குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, October 25, 2016

தீபாவளியும் ஹிட்லரின் சதியும் ஒரு உண்மைச் சம்பவம்

வருடம் தோறும் தீபாவளி வருகிறது. வெடித்து விட்டுச் சென்று விடுகிறது. இப்படியான விழாக்கள் மக்களை செக்கு வாழ்க்கையிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. வளர் பிராயத்தினருக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பினை உண்டாக்குகிறது. பிறக்கிறோம் இறக்கிறோம். இந்த இரண்டுக்கும் இடையில் வாழ்க்கையின் மீதான அழகியலை இது போன்ற விழாக்கள் தான் உருவாக்கி காலம் காலமாக மனித கட்டமைப்பை விரிசல் விடாது பாதுகாக்கின்றன.

(2011ம் வருடம் ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தின் மீது அம்மு, ரித்தியின் அப்பத்தா குட்டியம்மாள் அவர்களுடன்)

இந்த வருடம் அடியேனுக்கு முறுக்குப் பிழிவதிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்து விட்டது. பெண் அச்சில் முறுக்கு மாவைச் சேர்த்துக் கொடுக்க பையன் முறுக்கு பிழிய ஹிட்லர் அடுப்பில் முறுக்கைச் சுட நான் தீபம் நா.பார்த்தசாரதியின் நூலில் மூழ்கி விட்டேன். கடந்த ஞாயிறு அன்று மாலை நேரம் முறுக்குச் சுடுவதற்கான முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்த போதே நான் நைசாக உடல் வலிக்கிறது என்றுச் சொல்லி பெட்ரூமில் படுத்து விட்டேன்.

இல்லையென்றால் மூன்றுபடி மாவை ஒற்றை ஆளாக பிழிந்து கொடுப்பது என்றால் என்ன ஆகும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏண்டி இப்படிப் படுத்தறே என்றால் சர்ர்ரீங்க்க நீ....ங்க..... போ......ய்ய்ய்ய் ரெஸ்ட் எடுங்.....க..... என்ற குரல் இழுத்துக் கொண்டே முகம் கோணலாய் மாறியபடி வரும். கைகள் இரண்டும் முறுக்கு அச்சினை அழுத்தியதால் உண்டாகும் எரிச்சல் வலியை விட இந்த இழுப்புச் சேட்டை அவஸ்தைப் படுத்தி விடும். வேறு வழி முழுவதும் முடிந்தால் தான் தற்காலிக விடுதலை கிடைக்கும்.

இதுவாவது பரவாயில்லை. தீபாவளி அன்று இரவில் மெதுவடைக்கு வெங்காயம் நறுக்கிக் கொடுக்க வேண்டும். சுழியனுக்கு சுக்கு, வெல்லம் உடைத்து தர வேண்டும். பாலப்பத்திற்கு கட்டி இல்லாமல் மாவு கரைத்துக் கொடுக்க வேண்டும். அன்றைக்கு என்று சுடும் அதிரசத்திற்கு கூட இருந்து உதவி செய்ய வேண்டும். இட்லிக்குச் சட்னி அரைக்க நான்கைந்து தேங்காய் துருவித் தர வேண்டும். விடிகாலையில் வெந்நீர் போட்டு பசங்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்க வேண்டும். இப்படி இன்னும் பல வேண்டும்கள் தீபாவளி அன்று வரிசை கட்டி நிற்கும். நான் செய்து கொடுப்பது சிறிய உதவிகள் தான். ஆனால் அதுதான் வண்டிக்கான அச்சாணி என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை. இந்த உலகம் அச்சாணிகளை மதிப்பதே இல்லை. மேலழகைத்தானே ஆஹா ஓஹோ என்கிறது. ஆம்பளைங்க விதியை ஆண்டவன் இப்படித்தான் எழுதி வைத்திருப்பான் போல.

சுழியத்துக்கு வெல்லத்தை இப்படியா பொடித்து தருவது என்று நக்கல் வேறு. வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை வராது. எல்லாம் முடிந்த பிறகு தான் கிண்டல்கள் வரும். எத்தனை வருடமா சுழியத்துக்கு வெல்லம் பொடிக்கிறீங்க, கொஞ்சமாவது பொடிசா பொடிக்கிறீங்களா என்பார்கள் மாலை நேரத்தில். ஒவ்வொரு செயலையும் மாலையில் விமர்சித்தால் எப்படி இருக்கும்? கொதிக்கும் ரத்தம் பசங்க கையில் பலகாரங்களைப் பார்க்கையில் கொதிக்கும் பாலில் ஒரு துளி தண்ணீர் பட்டது போல அடங்கி விடும். ஆம்பளைங்களுக்குதான் அதிகம் ரத்தக் கொதிப்பு வரும் என்றுச் சொல்கிறார்கள். வராமல் என்ன செய்யும்? வராமல் என்ன தான் செய்யும்?

