆடிக்கொண்டிருந்தன. அதில் ஒரு சிறுவன் வேறு மாட்டிக் கொண்டான். வெட்கத்தில் அவனுக்கும் ஒரு ஜோடி கிடைக்க இடுப்பை ஆட்டினான்(டான்ஸ்ப்பா!).

விடிகாலையில் எழுந்து குளிரில் குளித்து மட மடவென மடிப்புக் கலையாத சட்டைப் போட்டு சைக்கிளில் அரக்கப் பரக்க மிதித்து அவள் வருவதற்கு முன்பே சென்று காத்திருந்து அவள் வரும் வரை அவளுக்காக உருகி உருகி வந்தவுடன் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கிறாளா என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் அவளைப் பார்த்தும் பார்க்காதவாறு அவளையேக் கவனித்து காதல் செய்து, கட்டிலில் கண்ணாமூச்சி விளையாடிய காலமெல்லாம் மலை ஏறிப் போச்சு.

சின்னத்திரை மீடியாக்கள் இன்று ஜோடிகளை சேர்த்துச் சேர்த்து ஆட விட்டுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் எனக்கு ஒரு எழுத்தாளர் சொன்ன கருத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

அந்த எழுத்தாளர் பெயர் : ஜேம்ஸ் ஜாய்ஸ்
நாவலின் பெயர் : A PAINFULL CASE
கருத்து : ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உறவு தவிர்த்து வெறும் சிநேகிதம் மட்டும் சாத்தியமில்லை.
உதவி : திரு ஆர்பி.ராஜநாயஹம்

உடனே அம்மா, அக்கா, தங்கை என்று ஆரம்பிக்க கூடாது. மனசுக்கு பட்டுச்சு எழுதிவிட்டேன். குறிப்பு : எனக்குள் இருக்கும் கலாச்சாரக்காவலனின் ஆசை இது. வேறு வழியின்று எழுதி தொலைக்க வேண்டிய கட்டாயம். எழுதிவிட்டேன்.