குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அன் அப்ரூவ்ட் மனைகள். Show all posts
Showing posts with label அன் அப்ரூவ்ட் மனைகள். Show all posts

Monday, June 12, 2023

நிலம் (111) - அனுமதியற்ற மனைப்பிரிவு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு

அரசு, பத்திரிக்கைகள், நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவல்துறையினர், நுகர்வோர் மன்றங்கள் இப்படி எல்லாமும் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? 

மக்களை ஏமாற்றுபவர்கள் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். பஞ்சாயத்து போர்டு தலைவர்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் இன்னும் சாட்சிகளாய் இருக்கிறார்கள். ஆனால் அரசோ, நீதிமன்றமோ எதுவும் செய்யவில்லை. வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லை, ஏமாற்றப்பட்ட மக்களிடம் பணத்தைப் பிடுங்கும் வேலையை செய்கிறார்கள். 

அன் அப்ரூவ்டு மனைக்கு அனுமதி என்ற பெயரில் கோவையில் ஒரு சதுரடிக்கு எட்டு ரூபாய் லஞ்சம் வாங்கினார்கள் அரசியல்வியாதிகளுடன் அரசு அலுவலர்களும். தனி இணையதளம், அதற்கு கட்டணம் என அதிமுக அரசு மக்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கியது. அன் அப்ரூவ்டு மனைக்கு பதிவுக் கட்டணம் வேறு வாங்கிக் கொண்டு பதிவு செய்து கொடுத்தார்கள் துணைப்பதிவு அலுவலர்கள். சட்டத்துக்குப் புறம்பான செயலை அனைவரும் மனக் கூச்சமின்றிச் செய்தார்கள்.

பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு,  வீட்டு மனை அனுமதி வழங்கப்பட்டதாகப் பொய் சொல்லி ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்களுக்கு எந்தத்தண்டனையும் இல்லை. பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. ஆனால் ஏமாந்தவர்களுக்கு மட்டும் தண்டனையோ தண்டனை. ஏன்? 

கேட்க எவருமில்லாதவர்களாக,  நாதியற்றவர்களாக, அறிவற்றவர்களாக ஏழை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கண் முன்னே நடக்கும் அக்கிரங்களை கண்டும் காணாதது போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரவருக்கு அவரவர் பிரச்சினை. இதில் பிறரின் பிரச்சினையை எங்கணம் பார்ப்பது? தற்போதைய உலகத்தின் தன்மை தான், தன் நன்மை என்பதாய் மாறி விட்டது. 

மின்சாரத்துறை அன் அப்ரூவ்ட் மனைகளுக்கான மின் இணைப்பைத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. இதோ ஒரு கடிதம்.

மனை விற்றவர்கள், மனைக்கு அனுமதி கொடுத்து விட்டதாய் சொன்ன பிரசிடெண்டுகள், மனையைப் பதிவு செய்து கொடுத்த பதிவாளர்கள், வரி போட்ட பஞ்சாயத்து போர்டுகள், மின் இணைப்பு கொடுத்தோர் - இவர்கள் எல்லோரும் நல்லவர்கள்.

ஏமாந்தவர்கள் தீயவர்கள்!

வாழ்க இந்திய ஜனநாயகம்!



Saturday, May 12, 2018

நிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது?

பேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம், ஆத்திரம் என பொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல போலிகள் புனைபெயர்களில் பல்வேறு அக்கப்போர்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உண்மை எது, பொய் எது என்று எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. எந்தச் செய்தி உண்மையானது? எந்தச் செய்தி போலியானது என்று உணர்வதற்குள் அடுத்தச் செய்தி வந்து விடுகிறது. பத்திரிக்கைகள் தங்கள் சுயதர்மத்தை இழந்து சார்பு நிலைகள் எடுத்து விட்டன. ஒவ்வொரு கட்சிக்கும் டிவி, பத்திரிக்கை இருக்கின்றன. எதிரானவர்களை கர்ணகடூரமாக விமர்சிக்கின்றார்கள். மொத்தத்தில் நிம்மதியற்றுப் போய் கிடக்கின்றார்கள். வயதாகையில் வாய்தா இல்லாமலே சேருமிடம் சேர்கின்றார்கள். அது அவர்கள் பாடு.

