”டாக்குமெண்ட் தவறு என்றால் சப் ரெஜிஸ்டர் ஏன் ஆவணங்களைப் பதிவு செய்து கொடுக்கணும், அது தவறில்லையா?” என்று கேட்பார்கள்.
“பதிவாளர் என்பவர் லீகல் பார்ப்பவர் அல்ல, நீங்கள் கொடுக்கும் ஆவணங்களை, பதிவுத்துறை விதிகளின்படி பதிவு செய்து கொடுப்பது மட்டுமே அவரின் வேலை, வில்லங்கம் பார்ப்பது அவரின் வேலை இல்லை” என்று சொல்வேன்.
”என்ன இருந்தாலும் அரசாங்கத்தின் தவறுதானே, அது?” என்று எதிர்கேள்வி கேட்பார்கள்.
அரசின் ஆணை சட்டத்துக்கு உட்படவில்லை எனில் கோர்ட் அந்த அரசாணையை ரத்து செய்து விடும் செய்திகளை நாம் தினசரிகளில் படித்து இருப்போம்.
கோவையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.தண்டபாணி அவர்கள், 18.07.2019ம் தேதியன்று, 34395/2007 அப்பீல் மனு மீது தமிழக அரசு வழங்கிய அரசாணை எண்.(பி) 245/21.06.2005 உத்திரவினை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.
வெகு சுவாரசியமான சொத்து வழக்கு இது. கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பயனியர் மில்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணன் மில்ஸ் தொழிலாளர்களுக்காக சவுரிபாளையம் கிராமத்தில் க.ச.எண்.275/1,2 மற்றும் 276/3,4 ஆகிய காலைகளில் சுமார் 7.96 ஏக்கர் பூமியை, 1955ம் தேதியன்று சொசைட்டியாக பதிவு பெற்ற Peelamedu Industrial Worker's Co-operative House Construction Society Ltd சொசைட்டியின் பெயரில் கிரையம் பெற்று, மேற்படி நிலத்தினை வீட்டுமனையாகப் பிரிக்க விண்ணப்பம் செய்து, அது 1968ம் ஆண்டு டிடிபி 35.1968ம் நெம்பராக வீட்டுமனைகளாக அனுமதி பெற்றது. அந்த மனைகளில் மேற்கண்ட் மில்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த மனையில் டிடிசிபி அலுவலகத்தால் வழங்கப்பட்ட வீட்டுமனை வரைபடத்தில் வீட்டுமனைகளைத் தவிர சாலைகள், பொது இடங்கள், பூங்காக்கள், மின் கோபுர பாதையை ஒட்டிய இடங்கள் ஆகியவை கோயமுத்தூர் மாநகராட்சிக்கு பொது இடமாக ஒப்படைக்கப் பட வேண்டும் என்ற உத்திரவும் வழங்கப்பட்டது.
ஆனால் இந்த சொசைட்டியினர் பொது உபயோக இடங்களை மனைகளாகப் பிரித்து, அதையும் விற்பனை செய்து விட்டு, தமிழக அரசுக்கு மனுச் செய்து, பொது இடத்தினை மனைகளாக மாற்ற அனுமதி பெற்று விற்பனை செய்திருகின்றார்கள். தமிழக அரசும் யோசிக்காமல் அரசாணையை வெளியிட்டுக்கிறது. இந்த அரசாணை 2005ம் ஆண்டு வெளியானது.
இந்த அரசாணைச் செல்லாது எனவும், அவ்வாறு வீட்டு மனையாக மாற்றம் செய்யப்பட்டு, பதிவு செய்த பத்திரங்கள் எதுவும் செல்லாது எனவும் கோர்ட் உத்தரவு வழங்கி இருக்கிறது. வீட்டு மனை வாங்கியவர்களுக்கு பணத்தினை கொடுக்கும்படி உத்தரவிட்டிக்கிறது. நீதிபதி அவர்கள் ஏன் அரசாணை செல்லாது என்பதற்கு பல்வேறு வழக்குகளை மேற்கோள் காட்டி விளக்கி இருக்கிறார்.
பொது இடத்தில் மனையாக இருந்ததை வீட்டுமனை என அங்கீகரித்த ஒரு வழக்கையும், அதன் தீர்ப்பினை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
கோவை, காரமடைப் பகுதியில் அன் அப்ரூவ்ட் சைட்டில் மனை வாங்கிய ஒருவர் என்னிடம், அந்த மனையில் வீடு கட்ட அப்ரூவல் பெற்றுத் தரும்படி வந்தார். எங்கெங்கோ சென்று பார்த்து விட்டு, முடியாத பட்சத்தில் தான் என்னிடம் வருவார்கள்.
