குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, December 29, 2021

சிதம்பரநாதனின் பொய்யும் புரட்டும் - தினமணிக்கு கண்டனம்

இன்றைய (29.12.2021) தினமணியில் ’ ஜனநாயக ஆலயம் பலிபீடம் ஆககூடாது’ என்ற தலைப்பில் பெ.சிதம்பரநாதன் என்பவர் கட்டுரை வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல தினமணியும் தனது உள் குத்து அரசியல் வேலையை அறமற்ற செயலை தொடர்ந்து செய்து வருகிறது.

என்ன எழுதி இருக்கிறார் அக்கட்டுரையில் பார்க்கலாம்.

  1. ஆளும் பாஜகாவால் நாடாளுமன்றத்தில் எந்த சட்டத்தையும் சுமூகமாக சட்டமாக்கவில்லையாம்.
  2. பிஜேபி கட்சி ஏற்கனவே நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்க கூட முடியாமல் எதிர்கட்சிகள் பிரச்சினை செய்தததாம்.
  3. பெண்ணின் திருமண வயது 21 என்ற சட்டத்தினை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்து விட்டார்களாம்.
  4. பிளாஸ்டிக் தடை செய்ய மசோதா கொண்டு வர வேண்டுமாம். அதை எம்.பிக்கள் நிராகரிக்க முடியாதாம்.
  5. தேனியில் அமையவுள்ள நியுட்ரினோ ஆய்வகத்தினை அமைத்திடும் போது மலையைக் குடையும் போது வைகை அணை தகர்ந்து விடும் என்று அரசியல்வாதிகள் பீதியைக் கிளப்பி விட்டார்களாம்.
  6. கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது அத்துமீறிய 12 எம்பிக்களை கலந்து கொள்ள விடாமல் வெளியேற்றியது சரிதானாம். அதை பொது மீடியாக்களில் வெளியிட வேண்டுமாம். எதிர்கட்சி என்பதாலேயே எல்லா மசோதாக்களையும் எதிர்த்து எம்.பிக்கள் மகிழ்கின்றார்களாம்.
  7. புதிய கல்விக் கொள்கையில் மூன்று மொழி படிக்கலாமாம். பாலிடெக்னிக் கல்வியை தமிழிலேயே கற்பிக்கலாமாம். எதுவும் பிரச்சினை இல்லையாம். 
  8. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒரு நாள் முன்பே முடிவடைந்து விட்டதால் வெட்கப்பட வேண்டுமாம்.
  9. நாடாளுமன்றம் நடக்க ஒரு மணி நேரத்திற்கு 1.5 கோடி செலவாகிறதாம்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது என்ன தோன்றுகிறது?

எதிர்கட்சிகளால் தான் பிரச்சினை, அவர்கள் தான் நாட்டை சீரழிக்கின்றார்கள் என்பது போல ஒரு தோற்றத்தினை உருவாக்குகிறது. எதிர்கட்சி எம்.பிக்களை ஒரு எழுத்தாளர் இப்படி நயவஞ்சகமான முறையில் உண்மைக்குப் புறம்பான வகையில் பொய்யையும், புரட்டையும் கூறி அவமானப்படுத்தி இருக்கிறார். 

67 சதவீதம் பிஜேபிக்கு ஓட்டுப் போடாத மக்களின் பிரதிநிதிகளை இவர் சுயநலவாதிகள் என்பது போல எழுதி மக்களையும் கிண்டல் செய்திருக்கிறார். மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார். தினமணியும் ஒத்து ஊதி கட்டுரையினை வெளியிட்டு இருக்கிறது. இதுதான் உள் அரசியல். மக்களை மூளைச்சலவை செய்யும் பொய்களை அவிழ்த்து விடும் அக்கிரமம்.

நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் பிஜேபி அரசு உடனுக்குடன் சட்டமியற்றி வருகிறது என்பதை பலரும் பல பத்திரிக்கைகளில் எழுதி இருக்கிறார்கள். மூன்று விவசாய சட்டங்களை பத்தே நாட்களுக்குள் எந்த வித விவாதமும் இன்றி நிறைவேற்றிய பிஜேபி அரசின் அக்கிரமத்தினால் 700 விவசாயிகள் இறந்தார்கள். 

இந்த வார கல்கியில் ‘ஏனிந்த அவசரம்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.

வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதார் கார்டையும் இணைக்க வேண்டிய மசோதா அவசர அவசரமாக குரல் ஓட்டெடுப்பில் சட்டமாக்கி இருக்கிறது பிஜேபி. ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இரண்டு அடையாள அட்டையை இணைக்கும் போது பெயர்கள் மேட்சிங்க் ஆகவில்லை என்பதால் 55 லட்சம் பேருக்கு ஓட்டுரிமை பறிக்கப்பட்டது.

வருமான வரி அட்டையில் எனது தகப்பனார் பெயர் மாணிக்கதேவர் என்று இருக்கிறது. ஆதாரில் மாணிக்கம் என்று இருக்கிறது. ரேஷன் கார்டில் மாணிக்கதேவர் என்று இருக்கிறது. அந்தக் காலத்தில் ஜாதியை பெயருடன் இணைத்துதான் ஆவணங்கள் வழங்கப்பட்டன. எனது தகப்பனார் சொத்துக்களின் ஆவணங்களில் மாணிக்கதேவர் என்றுதான் இருக்கிறது. இப்படியான ஒரு பெயர் குழப்பச் சூழல் இருக்கும் போது இரண்டு அடையாள அட்டைகளையும் இணைக்கும் இந்த சட்ட மசோதாவை எந்த வித விவாதமும் இன்றி பிஜேபி அரசு சட்டமாக்கி இருக்கிறது அக்கிரமமான செயல் அல்லவா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் என்பதற்கிணங்க மூன்று விவசாய சட்டங்களை சட்டமாக்கிய நிகழ்வு ஒன்றே போதும் என்று மக்களுக்கு நன்கு தெரியும். இந்த எழுத்தாளர் பொய்யையும் புரட்டையும் எழுதி விவசாய மக்களை அவமானப்படுத்தி இருப்பதை அறியலாம்.

நாடாளுமன்றத்திற்கும் ஆலயத்துக்கும் வேறுபாடு உண்டு. ஆலயம் என்பது வழிபாடு செய்யும் இடம். நாடாளுமன்றம் வழிபாட்டுக்கு உரியது அல்ல. 110 கோடி பல்வேறு கலச்சார மக்களின் சார்பாக, அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் விவாத மன்றம்.  நாட்டை ஆளும் சட்டங்களை உருவாக்கிடும் கோவிலுக்கும் மேலான ஒரு இடம் அது. கோவில்கள் கலாச்சாரத்தின் அடையாளம். நாடாளுமன்றம் இந்தியாவின் உயிர். ஆலயத்துக்கும் நாடாளுமன்றத்துக்கு வேறுபாடு தெரியாத அறிவிலியா இந்த ஆசிரியர் என்று தோன்றுகிறது.

நிச்சயம் இவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதுவல்ல அவரின் பிரச்சினை. பொய்யைக் கட்டவிழ்த்து விடுவது. மக்களை நம்வ வைக்க ஆலயத்தினை கூட இழுத்துக் கொள்கிறார் இவர். 33 சதவீதம் ஓட்டுப் பெற்ற பிஜேபிக்கு ஒத்து ஊதுவது மட்டுமே இவரின் எண்ணம்.

தினமணியில் எழுதிய கட்டுரையின் ஆசிரியர் சிதம்பரநாதன்,  ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசிரியர். இவருக்கு வேலையே பொய்களையும் புரட்டுகளையும் எழுதி வருவதுதான்.  இவர் வயதுக்கு ஏற்ற நற்சிந்தனை, எது அறம் என்று தெளியும் பக்குவம் வந்திருக்க வேண்டும். ஆனால் இவரின் மனதுக்குள் வன்மம் மட்டுமே இருப்பதை இக்கட்டுரை வெளிச்சம் போட்டிருக்கிறது. 

தமிழர்களுக்கு எதிரான, அறத்துக்கு எதிரான இவ்வகை ஆட்கள் அடையாளம் காணப்பட்டு உதாசீனப்படுத்தல் அவசியம் என்பதால் இப்பதிவினை எழுதுகிறேன்.

சிதம்பர நாதனுக்கும், இக்கட்டுரையினை வெளியிட்ட தினமணி ஆசிரியருக்கும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் தினமணி ஆசிரியர் அறமற்ற செய்திகளை, கட்டுரைகளை வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். கருத்துச் சொல்வது என்பது வேறு பொய்யை எழுதுவது வேறு என்ற வித்தியாசம் தெரியாத அளவுக்கு தினமணி ஆசிரியர் மாறிப்போனாரோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நன்றி : தினமணி ( கீழே கட்டுரை )


கல்கி தலையங்கத்தில் வெளியானது கீழே. ( நன்றி கல்கி )0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.