குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, October 12, 2016

நீலகண்டன்

கோடை லீவு விட்டு விட்டார்கள். கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த விவேகாநந்தா மெட்ரிக் பள்ளியில் அடியேன் கணிணி ஆசிரியராக பணி புரிந்து வந்தேன். ஆத்மானந்தா சாமியுடன் பேசிக் கொண்டிருந்த போது ”லீவில் ஏதாவது படிக்கின்றாயாப்பா?” என்று கேட்டார்.

எனக்கு விசுவல் சி++ மீது ஆர்வம் இருந்தது. கரூரில் படிக்க விருப்பமில்லை. அந்த நேரத்தில் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் அப்போதுதான் புதிதாக கட்டி இருந்தார்கள். அதன் அருகில் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்திற்கு யாரோ ஒருவர் நன்கொடையாக நிலம் கொடுத்திருந்தார். அங்கு ஒரு பள்ளியும், ஆசிரமும் கட்டி விட சுவாமி ஆத்மானந்தா அவர்கள் ஏற்பாடுகள் செய்து வந்தார். சென்னையில் அந்த இடத்தில் தங்கி இருக்கவும், பள்ளி கட்டவும் ஒரு பிரதரை நியமித்திருந்தார்கள். இங்கு கரூர் ஆசிரமத்தில் உள்ளுரை சன்னியாசிகள் தங்களுக்குள் பயங்கர அரசியல் செய்வார்கள். ஒவ்வொரு சாமியும் செய்யும் அரசியல் இருக்கிறதே அய்யோ அய்யோ ரகம் தான். 

நான் ஆத்மானந்தா சுவாமியிடம் இவர்களின் அரசியல் பற்றிப் பேசுவேன். அதற்கு அவர்,”இவர்களை சமூகத்தில் உலவ விட்டால் என்னென்ன செய்வார்கள் என்று நினைத்துப் பாரப்பா, ஆசிரமத்தில் இருந்துகொண்டு இங்குள்ளவர்களுடன் தானே அரசியல் செய்கின்றார்கள் என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்” என்பார். உண்மைதான். இவர்கள் எல்லாம் குடும்ப வாழ்க்கையில் நுழைந்தால் அப்பெண் படும் துயரம் கொஞ்சமாக இருக்காது. ஏதோ ஒரு வகையில் இந்த வகைச் சாமியார்களால் பல பெண்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள்.

தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு புதிதாக கரூர் ஆசிரமத்திற்கு வந்த சாமியார் நாராயணனந்தாவை சென்னைக்கு அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்தார் ஆத்மானந்தா. அவருடன் நானும் செல்வதாக ஏற்பாடு. சென்னையில் SSIயில் விசுவல் சி++ படிக்கவும் ஏற்பாடு செய்தேன். எனக்கு உதவி செய்ய கரூர் ஆசிரமத்தில் தங்கி இருந்த பல அனாதைச் சிறுவர்களில் பத்துப் பேரை என்னுடன் அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்தார்கள்.

ஒரு நாளில் பத்து அனாதைச் சிறுவர்களுடனும், நானும் எங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடனும், பண்டம் பாத்திரங்களுடனும் சென்னையை நோக்கிப் பயணித்தோம். சிறுவர்கள் லாரியின் பின்புறமுள்ள பகுதியில் மூடப்பட்ட படுதாவுக்குள் இருந்தனர். நான் லாரியின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்தேன். ஒரு வழியாக மாலை நான்கு மணிக்கு ஆசிரமம் சென்று சேர்ந்தோம்.

20க்கு 60 அடியில் இரண்டு ஓலை வேய்ந்த கொட்டகைகள். தியான அறை, உணவறை, மாணவர்கள் தங்கி இருக்க படுக்கை அறை, சாமிக்கு ஒரு அறை, அலுவலக அறை என தடுக்கப்பட்டு வேலிக்கருவை மண்டிக் கிடந்த இடத்துக்குள் அந்த ஆஸ்ரமம் அமைக்கப்பட்டிருந்தது. நான் சென்ற அன்றைக்குதான் போர் போட்டிருந்தார்கள். மின் மோட்டார் இன்னும் இணைக்கப்படவில்லை. ஆசிரமத்தின் அருகில் ஒரு கிணறு இருந்தது. அதிலிருந்துதான் குடிதண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆஸ்ரமத்தின் மற்றொரு இடத்தில் பள்ளி கட்டுவதற்காக அடித்தளம் போடப்பட்ட போது ஏதோ பிரச்சினையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அவ்விடத்தில் போர் போடப்பட்டிருந்தது. அந்த தண்ணீர் உப்புத்தன்மை அதிகம் கொண்டது. 

சைக்கிளில் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவார்கள். பாத்திரங்கள் கழுவ, குளிக்க, பாத்ரூம் இவைகளுக்கு அந்த தண்ணீரைப் பயன்படுத்தினோம். பின்னர் கொஞ்ச நாளில் புதிதாகப் போட்டிருந்த போரில் அடிபம்பு ஒன்றினை மாட்டினார்கள். கரேர் என்று தான் தண்ணீர் வரும். படுபயங்கர நாற்றம் வேறு. நாராயணந்தா அந்த தண்ணீரில் தான் குளிப்பார். ஆனால் எனக்கு சிறுவர்கள் அருகிலிருந்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள். 

