குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, February 4, 2022

நரலீலைகள் - மோஸடி மன்னராட்சி - அரசியல் தத்துவம் (10)

(ஐ) - (I) உரை
 
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் கடுமையான ஏழ்மை நிலையில் தள்ளப்பட்டோர் 5.60 கோடி இந்தியர்கள்

2021ஆம் ஆண்டில் 13.40 கோடி இந்தியர்கள் இன்னும் மோசமான ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஒரே ஆண்டில் 7 கோடி பேர் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டார்கள்.

கொரானா காலத்தில் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் சுகாதார பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் மொத்த தொகையில் திடீரென்று 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏன்? 

மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் கல்விக்கான நிதியில் 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏன்?

2020 -2021ம் ஆண்டில் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

மேற்கண்ட செய்திகள் ஆக்ஸ்ஃபேம் இந்தியா (Oxfam India) இணைய தளத்தில் கிடைக்கிறது கொல்லும் சமத்துவமின்மை என்ற தலைப்பில்.

இப்படி எல்லாம் பத்திரிக்கைகள் பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். 

அவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 

இந்திய மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

2020ஆம் ஆண்டில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடியாக இருந்தது.

இந்தியாவே முடங்கிப் போயிருந்த கொரானா காலத்தில் இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 53.16 லட்சம் கோடி உயர்ந்திருக்கிறது.

இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு 100 சதவீதம் எனில் இதில் 94 சதவீதம் சொத்துக்கள் வெறும் 140 பணக்காரர்களிடம் இருக்கிறது. மீதி இருக்கும் 6 சதவீதம் சொத்துக்கள் மட்டுமே இதர இந்தியர்களிடம் உள்ளது.

ஒரு இந்திய பணக்காரரின் சொத்து மதிப்பு 2020ம் ஆண்டில் 8.9 அமெரிக்க பில்லியன் டாலர்கள். 2021ம் ஆண்டில் சொத்து மதிப்பு 82.2 அமெரிக்க பில்லியன் டாலர்கள்.

ஒரே ஆண்டில் 74 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்வு. 

ஒரு பில்லியன் டாலர்கள் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில்  1,00,00,00,000 US Dollar =  74,68,30,00,000 Indian Rupee (ஏழாயிரத்து நானூற்றி அறுபத்தெட்டு கோடி ரூபாய்) என்றால் 74,000,000,000 US Dollar = 5,526,542,000,000 Indian Rupee (ஐந்து இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து அற நூற்றி ஐம்பத்து நான்கு கோடி ரூபாய்) 

ஒரே ஆண்டில் இவ்வளவு சொத்து மதிப்பு நம் இந்திய தேசத்தின் எனது நண்பரின் சொத்து உயர்ந்திருக்கிறது. 

சாதனை... சாதனை... சாதனை...

உங்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

பணம் அல்ல சாதனை.  

இந்தியர்கள் ஆன்மீக வாதிகள். அவர்களுக்கு பணம் பிரதானம் இல்லை.

உங்களுக்கு ஆன்ம அமைதிதான் வேண்டும். எவரோ பணக்காரர்ரானால் என்ன ஆகா விட்டால் என்ன? அந்தப் பணத்தினால் அமைதியைக் கொண்டு வந்திட முடியுமா?

கடவுளின் முன்னால் பணமெல்லாம் தூசு அல்லவா?  

நாம் பக்தி யோகத்தில் மூழ்கிட வேண்டும். 

நாமெல்லாம் கடவுளின் குழந்தைகள். 

இங்கு பணக்காரர்கள் பற்றி யோசிக்க கூடாது. பணம் மனதுக்குள் வந்து விட்டால் பக்தி போய் விடும். பணமிருக்கும் உள்ளத்தில் கடவுள் இருக்க மாட்டார்.

கடவுள் இன்றி இவ்வுலகமே இல்லை.

ராம நாமமே சிறந்த வாழ்க்கை தத்துவம். 

ஆகவே 94 சதவீதம் சொத்துக்கள் வெறும் 140 பணக்காரர்கள் அனுபவிக்கின்றார்களே என்று பொறாமை படக்கூடாது.

உள்ளத்திலே பொறாமை வந்து விட்டால் கடவுள் உங்களிடமிருந்து விடை பெற்று விடுவார். பக்தி  அகன்றோடி விடும். பக்தி இல்லா மனிதம் சடத்துக்கு சமானம்.

உயர் படிப்பும், உயர் பதவியும் உங்களுக்கு கிடைக்கவில்லையே என்று விசனப்படக்கூடாது. இனி உங்களால் அதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஏனென்றால் படிக்கவே அனுமதிக்க கூடாது என்று அரசாங்கம் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. அங்கனம் அனுமதித்தால் மட்டும் தானே நீங்கள் அதைப் பற்றிச் சிந்திப்பீர்கள். சிந்தனை இருந்தால் மட்டுமே தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். குழப்பங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்.

உங்களுக்கு விதிக்கப்பட்டது இதுவே என்று உளச்சாந்தி கொள்ளல் தான் இராமபிரானின் பக்தர்களுக்கு உகந்தது.

இதோ இந்தியர்களுக்கு ராமர் கோவில் கிடைத்து விட்டது.

பிறகென்ன வேண்டும்? 

ராமரிடம் செல்லுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் ஏழ்மையை அவர் சரி செய்து விடுவார்.

இராமபிரானின் அன்பும் கருணையும் கிடைத்து விட்டாலே, அனுமன் உங்களுக்கு உதவ ஓடோடி வந்து விடுவார்.

