குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Thursday, September 26, 2024

லப்பர் பந்து எனும் குப்பை

லப்பர் பந்து திரைப்படத்தைப் பார்த்த பிறகு மஹாத்மா காந்தி மீது கோபம் ஏற்பட்டது. 

தமிழ்நாட்டின் சினிமா இயக்குனர்கள் மறந்து போன பார்முலா ஒன்று உண்டு. 1960களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த கும்பகோணம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பார்முலாவைத் தொட்டு விட்டால் வெற்றி நிச்சயம். அதைத் தொட்டிருக்கிறது இந்தப் படம். 

பார்முலா பற்றிப் புரியவில்லை என்பவர்களுக்காக எழுதுகிறேன். பாக்கியராஜ் இந்த பார்முலாவை தொட்டவர். முந்தானை முடிச்சில் ஆரம்பித்த பார்முலா திசைமாறியது வேட்டியை மடிச்சுக்கட்டு திரைப்படத்தில். அன்றிலிருந்து அந்த பார்முலாவை விட்டு விலகினார்- வெற்றியும் அவரை விட்டு விலகியது.

வேட்டியை மடிச்சுக்கட்டு என்றவுடன் இந்த மாதம் பெருமாள் முருகன் - உயிர்மை இதழில் எழுதிய செம்மி சிறுகதை நினைவுக்கு வந்து விட்டது. இந்தச் சிறுகதையை நீங்கள் அவசியம் படித்துப் பாருங்கள். திகைத்து நிற்பீர்கள் .

கோடி ரூபாயை பைனான்ஸில் போட்டு விட்டு - பைனான்ஸ்காரனின் மூடிய கடைக்கு முன் ஏமாந்து நிற்கும் மன நிலையை விட இது வேறு விதமானது. கதையை படித்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்து நிற்கும் மனசு.

அந்த சிறுகதையின் இணைப்பு கீழே.

https://uyirmmai.com/article/uyirmmai-magazine-september-2024-perumal-murugan-short-story-02/

இடைச்செருகல்:

ஏ.ஆர்.ரகுமான் - என்னைப் பொருத்தவரை ஆஃப்ரிக்க, லெபனான், உருது, கஜல் பிட்டுசுட்டுக்கார புயல் - யு ஸ்ட்ரீம் என்றொரு விர்ச்சுவல் புரடெக்‌ஷன் ஹவுஸ் ஒன்றினை சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஃபில்ம் சிட்டியில் உருவாக்கி இருக்கிறார். இங்கு இதைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது எனக் கேட்பீர்கள். தொடர்ந்து வருகிறது. படியுங்கள்.

இவரின் பிசினஸுக்குப் பின்னாலே ஒரு வகையான கால்குலேஷன் இருக்கிறது. 

போனைத் தடவும் தடவல்காரர்கள் அதிகம் ரசித்துப் பார்ப்பது மல்லு படமோ, போர்னோ படமோ அல்ல. யூடிப்பில் வரும் உணவு ரெசிப்பீ(?)க்கள், ஹோட்டல் உணவு ரெவிவியூக்கள். இவைகளைத் தான் அதிகம் பார்வையிடுகிறார்களாம். 

ஒரு சில போலி ரெவிவியூவ் அண்டாவாய்க்காரர்கள், ஹோட்டல் உணவுகளை, பெரிய பைட்டா போயிடலாம், வேறமாரி எனச் சொல்லிக் கொண்டே, வயிற்றுக் குப்பைத் தொட்டிக்குள் தள்ளிக் கொண்டிருப்பதை, வாயில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருப்போரின் புள்ளியியல் கணக்கு எக்கச் சக்கமாம். 

பார்ப்பதிலேயே பரவசம் காண்பவர்களின் எண்ணிக்கை அதிகமென்பதால் - அந்தக் கணக்கு வழக்குகளின் விபரங்கள் தெரிந்த ஏ.ஆர்.ஆர் இப்படி ஒரு வெர்சுவல் புரடெக்‌ஷன் ஹவுசை உருவாக்கி இருக்கிறார். சிம்பிளாக சொல்லணும் என்றால் மூடிய கதவுக்குள் ஸ்டூடியோ. முன்பொரு காலத்தில் கொட்டகைக்குள் ஸ்டூடியோ போல இப்போது விர்ச்சுவல் ஸ்டூடியோ.

சிந்தைசர் இசை காசு தரும். உண்மையான இசையைத் தராது. அந்த இசைக்கோர்ர்வைகள் அரிப்பு எடுத்த இடத்தில் இட்ஸ்கார்டு கிரீம் தடவுவது போல இருக்கும். ரஹ்மான் பாடல்களை இப்போது கேட்க முடியாது.

இயற்கையான இசைக்கருவிகள் வழியே புறப்படும் இசை, கேட்பவர்களின் மனதிற்குள் இசைக்கேற்ற உணர்வுகளை உண்டாக்கும். புல்லாங்குழலுக்குள் புகுந்து வரும் இசைக்கும், செமிகண்ட்டக்டர் டிவைஸ்ஸுக்குள்ளிருந்து  வெளிவரும் இசைக்கும் வித்தியாசம் உண்டு.

ஆப்பிளின் விர்ச்சுவல் ரியாலிட்டி கேட்ஜெட் தோற்றுப் போன ஒன்று. விர்ச்சுவல் ரியாலிட்டி என்பது பொய்.

உண்மை உண்மை தான், அதன் தன்மை வேறு.

பொய் எப்போதும் பொய் தான்.  நெருப்பில் மூடிக் கிடக்கும் சாம்பல் போல. ஒரு காற்றுக்கே தாங்காது பொய். ஆனால் உண்மை அப்படி அல்ல. அது அணையா நெருப்பு.

இது போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டி படைப்புகளில் உயிரோட்டம் இருக்காது. உயிர்களின் உண்மையான உணர்வுகளைத் தராது.

