குரு வாழ்க ! குருவே துணை !!

Saturday, October 22, 2016

நண்பனுக்கோர் கடிதம் - மங்கை நீ மாங்கனி

பட்டுக்கோட்டைக்கும் புதுக்கோட்டைக்கும் செல்லும் பேருந்துகள் ஆவணம் வழியாகத்தான் செல்லும். தஞ்சாவூர் பெரிய கோவிலின் வழியாக வரும் காவிரி ஆற்றின் கிளை நதி ஊரின் கிழக்கே செல்லும். கடைமடைப் பகுதியாதலால் தண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது. நதி தாண்டியதும் வயல்கள் பரவிக்கிடக்கும். கிளை நதியிலிருந்து பிரியும் சிறிய ஆற்று வாய்க்காலும் கடல் நோக்கிச் செல்லும். இந்தக் கிளை நதியின் மேல்புறமாகத்தான் அடியேன் படித்த அரசு மேல் நிலைப்பள்ளி இருக்கிறது.  


(எனது அலுவலகத்தில் 1997ம் வருடத்தின் புகைப்படம்)(மறைந்த எனது நண்பன் ஜஹாங்கீர் ஆலம்)

ஒன்பதாம் வகுப்பில் தான் எனது பள்ளித்தோழன் ஆலத்தைச் சந்தித்தேன். ஊரில் ஆலத்தின் அப்பாவும் எனது தாத்தாவும் நண்பர்கள். தாத்தா மாணிக்கதேவர் நேதாஜியின் இந்திய தேசியப்படையில் வீரராக இருந்தவர். அப்போது அவர் மலேசியாவில் இருந்தாராம். மலேசியாவில் பெரிய கடை வைத்து நடத்திவர் தான் ஆலத்தின் அப்பா இஸ்மாயில் ராவுத்தர். பெரிய மட்டப்பாறை வீட்டில் தான் வசித்து வந்தார். 

ஆலத்திற்கு மூன்று சகோதரர்கள். அக்பர், ஒளரங்கசீப், பகதூர்ஜா  பின்னர் ஜகாங்கீர் ஆலம் என இவன். மன்னர்களின் பெயர்கள் அல்லவா? அதற்கேற்ப ஆலம் இளவரசன் போலத்தான் வாழ்ந்தான். பள்ளியில் அவனுக்கு என்று தனி நட்பு வட்டமே உண்டு. வித விதமான உடைகள், உணவுகள் என அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டமே இருந்தது.

ஆலம் ஏன் என்னிடம் நட்பு கொண்டான் என்பதற்கு ஒரு காரணம் உண்டு. எனது பெயருக்கு அடுத்த பெயர் அவனது. பரிட்சையில் ஒன்பதாம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்தான். எனது நட்பு அவனுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் என்னிடம் நெருங்கிப் பழகினான். எனக்கு அவன் போட்டியில்லை என்பதால் நான் அவனைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. தேர்வில் எனது பேப்பரை பெற்று அப்படியே காப்பி அடித்து வைப்பான். பாஸ் செய்வதற்கு மட்டும் தான் எழுதுவான். அதிக மதிப்பெண் பெறுவது அவன் நோக்கமல்ல. ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து விட்டான். உபயம் அடியேன்.

ஜோசப் வாத்தியாரிடம் டியூசன் படிக்கச் சென்ற போது முதன் முதலாக  ஆலத்தின் வீட்டுக்குச் சென்றேன். கத்தரிப்பூ கலரில் அழகான டப்பாவில் இனிப்புகள் இருந்தன. எடுத்து என்னிடம் கொடுத்து அனைத்தையும் சாப்பிடு என்றான், ஓவல் காப்பி கொடுத்தான். எனக்கு எல்லாமே புதிதாக இருந்தன. ஓவல் டின் காப்பி எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. 

பத்தாம் வகுப்பு வந்த பிறகு வாரம் தோறும் அவனது வீட்டுக்குச் சென்று இருவரும் சேர்ந்து படிப்பதுண்டு. எனது சில நண்பர்களும் என்னுடன் வருவார்கள். ஆலத்தின் அப்பாவுக்கு அவன் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்ற அடங்காத ஆசை. ஆனால் ஆலமோ படிப்பது என்றால் எட்டிக்காயாக நினைப்பான். அப்பாவின் ஆசைக்காக படிப்பான். அவனது எழுத்து கோர்வையாக இருக்கும். இதுவரையிலும் அவனைப்போல எழுதுபவரை நான் பார்த்ததே இல்லை. கோடு போட்டது போல வெகு அழகான கையெழுத்து. 