அந்த அனாதைச் சிறுவர்களில் லோக நாதன் மற்றும் நீலகண்டன் என்ற இரு மாணவர்கள் இருந்தனர். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் அனைவரும் என்னுடனே சுற்றிக் கொண்டிருப்பர். அவ்வப்போது எனக்கு திண்பண்டங்கள் கொடுப்பார்கள். நான் அதிகம் விரும்பமாட்டேன். எல்லாவற்றையும் அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விடுவேன். வெளியில் சென்று வந்தால் பஜ்ஜிகள் வாங்கி வந்து கொடுப்பேன். கம்யூட்டர் சார் என்றுதான் அழைப்பார்கள். கொசுக்கடி தான் அதிகம். அனைவருக்கும் கொசு வலை இருந்தது. நான் கட்டிலில் படுத்திருப்பேன். என்னைச் சுற்றிலும் சிறுவர்களில் தரையில் பாய் விரித்து கொசுவலைக்குள் படுத்திருப்பர்.

தினமும் வடபழனியில் இருக்கும் SSIஇல் விசுவல் சி++ படிக்க காலையில் பத்து மணிக்குச் சென்று மாலை நான்கு மணிக்குத் திரும்புவேன். நாராயணந்தாதான் என்னைக் கொண்டு போய் விட்டு விட்டு வருவார். மதியம் உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டு மீண்டும் மாலையில் என்னை அழைக்க வருவார். அந்த பிரதருக்கும் நாராயணந்தாவுக்கும் சண்டை உச்சகட்டத்தில் இருக்கும். நான் தான் தீர்த்து வைப்பேன். ஒரு வழியாக அந்த பிரதரை கரூருக்கு திரும்ப அழைத்துக் கொண்டார்கள். ஆசிரமம் நாராயணந்தாவின் கட்டுப்பாட்டில் வந்தது.

இதற்கிடையில் சாரதா நிகேதன் கல்லூரிக்கும், அமராவதிப்புதூரில் இருக்கும் சாரதா கல்லூரிக்கும் கணிணிகள், பிரிண்டர்கள் வாங்க அவ்வப்போது ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்குச் சென்று வருவதுண்டு. எனக்கு பள்ளி ஆசிரியப்பணியோடு இந்த இரண்டு கல்லூரிகளுக்கு தேவையான கணிணிகளை உருவாக்குவது, சர்வீஸ் போன்ற வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இதற்கிடையில் நான் ஆத்மானந்தா சுவாமியிடம் படம் பார்க்க வேண்டும் என்று கேட்டேன். என்னை நான் விரும்பும் தியேட்டருக்கு அழைத்துச் சென்று விட்டு வாருங்கள் என்று நாராயணந்தாவிடம் சொன்னார். நான் என்னுடன் சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு ரோகினி தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து விட்டு வந்தேன்.

ஒரு மாதம் படிப்பு முடிந்தது. அன்று இரவு நான் கரூர் திரும்ப வேண்டும். என்னுடன் வந்த மாணவர்களில் இரண்டு பேர் மட்டும் என்னுடன் கரூர் ஆசிரமத்திற்கு திரும்பினர். மற்றவர்கள் அங்கிருந்த அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து ஆசிரமத்திலேயே தங்கி விட முடிவு செய்தனர். 

என் துணிகளைத் துவைத்து போட்டு காய வைத்து அயர்ன் செய்து தருவார்கள். எனக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். மாலையில் தியான அறைக்குள் பஜனை செய்வார்கள். அவர்களுடன் சேர்ந்து பாட்டுப்பாடி மகிழ்வது என இருந்து விட்டு பிரிவது என்பது தீரா வேதனையைத் தந்து கொண்டிருந்தது.

அங்கிருந்த மணலில் நான் அமர்ந்திருந்தேன். அருகில் சிறுவர்கள் சோகமாக அமர்ந்திருந்தனர். நீலகண்டன் எனக்கு தான் கற்றுக் கொண்ட ஒரு பொறியலைச் செய்து தரட்டுமா? சாப்பிடுகின்றீர்களா சார்? என்று கேட்டான். சிரித்தபடி தலையசைத்தேன். 

நீலகண்டன் நீள கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி அதனை சட்டியில் இட்டு எண்ணெய் சேர்த்து உப்புச் சேர்த்து வேக வைத்து அதனுடன் மிளகாய் பொடி தூவி கொண்டு வந்து கொடுத்தான். அத்துடன் மைசூர் ரசமும், சூடான சாதமும் தந்தான். மண் திட்டில் அமர்ந்து கொண்டே சாப்பிட்டேன். எனக்குள் எதுவோ உடைவது போல இருந்தது. மனதின் மீது பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல அழுந்தியது. ஒரு சக உயிர் கொள்ளும் அன்பின் வெளிப்பாடு நிகழ்த்தும் மாயாஜால வேதனையை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.

”லேட்டாயிடுச்சு சார், போலாமா?” என்றார் நாராயணந்தா.

“எங்களையெல்லாம் மறந்திடாதீங்க சார்” என்றார்கள் சிறுவர்கள்.

கரூர் வந்து சேர்ந்து விட்டேன். ஆஸ்ரமத்தில் இருந்து வெளியே வந்த பிறகு ஏதோ ஒரு நாளில் சென்னை ஆசிரமத்திற்கு போன் செய்த போது நாராயணனந்தா ”நீலகண்டன் பாம்பு கடித்துச் செத்துப் போய்விட்டான்” என்று சொன்னார். 

மனைவி சமைத்து தரும் கத்தரிக்காய் வதக்கலை வாயில் எடுத்து வைக்கும் போதெல்லாம் அவனின் நினைவு வந்து விடும். 

”ஏங்க? என்னாச்சு?” என்று பதறிப்போய் கேட்பதும் அதற்கு நான் சிரித்து மழுப்புவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

நீலகண்டன் மறைந்து விட்டான். அவன் எப்போதும் எனக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான். இனி உங்களுக்குள்ளும் வாழ்வான்.

இந்த எழுத்துக்கள் இருக்கும் வரை அவனுக்கு மறைவேது?

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.