அம்மணியின் மாதாந்திர செக்கப்புக்காக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு மூன்று மணி வாக்கில் உடன் சென்றிருந்தேன். ஒரே சத்தம். காதில் ஏர்போட்ஸ் மாட்டிக் கொண்டு, செக்கான் என்ற மலையாளப் படத்தில் மணிகண்டன் பெரும்பாடப்பு பாடிய பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஜூலை மாத காலச்சுவடு இதழைப் பிரித்தேன். பாட்டுக் கேட்டுக் கொண்டே படிப்பதில் எனக்கு அலாதி இன்பம்.
காலச்சுவடு இதழில் புத்தகப் பகுதியில் இசை எழுதிய ஒளவையாரின் கவித்துவ திரட்டு எனக் குறிப்பிட்டு வெளி வரப்போகும் ”களிநெல்லிக்கனி” என்ற புத்தகத்திலிருந்து ஒரு சில பகுதிகளை வெளியிட்டிருந்தார்கள். மூன்று வரிகள் கீழே.
// “விதியே மதி” என்கிறது ஒரு பாடல். துயர் பெருகி நிறையும் ஒரு வரி அது. எனில், எனக்கு இங்கு என்னதான் வேலை? என் குட்டிக்கரணங்களுக்கு என்னதான் பொருள்? நான் திட்டங்கள் தீட்டுகையில் பறக்கும் தீப்பொறி என்னுடையதில்லையா பாட்டி? // (நன்றி : காலச்சுவடு)
இசை கேட்டிருக்கும் இந்தக் கேள்வி நியாயமானதாகத் தோன்றியது எனக்கு. விதியே மதி எனில் வாழ்க்கையை சுலபமாகக் கடக்கலாமே என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழுந்தன.
செக்கான் பாடல் எனக்குள் ஒரு விதமான மோன நிலையைக் கொண்டு வந்தது. சிந்தனையற்று பாடலின் இசைக்குள் மூழ்கி இருந்தேன்.
அந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள்.
நிற்க.
ஒரு பிரபல அரசியல்வாதியால் ஞானி என்று புகழப்பட்டவர் எனது நண்பர். அவருக்கு ஏதோ பிரச்சினை. ஏதோ நினைவில் காரை எடுத்துக் கொண்டு அவர் தனியாக தங்கி இருக்க முயன்ற இடங்களுக்குச் சென்ற போதெல்லாம் ஏதேதோ தடைகள் வந்து, ஒரு வழியாக கோவைக்கு வந்து சேர்ந்தார். மதியம் போல வீட்டுக்கு வந்தார்.
ஜோதி சுவாமியைப் பார்க்க வேண்டுமென்றார். மாலையில் நானும் அவரும் சுவாமியைச் சந்திக்க கோசாலைக்குச் சென்றோம்.
குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. சூரியனும் குளிருக்கு நடுங்கி மேகங்களைப் போர்வையாக்கி மூடிக் கொண்டிருந்தான். வெள்ளிங்கிரி மலைகளில், தலையில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் வெண்ணிற முடி போல அருவிகள் கோடுகளாய் தெரிந்தன. பறவைகளின் சத்தம் ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருந்தன. கோசாலையில் ஏதோ ஒரு பசுங்கன்று ‘மே...மே’ என்று கத்தி அம்மாவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஆசிரமத்திலிருந்து ஜோதி சுவாமி வந்தார். அவர் அப்போது மவுனத்தில் இருந்தார்.
நண்பர் சுவாமியிடம் தனது பிரச்சினைகளைப் பகிர்ந்தார்.
நானும் நண்பரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியை விரும்பிப் படிப்பவர்கள். நண்பர் பொருளாதாரத்தில் நிபுணர். உலகளவில் பெரும் புகழ் பெற்ற பொருளாதார ஆலோசகர். திருவண்ணாமலை ரமணர் மீது பக்தி கொண்டவர்.
நானும் அவரும் அடிக்கடி பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். அவரிடமிருந்து நான் கற்றது ஒன்று. பிரிவினை எதிலும் வேண்டாம் என்பார். அதன் அர்த்தம் எனக்குள் புதைந்து விட்டது. யாருடனும், எதுவுடனும் பிரிவினை அற்று இருப்பது என்பது துண்டிக்கப்பட்ட இயற்கையின் இழையோடு மனிதன் இசைவு கொள்ளும் நிலை அது.
