குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, May 30, 2010

வாழ்வின் சூட்சுமம் தெரிந்த நாள்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் மெட்ரிக் பள்ளியின் கணிணி ஆசிரியராகவும், இரண்டு சாரதா கல்லூரி மேலும் ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்துப் பள்ளிகளின் கணிணி நிர்வாகியாகவும் பணி புரிந்த போது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களும் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

ஊனத்தின் காரணமாய் எனக்குள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையின் காரணமாக திருமண வாழ்வு பற்றி நான் என்றைக்கும் எண்ணிப் பார்த்தது இல்லை. எதை வேண்டாமென்று எண்ணுகிறமோ அந்தச் சூழலில் தான் நீ வாழ வேண்டுமென்று கடவுள் நினைத்தானோ என்னவோ தெரியவில்லை நான் வேலை செய்தது மகளிர் கல்லூரியில். ஆனால் இருந்ததோ சாமியார்கள் அருகில்.

தனி அறையும் அட்டாச் பாத்ரூம் வசதியுடன் மிகவும் வசதியாக தங்கி இருந்தேன். அறையில் இரண்டு கட்டில்கள் இருக்கும். யாராவது கெஸ்ட் வந்தால் அவர்கள் என்னுடன் தங்கி இருப்பர். அப்படி ஒரு நாள் வந்தவர்தான் பசுபதீஸ்வரானந்தா அவர்கள். வயது 96 இருக்கும். கை கால்களும் ஒரு தாள லயத்தில் உதறிக் கொண்டிருந்தன. தலையோ நிற்காமல் அங்குமிங்கும் ஆடியபடியே இருந்தது. கண்களில் கண்ணாடி அணிந்திருந்தார். தலையாட்டத்தின் காரணமாய் கண்ணாடி கழன்று விடாமல் இருக்க அழுக்கேறிய கயிறு ஒன்று தலையைச் சுற்றி கட்டியிருப்பார்.

என்னைப் பற்றி விசாரித்தார். சொன்னேன். விடிகாலையில் நான்கு மணிக்கு ஏதோ சத்தம் கேட்டு விழிப்பு வந்தது. வலது காலின் கட்டை விரலை ஊன்றி லங்கோடுடன் சுமார் முக்கால் மணி நேரமாய் ஆடாமல் அசையாமல் கல்லில் வடித்த சிலைபோல நின்று கொண்டிருந்தார் பசுபதீஸ்வரானந்தா. ஆடிய தலையும், கைகால்களும் ஆடாமல் அசையாமல் இருந்தன. முக்கால் மணி நேரம் சென்ற பிறகு பத்து நிமிடம் நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின்னர் பாத்ரூமிற்குள் சென்று குளித்தார். விபூதி அணிந்தார். கட்டிலில் உட்கார்ந்தார். அதன் பிறகு தலையும், உடலும் ஆட்டம் போட்டன. போர்வைக்குள்ளிருந்து நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டார். இல்லையென்றேன். அதைப் பற்றி யோசிக்கவே இல்லையென்றேன். உனக்கு திருமணம் நடக்கும். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இருப்பார்கள். தெய்வமே உனக்கு மனைவியாய் வரும் என்றார். சாமி, ஏன் சாமி இப்படி ரகளை செய்கின்றீர்கள் என்று கோபப்பட்டேன். நான் கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்றும் அதுதான் என் ஆசையென்றும் சொன்னேன். ஆத்மானந்தா சொன்னாரா என்று கேட்டு விட்டு தொடர்ந்தார்.

என் இளவயதில் நானும் கடவுளைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் சாமியாராய் மாறினேன். இமயமலை சென்றேன். ரிஷிகேஷ் சென்றேன். திருவண்ணாமலை சென்றேன். எனக்குத் தெரியாத யோகமும் தவமும் இல்லை. சாப்பிடாமலயே ஒரு வருடம் கூட இருப்பேன். தியானத்தில் ஆழ்ந்தால் எத்தனை நாட்களோ தெரியாது. அப்படிப்பட்டவன் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேட்டுக் கொள் என்றுச் சொல்லி தொடர்ந்தார்.

இன்னும் சில வருடங்களில் நான் இறந்து போய் விடுவேன். நான் செய்த இத்தனை தவத்தினாலும் யோகத்தினாலும் இதுவரை கடவுள் எனக்கு காட்சி தரவே இல்லை. கடவுளைப் பார்க்காமல் விடமாட்டேன் என்று இமயமலையில் திரிந்து கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்ப்பட்ட சாமியார் சொன்னார் ” நீயே தெய்வம் ”

அன்றைக்கு புரிந்தது எனக்கு. என் கடந்து போன நாட்கள் இனிமேல் கிடைக்குமா? கிடைக்காது. இதோ என் வாழ்வையும் சேர்த்து நீ வாழ். நீ விரும்புகிறாயோ இல்லையோ உனக்கு திருமணம் நடக்கும். குழந்தைகள் பிறக்கும். ஒவ்வொரு கட்டமாய் நீ பக்குவப்படுவாய். வாழ்வின் அத்தனை சூட்சுமங்களையும் தெரிந்து கொள்வாய் என்று சொன்னார்.

இதோ எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். மனைவி என்னை தன் குழந்தை போல கவனித்துக் கொள்கிறாள். என் தாய் என் மனைவியைப் பார்த்து என்னிடத்தில் சொன்னார் “ நான் உன்னிடத்தில் எப்போதும் இருப்பேன்” என்று.

”நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை ” :- இயேசு நாதர்.

6 comments:

அ.முத்து பிரகாஷ் said...

// அன்றைக்கு புரிந்தது எனக்கு. என் கடந்து போன நாட்கள் இனிமேல் கிடைக்குமா? கிடைக்காது //
மிகவும் யோசிக்க வேண்டிய வார்த்தைகள் தோழர் ...
ஆன்மிகம் என்ற பெயரில் தேடுவதென்ன ...
எல்லாமும் அருகிலேயே
நம்மை சுற்றியே இருக்க ...
நன்றி

Thangavel Manickam said...

நியோ உங்களின் வருகைக்கு நன்றி.

இல்லறம் மூலமாகத்தான் ஆன்மீகத்தின் உச்ச நிலைக்குச் செல்ல முடியும் என்பார்கள். அதற்கு சிறந்த உதாரணம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

இளங்கோ said...

// ”நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை ” //
உண்மை அண்ணா..

Shama Nagarajan said...

thank you visiting my blog and trying out my recipe......nice blog...god bless ur happy family

K Siva Karthikeyan said...

Good one. Thangal pathivu migavaum nandraga irrukirathu.

பாவா ஷரீப் said...

நண்பரே,
தமிழ்மணத்தில் இருந்து உங்கள் தளத்திற்கு வந்தேன் மனம் மகிழ்தேன்
அருமை உங்களுக்கு எழுதுவது நன்றாக வருகிறது
தொடரட்டும் உங்கள் எழுத்தும், சேவையும்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.