ஒண்டிப்புதூரில் வசித்து வந்த போது விடிகாலையில் குளித்து விட்டு வாசலில் அமர்ந்திருப்பேன். நெடு நெடுவென உயரம். வலது தோளில் வெண்மையான துண்டு, வேஷ்டி அணிந்து, இடது கையில் ஒரு தூக்கு வாளியுடன் வெண் தாடியுடன் ஒருவர் தினமும் கிழக்கிலிருந்து மேற்காக நடந்து செல்வார். தினமும் பார்ப்பதுண்டு. ஒரு சில நாட்களில் வண்டியில் வரும் போது எதிரில் வருவார். யாரோ ஓய்வு பெற்ற வாத்தியார் போல என நினைத்துக் கொள்வேன்.
நான்கு வருடங்களுக்கு முன்பு ஜோதி ஸ்வாமி ’குருநாதரின் நினைவு தினம் ஒண்டிப்புதூரில் நடக்கிறது’ எனச் சொன்னார். நான் மட்டும் விசாரித்துக் கொண்டு சென்றால் அங்கே வெண்தாடிப் பெரியவரின் புகைப்படம் இருந்தது. சாமியிடம் கேட்டால் ”அவர் தான் எனக்கு பயிற்சி அருளிய குருநாதர்” என்றார். எனக்குள் பச்சாதாபம் மண்டிக்கொண்டது. கண் எதிரில் நடமாடியவருடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்ற ஏக்கமும் எனக்குள் நிறைந்தது. வருடம் தோறும் குருபூஜை நடக்கும், நானும் செல்வதுண்டு. அங்கு பலரும் வருவார்கள். அது பற்றி நான் ஏதும் விசாரித்துக் கொள்வதில்லை. நான் எதற்குச் சென்றோனோ அந்தக் காரியத்தை மட்டும் பார்த்து விட்டு திரும்பி விடுவேன்.
இந்த வருடம் வெள்ளிங்கிரி சுவாமியின் ஜீவசமாதியில் ராமசாமி அய்யாவின் குருபூஜை நடந்தேறியது. நானும் மனையாளும் காலையில் ஆறு மணிக்கே கிளம்பி விட்டோம். கூட்டு தியானம் முடிந்து, அன்னதானம் நடந்து. உணவு அருந்திய பிறகு அங்கு வந்த அன்பர்களுக்கு ஒருவர் தன் பிள்ளையுடன் ஓடியாடி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.
வீட்டுக்குத் திரும்பினேன். அந்த உணவு பரிமாறியவர் பற்றியும் ராமசாமி அய்யா பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்து ஜோதி சுவாமிக்கு அழைத்தேன்.
முதலில் உணவு பரிமாறியவர் பற்றிச் சொல்லி விடுகிறேன். அவரின் பெயர் மூர்த்தி, ஒண்டிப்புதூரில் முடி திருத்தும் கடை வைத்திருக்கிறாராம். ஒவ்வொரு வெள்ளியன்றும் கடையை மூடி விடுவாராம். கோவையில் இருக்கும் ஒவ்வொரு அனாதை ஆசிரமத்திற்கும் சென்று இலவசமாக அங்கு இருக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு முடி திருத்தி விடுவாராம். திருவண்ணாமலை வரைக்கும் அன்னதானம், உப்பு, உணவு பொருட்கள் என கொண்டு போய் கொடுத்து வருவாராம். ராமசாமி அய்யாவிடம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம். ஒவ்வொரு குருபூஜை அன்றும் அவரை நான் சந்திப்பேன். வணக்கம் பரிமாறிக் கொள்வோம். அவ்வளவுதான். ஆர்ப்பாட்டமில்லாத மனசு. நானெல்லாம் அவரின் முன்னே தூசுக்கும் சமமானவன் இல்லை.