எதைக் கொடுக்கின்றோமோ அதைத் திரும்பப் பெறுதல் வேண்டும். எதைப் பெறுகின்றோமோ அதை கொடுத்தல் வேண்டும். இதுதான் இயற்கையின் விதி. எந்தக் கொம்பராலும் இதை மாற்ற முடியாது. 

சமீபத்தில் அன் அப்ரூவ்ட் மனைகளை அப்ரூவல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடையப் போகிறது என்பதால் மக்கள் அல்லோலகல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அரசும் ஆங்காங்கே கேம்ப்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். இருந்தும் இனியும் 8 லட்சம் மனைகள் அப்ரூவல் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

என்னால் முடிந்த வரைக்கும் தெரிந்தவர்களுக்கு, ஆன்லைனில் அன் அப்ரூவ்டு மனைகளை பதிவு செய்து கொடுத்தேன். அன் அப்ரூவ்ட் லேயவுட்களையும் அப்ரூவ்ட் செய்து கொடுக்க தேவையான உதவிகளையும் செய்து வருகிறேன். அப்போது பல்வேறு விஷயங்களைக் கவனிக்க நேர்ந்தது. அதை உங்களிடம் பகிரத்தான் இந்தப் பதிவு.

அன் அப்ரூவ்ட் மனைகள் என்பது டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் என்று அர்த்தம். வீட்டு மனைகளை அங்கீகரிக்க மேற்கண்ட இரண்டு அமைப்புகளுக்குத்தான் அதிகாரம் உள்ளது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்து போர்டுகளுக்கு  அங்கீகாரம் வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வீடு கட்ட அனுமதி வழங்க இடமுண்டு. ஏனென்றால் பஞ்சாயத்து போர்டுகளுக்கு வீட்டு வரி வசூலிக்க அனுமதி உண்டு. கவனிக்க மனை அப்ரூவல் வழங்க அனுமதி இல்லை. வரி வசூலிக்க அனுமதி இருப்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற அளவில் ஒரு குறிப்பிட்ட சதுரடிகள் வீடு கட்ட மட்டும் அனுமதி தரலாம்.

பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்டு மனைகள் என்றுச் சொல்லி மனைகளை விற்றார்களே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது உங்களின் அறியாமையே தவிர வேறொன்றும் இல்லை. 

அன் அப்ரூவ்ட் மனைகள் பதிவு செய்திருக்கக் கூடாது அல்லவா? அது அரசின் தவறுதானே என்று கேட்பீர்கள். ஒரு துணைப் பதிவாளர் என்பவர் எந்த ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுத்தாலும் பதிவு செய்து கொடுப்பார். குறைந்தபட்ச உரிமைகளை அவர் பரிசீலனை செய்து பதிவு செய்ய எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு சொத்து பற்றிய வில்லங்கங்கள் பார்க்க அனுமதில்லை. அது அவரின் வேலையும் இல்லை. ஆகவே பதிவாளர்கள் மீது குற்றம் சொல்வது என்பதும் ஏற்புடையதல்ல.

அன் அப்ரூவ்ட் மனைகளை வாங்குவதில் உள்ள பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் மனை விற்பனையாளர் குறிப்பிட்ட லேயவுட்டில் உருவாக்கி இருக்கும் மொத்த மனைகளையும் மனைகளாக விற்றிருந்தால் பிரச்சினை வராது. ஆனால் ஒரு சில மனை விற்பனையாளர்கள் லேயவுட்டில் இருக்கும் விற்காத மனைகளை நிலங்களாக மாற்றி விற்று விடுவார்கள். இப்போது புரிகிறதா பிரச்சினை? ஒரு சிலர் சாலைகளை பஞ்சாயத்துக்கு தானம் கொடுக்காமல் சாலைகளையும் சேர்த்து விற்று விடுவார்கள். அந்த மனைகள் நீர்வழிப்பாதையாக இருக்கலாம், விரிவாக்கத்துக்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். தொழிற்சாலைப்பகுதியாக இருக்கலாம். கோவிலுக்குப் பாத்தியப்பட்டதாக இருக்கலாம். நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். இப்படி பல்வேறு ’இருக்கலாம்களில்’ ஏதாவது ஒரு ’இருக்கலாமுக்குள்’ வந்து விட்டால் மனையும் போச்சு, மன அமைதியும் போய் விடும்.

