குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 12, 2023

நிலம் (111) - அனுமதியற்ற மனைப்பிரிவு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

அரசு, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறையினர், நுகர்வோர் மன்றங்கள் இப்படி எல்லாமும் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? 

மக்களை ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். பஞ்சாயத்து போர்டு தலைவர்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் இன்னும் சாட்சிகளாய் இருக்கிறார்கள். ஆனால் அரசோ, நீதிமன்றமோ எதுவும் செய்யவில்லை. வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லை, ஏமாற்றப்பட்ட மக்களிடம் பணத்தைப் பிடுங்கும் வேலையை செய்கிறார்கள். 

அன் அப்ரூவ்டு மனைக்கு அனுமதி என்ற பெயரில் கோவையில் ஒரு சதுரடிக்கு எட்டு ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள் அரசியல்வியாதிகளுடன் அரசு அலுவலர்களும். தனி இணையதளம், அதற்கு கட்டணம் என அதிமுக அரசு மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கியது. அன் அப்ரூவ்டு மனைக்கு பதிவுக் கட்டணம் வேறு வாங்கிக் கொண்டு பதிவு செய்து கொடுத்தார்கள் துணைப்பதிவு அலுவலர்கள். சட்டத்துக்குப் புறம்பான செயலை அனைவரும் மனக் கூச்சமின்றிச் செய்தார்கள்.

பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு,  வீட்டு மனை அனுமதி வழங்கப்பட்டதாகப் பொய் சொல்லி ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்களுக்கு எந்தத்தண்டனையும் இல்லை. பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஆனால் ஏமாந்தவர்களுக்கு மட்டும் தண்டனையோ தண்டனை. ஏன்? 

கேட்க எவருமில்லாதவர்களாக,  நாதியற்றவர்களாக, அறிவற்றவர்களாக ஏழை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கண் முன்னே நடக்கும் அக்கிரங்களை கண்டும் காணாதது போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரவருக்கு அவரவர் பிரச்சினை. இதில் பிறரின் பிரச்சினையை எங்கணம் பார்ப்பது? தற்போதைய உலகத்தின் தன்மை தான், தன் நன்மை என்பதாய் மாறி விட்டது. 

மின்சாரத்துறை அன் அப்ரூவ்ட் மனைகளுக்கான மின் இணைப்பைத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. இதோ ஒரு கடிதம்.

மனை விற்றவர்கள், மனைக்கு அனுமதி கொடுத்து விட்டதாய் சொன்ன பிரசிடெண்டுகள், மனையைப் பதிவு செய்து கொடுத்த பதிவாளர்கள், வரி போட்ட பஞ்சாயத்து போர்டுகள், மின் இணைப்பு கொடுத்தோர் - இவர்கள் எல்லோரும் நல்லவர்கள்.

ஏமாந்தவர்கள் தீயவர்கள்!

வாழ்க இந்திய ஜனநாயகம்!0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.