தற்கால டெக் ஆட்களுக்கு வாட்சப்பே வள்ளுவர், ஃபேஸ்புக் அரிச்சந்திரன், டிவிட்டர் சிவபெருமான். படிக்கவும் மாட்டார்கள். படிப்பதைப் புரிந்து கொள்ளவும் தெரியாது. புரோ, ஐபோன் 18 அப்டேட் வந்துடுச்சு, கலக்கிட்டான் என்பார்கள்.  இதிலென்ன பெருமை வேண்டியிருக்கு? ஆப்பிள் ஐபோனை விற்றவன் அல்லவா பெருமைப்பட வேண்டும்? ஆப்பிள் போனைக் கையில் வைத்திருந்தாலே பெருமை மண்டி விடும். அடுத்த வருடம் கால்வாசி காசுக்கு கூட விற்கமுடியாமல் போகும் பொருள் போன்.  

பைத்தான் படித்தால் பெருமை, ஐடி கம்பெனியில் அடிமை வேலை பார்த்தால் பெருமை, கார் வாங்கினால் பெருமை, வீடு வாங்கினால் பெருமை. இப்படி எதெற்கெடுத்தாலும் பெருமை, பெருமை. பைசாவுக்கு பிரயோசனம் உண்டா இதிலே? என் மகளுக்கு சமைக்கவே தெரியாது. இப்படி ஒரு பெருமை அந்தப் பெண்ணைப் பெத்த அம்மாவுக்கு. பெருமை என்பது போலித்தனமானது. அது முடிவில் இழப்பை உண்டாக்கும். 

இப்படியான போலி மாயைகளில் சிக்கி இருப்போரிடம் பொய்களை விதைத்து, அறுவடை செய்வது எளிதானது. அதைப் புரிந்து கொள்ளும் பக்குவமும், அறிவும் இருப்பதில்லை. பொய்களுக்கும், எதார்த்தத்தின் உண்மைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளத்தான் யுடர்ன்ஸ் விர்ச்சுவல் ஸ்டியோ பற்றி எழுத வேண்டியிருக்கிறது.

முழுமையான விர்சுவல் ரியாலிட்டியில் தயாரிக்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான பாகுபலியில் உயிரோட்டம் இல்லை. மாம்பழத்திலிருந்து அப்படியே சாறு எடுத்து பாட்டிலாக வருகிறது என்பார்களே அதுவும், உண்மையான மாம்பழச்சாறுக்கும் இடையே உள்ள வித்தியாசம் எப்படியோ அப்படித்தான் விர்ச்சுவல் ரியாலிட்டுக்கும், எதார்த்தமான படைப்புகளுக்கும் இடையில் உள்ளது.

லப்பர் பந்து உயிரோட்டமுள்ள படம். பாகுபலி இதன் முன்பு தூசுக்கும் காணாது. ஃபிக்ஸன் நாவலுக்கும், ஜானகிராமனின் மோகமுள்ளுக்கும் இருக்கும் மலையளவு வித்தியாசம் இரண்டு படத்துக்கும் உண்டு.

கற்பனை உலகின் உருவாக்கங்கள் எதார்த்தங்களோடு ஒன்றவில்லை என்றால், தோற்றுப் போன படைப்பு. லப்பர் பந்து திரைப்படத்தின் உயிரோட்டம் - படத்தைப் பார்க்கும் ரசிகனுக்குள் பல விதமான உணர்வுகளை உருவாக்குகிறது. ஏ.ஆர்.ரகுமானின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஸ்டியோ மூலம் வரப்போகும் படங்கள் செத்துப் போனவையாக இருக்கும்.

லப்பர் பந்து திரைப்படம் - சாமானியர் பார்வையில் மிகச் சிறந்த, அற்புதமான படைப்பு. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் தான் என்னை அப்படம் குப்பை எனக் கருத வைத்தது.

குழந்தைகள் வளர வளர - அவர்களின் ஒவ்வொரு செயலையும் அம்மா, அப்பா,  அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மாமா, பாட்டி, அத்தை, தாத்தா, சித்தப்பா இப்படி  பல உறவுகள் மெச்சி, பாராட்டி மகிழ்வார்கள். அதாவது குழந்தையின் ஒவ்வொரு செயலையும் அங்கீகரிப்பார்கள். இந்த மன நிலை குழந்தைப் பருவத்திலிருந்து மனதுக்குள் பதிந்து விடும். 

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என போகப் போகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

லப்பர் பந்து திரைப்படத்தின் கதையைச் சுருக்கமாக பார்க்கலாம்.

அட்டைகத்தி தினேசு கிரிக்கெட் விளையாடுபவர். கீழ்சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, ஆர்ட் வேலை செய்பவர். இப்பெண்ணுக்கு கணவன் கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காது.

இவர்களுக்கு ஒரு பெண். 

அய்யராத்து அம்பி ஹரீசு கல்யாண் - கிரிக்கெட் பைத்தியம், சொந்தமாக பிரிண்டிங் தொழில். படத்தில் கீழ் சாதிப்பையன். நன்றாக கிரிக்கெட் ஆடுவான். ஊரில் பிரபலமாக இருக்கும் ஜில் பாய்ஸ் கிரிக்கெட் டீமில் கீழ்சாதி என்பதால், இவனை அவர்களுடன் விளையாட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

கிரிக்கெட் விளையாட்டில் பட்டாசாய் வெடிப்பவன் தினேசு. வயதானாலும் பந்தை அடித்து பட்டாசாய் ரன்களைப் பறக்க விடுவான். 

ஹரீசு - தினேசின் பெண்ணைக் காதலிப்பான். காதலி எதார்த்தமானவள்.  ஒரு கட்டத்தில் தினேசு கிரிக்கெட் விளையாடுவதை ஹரீசு விமர்சிக்க இருவருக்குள்ளும் ஈகோ வந்து விடும். 

காதலியின் அப்பாதான் தினேசு என்று  தெரியாது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தெரிந்து விடும். அப்பா ஓகே சொன்னால் தான் கட்டிக்குவேன் என்கிறாள் காதலி. 