ஓஷோ மற்றும் ஜலாலுதீன் ரூமி, சூஃபிசம், ஜென் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதால், கோவில்களுக்குச் செல்வதை நான் நிறுத்தி விட்டேன். அவரும் கூட அப்படித்தான்.
உருவ வழிபாட்டிலிருந்து விடுபட்டே ஆக வேண்டுமென்பதால் உள்ளுக்குள் உன்னைத் தேடு என்பதில் எனக்கு பெரும் அவா. அதற்காக எனது குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமி அருளிய “பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”யில் இருப்பவன். ஏதோ ஒரு சில நொடிகளில் ”நானை” இழக்கும் தன்மையில் இருக்கிறேன். அந்த நொடியில் நானுக்கும், அதை இழப்பதற்குமான பெரும் போராட்டத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பவன்.
மனிதனுக்குள் எப்போதும் ஒரு ஆய்வு சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். அதனால் தான் அவன் அறிவியலில் இறைவன் பற்றிய மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க முனைந்து கொண்டிருக்கிறான்.
எனக்கும் அதே எண்ணம் தான். ஆய்வு மன நிலை. எனக்குள் ஒரு கேள்வி சலசலவென ஓடை போல சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. அது என்ன கேள்வி எனத் தொடர்ந்து படியுங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நண்பர்களே, ஓடை சத்தமிடுவதில்லை, தண்ணீரும் சத்தமிடுவதில்லை.
கற்களுக்குள்ளும், தடைகளுக்குள்ளும் சென்று வெளியேறும் போது உண்டாவதினால் ஏற்படுவதே சலசலப்பு சத்தம் அல்லவா?
பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் மனிதனின் மனத்துக்குள் எழும் துன்பத்தின் விளைவாக பிதற்றுவதும் சத்தம் தானே?
நண்பரிடம் ஜோதி சுவாமி ஒரு சிவலிங்கத்தையும், அத்துடன் ஒரு நாகத்தையும் ஆற்றங்கரையோரம் நிறுவி பூசை செய்யுங்கள் என்று சொன்னார். ஏன் அவ்வாறு சொன்னார் என்பதற்கான காரணம் நண்பருக்கும் சுவாமிக்கும் மட்டுமே தெரியும் என்பதால் காரணத்தை விடலாம்.
திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டியில் சிவலிங்கமும், நாகமும் தயாராகி விட்டது. ஆற்றங்கரையோரம் நிறுவி பூசை செய்ய வேண்டுமே என்பதற்காக திட்டமிடல் செய்தார். ஓரிடத்தில் நிறுவ திட்டமிட்டு அதற்கான பீட வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு அரசியல்வியாதி அதை தடுத்திருக்கிறான். அதனால் வேறு பகுதியில் நிறுவ இடம் தேடி, அழகான அற்புதமான இடத்தில், வில்வமரத்தடியில் சிவலிங்கத்தையும், அருகில் நாகத்தையும் நிறுவி பூசை செய்து விட்டார்.
( நண்பர் நிறுவிய சிவலிங்கமும், நாகமும்)
ஏழு வரிகளில் விவரிக்கப்பட்ட இந்த நிகழ்வின் பின்னால் உள்ள உணர்வுகளை விவரிக்க முடியாது. சொற்களின் வழியாக மனிதனின் உணர்வுகளை முழுமையாக கடத்த முடியாது. எழுத்துக்குள் மூழ்கும் போக்கு இப்போதெல்லாம் எவரிடத்தில் காண முடியவில்லை. சொற்களுக்குள் வாசம் செய்வது ஒரு மோன நிலை. சிவலிங்கத்தை நிறுவ நண்பர் பெரும் போராட்டத்தை நிகழ்த்தினார்.
சரி, ஏன் இந்தப் பதிவு என்பதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
தற்போது சிவலிங்கம் இருக்கும் கோவிலின் பூசாரி - நான்கைந்து நாட்களுக்கு முன்பு - கோவிலில் சிவலிங்கம் ஒன்று பிரதிஸ்டை செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அவரைச் சந்திக்க வந்த எவரோ ஒருவர், உன்னைத் தேடி ஒருவர் வருவார் என்று மட்டும் சொல்லி சென்றிருக்கிறார்.
