குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 28, 2010

அண்ணனின் தவிப்பறியா மறைந்த தங்கையின் கதை

எனது இளமைக்காலம் கொடுமையானதாகவே இருந்தது. அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் எனது ஊனத்தின் காரணமாய் தட்டிக் கழிக்கப்பட்டன என்பது இன்றைக்கும் என்னால் மறக்க முடியாத ஒன்று. இதுவரையிலும் எந்த ஒரு கல்யாண வீட்டிலும் சாப்பிட்டது கிடையாது. காரணம் எனது ஊனம். இளமைக்கால வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியிலும் ஊனத்தை நினைவுபடுத்தும் சம்பவங்களே என்னைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டு கூடவே வந்தன. அதன் காரணமாய் நான் அடைந்த மனத்துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு ஏதுமின்றியே என் நாட்கள் கழிந்தன.

நட்பு என்பதும் உடலை முன்வைத்து வருபவையோ என்று கூட எனக்குச் சில சமயம் நினைக்கத் தோன்றும். அதற்கு சில சம்பவங்களும் சாட்சியாய் என் முன் வந்து நிற்கும். இப்படி நான் கடந்து வந்த வாழ்க்கையின் நாட்கள் இன்றைக்கும் எனது இரவுகளில் கனவுகளின் மீட்சியாய் என் முன்னே நின்று தன் எச்சத்தை என் மீது உமிழ்ந்து விட்டுச் சென்ற பிறகு தூக்கம் வராமல் அவதிப்படுவேன்.

எனது மேல் நிலைப் பள்ளிப் படிப்பு எனக்கு மிகவும் கசப்பானவையாக இருந்தது. காரணம் நான் விரும்பிய படிப்பு எனக்குக் கிடைக்கவில்லை. தஞ்சாவூரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியும், புனல்வாசலில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியும் என் ஊனத்தை முன் வைத்து கணிப்பொறிக் கல்வியை தர முடியாது என்று சொன்னது. ஸ்டூலில் ஏறி உட்காரமுடியாது என்று அவர்களாக ஒரு முடிவெடுத்துக் கொண்டு என் ஆசையை நிராகரித்தார்கள். என் கனவு நிறைவேற நான் மேலும் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதற்கு நான் பட்டபாடு இருக்கிறதே அதை எழுத்தில் வடிக்க முடியுமா என்றால் மீண்டும் அந்த ஒரு துன்பத்தை அனுபவிக்க வேண்டுமா என்று மனது கேள்வி கேட்கிறது.

என் எம்எல்ஏ உறவினர் ஒருவரின் சிபாரிசில் தான் கணிப்பொறியியல் பட்டப்படிப்பு கிடைத்தது. அதையும் மறைந்த திருமெய்ப்பொருள் என்ற எனது கல்லூரி முதல்வர் மறுதலித்தார். ஆனால் பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளர் திரு துளசி அய்யா வாண்டையார் எனக்கு கணிணி அறிவியல் துறைப்படிப்புக் கிடைக்கவும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். அன்றைக்கு அய்யா கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் எனக்கு கம்ப்யூட்டர் படிப்பு கானலாகவே ஆகியிருக்கும். சரி போகட்டும் பழங்கதை.

எனது பனிரெண்டாம் வகுப்பு முடியும் தருவாயில் பைங்கால் என்ற கிராமத்திலிருக்கும் எனது சித்தியின் வீட்டில் தங்கிப் படித்தேன். என்னை அழைத்துச் செல்வது சித்தியின் மூத்த கொளுந்தனாரின் மகன். அவனும் என்னோடு கீரமங்கலத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்தான். சில உறவுகளின் நினைவுகள் இறக்கும் வரையிலும் மறக்க முடியாதவைகளாக இருக்கும். அப்படிப்பட்ட உறவுகளில் என் தங்கை ஒருத்தியை நான் இழந்து சில இரவுகளில் வரும் அவளின் நினைவுகளின் தொந்தரவால் தவித்திருக்கிறேன். அவள் பெயர் மாலதி. என்னை விட்டுப் பிரிந்த என் உயிருக்கும் மேலான என் அருமைத் தங்கை இவள்.

அடுத்த பகுதி விரைவில்

3 comments:

இராகவன் நைஜிரியா said...

சில நினைவுகள், கஷ்டங்கள் மறக்க முடியாதவை.

கெட்டவற்றை மறந்து, நல்லவற்றை நினைவில் நிறுத்த எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும்.

எல் கே said...

நண்பரே இந்த பதிவு யூத் விகடனில் வந்துள்ளது. வாழ்த்துக்கள் . அதற்க்கான சுட்டி http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

இதில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் இடம் பெற்றுள்ளது

Thangavel Manickam said...

எல்கே உங்களின் சுட்டிக்கு மிக்க நன்றி. நன்றி யூத்ஃபுல் விகடனுக்கும் தொடர்ந்து படித்து நல்ல பிளாக் என்று பரிந்துரைத்த நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.