ஒரு வழியாக பலகார பிரச்சினை தீர்ந்தாலும் வெடிப்பிரச்சினைதான் பெரிது. வாசலில் உட்கார்ந்து ஒவ்வொரு பார்சலாய் பிரித்து எடுத்துக் கொடுக்க வேண்டும். மத்தாப்பூ வெடித்ததும் கம்பியைப்  பெற்று தனியாக வைக்க வேண்டும். இல்லையென்றால் காலில் சுட்டுக் கொள்வார்கள். பெண் இருக்கிறதே அவ்வளவுதான் ஊரையே கூட்டி கண்ணில் கங்கையைக் கொட்டி அழுது ஆர்ப்பாட்டம் செய்ய பெரிய பூகம்பமே கிளம்பி விடும். தேவையா இதெல்லாம் என கண் கொத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

நேற்றைக்கு காலையிலிருந்து போன் மேல் போன் வந்து அடுப்படியில் ஹிட்லரும் அவரது அம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி இன்றைக்கு நமக்கு டிரைவர் வேலை இருக்கிறது போல என நினைத்தால் சரிதான். இதற்குள் எனக்கு வங்கிக்குச் செல்ல வேண்டியபணி, அரசு அலுவலரைச் சந்திக்க வேண்டிய பணி, ஆடிட்டரைப் பார்க்க வேண்டிய பணி, வேறொரு வங்கிக்குச் செல்ல வேண்டிய பணி என வரிசை கட்டி நின்றிருந்தன. இருந்தாலும் தலையில் வலி வந்தால் உடம்பு முழுவதும் அல்லவா வலிக்கும். அது போல ஹிட்லர் வேலை என்றால் தலையில் வலி வந்ததாகத்தானே. அதற்காக நான் ஹிட்லரை தலைவலி என்றுச் சொல்லி விட்டேன் என்று நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

இப்போதெல்லாம் கோயம்புத்தூர் வெயில் வறுத்து எடுக்கிறது. எவ்வளவு வெயில் அடித்தாலும் குளிர்ச்சியாக இருக்கும் கோவை வெயில் இன்றைக்கு என பார்த்துக் கொதிக்கிறது. என்னைச் சுற்றி ஆண்கள் அதிகமிருந்தார்கள். அவர்களுக்கும் ரத்தக் கொதிப்பு இருக்குமோ என நினைத்தேன். நினைத்தால் என்ன ஆகி விடப்போகிறது. வறுபடல் வறுபடல் தான். அரை மணி நேரமாக கோவை சிங்காநல்லூர் என்.ஜி. மருத்துவமனை அருகில் நின்று கரூரிலிருந்து வரும் பஸ்ஸுக்காக காத்திருந்து அங்கிருந்து வந்த பார்சலை கண்டக்டரிடமிருந்து பெற்றுக் கொண்டு பிறகு ஒவ்வொரு வேலையாக முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்து பார்சலைப் பிரித்தார் ஹிட்லர்.

வருடா வருடம் கரூரிலிருந்து ஹிட்லரின் அம்மா காரபூந்தி செய்து தனியாகப் பார்சலில் அனுப்பி வைப்பார்கள். அத்துடன் திருவள்ளுவர் ஹோட்டலிலிருந்து நான்கு பரோட்டாக்களும் வரும். பலகாரங்களுடன் கரூர் போர்வை, கொசுவலை மற்றும் இன்னபிற தீபாவளி தொடர்பான வஸ்துகளும் வந்து விடும். இந்த வருடம் அடியேனுக்குப் பிடித்த காரபூந்தியைக் காணவில்லை.

பொசுக்கென்று ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் மாமியார் வீட்டுப் பலகாரம் என்றால் கொஞ்சம் குஷியாகத்தானே இருக்கும். இந்த வருடம் சோகமாகவே இந்தத் தீபாவளி போகும் போல. இது பற்றி நைசாக விசாரித்தால் அது ஹிட்லரின் சதி என்று கண்டுபிடித்தேன். நான் செய்து தருகிறேன் என்று ஆரம்பித்தார். விதி வலியது அல்லவா? மீண்டும் அடுப்பங்கரைக்குக்கு ஆளை வர வைத்தே ஆக வேண்டும் என்று சதி செய்தால் என்ன செய்வது? கிரேக்க வம்சத்து அடிமை மாதிரி இருப்பதைத் தவிர என்னதான் செய்ய முடியும்?

இந்த வருடம் டிவியை ஆன் செய்யக்கூடாது என முடிவெடுத்துள்ளேன். உண்மையான தீபாவளி டிவியை ஆஃப் செய்வதில் தான் உள்ளது.

இதெல்லாம் முடிந்து இரவில் படுக்கச் செல்லும் போது முகத்தில் புன்னகையுடன் காலையிலிருந்து கொண்டாடிய கொண்டாட்டத்தால் அசந்து தூங்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது அறியாமலே மனதுக்குள் மத்தாப்பூ பூக்கும். அதுதானே நமக்கு உண்மையான தீபாவளி இல்லையா?

குடும்பத்துடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுங்கள். வெளி நாடு வாழ் தியாக உள்ளங்களே வரக்கூடிய நாட்களில் நீங்களும் உங்கள் குடும்பங்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ நான் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.