அப்ரூவ்டு மனைகள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இருக்கலாம்களுக்குள் இல்லாத நிலமாக இருப்பின் மட்டுமே அனுமதி பெறுகின்றன. அதுமட்டுமல்ல எந்த ஒரு விரிவாக்கத்தின் போதும் மனைகளை அரசு பயன்படுத்தவும் சட்டத்தில் இடமில்லை.

இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஓர் நினைவூட்டல்.

இனி மேலும் ஒரு பிரச்சினை வர உள்ளது. அன் அப்ரூவ்ட் லேயவுட்களில் அப்ரூவ்ட் செய்யப்பட்ட மனைகளை வாங்கும் போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். அது என்ன பல விஷயங்கள் என்கின்றீர்களா? அது ஒவ்வொரு மனைக்கும் வேறுபடும் என்பதால் பொதுவாகக் குறிப்பிட முடியாது. அவ்வாறு எழுதினால் படிப்பவர்கள் குழம்பி விடுவார்கள். நல்ல பிராப்பர்ட்டி கன்சல்டண்ட்டிடம் விவாதித்த பிறகு மனைகளை கிரையம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன் !!!

Saturday, September 24, 2016

நிலம் (30) - அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பிரச்சினைகள்

அன் அப்ரூவ்ட் மனைகளைக் கிரையம் செய்ய கோர்ட் தடை உத்தரவைப் போட்டிருக்கிறது என்பதற்காக அன் அப்ரூவ்ட் சைட் விற்போரும், சைட்டுகள் வாங்கியவர்களும் கோபத்தில் இருக்கின்றார்கள். போராட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள். 

எல்பிஏ, சிஎம்டிஏ, டிடிசிபி அலுவலகங்கள் ஏன் உருவாக்கப்பட்டிருக்கின்றன? அன் அப்ரூவ்ட் என்றாலே இல்லீகல் என்று தானே அர்த்தம் வரும்? அந்த மனைகளை யார் வாங்கச் சொன்னது? அரசா அன் அப்ரூவ்ட் மனைகளை வாங்கச் சொன்னது? வீட்டு மனைகளை விற்பதற்கு தகுந்த அமைப்பில் விண்ணப்பம் கொடுத்து அனுமதி பெற்று விற்கச் சொல்கிறது அரசு. ஆனால் ஒரு சிலரின் ஆசைக்காக அரசிடம் எந்த வித அனுமதியும் பெறாமல் பூமியைச் சமப்படுத்தி சாலை போட்டு கல்லை நட்டு விட்டு மனை என்றுச் சொல்லி விற்க ஆரம்பித்தவுடன் சல்லிசாகக் கிடைக்கிறதே என்றுச் சொல்லித்தானே அனைவரும் வாங்கினார்கள். அன் அப்ரூவ்ட் மனைகளை விற்பதே தவறு. அதை விற்று விட்டு அரசுக்கும், கோர்ட் உத்தரவிற்கு எதிராகப் போராடுவது எந்த விதத்தில் சரி? என்று ஒருவர் என்னிடம் கேட்டார். மக்கள் திருந்தாத வரைக்கும் இதைப் போன்ற பிரச்சினைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

என்னிடம் ஒரு பிரச்சினை வந்தது. பஞ்சாயத்து போர்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்றுச் சொல்லி ஒருவர் வீட்டு மனை ஒன்றினை வாங்கி இருக்கிறார். சில வருடங்கள் சென்றவுடன் காசு சேர்த்துக் கொண்டு அந்த மனையில் வீடு கட்டுவதற்காக சென்று சுத்தப்படுத்தி பூஜை போட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது வேப்பங்குச்சியில் பல் துலக்கியபடி ஒருவர் அங்கு வந்திருக்கின்றார். ”இங்கு என்ன செய்கின்றீர்கள்?” என்று வெகு சாதாரணமாக கேட்டிருக்கிறார். உடனே பூஜை போட்டுக் கொண்டிருந்தவர் ”இது என் வீட்டு மனை, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ யார் அதைக் கேட்க” என்று ஏக வசனத்தில் பேச ஆரம்பித்தவுடன் அவர் ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்று விட்டாராம்.

