குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, February 4, 2018

நன்றி மறந்தவர்களில் முதலிடம் பெண்களுக்கா?

செய் நன்றி மறப்பதில் பெண்கள் முதலிடத்தில் இருப்பார்கள் போல. கொஞ்சம் கூட நன்றி உணர்ச்சி இல்லாதவர்களாய் பெண்கள் இருக்கிறார்கள். ஏனென்று சொல்கிறேன் கேளுங்கள்.

பிளாக்கினைப் படிக்கும் பெண்களிடம் நான் முதலில் சரணடைந்து விடுகிறேன். பெண்களை பூமித்தாய் என்கிறோம் நாங்கள். எத்தனையோ மனிதர்கள் பூமியினை எத்தனையோ அல்லல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆட்படுத்தினாலும் அவர்களை வாழ அனுமதித்திருப்பது போல என்னையும். புரியவில்லை என்றால் மணல் மாஃபியா, மலை மாஃபியா, கடற்கரை மாஃபியாக்களை எல்லாம் வெகு சொகுசாக வாழ வைத்திருக்கும் பூமியைப் போல என்னையும் கொஞ்சம் மன்னித்து அருளி வாழ வாழ்த்தி விடுங்கள்.

இந்தியாவைப் பொறுத்து குடும்பத்தலைவியிலிருந்து தேசம் வரை எல்லாமிடமும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்கும் தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை. 

கண்ணை மூடி இந்த உலகத்தின் இயக்கத்தையும், உலகில் மனிதனின் பயன்பாடுகளுக்கு இருக்கும் பொருட்களையும் நினைத்துப் பாருங்கள். 

ஒரே ஒரு உதாரணமாய், உலகில் இருக்கும் கண்ணாடிகள் அனைத்தும் யாருக்காகத் தயாரிக்கின்றார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமா?

பாரதி முதல் அதாவது அந்தக் காலம் முதல் இன்றைய கால கவிஞனிலிருந்து, எழுத்தாளர்கள் வரை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பது எல்லாம் யாரை? தியாகராஜபாகவதர் காலத்திலிருந்து திரை இசையில் யாரைப் பற்றி பாடல்களை எழுதி இசையமைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். 

உலகத்தில் காணும் பொருளை எல்லாம் பெண்ணோடு தொடர்பு படுத்தி பேசுவதும், பாடுவதும், பாடிப்பாடியே செத்துப் போவதும் யார்?

கல்லறையிலும் கூட காதலிக்காகத் காத்துக் கொண்டிருக்கிறேன், என் விழிகளை மூடி புதைத்து விடாதீர்கள் என்று கவிஞன் ஒருவன் கண்ணீர் உகுத்தானே யாருக்காக?

இதோ கீழே இருக்கும் பாடலைப் படியுங்கள். எனக்குப் பெயர் தெரியாத யாரோ ஒரு கவிஞனி வரிகள் இவை.

நந்தா என் நிலா…
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா

விழி…மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழிக் குழல்
பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில்
மின்னி வரும் சிலையே மோஹன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவரமுதே
ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட
அருகினில் வா

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா

ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா

ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாள்
மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
போகத்திலாட இறங்கி வந்தாளோ

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா

பாடலைப் படித்து விட்டீர்கள் தானே? இதற்கும் மேலே வேறு என்ன எழுத வேண்டும்? உங்களைப் பற்றி எழுத என்ன இருக்கிறது இனிமேல்?

ஆனால் எந்தப் பெண்ணாவது ஆண்களைப் பற்றி இப்படி எழுதி இருக்கின்றீர்களா? பாடி இருக்கின்றீர்களா? ஆண்களுக்காக ஒரு இலக்கியமாவது படைத்திருக்கின்றீர்களா?

இறைவனின் உடம்பில் கூட பாதியைப் பெற்றுக் கொண்டீர்கள். போதாது என்று கடவுளின் நெஞ்சுக்குள்ளும் உட்கார்ந்து கொண்டீர்கள். 

இவ்வளவு செய்தும் ஆண்களைப் பற்றி கொஞ்சம் கூட  நீங்கள் கண்டு கொள்ளவில்லை.

ஏன் ஆண்களின் மீது இப்படி கோபம் கொண்டிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. 

ஒரு வேளை மனைவியை விட்டுப் பிரிந்த புத்தர் நினைவுக்கு வந்திருப்பாரோ? அந்த பட்டினத்தாரின் பாடல்களைப் படித்திருப்பீர்களோ? அவர்கள் எல்லாம் கோடானுகோடியில் புள்ளி சதவீதம் கூட இல்லை. 

சித்தர்கள் பாடிய பாடல்களைப் படித்திருப்பீர்களோ? அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் காட்டுக்குச் சென்றதால் ஏதோ சப்பக்கட்டு கட்டுவதற்காக பெண்களைப் பற்றி எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இதையெல்லாம் காரணம் வைத்துக் கொண்டு ஆண்களைப் புறக்கணித்து விடாதீர்கள். பிறந்ததிலிருந்து அம்மாவுக்காக வாழ்கிறான், பின்னர் மனைவிக்காக வாழ்கிறான். பின்னர் மகளுக்காக வாழ்கிறான். பிள்ளைகள் வளர்ந்து எங்கோ சென்று விடுகின்றார்கள். அவன் இறப்பதற்காக காத்துக் கொண்டிருப்பான். அவனுக்கு என்று அவன் வாழ்ந்ததே இல்லை. கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள் பெண்களே.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 
கொள்வர் பயன்தெரி வார். (திருக்குறள்)

தினை தெரியும் அல்லவா? அத்தனை சிறிய உதவியைச் செய்தாலும் அதை பனைமரத்தளவு உயர்ந்த உதவியாக கருத வேண்டும் என்று திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். 

தினை அளவு கூட வேண்டாம். புல்லின் நுனி அளவாவது ஆண்களைப் பற்றி கவிதையாவது எழுதி இருக்கின்றீர்களா? உங்களைப் பற்றி லட்சோப லட்ச கவிதைகளை எழுதிக் குவித்திருக்கிறார்களே ஆண்கள் அவர்களுக்காவது ஒரே ஒரு கவிதையாவது எழுதி இருக்கின்றீர்களா?

இந்தப் பதிவும் வருங்கால உலகம் உங்களைப் பற்றி ஏதும் பேசி விடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன். ஆகவே பெண்கள் உலகமே உங்களுக்காகவே வாழ்ந்து மறையும் ஆண்களைப் பற்றி இரண்டு வரிகளாவது எழுதி வையுங்கள். வைப்பீர்களா?


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.