ஹரீசு தினேசு இணைப்பு நடந்தே தீரும். அதுதானே உலக சினிமா வழக்கம்?

முட்டல், மோதல், சேர்தல், காதல், வெற்றி கதைதான். ஆனால் முடிவில் ஒரு டிவிஸ்ட். கிளைமேக்ஸைச் சொல்லக் கூடாது. ஆனால் இங்கு சொல்லியே தீர வேண்டிய கட்டாயம். 

எனக்கு காந்தி மீது கோபம் ஏற்பட்டது என்று இந்தியாவின் டைபிக்கள் பொய்யான அகிம்சாவை வம்பிற்கு இழுத்திருக்கிறேன் அல்லவா? அதென்ன டைப்பிக்கள் பொய் என்கிறீர்களா? 

அகிம்சா வழிப் போராட்டங்களைப் பார்த்து, மனம் பதைத்த ஆங்கிலேயன் இந்தியாவிற்கு விடுதலை கொடுத்து விட்டு சென்று விட்டான். இப்போது அகிம்சை வழி போராட்டம் என்றால் 800 பேர் செத்துப் போக வேண்டும். 

வேற்று சாதி பையன்களை கிரிக்கெட்டில் சேர்க்காத ஜில் பாய்ஸ் டீமுக்கும் - தினேசு-ஹரிசு அடேங்கப்பா டீமுக்கும் போட்டி. 

தோற்று விடுவோம் என்பதால் கீழ்சாதிப் பையன்களை ஜில் பாய்ஸ் டீமுக்குள் கொண்டு வருகிறார்கள். தினேசு-ஹரிசு அடேங்கப்பா டீம் போட்டியில் தோற்று விடுகிறது. ஜில் பாய்ஸ் டீமுக்குள் கீழ்சாதி பையன்கள் கிரிக்கெட் விளையாடி ஒன்னு மண்ணாக இருப்பது, இவர்கள் வெற்றி பெற்றால் கெட்டுப் போகும் எனக் கருதி இருவரும் பேசி முடிவு செய்து வேண்டுமென்றே தோற்றுப் போவார்கள். அடுத்த ஆறு மாதங்கள் சென்ற பிறகு எல்லா சாதிக்காரர்களும் மைதானத்தில் ஒன்றாக விளையாடுகிறார்கள்.

இனி தான் மேட்டரே இருக்கிறது. 

விகடன் ஆன்லைனில் வருடம் 900/- ரூபாய் கட்டிப் படிக்கிறேன். அதில் லப்பர் பந்து கட்டுரையில் கீழே இருக்கும் கமெண்ட்டைப் போட்டேன். உடனடியாக பதிவானது. ஆனால் அடுத்த சில நொடிகளில் நீக்கப்பட்டு விட்டது. 

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியதுதான் இந்தக் கமெண்ட்.

விகடன் இந்தக் கமெண்டை நீக்கி விட்டது. ஏனென்று உங்களுக்குத் தெரியும். இந்த சாதியக் கட்டு அறுந்து போனால் அவர்களின் பொய் கட்டுமானம் நொறுங்கி விடும். இப்படியான கருத்து கூட அவர்களுக்கு எதிரானது. 

உயர்ஜாதிக்காரர்களுடன் எல்லா சாதிக்காரர்களும் சேர்ந்து விளையாட வேண்டுமாம். திரைப்படம் சொன்ன செய்தி. 

ஏன் அவர்களுடன் சேர வேண்டும்?  தன்னை உயர்சாதி என்றுச் சொல்பவர்களிடமிருந்து விலகிச் சென்றால், அவர்களை ஒதுக்கி வைத்தால், ஒதுங்கிச் சென்றால் என்ன ஆகி விடும்? செத்துப் போவோமா?

பிறந்தால் செத்துதானே போவோம்? அவன் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் ஒவ்வொருவரின் வயிற்றுப் பசி போய் விடுமா? யாருக்கும் நோய் வராதா? சாவு வராதா? எல்லாமும் வரத்தானே செய்யும்? ஏன் உயர்சாதிக்காரர்கள் என்பவர்களுடன் ஒட்டணும், உறவாட வேண்டும்?

அவர்கள் தங்களை மதிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்? 

காரணம் என்ன தெரியுமா?

கீழ்சாதி என்ற எண்ணம் மனதுக்குள் புகுந்து, பயமாக மாறி விட்டது.

தேவர் சமுதாயத்தில் பிறந்த என்னால் பிராமணர் வீட்டுக்குள் செல்ல முடியாது. பிராமணர்களைப் பொறுத்தவரை நானும் கீழ்சாதிக்காரன் தானே? இப்படி ஒவ்வொரு சாதி மீது நிகழ்த்தப்படும் இந்தத் தாக்குதலை வேறொரு சாதி மீது தொடுக்கிறோம். இதை எதிர்பார்த்துதான் சாதிய அடுக்குகள் உருவாக்கப்பட்டு, சமூகத்திற்குள் புகுத்தப்பட்டது. இதன் காரணமாக சமூகத்தில் சம நிலை, சமூக நீதி தவறுகிறது. 

இதைத்தான் முன்னோர்கள் காலத்தில் இருந்த பிராமணர்கள் உருவாக்கினார்கள். அது இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது பல வடிவங்களில். அந்த வடிவத்தைதான் இந்தப் படமும் வெளிப்படுத்துகிறது.

கீழ்சாதிக்காரர்களுடன் சேர்ந்து விளையாட உயர்சாதிகாரன் முயல்கிறான் என்று படம் எடுக்க தோன்றவில்லை இந்த இயக்குனருக்கு? இயக்குனரின் மனதுக்குள் பதிந்து விட்ட சாதியப்பயம் அவரை சிந்திக்க விடாமல் தடுக்கிறது.