போர் போட்டிருக்கின்றார்கள். மின் இணைப்புப் பெற்றிருக்கின்றார். வீடு கட்ட ஆரம்பித்து முழுவதையும் கட்டி முடித்து கிரகப் பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். வேப்பங்குச்சியால் பல் துலக்கிக் கொண்டே ஒருவர் வந்தார் அல்லவா அவர் அங்கு மீண்டும் வந்திருக்கிறார்.

வேப்பங்குச்சிக்காரர் மெதுவாக ஆவணங்களை எடுத்து அவரிடம் காட்டி வீடு கட்டியவரின் இடம் அதே பகுதியில் வேறு இடத்தில் இருக்கிறது என்பதைப் புரிய வைத்திருக்கிறார். ”இது என் இடம், மரியாதையாக வெளியே சென்று விடு இல்லையென்றால் நில அபகரிப்புப் புகாரில் உள்ளே தூக்கிப் போட்டு விடுவேன்” என்றுச் சொல்லி இருக்கிறார்.  இப்போது அந்த வீடு வேப்பங்குச்சிக்காரருக்குச் சொந்தம். ஆள் எப்படி என்று பார்த்தீர்களா?  பூஜை போட்டவுடன் தடுக்கச் சென்றவரிடம் எகத்தாளம் பேசினால் இப்படித்தான் ஆகும்.

இந்தத் தவறு எப்படி நடந்திருக்கிறது என்றால் அன் அப்ரூவ்ட் மனைகள் விற்பவர்கள் பிளானைப் போட்டு மார்கெட் செய்வார்கள். ஓரளவிற்கு மனைகள் விற்றவுடன் மீதமிருக்கும் மனைகளை விற்க முடியவில்லை என்றால் அதையெல்லாம் ஒன்றாக இணைத்து பூமியாகவோ அல்லது வேறு மனைகளாகவோ மாற்றி விடுவார்கள். ஒருவர் 10 செண்ட் மனை வேண்டுமென்று கேட்டால் அதற்கேற்றவாறு கற்களைப் பிடுங்கி விட்டு புது மனைகளை உருவாக்கி விடுவார்கள். ஆனால் அரசு அனுமதி பெற்ற மனைகளை அப்படிச் செய்ய முடியாது. அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பொது வழிச் சாலைகளைக் கூட தானம் எழுதிக் கொடுக்க மாட்டார்கள். மனைகளில் விடப்பட்டிருக்கும் பொது இடத்தினைக் கூட விட மாட்டார்கள். பொது இடத்தில் குழந்தைகள் விளையாட உபகரணங்களை அமைத்திருப்பார்கள். அதை அடுத்த மனை ஆரம்பிக்கும் போது பிடுங்கி எடுத்துக் கொண்டு போய் புதிய மனையில் பதித்து விற்பனை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதுமட்டுமில்லை மின் கம்பங்களைக் கூட விடமாட்டார்கள். இப்படி ஒரு குரூப் இருக்கிறது. ஆனால் இந்த அன் அப்ரூவ்ட் மனைகளை விற்போரில் பலர் இந்தக் காரியங்களைச் செய்யமாட்டார்கள். சொல்லித்தான் விற்பார்கள். 

கோவையில் ஓர் இடத்தில் அன் அப்ரூவ்ட் மனைப் பிரிவில் ஒரு சில மனைகள் விற்றவுடன் மீதமுள்ள மனைகளை விற்க முடியவில்லை. சாலையையும் சேர்த்து வேறொருவருக்கு விற்று விட்டார்கள். மனைக்குப் பாதை கேட்டு இப்போது அரசு அலுவலங்களில் விண்ணப்பம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் அந்த மனைகளை வாங்கியோரில் பலர். இதை எப்படிச் சரிசெய்வது? விதி! ஆகவே கவனம் கொள்ளுங்கள்.

அன் அப்ரூவ்ட் என்பது அப்ரூவ்ட் என்பதின் எதிர்ச்சொல் தானே?