எத்தனை கோடி பேர் வேலை இழந்தாலும் உங்களுக்கு வேலை கிடைக்கும். ஏனென்றால் அனுமனின் ஆசியும், பகவான் இராமபிரானின் பக்தருக்கும் வேலை கிடைத்தே விடும். இராம பக்தர் ஸ்ரீ ஹனுமானுக்கு கோவில்களை பக்தர்கள் எழுப்பி வழிபாடு செய்து புகழ் பரப்புவது போல, நீங்களும் இராமபக்தர்கள் ஆனால் கிடைக்கும் என்று வரலாறு சொல்கிறது.

அன்புமிக்க இந்தியர்களே, உங்களின் சேவகனான ஐ (நான்) உங்களுக்காகவே வாழ்கிறேன். 

கடந்த 60 வருடமாக அரசியல் திருடர்கள் மக்களிடமிருந்து அவர்களின் சொத்துக்களை திருடிக் கொண்டிருந்தார்கள்.

உங்களிடமிருந்து உங்கள் சொத்துக்களை அரசியல் எதிரிகளிடமிருந்து பாதுகாத்திட வேண்டுமென்ற உன்னத நோக்கில்தான் 94 சதவீத சொத்துக்களை நம் அரசாங்கத்திடம் அடிபணிந்து கிடக்கும் வெறும் 140 நபர்களிடம் கொடுத்து பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களிடம் நேரடியாக பணம் கேட்டுப் பார்த்தேன். எனது பெயரில் இருக்கும் கஜானாவில் லட்சம் கோடி கூட சேரவில்லை என்பது எவ்வளவு பெரிய தேசத்துரோகம்?

உங்களுக்காகவே வாழும் நான் கேட்கிறபோது பணம் தராமல் இருக்கின்றீர்கள். அது சரியா? தகுமா?

உங்கள் பணத்தினைக் கொள்ளை அடித்திட உள்ளூர் கட்சிக்காரர்கள் துடித்துக் கொண்டிருப்பது கண்டு எனக்குள் சொல்லொண்ணா வேதனை மண்டியது. 

உங்களுக்குள் அறியாமை எனும் இருள் மண்டிக்கிடப்பதால், உங்களால் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது.

மக்கள் சேவகனான நான் ஒரு புது வித யோஜனையாக வரி விதிப்பினை உருவாக்கினேன். விலைவாசி உயர்ந்தது. வரி வசூலும் உயர்ந்தது. உங்களுக்குத் தெரியாமலே உங்களிடமிருந்து எனது கஜானாவுக்கு பணம் இன்று லட்சம் கோடியில் வசூலாகிறது.

தேசப்பற்று மிக்க நீங்கள் வரி செலுத்துதல் அவசியம். தேசத்தை நீங்கள் நேசிக்க வேண்டும். நீங்கள் செலுத்து வரி பற்றி கவலைப்படாதீர்கள். அது  140 பணக்காரர்களிடம் பத்திரமாய் இருக்கும். எவராலும் திருட முடியாது. 

உங்கள் சம்பளம் குறைந்திருக்கிறது. விலை உயர்ந்திருக்கிறது என்று கவலைப்பட வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டிருக்கிறேன். ஆகவே குறைவாக உணவு உட்கொள்ளுங்கள். அதிக உணவு ஆபத்து அல்லவா?

இராமபிரானுக்கு ஒரு நேரம் அல்ல அல்ல மாதம் பத்து நாட்கள் உபவாசம் இருங்கள். அவரின் ஆசியைப் பெறுவதை விட வேறென்ன வேண்டும் உங்களுக்கு?

* * *

மேடையிலிருந்து வெளியேறிய ஐ, மீண்டும் ஒரு உடையை மாற்றிக் கொண்டார். மேக்கப் விமன் டச்சப் செய்தார்.

”அடுத்த சீன் எப்போது?” என்று கேட்டார் நடிகர் ஐ.

“பிறரும் நடிக்க வேண்டாமா? அவர்களின் சீன் முடிந்ததும் உங்க சீனைச் சொல்கிறேன்” என்றார் உச்சிக்குடுமி இயக்குனர்.

* * *

”காலம் எல்லாவற்றுக்குமான தீர்ப்புகளை பதிய வைக்கும். நானென்ற அகம்பாவம் அழிவில் முடியும் என்பதை மனிதர்கள் மறந்து போய் விடுகிறார்கள். உயர் ஜாதி வஞ்சகர்களின் கட்டுப்பாட்டில் கிடக்கும் இந்தியா விடுதலை அடைய இன்னுமோர் சுதந்திரப் போர் வெடித்தாலும் வெடிக்கும் அபாயம் உண்டாகி இருப்பதை உணர முடிகிறது” என்றான் ஜூனா.

”ஆம், மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டால் வயிற்றுப்பாட்ட்டினைச் சமாளிக்கவே நேரமிருக்கும். அரசியலில் மக்களுக்கு எதிராக நடக்கும் செயல்களை புரிந்து கொள்ளவே முடியாது அல்லவா? ஆகவே தான் மக்களை அரசாங்கங்கள் ஏழ்மையில் தள்ளிக் கொண்டிருக்கின்றன. யோசிக்கவே முடியாது. பசித்திருக்கும் போது ஆக்கப்பூர்வ சிந்தனைகள் வராது அல்லவா? ஜூனா” என்றான் பீமா.

* * *

”என்னடா சந்து, ஐ என்ற புதிய ஆள் வந்திருக்கின்றானே நாவலில்”

“ஆமா மாயாண்ணே, எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. பார்க்கலாம், அடுத்து என்ன எழுதுகிறான் இந்த நாவலாசிரியன் என” என்றான் சந்து.

தொடரும் விரைவில்...

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.