வீடு கட்ட -- கவனிக்க -- வீடு கட்ட பஞ்சாயத்து போர்டில் குறிப்பிட்ட சதுரடி அளவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாம். ஆனால் காரமடை பஞ்சாயத்தார் மறுக்க காரணம் என்னவோ என்று ஆராய்ந்தால், அந்த மனையினை விற்றவர் செய்த கில்லாடித்தனம் தெரிய வந்தது. அவர் முதலில் பேஸ்1 என்று மனையினை விற்பனை செய்திருக்கிறார். அந்த பேஸ் 1ல் பார்க் இடம் இதுவென வரைபடத்தில் காட்டப்பட்டிருக்கிறது. அவர் பேஸ் 2ல், பேஸ் 1ல் பார்க்குக்கு என விடப்பட்ட இடத்தையும் சேர்த்து மனையாக்கி விற்பனை செய்து விட்டு, வேறு இடத்தில் பார்க்குக்கு என இடம் விட்டிருக்கிறார்.
பேஸ்2ல் வீட்டு மனை, முன்பு பேஸ்1ல் பார்க்காக இருந்தது. இதில் என்ன விசேசம் என்றால், அந்த பார்க் இடம் பஞ்சாயத்து போர்டுக்கு தானம் கொடுக்கவில்லை. ஏனெனில் அந்த வீட்டுமனை அன் அப்ரூவ்ட் மனை.
சென்னையில் வழக்குப் போட்டு, வீட்டு மனை அனுமதி பெற தீர்ப்புப் பெற்று, அதன்படி வீடு கட்டினார் அவர். எனக்கு அலைச்சலோ அலைச்சல் ஆனது. வக்கீலுக்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்து, அவருக்கு விஷயத்தை விளங்க வைத்து, வழக்குப் போட்டு தீர்ப்பு பெற இரண்டாண்டுகள் ஆயின. இந்த வழக்கில் ஏன் பார்க்கில் அமைந்த இடத்திற்கு மனை அப்ரூவல் கிடைத்தது எனில், அரசு அனுமதி பெற்றிருந்தால் நிச்சயம் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்திருக்கும். அரசு அனுமதி பெறாத மனை என்கிறபடியால், மனை புரோமோட்டர் அந்த இடத்தினை அரசுக்கு எழுதிக் கொடுக்காத காரணத்தால், கோர்ட் அவ்வாறு தீர்ப்பு வழங்கியது.
இரண்டும் ஒரே விதமான தீர்ப்புதான். ஆனால் உள்ளே இருக்கும் விஷயம் வேறு என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் இந்த நீண்ட பதிவு.
டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாம் என்ற எண்ணம் இருப்பின் அதை உடனே கலைத்து விடுங்கள். கோவை சரவணம்பட்டியில் இருக்கும் ஒரு பிரபலமான வீட்டு மனை அமைந்துள்ள இடத்தில், மனைகளின் அளவும், மனைகளின் எண்ணும், பொது உபயோகத்தின் இடங்கள் வீட்டு மனைகளாகவும் மாற்றப்பட்டு விற்பனை செய்திருக்கின்றார்கள். கோர்ட்டுக்கு வழக்குச் சென்றால் மனை அனுமதி கோவிந்தா, கோவிந்தா தான். அதாவது ரத்தாகி விடும்.
கோவையில் இன்னொரு மிகப் பிரபலமான இடத்தில் வீட்டுமனை விற்பனை வெகு ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. பெரிய, பெரிய பணக்காரர்கள், கம்பெனி பிராப்பர்ட்டி என ஆளுக்கு நான்கைந்து சைட்டுகளை கிரையம் செய்து வருகிறார்கள். செம காஸ்ட்லி மனைகள் அவைகள். தீர்க்கவே முடியாத பிரச்சினை ஒன்று அந்த இடத்தில் உள்ளது. என்னிடம் அந்த மனைக்காக லீகல் பெற வந்தவரிடம் வேண்டாமென்றுச் சொன்னேன். அவர் விலகி விட்டார்.
கீழே தினமலர் செய்தியும், கோர்ட் தீர்ப்பின் முதல் பக்கத்தையும் இணைத்திருக்கிறேன்.
வாழ்க வளமுடன்....!
நீதிமன்ற தீர்ப்பின் முதல் பக்கம்
தினமலரில் வெளியான செய்தி