இந்த சாதிய அடுக்குகளில் சிக்கியதால் தான் - நம் சொத்தான சிதம்பரம் நடராஜர் கோவிலை எங்கிருந்தோ வந்த தீட்சிதர்கள் திருடி தின்று கொழுக்கிறார்கள். இந்தக் கோவிலைக் கட்டியது, செலவு செய்தது தமிழர்கள். ஆனால் நீதிமன்றம் தீட்சிதர்களின் கோவில் என்று தீர்ப்புக் கொடுத்திருக்கிறது. பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்தக் கட்டமைப்பை உடைக்க வேண்டியவர்கள் கடவுளின் பெயரால் - பாப புண்ணியங்களின் பெயரால் - அடிமையாக இருக்கிறோம்.

இந்த பாப புண்ணியங்கள் தீட்சிதர்களுக்கு இல்லையா என்று எவராவது எப்போதாவது கேட்டிருப்பீர்களேயானால் - சிதம்பரம் கோவிலோ அல்லது கருவறையோ எல்லோருக்குமான உரிமையாக அல்லவா இருந்திருக்கும்?

பஞ்சாப் மக்கள் மோடி கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களை நீக்க வைத்தார்கள். அவர்களிடம் இருக்கும் அந்த துணிச்சல் - ஆங்கிலேயனை எதிர்த்த தமிழர்களிடம் காணாது போனது ஏன்? 

தெருநாய்க்கு கிடைக்கும் எச்சில் சோற்றைப் போல கீழ்நிலைப் பதவிக்களுக்கும், அவர்கள் சொல்லும் வேலைகளைப் பெறுவதற்கும், அலைந்து கொண்டு, அடித்துக் கொண்டிருக்கிறோம். 

இனிமேல் பெரியார் வரமாட்டார். பெரியாரை ஏன் உயர்சாதி என்று கருதிக் கொள்பவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று தெரிகிறதா உங்களுக்கு?

சாதிய அடுக்குகளில் உண்டாக்கிய வெற்று சாதி அடுக்குகள் நீங்கினால் தான் அவர்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நாமும் செல்ல முடியும். அதை உடைத்து விடாமல் மதத்தின் பெயராலும் பாப புண்ணியங்கள் என்ற பெயரினாலும் சாதிய அடுக்குகளை உடையவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். நாமெல்லாம அதைப் புரிந்து கொள்ளாமல் இன்றும் இருக்கிறோம் என்பது தான் வேதனை.

பெரியார் மொழி, மதம் வழியான இவ்வகை ரகசிய சதிகளை அறிந்ததால் தான் அதையெல்லாம் சாமானியன் புரிந்து கொள்ளும் நோக்கில் பச்சையாகத் திட்டினார். எதிர்த்தும் நின்றார். 

ஒரு மதம் - ஆகமம் என்ற விதியைக் காரணம் காட்டி மனிதர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குமா? மதம் மனிதர்களுக்குள் அன்பைத்தான் போதிக்கிறது. பிரிவினையை எந்த மதமும் எப்போதும் போதிக்காது. ஆனால் அது அப்படித்தான் சொல்கிறது எனச் சொல்கிறார்களே அவர்கள் தான் மதத்தின் விரோதிகள் என்ற எளிய உண்மையைக் கூட சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நீ கீழ்சாதிகாரன், சமூகத்தில் ஒதுக்கி வைத்திருப்பது குற்றம், உனக்காக நான் போராடுகிறேன், அதை வெளிப்படுத்தும் படைப்புகளை முன் வைத்துப் போராடுகிறேன் என்று எவன் சொல்கிறானோ அவன் தான் சாதிய அடுக்குகளைப் பாதுகாப்பவன். அவன் தான் சாதியக் கட்டுமானங்களின் மீது ஒரு வித பயத்தை உண்டாக்குகிறான். அவன் தன்னை வளர்த்துக் கொள்ள, தன் வயிற்றுப் பசி தீர சாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றுச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். 

மகாத்மா காந்தி 1900 ஆண்டுகளில் உச்சத்தில் இருந்த காலத்தில் சாதிய அடையாளங்களுடனான சமூக நீதிக்கு முயன்றார்.

பெயர்களில், உடைகளில், உடலில் போடப்படும் குறியீடுகளில் இருக்கும் உயர்சாதி - கீழ்சாதி அடையாளங்களை ஒதுக்கி இருக்க வேண்டும் காந்தியார். 

ஹரிஜன் பத்திரிக்கை - ஹரிஜனுடன் ஒத்திசைந்த வாழ்வு என்றாலும் எங்கும் ஒரு கோடு இருந்து கொண்டே வருவதை இப்போதும் நீக்க முடியவில்லை. அந்த வகையில் லப்பர் பந்து போன்ற படங்கள் சாதியை மறக்கவிடாமல் பதிய வைத்துக் கொண்டே இருக்கும்.  

சிறு வயதிலிருந்து எது செய்தாலும் அங்கீகாரத்துக்கு ஏங்கும் மன நிலையானது, பெரியவர்களானாலும் விட்டு விலகுவதில்லை. அதனால் மனதுக்குள் ஆண்டாண்டு காலமாக பதிய வைத்திருந்த கீழ்சாதி எண்ணங்கள் அங்கீகாரம் வேண்டுமென்ற பாதையில் மட்டுமே பயணம் செய்கிறது. இப்படி இருக்க கூடாது என்பதற்காகத்தான் விகடனின் கட்டுரையில் மேலே இருக்கும் கமெண்டைப் போட்டேன். விகடன் அதை நீக்கி விட்டது. விகடனுக்கு அக்கருத்தை நீக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இக்கருத்து கூட யாரோ சிலரின் மனதுக்குள் முளைத்து விடக்கூடாது என்ற அதீத ஜாக்கிரதை உணர்வு.

கமெண்டைப் போட்டு விட்டு, நான் அடுத்த வேலைக்குச் சென்றிருப்பேன். விகடனின் இந்தச் செயலை என்னால் ஏற்க முடியவில்லை. அதற்காத்தான் இந்த நீண்ட பதிவு எழுத வேண்டியிருக்கிறது. 

யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டியதுமில்லை. எவரின் அங்கீகாரமும் தேவையுமில்லை. இந்த பூமி எல்லோருக்குமானது. எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது. இதில் யாருடைய அனுமதியோ - அங்கீகாரமோ தேவையே இல்லை. 

அந்த கருத்தின் அடிப்படையில் லப்பர் பந்து திரைப்படத்தை நான் குப்பை என்றேன்.

ஒரு நாட்டுக்குள் குடிமகனாகப் பிறப்பது - அதன் தொடர்ச்சியாக சட்ட திட்டங்களை மதித்து நடப்பது என்பது வேறு. நான் இங்கு எழுதி இருப்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

லப்பர் பந்து திரைப்படத்தைச் சாமானியனின் பார்வையில் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.

கோபாலகிருஷ்ணனின் டச்சுக்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. பெண்ணடிமை போற்றும் விசு வகையறாக்களுக்கு இப்படம் பிடிக்காது. அது நமக்குத் தேவையும் இல்லை. இப்படம் பெண்ணடிமையினைத் தகர்த்து வீசுகிறது. காட்சிகள் ஒவ்வொன்றும் இயல்பானதானக, உணர்வு பூர்வமாக இருக்கிறது.

தினேசுக்கு அவன் மனைவி எவர்சில்வர் டப்பாவில் மட்டன் வறுவல் எடுத்து வைக்கிறாளே - அந்த டப்பாவுக்குள் இருக்கிறது வாழ்வியல் சூத்திரம். ஹரீசுக்கும் காதலிக்கும் மனப்பிரிவு உண்டான உடன், அவளைப் பார்க்க வரும் போது, காதலியின் அம்மாவிடம் அந்த எவர்சில்வர் டப்பாவைக் கொடுக்கும் போது தெரிகிறது தன் பெண் இவனைக் காதலிக்கிறாள் என. 

எல்லோரும் படத்தை அவசியம் பாருங்கள். 

இப்பதிவையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒரு சிலருக்கு இப்பதிவு வன்மமாகத் தோன்றலாம். அதற்கு அவரவர் மனநிலையும், புரிதல் தன்மையுமே காரணம். 

இனியெல்லாம் சுகமே உண்டாகட்டும் உங்களுக்கு.

அரைகிலோ ஆட்டுக்கறியை ஒரு இஞ்ச் சைசுக்கு துண்டாக்கி, நல்லெண்ணெயில் மசாலா சேர்த்து, அதனுடன் ஆட்டுக்கறியை வேக வைத்து சாப்பிடும் போது உண்டாகும் சுவையை நீங்கள் லப்பர் பந்து பார்க்கும் பெறலாம்.

சைவப்பிரியர்களுக்கு கோமிய பரிசுத்தத்திற்கு முன்பு கிடைத்த ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் விற்பனை செய்த லட்டுவின் சுவை போலச் சுவைக்கும்.

திட்டுவார் திட்டட்டும், போற்றுவார் போற்றட்டும். எல்லாமும் அவரவருக்கே சேரட்டும். 

Tuesday, December 11, 2018

உலகக் கவி தனுஷ்

பாரதியாரின் பிறந்த நாளான இன்று உலகத் தமிழ் மக்களுக்கு, எதிர்கால தமிழகத்தின் சுப்பர் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டாரும், வரும் காலத்தின் தமிழக முதலமைச்சருமான எனது அன்பு நடிகர் மாண்புமிகு ஸ்ரீலஜி மகாத்மா உயர்திரு தனுஷ் அவர்களின் பாடலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதிலே எனக்கும் பெரும் மகிழ்ச்சி. பாரதியாரின் பிறந்த நாளான இன்று தமிழகக் கவியான எம்மான் தனுஷ் அவர்களின் பாடலை நினைவூட்டுவதில் பெரும் மகிழ்வெய்தி உள்ளம் பூரித்து ப்..ஊ..ளகாங்கிதம் மன்னிக்கவும் புளகாங்கிதமடைகிறேன்.

இந்தப் பாடலைப் பாடியவர் அடியேனின் உள்ளம் கவர் கள்வனான மகா நடிகரும், உலகிற்கே ஒப்பாருமிப்பாரும் இல்லா ஒரே மனிதருமான தனுஷ் அவர்கள் என்பதை தமிழ் உலகிற்குச் சொல்வதில் எனக்கு மிக்க சந்தோஷம்.

இன்றைய நாள், அந்தக் காலத்தில் ஒரே வரியை ஓராயிரம் தடவை கீரல் விழுந்த ரெக்கார்டு போலப் பாடிப் பாடி புகழடைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நினைவு நாளும் கூட.

எம் மனம் கவர் உலகப் புகழ் பாடகர் தனுஷின் குரலுக்கு முன்னே எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல் காலணா பெறாது என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டியதில்லை. மலை எங்கே மடு எங்கே????

சிட்னியில் பிறந்து சட்னியாக வந்த மன்னிக்கவும் பாடகியாக வந்த தீ எனும் அய்யர் ஆத்து மாமியின் பெண் பிள்ளையான பாடகியின் ஹஸ்கி குரலில் இந்தப் பாடலைக் கேட்டதும் எனக்குள் தியானம் ஒன்று கூடி உள்ளம் மறந்து உலகை மறந்து வெட்டவெளிக்குச் சென்று விட்டேன். பாடகியின் ’ஒரசிக்கலாம்’ என்ற குரலைக் கேட்டவுடன் சிலிர்ப்பு ஏற்பட்டு தியான நிலை ஒன்று கூடி அந்தப் பரப்பிரம்மனையே பார்த்து விட்டேன் என்றால் பாடகியின் திறமைக்கு அளவேது? 

