குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Saturday, April 4, 2026

கதைகளை நம்பாதீர்கள் - அடிமைத்தனத்தின் ஆரம்பம் கதை

யுவால் நோவா ஹராரியின் நெக்ஸஸ் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான அடிக்குறிப்புகளுடன் நம்மைச் சுற்றி நடக்கும் சதிகளை விவரிக்கிறது நெக்ஸஸ். 

அவ்வகையாஅன சதிகளில் ஒன்று கதை. 

பல நூற்றாண்டுகளாக குழந்தைகளுக்கு பெற்றோர் கதை சொல்லுதல் என்பது தொன்று தொட்டு வரும் வழக்கம். இதை நாம் எளிதில் கடந்து விடுகிறோம். ஆனால் இதற்குப் பின்னால் மாபெரும் அடிமைத்தனத்தின் விதை ஊன்றப்படுகிறது என்பதை அந்தப் புத்தகம் விரிவாக எடுத்துரைக்கிறது.

ஒரு விவரக் கணக்கை மனதில் வைத்திருப்பது என்பது எளிதல்ல. ஆனால் அதையே ஒரு கதையாக மாற்றி விட்டால் - கதை எளிதில் மனதில் பதிந்து விடும். உங்களுக்குப் புரிகிறதா?

தமிழில் புராதனம் என்ற சொல்லே புராணமென்று மாறியது என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். 

புராணங்களின் சாரங்கள் பல விதக் கிளைக்கதைகளின் தொகுப்பாக இருப்பதை நாமெல்லாம் படித்திருப்போம். செவி மூலம் ஒவ்வொருவரிடமும் கடத்தப்பட்ட, ஆராயப்படாத, உண்மையிருக்கிறதா என ஆய்வுக்கு உட்படுத்தாத வகையில் இவ்வகைக் கதைகள் உருவாக்கப்பட்டு, பல நூற்றாண்டுகளாக, பல ஜென்மங்களாய் ஒவ்வொரிடமும் கடத்தப்பட்டு, எழுத்துகள் உருவான பின்னே அவை புத்தகங்களாக பதிக்கப்பட்டிருக்கின்றன. கதைக்கு நதிமூலம் கேட்கக்கூடாது என்று சப்பைக்கட்டு வேறு உண்டு.

இந்த வகையில் பரப்பிய கதைகளின் நாயகர்கள் இன்று கடவுளர்களாய் வணங்கப்பட்டு வரும் நவீன காலக் கல்வியின் அசிங்கமான இயலாமையை நாமெல்லாம் கண்டு வருகிறோம். கல்வி உண்மையை உரைத்தல் வேண்டும். ஆனால் உண்மையே இல்லாத கல்வியைக் கற்றுக் கொடுக்கிறது நவீன நவநாகரீக உலகம். மதங்களின் அடிமைக் கூட்டத்தினை உருவாக்க கல்வி மிக நுட்பமாக பயன்படுத்தப்படுகிறது.

கதைகள் என்பவை செலவற்ற முறையில், பெரும் பிரயத்தனமற்ற வகையில், மிகச் சிறந்த ஊடக கடத்தியாக இருக்கிறது. செய்திகளை விட கதைகளும், அதைச் சுற்றிய கிசுகிசுக்களும் ஒளியை விட வேகமாகப் பரவி, அவை மக்களின் மனதில் பதிய வைக்கப்படுகின்றன.

இன்றைக்கு வைரல் என்ற வார்த்தையை நாமெல்லாம் கேட்டிருப்போம். கதையின் நவீன, குறுகிய வடிவம் தான் வைரல்.

இந்த வைரல் செய்திகளின் உண்மைத்தன்மையை எவரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. பலருக்கும் பகிரப்படும் இந்த வைரல் செய்திகள் பல உண்மைகளை மறைத்து விடும். இந்தியா இப்போது சந்தித்து வரும் சமையல் எரிவாயு பிரச்சினைக்கு இந்த போலியான வைரல் செய்திகளே காரணம். நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். தகுதியற்றவர்களை ஹீரோக்களாக மாற்றி விடுகின்றன இந்த வைரல் செய்திகள்.

போலிச் செய்திகள் போலி பிம்பங்களை உருவாக்கி, உண்மையை மறைத்து விடும். 2ஜி செய்திகள் அத்தனையும் புரட்டு, பொய்கள் என்பதை நாமெல்லாம் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிறகே, நீண்ட காலத்துக்குப் பின்னால் புரிந்து கொண்டோம். 

அதே போல டெல்லியில் அரவிந்த் கேஜரிவால் மீது போடப்பட்ட மதுக் கொள்கை திட்டமிடல் வழக்கு - ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையும் படித்திருக்கிறோம். 

ஆம் ஆத்மி ஆட்சியில் இல்லாமல் செய்யப்பட்டது. இதை அரசின் அத்தனை அதிகாரங்களும் ஒன்றினைந்து செய்த சதிச் செயல் என்று பலரும் எழுதி வருகிறார்கள்.

இதைப் போல நம்மைச் சுற்றி வரும் ஒவ்வொரு செய்திகளும், கதைகளும் ஆராயப்படாமல் நம்பப்படுகின்றன. இன்றைக்கு எந்த தகுதியுமில்லாத, மக்களுக்கு ஒரு துளி வியர்வை சிந்தாதவர்கள் எல்லாம் தலைவர்கள் என்று அழைக்கப்படும் வித்தையை இந்த வைரல் செய்திகள் உருவாக்கி இருக்கின்றன. இதை நம்பும் பலரின் வாழ்க்கை அவர்களிடத்தில் இல்லாமல் எவனோ ஒருவனின் கையில் இருப்பதைக் கூட அறிந்து கொள்ளா இயலாத அறிவிலிகளாய் இருக்கிறார்கள்.

கதை சொல்லல் என்பது நம்மை அடிமைப்படுத்தும் ஆரம்பப் புள்ளி என்பதை மறந்து விடாதீர்கள். 

நீங்கள் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றிலும் நடப்பவைகளை புரிந்து கொண்டால், வாழ்க்கைப் பாதையை செவ்வனே பராமரித்து, இன்பமாக வாழலாம். 

ஆகவே உங்கள் அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் புத்தகம் - 

யுவால் நோவா ஹராரியின் - நெக்ஸஸ்.

தமிழில் கிடைக்கிறது வாங்கிப் படித்துப் பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் உலகம் உடைத்து சுக்கு நூறாக்கப்படும்.