குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Monday, March 23, 2026

போலி கருத்துக்கணிப்புகள்


எனக்கு சமீபத்தில் சென்னையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு பெண், சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிக்கும் மாணவி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.  

அரசியல் கட்சிகள் பற்றிய கருத்துக்கணிப்பிற்கு என்னிடம் இருந்து சில தகவல்கள் வேண்டும் என்றார். தொடர்ந்து நான் சிங்கநல்லூர் தொகுதியைச் சேர்ந்தவரா எனக் கேட்டார். 

இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நான் உடனடியாக அவரிடம் உரையாடலை நிறுத்தச் சொன்னேன். பல்கலைக் கழகத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதை அறிந்தேன். 

மக்களிடம் இருந்து தகவல்களை சேகரிக்க, அடையாளம் தெரியாத நபர்களால் பணம் கொடுத்து செய்யப்படும் முயற்சி போல் தெரிகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றே நான் நினைக்கிறேன்.

சமீபகாலமாக, எனக்கு இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் வருகின்றன. மேலும் சமூக வலைதளங்களில் தனிமனித ஒழுக்கம் மீதான தாக்குதலும், வன்முறையான செய்திகளும், போலியான செய்திகளும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களைப் பற்றி பரப்பபடுகின்றன. அவர்களில் ஒரு சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பரப்பிய வதந்தியும், பொய்யும் அப்படியே தான் இருக்கும்.

பல இலட்சக்கணக்கான போலி ஐடிக்கள் மூலம் மக்களிடம் எளிதில் ஊடுவுகின்றார்கள் இவ்வகையான போலி தொழிலாளர்கள். தனி மனித தாக்குதல், கட்சிகள் மீதான அவதூறுகள், தலைவர்களின் மீதான போலிச் செய்திகள் என உலகெங்கும் பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள் ஒரு சில தேர்தல் தொடர்பான நிறுவனங்கள். இது அனுமதிக்கப்பட கூடாது. 

சமீப காலமாக தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் இதர தன்னாட்சி அமைப்புகள் அரசியல் அதிகாரத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகவும் அல்லது கட்டுப்படுத்தப்படுவதாகவும்  பல செய்திகள் மூலம் தெரிகிறது. இது இந்தியாவில் நடக்கும் தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் செயல்பாடுகள் குறித்து பெரும் கவலைகளை எழுப்புகிறது. பல எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை இடது கையால் புறம் தள்ளுகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிறது பல செய்திகள்.  ஆளும் கட்சிக்குச் சாதகமான பல சதி வேலைகளையும் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் யாருக்கும் எந்தப் பதிலையும் தராது கள்ள மவுனத்தில் இருக்கிறது தேர்தல் கமிஷன் என்கிறார்கள் பல அரசியல் பார்வையாளர்கள். 

இதனால் இந்திய குடிமக்கள் ஜனநாயகத்தின் மீதான நிச்சயமற்ற தன்மையை உணர்வதோடு, இந்திய அரசிலமைப்பின் மீது நம்பிக்கையை இழக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலை மேம்படும் என்றும் எதிர்காலத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் மீட்டெடுக்கப்படும் என்றும் நம்புகிறேன்.

ஆகவே போனில் யாரேனும் அழைத்து கருத்துக் கணிப்பு எனக் கேட்டால் தவிர்த்து விடுங்கள். நாம் சொல்லும் ஒவ்வொரு செய்தியும், மறைந்திருந்து நம்மை அழிக்க வரும் போலிச் செய்திகளைப் பரப்பும் நயவஞ்சகக் கூட்டத்தின் நரித்தனமான வியாபாரம். சோஷியல் மீடியாக்கள் அதைத்தான் செய்கின்றன. யாருக்கும் எவரைப் பற்றியும் கவலையே இல்லை. ஆகவே வெகு கவனமாக எது நல்லது, யார் நல்லவர் என்பதில் கவனம் கொள்ளுங்கள்.

அரசியல் சார்பு அற்று நடு நிலையோடு சிந்தியுங்கள். இது நமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்கானது. 

மதமும், சாதியும் யாருக்கும் ஒரு சிறு பருக்கை கூட தராது. மனிதாபிமானும், கருணையுமே உலகினை என்றும் இயக்குபவை என்பதை மறந்து விடாதீர்கள்.

போலிச் செய்திளிடமிருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.

வளமுடன் வாழ்க.

Sunday, February 28, 2016

எம்.ஜி.ஆரின் அபூர்வ பாலிசி

எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவரின் ஒரு பிரதான பாலிசியைப் பற்றி நானும் எனது நண்பரும் பேசிக் கொண்டிருந்த போது, எனது நண்பர் (கேள்வியின் நாயகன்) சிலாகித்து சொன்ன விஷயம் கீழே.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் நினைவிலாடலாம். அவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் பிறர் அறிவுரை சொல்வது போல காட்சிகள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவரின் மனசாட்சி தான் அவருடன் பேசும். பின்னர் அந்த மனசாட்சி அவரின் உடலோடு இணைந்து விடும்.

தன்னை உணர்ந்த காரணத்தால் தரணியினை உணர்ந்தவர் அவர். தனக்குரியதையும், தன் குறைகளைச் சரிசெய்யும் நிலையிலும் அவர் இருந்தார். தனக்கென வகுத்த பாதையில் தானே நடந்து சென்றார். அப்பாதையில் அவரைப் பின் தொடர்ந்தவர்கள் ஓடுவதற்கு வழி செய்து கொடுத்தார். நாற்பது வயதுக்குள் மேலே உள்ளவர்களுக்கு எம்.ஜி.ஆரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களைத் தரும் என்பது புரியும். திரைப்படப்பாடல்கள் ஒவ்வொன்றும் அவருக்காக எழுதப்பட்டன. அதற்கு அவர் தகுதியானவராக இருந்தார். அவரின் ஒவ்வொரு படமும் மகிழ்ச்சியானதாகவும், கொண்டாட்டங்களை உள்ளடக்கியதாகவும், வெற்றியைத் தருபவையாகவும் இருந்தன. காலம் அவருக்காகப் பலரை உருவாக்கி அவரைச் செதுக்க உதவியது. நாற்பதாண்டுகாலம் வரை அவர் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு ஜென் துறவியைப் போன்ற வாழ்க்கையில் சமூகப் பிரக்ஞை கொண்டவராக வாழ்ந்தவர்.

இப்படிப்பட்ட அபூர்வ பாலிசியை இந்த உலகில் பின்பற்றியதில்லை. அந்த வகையில் எம்.ஜி.ஆர் ஒரு தனித்துவமானவர்.

எம்.ஜி.ஆரின் தனித்துவத்துக்கும் நன்றியுணர்ச்சிக்கும் மற்றொரு சம்பவம் நினைவில் வருகிறது. அதை பிறிதொரு நாளில் எழுதுகிறேன்.