நேற்று இரவு 7 மணி வரை டிவி முன்பு உட்கார்ந்து விட்டேன். ஆறாம் வகுப்புப் படிக்கும் போது என நினைவு. இந்திரா காந்தி அம்மையார் சுடப்பட்டார் என்ற ரேடியோ தகவல் வர நான் படித்த ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் உடனடியாக லீவு விட்டு விட்டார்கள். ஆனால் கண்டிப்பாக மறு நாள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் பள்ளியின் சார்பாக அமைதி ஊர்வலம் நடத்தப்படும் என்று வாத்தியார்கள் சொல்லி இருந்தார்கள்.
மறுநாள் பள்ளிக்குச் சென்ற போது ஹெச்.எம். என்னை அழைத்து ஊர்வலத்தின் முனையில் மூன்று சக்கர வண்டியில் தான் போட்டோவை வைத்து அலங்கரித்து செல்ல இருக்கிறோம் என்றுச் சொன்னார். அதன்படி சைக்கிளில் அம்மையார் இந்திராவின் போட்டோவை முன்புறம் வைத்து பூக்களால் அலங்கரித்து நடுவில் அடியேன் உட்கார ஊர்வலம் கிளம்பியது. பின்னால் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் வரிசையாக வந்தனர். வழியெங்கும் மக்கள் சைக்கிள் முன்பாக வீழ்ந்து வணங்கினர். சிலர் கும்பிட்டனர். ஒரு சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். ஆவணம் கடைத்தெரு தாண்டி பள்ளி வாசல் வழியாக கைகாட்டி வரை சென்று ஆலமரங்கள் இருக்கும் பகுதியில் இருந்த டிவைடரைச் சுற்றிக் கொண்டு திரும்பவும் ஆவணம் கடைத்தெருவுக்கு வந்து போட்டோவைக் கழற்றி, அங்கு கொடிக்கம்பினருகில் வைக்கப்பட்டிருந்த அம்மையார் இந்திராவின் போட்டோவின் முன்பு அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன்.
அதன் பிறகு எம்.ஜி.ஆர் மறைவின் போது இதே போன்று அமைதி ஊர்வலத்தில் முனையில் அடியேனின் சைக்கிளில் போட்டோ வைத்து கலந்து கொண்டேன். மதியம் போல ஐயோபி பேங்க் அருகில் இருந்த முஸ்லிம் ஒருவரின் வீட்டில் இருந்த பிளாக்கண்ட்வொயிட் டிவியில் லைவ் ரிலே பார்த்தேன். சிறிய வயதில் எனக்கு எம்.ஜி.ஆரின் மறைவும், இந்திராவின் மறைவும் மனதுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திடவில்லை. ஆனால் ஜெவின் மறைவு பெரும் மனத்துன்பத்தைத் தந்து கொண்டே இருந்தது.
நேற்றைக்கு முழுமையும் மனதுக்குப் பாரமாக இருந்தது. சாப்பிடக்கூட முடியவில்லை. சிறிய வயதில் வீட்டுக்குள்ளும், மாட்டு வண்டியிலும் புகைப்படமாக பார்த்து வளர்ந்தவன். மனதுக்குள் பதிந்த அதீத ஆளுமையாக இருந்தார். தாய் மாமா அம்மாவின் பக்தர். அவரின் வளர்ப்பு நான். மாமாவைப் போலவே அம்மாவின் மீது பேரன்பு கொண்டவன்.
சாதாரண மனிதர்கள் விதி என்பார்கள். நானும் அதைத்தான் நம்புகிறேன். விதி அவருக்கான வாழ்க்கையை முற்றிலுமாய் ஆக்கிரமத்திருந்திருக்கிறது. அவரின் ஒவ்வொரு செயலிலும் அவருக்கான விதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. எப்படி என்றுச் சொல்கிறேன்.
எம்.ஜி.ஆர் மறைவின் போது தனியாளாக நின்று கொண்டிருந்தவரை கடைசி நிமிடத்தில் ராணுவ வண்டியில் ஏற விடாமல் விரட்டியது. எதிர்கட்சித் தலைவராக இருந்த போது சட்டசபையில் தாக்கப்பட்டது. முதலமைச்சரான போது தத்து எடுத்த நிகழ்வின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டது. கும்பகோணத்தில் சாமி கும்பிடப்போன இடத்தில் கூட விதி தன் விளையாட்டைக் காட்டியது. இரண்டாம் முறை முதலமைச்சரானபோது பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் பதவி போனது, பின்னர் மீண்டும் முதலமைச்சரானது. முதலமைச்சராய் இருந்த போது கைதானது. இதோ தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சரான போது ஆயுள் முடிந்தது.
அவரின் வாழ்க்கை நமக்கு பல்வேறு உண்மைகளைச் சொல்கிறது. எதுவும் எவருக்கும் முழுமையாக கிடைத்து விடுவதில்லை. அதிகாரம், புகழ் அனைத்தும் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை இல்லாமல் இருந்தார். அவரின் ஒவ்வொரு மகிழ்வான தருணத்திலும் தொடர்ந்து துன்பங்களும் அவருக்கு வந்து கொண்டே இருந்தன. இன்பத்தையும் துன்பத்தையும் அவர் ஒன்றாகவே அனுபவித்து வந்துள்ளார்.
அவர் தனக்காக வாழவே இல்லை. பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த உண்மையான அம்மா அவர் மட்டுமே.