சிறிய வயதில் யாருக்கு என்னென்ன கிடைக்க வேண்டுமோ அதது காலத்திற்கேற்ப கிடைக்க வேண்டும். எல்லாமும் கிடைத்து விட்டால் போகும் வழி மாறி விடும். பத்தாம் வகுப்பிலேயே சிகரெட், தண்ணீர், சீட்டு என்று பழகிக் கொண்டான். வேறு என்ன பழக்கங்கள் இருக்கின்றனவோ அத்தனை பழக்கங்களும் அவனிடம் தொற்றிக் கொண்டன. அவனிடமிருந்து நான் தருவித்துக் கொண்டது சிகரெட். பாரின் சிகரெட் பண்டில் பண்டிலாக குடிப்பான். அடிக்கொரு தடவை டீ அருந்துவான். அப்பா மலேஷியா சென்று விட்டால் குஷியாகி விடுவான். கேட்க கேட்கக் பணம் கொடுத்து செல்லமாக வளர்த்தார் அவனின் அம்மா. அவன் முகம் சுண்டி விட்டால் அந்தம்மாவுக்குத் தாங்காது.

அடிக்கடி எனது வீட்டுக்கு வருவான். இருவரும் பத்தாயப்பெட்டிக் கொட்டைகையிலும், மாமரத்தின் அடியிலும் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருப்போம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் அவனுக்கும் எனக்குமான நட்பு அவ்வப்போது பார்த்துக் கொள்வது என்று ஆகி விட்டது. நான் கல்லூரிக்குச் சென்ற பிறகு எப்போதாவது வீட்டுக்கு வருவான். நானும் சென்று வருவேன். அதன் பிறகு முற்றிலுமாக நின்று விட்டது. கரூருக்கு வந்த பிறகு அவன் ஆவணம் கைகாட்டியில் இருக்கும் வியெஸ்ஸெம் மகளைத் திருமணம் செய்து கொண்டதாகவும் இரண்டு குழந்தைகள் என்றும் கேள்விப்பட்டேன். ஒரே ஒரு முறை போனில் பேசினேன்.

எனக்குத் திருமணமான பிறகு ஒரு முறை அவன் வீட்டுக்குச் சென்றேன். காரின் ஓட்டுனர் வீடு பூட்டிக் கிடக்கிறது என்றார். திரும்பி விட்டேன். அவன் இறந்து விட்டான் என்றுச் சொன்னார்கள்.

நானும் அவனும் பழகிய அந்த இரண்டு வருடங்கள் வெகு இன்பமானவை. அர்த்தமுள்ளவை. வாழ்வின் அத்தனை சுகங்களையும் அவன் அந்த வயதில் அனுபவித்தான். நான் அவனோடு சாட்சியாக மட்டுமே இருந்தேன். பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை சிகரெட் புகைப்பான். சன்னலைத் திறந்து வைத்து விடுவான். நான் பசித்திருப்பதை அவனால் சகிக்கவே முடியாது. வாய்க்குள் மலரும் அருமையான புன்னகை கொண்டவன். கண்கள் மட்டுமே சிரிக்கும். அவனின் புன்னகை மோகனப் புன்னகை. அவன் அப்பாவுக்கு மட்டுமே பயப்படுவான். அடி பின்னி பெடலெடுத்து விடுவார்.

ஆவணம் கைகாட்டி ஸ்டார் தியேட்டரில் நானும் அவனும் ஒரு இரவில் இரண்டாவது ஆட்டத்தில் விஜயகாந்ந் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் பார்த்திருக்கிறோம். என்னை தன் பைக்கில் அமர்த்தி வைத்துக் கொண்டு படு வேகமாகச் செல்வான். 

கிராமப்புறங்களில் இருக்கும் ஊனமுற்றவர்களின் பாடு என்னவென்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மனதுக்குள் புழுங்கிப் புழுங்கி ஏதோ ஒரு பெட்டிக்கடையோ அல்லது ஏதோ ஒரு கடையிலோ தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வார்கள். என்னுடன் நெருங்கிப் பழகவே அசூசையைப்படுபவர்கள் இருந்த காலத்தில் என் மீது என்ன காரணத்தினாலோ பிரியமாக இருந்தான். அவன் தேவை முடிந்த பிறகும் அவனின் நட்பு என்னுடன் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவனின் நல்லது கெட்டது அனைத்தும் எனக்கு மட்டுமே தெரியும். 