ஒரே ஒரு பாடலில் சாதாரண மனிதனை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் அற்புதமான திறமையை எண்ணி எண்ணி வியக்கிறேன். அதை உங்களுக்கும் சொல்லி மகிழ்கிறேன். இதை விஜய் டிவி ஜட்ஜூகள் சித்ரா, பாரத கலா ரசிகமணி அவார்டு பெற்ற சரண் மற்றும் தெருப்பாடகர் சங்கர் மகாதேவன் வகையறாக்கள் கவனிக்கவும். இப்பாடகியை அழைத்து வந்து விஜய் டிவி கவுரவப்படுத்தி ‘ஒரசிக்கலாம்’ அவார்டு கொடுக்க வேண்டுமென்ற் இந்த நேரத்தில் நான் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல, தமிழக அரசாங்கம் எமது தங்கத் தலைவனின் பாடலைப் பள்ளிகள் தோறும் இறை வணக்கத்திற்கு முன்பாக பாட ஒரு அரசாணையை வெளியிட்டு ஒன்றுக்கும் ஆகாத பாரதியாரை உலகக் கவி என்று சொல்லுவதை விட்டு விட்டு, எம் தலைவர் தனுஷை தமிழகக் கவியாக அங்கீகரித்து அவருக்கு மரியாதை செய்தல் வேண்டுமென்று வேண்டு கோள் விடுக்கிறேன். தமிழ் வளர்ச்சித்துறையின் கவனத்திற்கு இந்தக் கவியைக் கொண்டு சென்று, மத்திய அரசாங்கத்திடம் படுத்துப் பேசி மன்னிக்கவும் பணிந்து பேசி முடிந்தால் யோகா வகுப்பின் போது இப்பாடலினைப் பாடியபடி யோகா செய்ய ஆவண செய்தல் வேண்டுமாய் உத்தரவிடும் படிக் கேட்க வேண்டுமென்று இந்த நேரத்தில் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

(பாடகி தீ - சிட்னி அய்யாரத்து மாமி பின்னு)

இதோ தமிழகக் கவிஞரும், கண்ணதாசனையும் மிஞ்சிய ஒரே ஒரு எழுத்தாளருமான எம்மான் தனுஷ் அவர்களின் பாடல் கீழே.


பெண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஆண் : ஹே என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : ஹே மை டியர் மச்சான் நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : போத்தாம்.. வேஸ்த்தாம்.. ரவுடி பேபி
ஆண் : கேர்ள் பிரண்டு.. பூச்செண்டு.. நியூ டிரென்டு பேபி

பெண் : ரவுடி பேபி ரா ரா ரவுடி பேபி

பெண் : உன்னாலே ஏய் மூடாச்சு மை ஹார்மோனு
பேலன்ஸு டேமேஜ்
ஆண் : ஏய் காமாட்சி என் மீனாட்சி இந்த
மாரிக்கும் உன் மேல கண்ணாச்சு

பெண் : ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா
யூ பிளஸ் மீ த்ரீ மாமா
ஆண் : வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி
ஐ வில் பை யூ போனி அத ஓட்டின்னு வா நீ

பெண் : என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி
நான் உன்னுல பாதி நம்ம செம ஜோடி

பெண் : ரவுடி பேபி ஹே ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி ரவுடி

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

ஆண் : ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

பெண் : ஹே என் சிலுக்கு சட்ட நீ
வெயிட்டு கட்ட லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : மை டியர் மச்சான்
ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நீ மனசு வெச்சா

ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நம்ம ஒரசிக்கலாம்

ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : ஹே  ஹே  ஹே

ஆண் : மை டியர் ராணி என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர பையர் பத்திகிருச்சா

பெண் : ரா நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ஆண் : ரா யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி

பெண் : ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி……

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

பெண் : {ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான் }(3)

பெண் : ரவுடி பேபி

============================


பாடலைக் கேட்டு ரசிக்க !

இலக்கிய உலக அன்பர்களே, உலக தமிழக டிவிப் பெருமக்களே, மேலே கண்ட பாடலைப் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் உள்ளம் உற்சாகத்தால் துள்ளும். பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் சொல்லும் அர்த்தங்களை விவரிக்க வார்த்தைகள் போதாது. அது மட்டுமின்றி பாடல்களில் தொக்கி நிற்கும் முடிச்சுகளின் மர்மங்களை எம்மான் தனுஷால் மட்டுமே அவிழ்க்க முடியும். அந்தளவுக்கு கருத்துப் பொதிகள் பொதிந்து மறைந்து கிடக்கின்றன.

உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று !

யூ ப்ளஸ் மீ திரீ மாமா - என்ன ஒரு கருத்து? இந்த நான்கு வார்த்தைகளில் கொட்டிக் கிடக்கும் மர்மங்கள் தான் எத்தனை எத்தனை? பிளஸ் என்பது சேர்வதைக் குறிக்கிறது. எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் தான் அது. மாமா என்பது அன்பினை மட்டும் குறிப்பது அல்ல? உறவைக் குறிப்பது. குறி என்றவுடன் சிறு மதியாளர்களுக்கு சிந்தனை வேறு பக்கம் சென்றிடும். நான் சொல்வது சுட்டுவது என்ற அர்த்தத்தில். ஒன்னும் ஒன்னும் இரண்டு ஆனால் யூவும் மீயும் சேர்ந்தால் மூன்று என்ற அர்த்தம் சொல்லும் அற்புத தத்துவம்தான் மனித வாழ்க்கையின் உயர் தத்துவம். ஒரே ஒரு வரியில் மட்டும் இத்தனை அர்த்தங்களைப் பொதித்து எவராலும் அவ்வளவு எளிதில் உணர்ந்து கொள்ள இயலாத கவியை மன்னிக்கவும் கவிதையை எழுதிய எம்மான் தனுஷ் அவர்களை இலக்கிய உலகம் எவ்வளவு பாராட்டினாலும் தகுமா? இல்லை தகுமானு கேட்கிறேன்?

