குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, April 27, 2012

போலி பிஸ்கட்டுகள் ஜாக்கிரதை

எனது நண்பரொருவர் வீட்டுக்கு வந்த போது பிரிட்டானியா மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட் மற்றும் சில தின் பண்டங்களை வாங்கி வந்தார். அன்று மாலை டீயுடன் மூன்று பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டேன். இரவு வயிறு மந்தமாக இருந்ததால் ஒரே ஒரு தோசையுடன் இரவு உணவை முடித்து விட்டேன். நடு இரவில் வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. எழுந்து உட்கார்ந்ததும் வியர்த்தது. வயிற்றுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுத்தேன். மாலை நான்கு மணிக்கு சாப்பிட்ட பிஸ்கட் இரவு 11 மணி வரை ஜீரணம் ஆகாமல் இருந்தது.

மறு நாள் காலையில் நண்பருக்கு போன் செய்து பிஸ்கெட் எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டேன். பிரபல பேக்கரி ஒன்றின் பெயரைச் சொன்னார். யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை.

டீத்தூளில் கலப்படம், பாலில் உரக்கலப்படம், பிஸ்கட்டில் போலி,இட்லி மாவில் சோடியம் என்று இன்னும் என்னென்ன செய்திருக்கின்றார்களோ தெரியவில்லை. கடைகளில் வாங்கிச் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு உணவுப் பொருளிலும் விஷம் விஷம் விஷம்.

மனச்சாட்சியைத் தொலைத்து விட்டு மனிதர்கள் மிருகமாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நவ நாகரீக இந்தியப் பொருளாதார சந்தையின் பின் விளைவுகள். சாட்டிலைட் டீவிக்கள் வீட்டின் வரவேற்பறையில் விளம்பரங்களின் போதை மருந்தை தெளிப்பதன் விளைவு மனிதர்கள் தேவையற்ற பொருட்களுக்கு ஆசைப்படுகின்றார்கள். அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. நேர்மையாக உழைத்தால் உழைப்பவனுக்கு பைசா லாபம் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். வேறு வழி இன்றி இப்படியான நச்சுக் கொலைகளில் இறங்குகின்றனர்.  

இந்திய மக்கள் பேராசையின் பிடியில் சிக்க வைக்கப்படுகின்றார்கள். எல்சிடி டிவி இருந்தாலே அவன் பணக்காரன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் எல்யிடி டிவி, பிளாஸ்மா டிவி என்று அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்கள். 40,000 ரூபாய் கொடுத்து வாங்கிய எல்சிடி இனி குப்பைக்குச் செல்லும். எல்யிடிக்கு அடுத்து என்ன டிவியோ? தினமொரு புதுப் பொருள் உதிக்கின்றது. பழைய பொருள் மார்க்கெட் போகின்றது. செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சந்திக்கும் நண்பர்கள் இன்னுமா பழைய போனை வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று நிச்சயமாய் கேட்பார்கள். அவர்கள் வைத்து இருக்கும் புது போனும் அடுதத ஆறு மாதத்தில் பழைய போனாகி விடும். இப்படியே தங்களிடம் இருக்கும் பணத்தினை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் அசுரக் கைகள் மக்களின் மூளைகளை காலி செய்து கொண்டிருக்கின்றன.

இத்துடன் இது முடியவில்லை. மேலும் மேலும் மனித குலத்திற்கு தீங்குகள் வரிசை கட்டி வந்து கொண்டே இருக்கும். 

வாழ்வதற்கு என்னென்ன தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் சந்தோஷ வாழ்க்கை வாழ்கின்றார்கள். ஞாயிறு தோறும் குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்லுபவர்களின் குடும்பங்களில் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

வாழ்க்கையிலும் போலிகள் புக ஆரம்பித்திருக்கின்றன. ஆகவே நண்பர்களே போலிகள் ஜாக்கிரதை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

2 comments:

கோவை நேரம் said...

இனி நாம் தான் சூதானமாக இருக்கவேண்டும்.
பொருட்களின் பேக்கிங் தேதி பார்த்து சாப்பிடவேண்டும்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விழிப்புணர்வு பதிவு ! நன்றி !

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.