இந்த நிகழ்வினை நண்பர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, சிரித்து விட்டேன். நண்பருக்கு நான் ஏன் சிரித்தேன் என்று புரியவில்லை. அவரிடம் விளக்கம் சொன்னேன்.
காலச்சுவட்டில் நான் படித்த ‘விதியே மதி’ நினைவுக்கு வந்து விட்டது. மனிதனின் செயல்கள் ஒவ்வொன்றும் முன்பே நிர்ணயிக்கப்பட்டது என்பார் ஜோதி சுவாமி. ஒரு மனிதன் கை அசைத்தலும் கூட முன்பே நிர்ணயிக்கப்பட்டது என்பார் கூடுதலாக. அப்போதெல்லாம் இதென்ன கூத்து என நினைத்துக் கொள்வேன்.
ஜோதி சுவாமியும் நானும் ஆற்றுக்குள் குளிக்கச் செல்வதுண்டு. அப்போது மண்ணில் நானொரு சிவலிங்கத்தை உருவாக்குவேன். சுவாமி இலைகள் மற்றும் மலர்களைக் கொய்து வந்து தருவார். நீர் சொட்டும் நிலையில் ஆற்றங்கரையோரமாய் மண்ணால் உருவான சிவபெருமானுக்கு வழிபாடு செய்வது வழக்கம். குளித்து விட்டு வந்து விடுவோம்.
பரிகாரமாய் இருக்கும் நிலையில் சுவாமி ஏன் சிலை செய்யச் சொன்னார்? என்றொரு கேள்வி எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
அவ்வப்போது ஒளவையாரின் ‘விதியே மதி’ என்ற வார்த்தைகளும் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது.
நண்பர் பூசாரியின் விருப்பத்தைப் பற்றி என்னிடம் சொன்ன போது, என்னை அறியாமல் சிரித்து விட்டேன். எழுத்தாளர் இசை கேட்டிருந்த கேள்விக்கு விடையும் கிடைத்தது.
எழுத்தாளர் இசை கேட்டிருந்த கேள்விக்கு பதில் இதோ...!
இசையின் கேள்வி :
// “விதியே மதி” என்கிறது ஒரு பாடல். துயர் பெருகி நிறையும் ஒரு வரி அது. எனில், எனக்கு இங்கு என்னதான் வேலை? என் குட்டிக்கரணங்களுக்கு என்னதான் பொருள்? நான் திட்டங்கள் தீட்டுகையில் பறக்கும் தீப்பொறி என்னுடையதில்லையா பாட்டி? // (நன்றி : காலச்சுவடு)
இதற்கான பதில் : குட்டிக்கரணங்களும், திட்டங்கள் தீட்டுவதும் விதியே....!
நண்பர்களே, இந்த நிகழ்வின் பின்னாலே இருக்கும் மர்மத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
பூசாரியின் விருப்பத்துக்காகவா என் நண்பருக்கு பிரச்சினை உண்டானது?
அதற்காகவா சென்னையிலிருந்து கிளம்பிய அவரை, வேறு எங்கும் தங்க விடாமல் என்னை நோக்கி வர வைத்தது?
பூசாரியின் விருப்பத்துக்காகவா இல்லை நண்பரின் பிரச்சினை தீர்வதற்காகவா ஜோதி சுவாமியைச் சந்தித்தார்? இதில் எது சரியானது? நண்பரின் பிரச்சினையா? பூசாரியின் விருப்பமா?
நண்பர் பிரச்சினையிலிருந்து விடுபட சிவலிங்கம் தயரானதா? இல்லை பூசாரியின் விருப்பத்திற்காக தயாரானதா?
இவ்வாறு கேள்விகள் எழுகின்றன அல்லவா?
இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் என்ன?
விதியே மதி...!
ஒளவையார் பாட்டி சும்மா எழுதி வைக்கவில்லை.
வளமுடன் வாழ்க ...! (இலக்கணப்படி இப்படித்தான் சொல்ல வேண்டுமாம்)
மீண்டும்
வளமுடன் வாழ்க..!
09-07-2024
* * *