குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதி. Show all posts
Showing posts with label வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதி. Show all posts

Tuesday, August 16, 2022

ஜோதி சுவாமிகளின் வார்த்தைகளால் மாற்றமடைந்த பக்தர்

நானும் எனது முன்னாள் நண்பருமான தனபால் அவர்களும் வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு ஒரு மாலை நேரம் வந்தோம். அன்றைய மாலை நேரம், சுவாமியின் ஜீவசமாதியில் ஜோதி சுவாமிகள் வழிபடும் அம்பாளுக்கு  அர்ச்சனை மற்றும் நைவேத்தியம் ஆரம்பமானது. இருவரின் கையிலும் மலர்களைக் கொடுத்து, ஒவ்வொரு மந்திரம் ஓதும் போதும் அம்பாளின் பாதங்களில் மலரை அர்ப்பணிக்க கோரினார் ஜோதி சுவாமி.

சுவாமி மந்திரம் ஜெபிக்க, அந்த மாலை நேர அமைதியில் அம்பாள் விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்க, மனமொன்றிய நிலையில் இருவரும் அம்பாளின் பாத கமலங்களில் மலர்களைத் தூவினோம்.

அன்றிலிருந்து இன்று வரை ஜோதி சுவாமிகளைக் கவனித்து வருகிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். ஆனால் இவரைப் பொறுத்தவரை இந்தக் கருத்து வெற்றி பெறாது.

சிறுவயதிலிருந்து ஆன்மீக நாட்டம் கொண்டு, குரு நாதரின் அழைப்பால் ஜீவசமாதியை நிர்வகித்து வருகிறார். 

எத்தனை பிரச்சினைகள்? எவ்வளவு அக்கப்போர்கள்? அத்தனையையும்  ஒரே ஆளாக நின்று சமாளித்து, நம் குருநாதரின் ஆசியோடு, வரக்கூடிய பக்தர்களைக் கவனிப்பதில் ஆகட்டும், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாகட்டும் என அவரைப் போல இன்னொருவர் இருக்கிறாரா என்றால் எனக்குத் தெரிந்து இல்லை.

பிரதிபலன் எதிர்பார்க்கின்றாரா என்றால் இல்லை. ஏதாவது கட்டணம் வாங்குகின்றாரா? அதுவும் இல்லை. இடுப்பில் ஒரு காவி வேஷ்டி. அதுவும் அழுக்குடன் இருக்கும். 

காலையில் எழுந்து சமைப்பதில் ஆரம்பித்து மாலை ஜீவசமாதியை கதவை மூடும் வரைக்கும் ஓடிக் கொண்டே இருப்பார். அத்தனை சுறுசுறுப்பு.

குருநாதரும் இவரும் வேறு வேறு என்று என்றைக்கும் வித்தியாசம் தோன்றியதே இல்லை. ஒரு சில சமயங்களில் குருநாதரைப் போலவே பேசுவார். அந்த நேரங்களில் எனக்குள் படபடப்பு எழுந்து விடும். சத்தம் காட்டாமல் அமைதியாகி விடுவேன். இதைப் போன்ற பல தருணங்களில் அவரைக் கண்டிருக்கிறேன்.

என் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ரூடோஸ் என்று பெயர் சொன்னார். இதென்ன? இப்படி ஒரு பெயரைச் சொல்கிறாரே? என்று யோசித்தாலும் அதே பெயர் தான். சரியான மூர்க்கம் அவளுக்கு.

ஒரு தடவை ஊருக்குச் சென்ற போது ஜீவசமாதியில் ரூடோஸைக் கொண்டு வந்து விட்டுச் சென்றேன். ஜோதி சுவாமிகள் தான் ரூடோஸைக் கவனித்துக் கொள்வார்.

தினமும் ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அழைத்து வருவாராம். அன்றைய நாளில் குருநாதரைத் தரிசிக்க வந்த ஒரு பக்தர் சுவாமியுடன் ஆற்றுக்கு வந்திருக்கிறார். ரூடோஸைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் போது, அவரைப் பார்த்து ஒரு சில வார்த்தைகள் சொன்னாராம் ஜோதி சுவாமி.

அந்த பக்தர் தன் மனைவி மக்களைப் பிரிந்து பல ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். சுவாமியின் வார்த்தைகளைக் கேட்டவர், மனைவி மகளை அழைத்து வந்து வாழ ஆரம்பித்து விட்டார். இந்தச் சம்பவம் பற்றி எனக்குத் தெரியாது.

அவர் என்னை ஆசிரமத்தில் ஒரு முறை நேரில் பார்த்த போது, “ரூடோஸ் எப்படி இருக்கு?” என்றார்.

ரூடோஸா, அவளுக்கும் இவருக்குமென்ன தொடர்பிருக்கும் என்று நினைத்துக் கொண்டே, “நல்லா இருக்கிறாள், உங்களுக்கு எப்படி அவளைத் தெரியும்?” எனக் கேட்டேன்.

”அவளால் தான் இன்றைக்கு நான் குடும்பத்தோடு வாழ்கிறேன்” என்றார்.

“ஙே” என விழித்தேன்.

“அவளை இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்ற போது, நானும் சுவாமியும் தான் அவளைக் குளிப்பாட்டினோம். அன்றைக்குத் தான் எனக்குள் மாற்றம் நடந்தது. இன்றைய எனது சந்தோஷத்துக்குக் காரணம் அவள்தான்” என்றார்.

இப்படித்தான் ஜோதி சுவாமிகள் திடீரென்று சொல்லும் வார்த்தைகள் பலவும் எனக்குள் பல மாற்றத்தை உண்டாக்கி இருக்கின்றன.

காதற்ற ஊசி, ஒரு மரண ஊர்வலம், இரயிலிருந்து தள்ளி விடப்பட்ட காந்தி ஆகியவற்றால் பட்டினத்தாரும், புத்தரும், மஹாத்மாவாக மாறினர்.

வார்த்தைகளுக்கு அவ்வளவு சக்தி உண்டு. 

குருநாதரைத் தரிசிக்க ஆயிரக் கணக்கானவர்கள் வருவதுண்டு. அவர்களுக்கு இது தாய்வீடு என்று சொல்லிக் கொண்டிருப்பார் ஜோதி சுவாமிகள். 

ஆமாம் குருநாதரின் ஜீவசமாதி உலக மக்கள் எல்லோருக்கும் தாய் வீடு. என்னைப் பொறுத்தவரை அப்படித்தான்.

எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அவரின் முன்பு உட்கார்ந்தால் ஒடுங்கும் மனத்தோடு வைக்கும் எல்லா பிரார்த்தினைகளும் நிறைவேறுகின்றன என அங்கு வரும் பக்தர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 வாழ்க வளமுடன்...!