அவனுக்கு ஒரு காதலி இருந்திருக்கிறாள். அவள் யாரென்று கடைசி வரை என்னிடம் சொல்லவே இல்லை. அவன் மிகச் சிறந்த காதலன். என்னுடனான நட்பில் அவன் மறைத்த ஒரு விஷயம் இதுதான். ஒரு ஊனமுற்றவனை நேசிக்கவே நல்ல மனது வேண்டும். அவன் என்னுடன் நட்புக் கொண்டான். நாங்கள் இருவரும் இந்தப் பாடலை ஒரு நாளைக்கு குறைந்தது 50 தடவை கேட்போம். என்னடா இந்தப்பாடலில் இருக்கிறது? என்று கேட்பேன். சிகரெட்டைப் பற்ற வைத்து  மெல்லிதாக ஊதிக் கொண்டே புன்னகைப்பான். நான் அவனுடன் இருந்தால் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு வெளியில் புகையை ஊதிக் கொண்டே இந்தப்பாடலை கேட்டுக் கொண்டிருப்பான். அவனுடன் நானும்.

இதோ அந்தப் பாடல்....
அவனுக்கு ஒரு கடிதத்தை எழுத ஆசைப்படுகிறேன். அவன் மனிதனாகப் பிறந்திருந்தாலோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் இந்தக் கடிதம் அவனிடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

அன்பு நண்பா ஆலம்,

என்ன காரணத்தினாலோ நீ என்னை உன் பிரிய நண்பனாக்கி என்னுடன் பழகினாய். அடிக்கடி உன் முகமும், உன் புன்னகையும், நீ எனக்கு உணவு பரிமாறும் நினைவுகளும் வந்தென்னை பீடித்து உன் நினைவுகளில் அமிழ்த்தி விடுகிறது நண்பா. நீ இந்த உலகை விட்டு என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மறைந்து போனாய். 

எனக்கு ஆன்மீகத்திலும் எனது குரு நாதரின் மீது அளவுகடந்த நம்பிக்கை உண்டு நண்பா. எனது காலம் எதுவரை என்று எனக்குத் தெரியாது. ஆன்மீகம் மனிதர்களுக்கு புல்லாகி பூடாகி என்ற வாழ்க்கைப் பிறப்புகளை வரிசைப்படுத்துகிறது நண்பா. வேறு எதுவாகவும் பிறக்க நான் விரும்பவில்லை நண்பா.

எனக்கு என் உடல் மீதும் இந்த உலக வாழ்க்கை மீதும் உள்ள பற்று என்றைக்கோ நீங்கி விட்டது நண்பா. ஒன்றுமே இல்லாத இந்த வாழ்க்கையில் நான் பெற்ற கடன்களை தீர்த்து விட்டு வெளியேற வேண்டும் என்ற ஆவல் மட்டுமே உள்ளது. இனி எந்தப் பிறப்புமே பிறக்கக்கூடாது என்றே நினைக்கிறேன். 

ஆனாலும் நண்பா உன்னை நான் சந்திக்க விரும்புகிறேன். இப்போது உன்னால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சிகரெட் பழக்கம் போய் விட்டது. உன்னுடன் ஒரே ஒரு சிகரெட்டை நெருப்புப் பஞ்சில் பற்றும் வரும் வரை புகைக்க வேண்டுமென்ற ஆசை மட்டுமே உள்ளது. 

நீ வேறு எந்தப் பிறப்பாகவும் பிறக்கவில்லை என்றால் மேல் உலகத்தில் இருப்பாயானால் நான் அங்கு வந்து உன்னைச் சந்திக்கிறேன். எனக்கும் உனக்குமாக இரண்டு சிகரெட்டுக்களை கையோடு வைத்துக் கொள். இல்லையென்றால் நான் உனக்கும் எனக்குமாக இரண்டு சிகரெட்டுகளைக் கொண்டு வருகிறேன். இருவரும் ஆனந்தமாக புகைக்கலாம்.

இப்படிக்கு
உன் நண்பன் தங்கம்

2 comments:

Unknown said...

Brother innakkuthaan vungga pathivai paarthen arumai naan avar akka magan thaan intha pathivil neengal potha antha video paadal illai athu enna paadal pls tell me.

Felix said...

Ena solla .. no words.. ithuve “Deiviga Nattpu ennum Kaadhal” . Your letter to aalam.. great sir 👍.. I am sure you will meet him again 🙂
Thanks .. Felix

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.