குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, May 11, 2010

பிரேமானந்தாவுடன் ஒரு நாள்

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் - அலங்கார வளைவுகள், கொடிகள், தோரணங்கள் என்று கல்லூரி அதகளப்பட்டது. வழக்கம்போல வகுப்பிற்கு சென்றிருந்தேன். பதினோறு மணிவாக்கில் அனைவரும் கல்லூரிக்குள் இருக்கும் மேடைக்கு வரும்படி சர்க்குலர் வந்தது. என்னவோவென்று நினைத்துக் கொண்டு கல்லூரிக்குள் இருக்கும் ஹாஸ்டலுக்கு மூன்று சக்கர சைக்கிளில் சென்றேன். கேட்டில் வாட்ச்மேன் நின்று கொண்டு உள்ளே விட மறுத்தார். ஏன் என்று கேட்க, அனைத்து மாணவர்களும் சுவாமி பிரேமானந்தாவின் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்று நிர்வாகத்தினர் உத்தரவிட்டதால் ஹாஸ்டல் ஒரு மணிக்குப் பிறகுதான் திறக்கப்படும் என்றார். வேறு வழி இன்றி மாமரத்தின் அடியில் இருக்கும் பெஞ்சு ஒன்றின் மீது தஞ்சமடைந்தேன். சிலு சிலுவென காற்று வீசிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பெரிய மீன் குளத்தில்( ஆராய்ச்சிக்காக வளர்க்கின்றார்கள்) பெரிய பெரிய சைஸில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. அதையடுத்து பச்சைப் பசேல் வயல்களில் பசுங்கதிர்கள் சலசலவென பேசிக்கொண்டிருந்தன. அதையும் தாண்டி நாகப்பட்டினத்திற்கு ரயில் ஒன்று ஓசையிட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தது. 

இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே சிவப்புக் கலர் கார் ஒன்றும் தொடர்ந்து பல கார்களும் வந்தன. காரிலிருந்து இறங்கினார் சுருள் முடி பிரேமானந்தா. அதைத் தொடர்ந்து இறங்கினார் திவ்யா மாதாஜி. மஞ்சள் கலரில் சேலை. பார்த்தவுடனே பற்றிக் கொள்ளும் அழகு. இறங்கியவுடன் தன்னை வரவேற்ற கல்லூரியின் நிர்வாகிக்கு ஒரு ரோஜாவை வரவழைத்துக் கொடுத்தார். கல்லூரிப் பையன்களுக்கு திவ்யாவைப் பார்த்ததும் சுறு சுறுப்பு வந்து விட்டது. அடித்துப் பிடித்துக்கொண்டு மேடைக்குப் பறந்தனர். கவனிக்க பறந்தனர். கூட்டமெல்லாம் நமக்கு ஒத்து வராது என்ற நினைப்புடன் மெதுவாக ஹாஸ்டலுக்கு மீண்டும் சென்றேன். வாட்ச்மேன் கதவைத் திறந்து விட்டார். அறைக்குச் சென்று ரீகிரியேஷன் ஹாலுக்கு சென்று அங்கிருந்த பொறுப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தேன். சாமியார் வரப்போவதாக சொன்னார். சரி வரட்டும் என்று குமுதம் புத்தகத்தைக் கையெலெடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

சரியாக ஒரு மணி நேரம் சென்ற பிறகு பிரேமானந்தாவுடன் கல்லூரி நிர்வாகியும் அவர் கூடவே திவ்யா மாதாஜியும் வந்தனர். ரீகிரியேஷன் ஹாலைப் பார்த்தார். நான் பய பக்தியுடன் வணக்கம் சொன்னேன். பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்லி, ராஜா என்ன படிக்கிறாய் என்று கேட்டார். சொன்னேன். கண்ணை மூடினார் கையை தலைமீது கொண்டு சென்றார். விபூதியாய்க் கொட்டியது. நெற்றியில் கொஞ்சம் இட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பக்தியுடன் பரவசத்தில் ஆழ்ந்தனர். நன்றாகப்படி என்று சொன்னார். அவர் அறையினை விட்டு வெளியே சென்ற பிறகு பின்னால் வந்த திவ்யா மாதாஜி அருகில் வந்து எந்த ஊர், என்ன படிக்கின்றீர்கள் என்றெல்லாம் விசாரிக்க நானும் பக்தியுடன் பதில்களை உதிர்த்தேன். சிரித்துக் கொண்டே ஒரு கையால் தலைமுடியைக் கலைத்து விட்டு அவசியம் ஆசிரமத்திற்கு வரும்படி சொல்லிச் சென்றார்.

அதன்பிறகு நடந்த விஷயம் தான் முக்கியமானது.

அவர்கள் சென்ற பிறகு அறைக்கு வந்த என் தோழர்களும், நண்பர்களும் என் தலைமீது கொட்டப்பட்டிருந்த விபூதியை எடுத்து பூசிக் கொண்டனர். ஆனால் வழக்கம்போல திவ்யாவைப் பாத்ரூமில் படம் வரைந்து பாகம் குறித்து விட்டனர் என்பது தான் மிகப் பெரிய சோகம். டெர்ம் எக்ஸாம் முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்று விட்டோம். லீவு முடிந்து வந்து பார்த்தால் அனைவரும் நக்கீரனும் கையுமாய் அலைந்து கொண்டிருந்தனர். என்ன விஷயமென்று பார்த்தால் பிரேமானந்தா மாட்டிக் கொண்டார். திவ்யா தூர தேசம் ஓடினார் என்பது தான். வகையாக என்னையும் நண்பர்கள் சற்று வறுத்தனர். நக்கீரனில் வெளியிடப்பட்டிருந்த நல்லம்மா என்ற அழகு தேவதையை அவர் கற்பழித்த விஷயம் தான் இன்னும் என் மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறது. நக்கீரனில் வெளியிட்டிருந்த அப்பெண்ணின் முகம் அப்படியே இன்னும் என் நினைவில் இருக்கிறது.




0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.