குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, July 18, 2016

தீவிரவாதம் ஏன் நடக்கிறது? உண்மை என்ன?

உலகெங்கும் பெரும் அச்சுறுத்தலாக சாதாரண மக்களை பெரும் துயருக்குள் தள்ளிக் கொண்டிருப்பது தீவிரவாதம். அது மதத் தொடர்பானதாக இருந்தாலும் சரி, விடுதலை தொடர்பானதாக இருந்தாலும் சரி. ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அது தீவிரவாதம் என்றே அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மூன்றாம் உலகப் போர் நடக்குமா என்றெல்லாம் விவாதங்கள் செய்கின்றார்கள். அதற்கு நிச்சயமாக சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை என்றே கருதுகிறேன். இனிமேல் மூன்றாவது உலகப்போர் என்பது நடத்தப்பட்டால் பூமி என்ற உலகமே இருக்காது. வெடித்து சிதறி விடும்.

அறிவியல் மனிதனுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளைச் செய்ததை விட அழிவுக்கான பாதையைத்தான் காட்டி இருக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மனிதனை தன் நிலை இழக்கச் செய்து கொண்டே இருக்கின்றன. அவன் மிருகமாகிக் கொண்டே போகின்றான். ஒரு ட்ரக் 85 பேரைக் கொல்ல உதவுகிறது. துப்பாக்கியால பலரைக்க் கொல்லலாம். ஒரு அணுகுண்டு ஒரு ஊரையே சுடுகாடாக்கி விடுகிறது. ஒரு வைரஸ் கிருமி உலகையே கொன்றொழிக்கிறது. சகமனிதனைக்கூட அருகில் செல்ல விடுவதில்லை.

நாடெங்கும் ஆயுதத்தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. என்றைக்கு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அன்றிலிருந்து அவை மனிதனின் உயிரைப் பறித்துக் கொண்டே இருக்கின்றன. 

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதங்களுக்கு அச்சாணியாய், முழுக் காரணமாய் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது வியாபாரம். அறிவியல் வியாபாரம். ஆமாம் அறிவியலின் உச்சமாக ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தாங்கிக் கொண்டு செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் 5 போனா வைத்திருக்கிறாய்? நான் 6எஸ் அல்லவா வைத்திருக்கிறேன் என்று வெற்று ஈகோ. இந்த வெற்று ஈகோவை வளர்க்கும் சினிமாக்கள், மீடியாக்கள். 

இந்த வெற்று ஈகோவினால் ஆப்பிள் கம்பெனிக்கு லாபம். விளம்பரங்களால் மீடியாவிற்கு லாபம். ஆனால் அந்த ஆப்பிள் போனை வாங்குபவனுக்கு? மாதம் ஒரு புதிய அப்டேட்டை வாங்குவதால் என்ன பயன்?  எவரும் யோசிப்பதில்லை. என்ன தேவையோ அதற்குத்தான் பொருள் வேண்டும். காசைக் கரியாக்கும் ஈகோவினால் பொருள் இழப்புதான் ஏற்படும். இதை எவரும் உணர்ந்து கொள்வதில்லை. அதனால் உழைப்பை இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.

இந்த உலகில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து விட முடியுமா? என்றால் ஆம் நிச்சயம் முடியும். அதற்கு வழி உண்டு. ஆனால் அது நடக்காது.

ஒவ்வொரு நாடும் தன் ஆயுதத்தயாரிப்பினை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். புதுப்புது ஆயுதங்கள் தயாரிக்க மிகப் பெரிய அளவில் பழைய ஆயுதங்கள் மீந்து விடுகின்றன. அந்த ஆயுதங்களைக் காசாக்குகின்றார்கள். அவை கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. பழைய ஆயுதங்கள் விற்கப்பட வேண்டுமெனில் சண்டைகள் நடக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆயுதங்களை விற்க முடியும். அந்தச் சண்டைகளை ஆயுத வியாபாரிகள் புத்திசாலித்தனமான விஷயங்களால் உருவாக்குகின்றார்கள். விஷயம் அவ்வளவுதான். கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். நான் கோடிட்டுக் காட்டுகிறேன். முழுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எங்கு பிரச்சினையின் ஆரம்பம் இருக்கிறதோ அதைச் சரிசெய்யாத வரைக்கும் இந்த தீவிரவாதம் நிற்கப்போவதில்லை. மக்கள் தங்கள் இன்னுயிரை இழப்பது தொடர்கதையாகத்தான் நடந்து கொண்டிருக்கும். யாரோ ஒருவரின் பேராசைக்கு உலக மக்கள் தங்கள் வாழ்வை இழக்கின்றார்கள். அலறுகின்றார்கள். அல்லல்படுகின்றார்கள். துயரத்தில் வீழ்கின்றார்கள். துன்பத்தில் வீழ்கின்றார்கள். 


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.