சரி அந்தப் பிரச்சினைக்கு வருவோம். வீடு கட்டியவர் மனை உரிமையாளர் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று காலில் விழுந்திருக்கிறார். வேறு வழி? ஒரு வழியாக இருவரும் பேசி முடிவெடுத்துக் கிரையம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கின்றார்கள். அடுத்த நாள் அன் அப்ரூவ்ட் மனைகளையோ அல்லது அதில் கட்டப்பட்ட வீடுகளையோ கிரையம் செய்ய தடை விதித்து கோர்ட் உத்தரவு போட உள்ளதும் போச்சே என்று நொந்து கொண்டிருக்கிறார்.

யாரோ ஒருவர் என்னைப் பார்க்கச் சொல்லி இருக்கிறார். போனில் விசாரித்து விட்டு என்னிடம் வந்தார். விஷயம் முழுவதையும் கேட்டுக் கொண்டேன். இந்தப் பிரச்சினைக்கு வழி என்ன? ஏதும் இருக்கிறதா? என்று அவரும் பலரிடம் கேட்டாராம். பதிவாளரிடமும் கேட்டிருக்கிறார். ஒன்றும் கிடைக்கவில்லை, பணம் செலவானாலும் பரவாயில்லை எனக்கு பிரச்சினை முடிய வேண்டும் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சட்டத்திற்கு புறம்பாகவோ அல்லது கோர்ட் உத்தரவிற்கு எதிராகவோ இல்லாமல் வெகு சரியான துல்லியமான சொல்யூசன் ஒன்றினை அவருக்குப் பரிந்துரைத்தேன். ”இது மட்டும் நீங்கள் சொல்லியபடி சரியானால் எங்கள் குடும்ப தெய்வமே நீங்கள் தான் சார்” என்றுச் சொல்லி கண்ணீரை உகுத்தார்.

இது அவர் என்னிடம் கொண்டு வந்த அடுத்தப் பிரச்சினை.

எழுந்து கொண்ட அவரை உட்கார வைத்தேன்.

”சார், உங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. உங்கள் மனம் அதிலிருந்து விடுபட நினைக்கிறது. அதற்காக யார் மூலமாகவோ என்னைப் பார்க்க வந்திருக்கின்றீர்கள். நான் எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைத் தீர்வாகச் சொல்லி இருக்கிறேன். விஷயம் அவ்வளவுதான். உங்கள் பிரச்சினையின் தீர்வுக்கு நீங்களே காரணம். பிர்ச்சினை தீர்ந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் உங்களுடையதே. இதில் நானெங்கே வந்தேன்? கடவுள் எங்கே வந்தார்?”

”இப்படித்தான், ஏதாவது பிரச்சினைகளில் இருப்போர் சாமியார்களிடம் செல்வார்கள். முகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும். சாமியார் புன்னகையுடன் ஏதோ அருள்வாக்குச் சொல்வது போல, ”எல்லாம் சரியாகி விடும், கவலைப்படாதே, உனக்காகப் பூஜிக்கிறேன்” என்பார். பிரச்சினையில் சிக்கி இருப்போரின் மனம் அதிலிருந்து விடுபட துடித்துக் கொண்டிருக்கும். அதுவே அதற்கான தீர்வினைச் சொல்லியும் தரும். அதற்குள் மனிதன் யாராவது எனக்கு ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்று அலைய ஆரம்பித்து விடுகின்றான். சாமியாரிடம் சென்றவுடன் பிரச்சினை தீர்ந்தது என்று அவரைக் கடவுளாகக் கும்பிட ஆரம்பித்து விடுகின்றார்கள். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு மனதுக்குள்ளே இருக்கிறது. யோசித்தால் கிடைத்து விடும். அப்படியும் தீரவில்லை என்றால் அதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் மனமே அதற்குரிய ஆட்களை தன்னிடத்தில் இழுக்கும். எப்படியாவது தீர்வு கிடைத்து விடும். அதை விட்டு விட்டு சாமி கடவுள் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள், போய் வேலையைப் பாருங்கள்” என்றுச் சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

தெளிவடைந்ததைப் போலத் தெரிந்தது. நன்றாக இருந்தால் போதும். வேறென்ன வேண்டும்?