குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, May 4, 2010

நன்றி மறவாமை

கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தில் பல பள்ளிகளும், இரண்டு பெண்கள் கல்லூரிகளும் இருக்கின்றன. அத்தனை பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகளின் கணிப்பொறித் துறையின் மேற்பார்வையாளராகவும், ஆசிரியராகவும் நான்காண்டுகள் தொண்டு செய்து வந்த போது நடந்த சுவாரசியமான சம்பவம்தானிது. மேற்படி பள்ளி மற்றும் கல்லூரிகளின் தாளாளராக இருந்தவர் திரு ஆத்மானந்தா அவர்கள். அறுபது வயது இளைஞர். என் வாழ் நாளில் இவரைப் போன்ற மன உறுதி கொண்டவரைக் கண்டதே இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்புக் கொண்ட நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

மாதந்தோறும் இரண்டு தடவையாவது சாமியுடன் காண்டசாவில் சென்னை சென்று வருவேன். சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்யூட்டர் நிறுவனத்தில் தான் மொத்தமாக உதிரி பாகங்களை வாங்கி வந்து அசெம்பிள் செய்து கல்லூரியில் கணிணி நெட்வொர்க்கில் இணைப்பேன். அசெம்பிள் என்ற உடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் இந்த சம்பவம்.

ஒரு தடவை ஹிந்து முன்னனி தலைவர் திரு ராமகோபாலன் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் கொடுத்திருந்தார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பிறகு தான் அவரைச் சந்திக்க முடியும். அவர் தங்கி இருந்த ஹெஸ்ட் ஹவுஸ்ஸின் இடது பக்கத்திலிருக்கும் அறையில் தான் அடியேனின் வாசம். அறை முழுதும் கணிணி பாகங்களாக இறைந்து கிடக்கும். புதிய ஆள் எவராவது பார்த்தால் தீவிரவாதி வெடிகுண்டு தயாரிக்கிறான் என்றே நினைத்து விடுவார்கள். எஸெம்பிஎஸ் மற்றும் பாக்ஸ்களும், மானிட்டர்களுமாய் அறை நிரம்பிக் கிடக்கும். அதனூடே தான் படிப்பது, தூங்குவது எல்லாம்.

திரு ராமகோபாலனுக்கு காவலுக்கு வந்த காவல்துறை அதிகாரி அறையை நோட்டம் விட்டு படக்கென்று கதவைத் திறந்து துப்பாக்கியை நெஞ்சை நோக்கி நீட்டினார் பாருங்கள். அரண்டு விட்டேன். அதன் பிறகு விபரம் சொல்லி ஒரு வழியாக தப்பித்தேன். அன்றிலிருந்து அந்த காவல்துறை அதிகாரிக்கு என்மேல் கொள்ளை அன்பு. சாப்பிட்டீர்களா என்று அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதே போல நடு இரவில் ஒரு நாள் நெற்றியில் ரத்தச் சிவப்பில் குங்குமம் இட்ட ஒருவரும் அவருடன் மற்றொருவரும் வந்திருந்தனர். வேறு அறைகளில் தங்குவதற்கு இடமில்லாத காரணத்தால் என் அறையில் தங்கியிருக்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். இந்து முன்னணியின் ஏதோ ஒரு மாவட்ட தலைவராம் அவர். கூட வந்திருந்தவர் அவருக்கு துணையாக வந்திருப்பார் போல எண்ணிக் கொண்டிருந்த போது இடுப்பிலிருந்து கருப்புக் கலரில் துப்பாக்கியை எடுத்தார் பாருங்கள். நடு நடுங்கிப் போய் விட்டேன். என்னடா இது வம்பு என்று பயந்து கொண்டே அவரைப் பற்றி விசாரித்தேன். போலீஸ் என்று சொன்னார்.

இது போல எண்ணற்ற சம்பவங்கள் ஆஸிரம வாழ்க்கையில் நடந்தது. அதையெல்லாம் தனியாக நாவலாக எழுதலாமென்று இருக்கிறேன். மேலும் சாரு நிவேதிதாவுடன் மூன்று வருடங்களாக தொடரும் நட்பும் மிகப் பெரிய நாவலுக்கான விதையை ஊன்றி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு பகவான் ராமகிருஷ்ணரை தரிசித்து விட்டு காரில் அமர்வோம். அதற்கு முன்பே சமையல்காரர் எழுந்து எனக்கும், சாமிக்கும், டிரைவருக்கும் தேவையான காலை உணவைத் தயார் செய்து காரின் பின்னால் வைத்து விடுவார். முதல் நாள் இரவே சென்னையிலிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின்(பிராஞ்ச்) நிர்வாகியிடம் போனில் நானும் சாமியும் வருகிறோம் என்று சொல்லி வைத்து விடுவேன். எனக்குப் பிடித்த காலிபிளவர் சாம்பாரும், ரசம்(SUPER TASTY) மற்றும் பிற உணவுப் பொருட்களை திரு நாராயணனந்தா அவர்கள் தன் கைப்படவே சமைத்து வைத்திருப்பார். உணவின் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

சரியாக ஏழு மணிக்கு கார் திருச்சி டூ சென்னை சாலையிலிருக்கும் ஒரு பத்ரகாளி அம்மன் கோவிலின் முன்னால் நிறுத்தப்படும். அங்குதான் எனக்கும், ஆத்மானந்தாவிற்கும் காலை உணவைப் பரிமாறுவார் டிரைவர். சாப்பிட்டு முடித்து விட்டு சற்று நேரம் உலாவுவார் ஆத்மானந்தா சாமி. நான் காரில் அமர்ந்திருப்பேன். கிளம்பும் தருவாயில் கோவிலுக்குச் சென்று நமஸ்கரித்து விட்டு உண்டியல் போட்டு விட்டு வருவார். பத்ரகாளி அம்மன் நமக்குச் சாப்பிட இடமும், நிழலும் தந்தார் அல்லவா அந்த நன்றிக் கடன் தான் இது என்றார் என்னிடம். சமீபத்தில் என் குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் சென்று வந்த போது ஒரு அம்மன் கோவிலில் காரை நிறுத்தி சாப்பிட்டோம். ரித்திக்கிடம் பணம் கொடுத்து உண்டியலில் சேர்க்கச் சொன்னேன். நிவேதிதாவையும், ரித்திக்கையும் அம்மனை தரிசிக்கச் சொன்னேன். என் நண்பர் என்னிடம் ஏன் இவ்வாறு செய்யச் சொல்கின்றீர்கள் என்று கேட்டார். அவருக்குத்தான் இந்தப் பதிவு.

1 comments:

இராகவன் நைஜிரியா said...

// பத்ரகாளி அம்மன் நமக்குச் சாப்பிட இடமும், நிழலும் தந்தார் அல்லவா அந்த நன்றிக் கடன் தான் இது என்றார் என்னிடம். //

நல்ல சிந்தனை. அதை உங்களிடமும் ஒட்டிக் கொண்டது பற்றி மிக்க மகிழ்ச்சி.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.