நீங்கள் எல்லோரும் மூச்சடைத்துப் போய், விழித்துக் கொண்டிருப்பீர்கள் என்று தெரிகிறது. தனுஷ் அவர்களின் பாடலின் அர்த்தங்களும், அதன் ராகங்களும் சாதாரண இலக்கியவியாதிகளான உங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியாதது அல்ல. இருப்பினும் ஏன் சொல்கிறேன் என்றால் உங்களைப் போன்ற அரைகுறை கவி ஞானம் உள்ளவர்களால் பரிந்துரைத்தால் தான் சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என சொல்லிக் கொள்கின்றார்கள்.

ஆகவே வரும் வரும் எம்மான் தனுஷ் அவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருதுக்கும், ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைத்து பெரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நினைவூட்டுகிறேன்.

உலகே மெச்சும் அற்புதக் கவியும், பாடகரும், நடிகருமான தனுஷ் அவர்களுக்கும், இசைகலெக்‌ஷனின் ஒரே வாரிசுப் புதல்வனான யுவன் செங்கர் ராஜாவுக்கும் பாரத தேசம் உயரிய விருது கொடுத்து கவுரவிக்க வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக் கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.

வாழ்க உகலக் கவி தனுஷ் ! 

Thursday, October 13, 2016

சிவகார்த்திகேயனின் அழுகை

அண்ணா, சிவகார்த்திகேயன் மேடையில் அழுது விட்டார் பார்த்தீர்களா? என்று போனில் ஒரு சினிமா நண்பர் அழைத்து ஆதங்கப்பட்டார். கிட்டத்தட்ட 32 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார் அவர். மிக நல்ல கதை சொல்லி. ஏகப்பட்ட கதைகள் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன. அவர் 12 மணி நேரம் கதை சொல்வார். அந்தளவுக்குத் திறமைசாலி. ஆனால் இதுவரை ஒரு படம் கூட அவரால் இயக்கமுடியவில்லை. காரணம் அவருக்கு அந்த வித்தை தெரியவில்லை. போன் போட்டு சிவகார்த்திகேயனுக்காக பேசுகிறார். இதனால் அவருக்கு என்ன பிரயோஜனம் என்று அவர் யோசித்திருந்தால் போன் செய்திருக்கமாட்டார்.

சிவகார்த்திகேயன் ஏன் அழுகிறார்? எங்கே நாம் அடுத்து அடுத்து கோடிகளில் சம்பாதிக்க முடியாதோ என்ற ஆதங்கத்தில் அழுகிறார் விஷயம் அவ்வளவுதான். புரிந்துகொள்ள முயலுங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஒன்றும் பேசாமல் போனை வைத்து விட்டார். கமல்ஹாசன் கூட கண்ணீர் சிந்தினார். ஏனென்றால் அவரின் பிசினஸுக்குப் பிரச்சினை. அதனால் அழுதார். இதில் நமக்கு என்ன பிரச்சினை என்று எவரும் சிந்திப்பதில்லை.

இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? சிறிய தொழில் செய்பவன் கூட தன் சக தொழில் போட்டியாளரிடம் தோற்றுப் போகின்றானே அவன் என்ன அழுது கொண்டா இருக்கின்றான்? இல்லை பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றானா? இல்லையே? தொழில் போட்டியில் பல இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும். அதைச் சமாளித்துதான் வெற்றி பெற வேண்டும். உடனே மீடியாவில் அழுக ஆரம்பித்தால் தினம் தோறும் நொடிக்கு நொடி அழுகாட்சிகளையே மீடியாக்கள் காட்டிக் கொண்டிருக்க நேரிடும். இதெல்லாம் எதற்கு? 

இதெல்லாம் புரியும் அளவுக்கு தமிழகத்தில் பெரும்பான்மை இல்லையென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதே அரசியலைத்தான் எழுத்தாளர்களும் செய்கின்றார்கள். எழுத்தாளர்களில் கூட சினிமாத்தனம் இருக்கிறது. ஜெயமோகன் சாரு நிவேதிதா என்று எழுதுகின்றார்கள். 

இந்த அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்த அரசியல் என்று தெளிந்து கொள்ள வேண்டும். தனிமனிதப் பெருமை பேசும் சினிமாக்காரர்களையும் அரசியல்வாதிகளையும், இலக்கியவாதிகளைப் பற்றி யும் தெளிவறப் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர்களின் அரசியல் நம் இரக்க குணத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி நம்மிடமிருந்து பணம் பிடுங்க செய்யும் மாயாஜால வித்தை. அரசியல்வாதி அதிகாரத்தை அடைந்து பணம் சம்பாதிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றான். எந்த அரசியல்வாதியும் தன் சொத்தை விற்று மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை. கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக வாழவும், அதிகாரத்தை அனுபவிக்கவும், அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சொத்து சேர்க்கவும் தான் அரசியலுக்கு வருகிறான். செலவு செய்கிறான்.

எழுத்தாளர்கள் பணமும் புகழும் சம்பாதிக்கத்தான் எழுதுகின்றார்கள். சமூகப் பிரக்ஞை, வரலாறு என்று பேசி மாய்மாலம் செய்வார்கள். 

சினிமாக்காரர்கள் பணம் சம்பாதிக்கத்தான் சினிமாவுக்குள் வருகின்றார்கள். ஹீரோயின் இல்லையென்றால் ஹீரோக்கள் சினிமாவுக்கே வரமாட்டார்கள். 

பத்திரிக்கையும், சினிமாவும், அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவை மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்வதில்லை. மக்கள் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டையப் போட உருவாக்கப்பட்ட மாயவலைகள். சினிமா ஒரு பக்கம் நம்மிடமிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அரசியல் வரிப்பணமாக உறிஞ்சிக் கொள்கிறது. இவர்கள் இரண்டு பேரையும் இணைத்து பத்திரிக்கைகள் தர்ம நியாயம் பேசியே கண்ணுக்குத் தெரியாமல் உறிஞ்சிக் கொள்கின்றார்கள்.

விஷயம் அவ்வளவுதான். ஒரு புள்ளி மட்டுமே இது. 