இனி ராமசாமி அய்யாவின் வாழ்க்கையைப் பற்றிச் சுருங்கப் பார்க்கலாம். ராமசாமி அய்யாவின் தந்தையாருக்கு நான்கு மனைவிகள். முதல் மனைவியின் மூத்த குமாரன் ராமசாமி அய்யா. இவருடன் சேர்ந்து மொத்தம் 16 பேர் வாரிசுகள். பதினைந்து பேருக்கும் உணவிட்டு, படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்த பிறகு பார்த்தால் உலகில் இருக்கும் நோயெல்லாம் இவரிடம் வந்து விட்டது. மருத்துவர்கள் இன்னும் ஒரு மாதமே உன் ஆயுள் என்றுச் சொல்லி விட, சொத்து பத்துக்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு திருச்சி பக்கம் சென்று விட்டார். அங்கு யாரோ ஒரு பெரியவர் இவருக்கு வாசியோகப்பயிற்சியை பயிற்றுவித்து தொடர்ந்து பயிற்சியைச் செய்து வரும்படி சொல்லி இருக்கிறார்.
ராமசாமி அய்யாவும் பயிற்சியினைத் தொடர்ந்து செய்து வர நோயின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. விடாமல் பயிற்சியினைத் தொடர்ந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவருடம்பிலிருந்த நோய்கள் விடுபடத்தொடங்கின. பயிற்சியின் போது அவருக்குள் பல்வேறு விடயங்கள் தெளிவாகத் தொடங்கின. அதுவரையில் பல இடங்களுக்குச் சென்று வருவதும், தியானம் மேற்கொள்வதுமாக இருந்தவர், மறைபொருள் மூடியிருந்த திரை விலக விலக தன்னை ஒண்டிப்புதூரில் ஒரே இடத்தில் இருத்திக் கொண்டார்.
தன்னைத் தேடி வருபவருக்குப் பயிற்சியினைக் கொடுத்து வழி நடத்தி வந்திருக்கிறார். காலையில் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அருகில் சென்று பசும்பால் வாங்கிக் கொண்டு வருவாராம். உடைத்த கோதுமை ரவையை வேக வைத்து, அதனுடன் பாலைச் சேர்த்து கொதிக்க வைத்து கஞ்சியாக்கி, உப்பின்றி, இனிப்பின்றி உணவு எடுத்துக் கொள்வாராம். அவரிடம் வரும் சீடர்களுக்கும் இதே உணவுதான். விரும்பினால் கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளச் சொல்வாராம்.
பதினாறு பேரில் முதல்வராகப் பிறந்து குடும்பப்பாரத்தைச் சுமந்த அனுபவத்தால் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அவருக்கு என இருந்த ஒரே ஒரு சொத்தையும் அவர் ஜீவனை உடம்பிலிருந்து உகுத்த அன்றே விலை பேசி விற்று விட்டார்களாம் அவரின் உறவினர்கள்.
29.03.2018ம் தேதியன்று நடந்த குருபூஜை அன்று அவரின் உறவினர்களில் ஒருவர் கூட வரவில்லை. அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்கள் தான் உறவினர்கள்.
எனக்குத் தெரிந்த வகையில் உறவுகள் கொண்டாட்டத்திற்கும், கடைசிக் காலத்தில் வந்து செல்லவும் மட்டுமே பயன்படுவார்கள். இடையில் வரும் நண்பர்களில் நல்ல நண்பர்கள் வேண்டுமெனில் அவர்கள் காலம் முடியும் வரை நினைத்துக் கொண்டிருக்கலாம்.
வாழ்க்கையே ஒரு மாயை என்பதற்கான ஒரு உதாரணமாகத்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். பதினைந்து குடும்பங்களை உருவாக்கியவரின் நினைவு நாள் அன்று கூட, அவரால் வாழ்க்கை பெற்றவர்களால், அவரை நினைத்துப் பார்க்காத தன்மை விந்தையானது இல்லை. அவ்வாறு நடந்திருந்தால் அது மெச்சத்தக்க வேண்டிய நிகழ்வாகி விடும். மனிதர்கள் என்றுமே மனிதர்கள் தான். எப்போதும் அவர்கள் மாறப்போவதும் இல்லை, துன்பங்களில் இருந்து விடுபடப்போவதும் இல்லை.