ஒரு விஷயத்தை சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கிறது. அரசியலில் தூய சேவை செய்கின்றவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். எழுத்தாளர்களில் பலர் உலகமக்களுக்காக உண்மையாக எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிக்கையாளர்களில் பலர் உண்மையின் சொரூபமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எவரையும் நமக்குத் தெரியாது. தெரியவும் விட மாட்டார்கள். ஏனென்றால் இங்கு தான் அரசியல் நடக்கின்றதே?

ஆனால் சினிமா அதுவும் அல்ல இதுவும் அல்ல. சினிமாவில் உறிஞ்சப்படுதல் மட்டுமே நடக்கின்றது. அந்த சினிமா அரசியலையும் உருவாக்குகிறது. அடிமைத்தனத்தில் சினிமா ஒரு விதம். நான் அவரின் ரசிகன் என்றுச் சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை சொல்பவனுக்கு இருக்கிறது என்று எவரும் யோசிப்பதில்லை. இந்தப் பூமிப்பந்தில் சினிமாவைப் பற்றியும், சினிமாக்காரர்களைப் பற்றியும் தெரியாதவர்கள் ஐந்து பர்செண்டேஜ் இருக்கலாம். மீதமுள்ளவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம் சினிமாவில் சென்று சேர்கிறது. 

ஒரு சாதாரண போர்ன் நடிகை 100 கோடிக்கு நகை வைத்திருக்கிறார். அவளின் படத்தைப் பார்ப்பவர்களிடம் என்ன இருக்கிறது?

இன்றைக்கு பதினைந்து கோடி சம்பளம் பெறுகிறார் என்று மீடியாவில் பேசப்படும் சிவகார்த்திகேயன் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகனின் பாக்கெட்டில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் இருக்காது. ஆனால் சிவகார்த்திகேயன் அழுகிறார். 

யாருக்காக அழுகிறார்?

ரசிகனுக்காக எவரும் அழுவதில்லை. ரசிகன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அழுகின்றார்கள். 

Thursday, May 3, 2012

மோகமுள் திரைப்படமும் நாவலும்




மோகமுள்ளை இன்று தான் வாசித்து முடித்தேன். நிஷ்டையில் இருந்தாட்போல மனது ஒரு முகப்பட்டு இருந்தது. 

ஒரு நாவல் அதுவும் கருப்பு மையிட்ட எழுத்துக்கள் படிக்கும் வாசகனின் மனதை நிஷ்டையில் கொண்டு போய் விடும் என்று உணர முடிந்தது.

படிக்கும் போதே கவட்டிக்குள் குமுற வைக்கும் எழுத்துக்களையும், படங்களையும் பார்த்துப் பார்த்தே மனது இது போன்ற நாவல்களைப் படிக்க முனைய மாட்டேன் என்கிறது.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்த போது முகத்தில் அறைந்த, நம்மை அடுத்த இன்னொரு உலகத்தினை அறிந்து கொண்ட அதிர்ச்சி என்னை விட்டு நீங்க இரண்டு நாட்களானது. அடுத்து இந்த நாவல் ! 

நாவல் மனதோடு இழைகிறது. காவிரிக்கரை, பாப நாசம், கும்பகோணம், தஞ்சாவூர் கண்ணை விட்டு அகலமாட்டேன் என்கிறது. திரைப்பட படப்பிடிப்பின் போது கும்பகோணம் எல்லையில் ஒரு நாள் ஷூட்டிங் சென்றிருந்த போது காவிரியின் அழகை காண நேர்ந்தது. சுழித்து ஓடும் காவிரியைக் கண்டாலே மனது அவள் மீது லயித்துப் போய் விடும்.

திருவையாறில் சின்னஞ் சிறு வயதில் அப்பாவின் திதிக்குச் சென்றிருந்த போது கரை நிரம்பி தளும்பிச் சென்ற காவிரின் அகண்ட பருவம் இன்றைக்கும் மனதை விட்டு அகலவே இல்லை. விடிகாலைப் பொழுதில் சற்றே குளிர்ந்த தண்ணீரில் முங்கி எழுந்த அனுபவத்தின் சிலிர்ப்பு இந்த எழுத்தை எழுதும் போது கூட உணர முடிகிறது. 

திஜாவின் எழுத்தில் காவிரியின் கரையோர ஊர்கள் கண் முன்னே நர்த்தனமாடுகின்றன. 

ஞானராஜசேகரனின் திரப்பட மோகமுள்ளைப் பார்த்துப் பார்த்து “அர்ச்சனாவை” யமுனாவாக நினைவில் அச்சாய் பதிந்து போய் விட்டது. அர்ச்சனாவின் சாயலை மனதில் இருந்து நீக்க படாத பாடு பட்டேன். ஒரு வழியான அர்ச்சனா மறைந்து போய் யமுனா ஆக்ரமித்து விட்டாள். பாபு கொண்ட காதலைப் போல யமுனாவின் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

திரை யமுனாவிற்கும், நாவல் யமுனாவிற்கு ஏணி வைத்தால் கூட எட்டவே எட்டாது.வாழைத்தண்டு பாதம் என்பதெல்லாம் திரை “அர்ச்சனாவிடம்” இல்லவே இல்லை. அர்ச்சனா ஒரு விதமான சோகத்தைப் பிழியும் முகம் கொண்டவர். ஆனால் திஜாவின் யமுனா மனித உருவில் இருக்கும் இறைவி போன்றவள்.

பாபு தன்னை விட 10 வயது அதிகமான யமுனாவைக் காதலிப்பது தானே முக்கியமான கரு என்றார் நண்பர். இது சரியும் அல்ல, தவறும் அல்ல, விதி விலக்கு என்றார். பாபுவின் காதல் பொருந்தாக் காதல் என்றார்.

காதலில் பொருந்தாக்காதல் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? 

சிக்கலான பல முடிச்சுக்களை போட்டுப் போட்டு மனிதன் தனக்குள்ளே பல சிக்கல்களை உருவாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கி வைத்திருப்பதன் நோக்கம் எனக்கு இது வரை புலப்படவே இல்லை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்