Friday, February 4, 2022
நரலீலைகள் - மோஸடி மன்னராட்சி - அரசியல் தத்துவம் (10)
Saturday, March 20, 2021
நிலம் (78) – லோன் வாங்கியதற்கு சிபிஐயினால் மோசடி வழக்கு
காலம் எல்லாவற்றுக்குமான பதிலாக இருக்கும். நற் செயல்களுக்கும், தீச் செயல்களுக்கும் காலம் சொல்லும் பதில்தான் உண்மை.
நாமெல்லாம் இல்லாத காலத்தில் பிணைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
வரலாறுதான் காலம் பற்றிப் பேசுகிறது. ஆனால் உண்மையில் பிரபஞ்சத்துக்கு காலம் என்பது கிடையாது. உண்மை பேசினால் பிடிப்பதில்லை. ஆகவே விட்டுவிடலாம்.
கடும் உழைப்பினால் பெறக்கூடிய பொருளாதாரத்தை பாதுகாப்பாக வைத்திட நிலம் மட்டுமே மிகச் சரியான ஒன்று. அதைத் தவிர தங்கம் மற்றும் வங்கியில் டெபாசிட்கள் என்று பிறவனவும் உண்டு. ஆனாலும் 100 சதவீதம் பாதுகாப்பானது நிலம் அல்லது பூமி மட்டுமே. அவ்வாறு பூமிகள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பல்வேறு காரணிகளைக் கவனிக்காமல் விட்டால் வரக்கூடிய இழப்பு என்ன தெரியுமா? வாழ்க்கை. ஆம் வாழ்க்கையை இழக்க நேரிடலாம். அப்படி வாழ்க்கையை இழந்தவர்களைப் பற்றித்தான் இப்பதிவு.
உங்கள் அனைவருக்கும் அவசியமான ஒன்று. இதை பலருக்கும் தெரிய வைத்திடுங்கள். இப்பதிவினை ஷேர் செய்திடுங்கள். அது உங்களுக்கும் பயன் தரலாம்.
பொருளாதாரத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவருக்கும், பின் புலம் இல்லாதவர்களுக்கும் வங்கிக் கடன் பெரும்பான்மையாக உதவுகிறது. புத்திசாலிகள் வங்கிகளைக் கொள்ளை அடிப்பார்கள். சாதாரணவர்கள் வங்கிகள் மூலம் வளர்ச்சி அடைவார்கள் இல்லையெனில் அழிக்கப்படுவார்கள். இது அவரவரின் வாழ்வியல் சூழலைப் பொறுத்தது.
இப்போது இரண்டு முக்கியமான விஷயத்தைப் பார்க்கலாம்.
ஒருவர் தான் கிரையம் பெற்ற சொத்தினை அரசு வங்கியிடம் அடமானம் வைத்து கடன் பெற்றார். நல்ல முறையில் தொழிலும் நடந்து கொண்டிருக்கிறது. கடனும் தொண்ணூறு சதவீதம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் கடன் பெற்ற வங்கியின் மேலாளார் மாறுகிறார்.
கார், பங்களா, ஆள், அம்பு என படாடோபமாக வாழ்ந்து கொண்டிருந்த கடன் வாங்கியவர் வீட்டுக்கு சிபிஐ வருகிறது. கைது செய்து ரிமாண்ட் செய்து ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
ஏன்?
அவர் கடன் பெற வங்கியில் அடமானம் வைத்த சொத்து போலியானது என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது. அது வேறொருவரின் சொத்து என்பதைக் கண்டுபிடிக்கிறது. நான்காண்டு காலம் வங்கி ஒன்றும் செய்யவில்லை. வங்கி லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் அடமானம் வைத்துக் கொண்டு கடன் கொடுத்திருக்கிறது. ஆனால் மோசடிச் சொத்துப் பத்திரம் என்று பின்னால் கண்டுபிடிக்கிறார்கள்.
விளைவு பொருளாதார மோசடிக் குற்றம் – அரசு வங்கியை ஏமாற்றியது தேசத்துரோகம் அல்லவா?
இதே போல மூன்றாம் நபர் சொத்துக் காப்புறுதிக் கடன் வாங்கியவர் ஒருவரும் பொருளாதார மோசடிக் குற்றப்புகாரில் சிக்கி, சிபியினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
இருவரின் தொழிலும் முடங்கியது. சொத்துக்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் சீல் செய்யப்பட்டு விட்டது.
இனி என்ன செய்ய முடியும்? குற்றவாளிக்குத் தண்டனை நிச்சயம் அல்லவா?
ஏன் இந்த நிலை வந்தது?
கடன் வாங்கியவர்களை ஏமாற்றிச் சொத்து எழுதி வைத்தவர்கள் மீது வழக்கு இல்லை.
ஆவணங்களை சரிவர பரிசீலனை செய்யாது கடன் வழங்கிய மேலாளர், லீகல் வழங்கிய வக்கீல் மீது வழக்கு இல்லை.
ஆனால் ஏமாற்றப்பட்டவர் மீது வழக்கு.
ஏமாற்றியவர்களும், தன் வேலையைச் சரி வரச் செய்யாதவர்களின் மீதும் இங்கு வழக்கு ஏதும் இருக்காது.
இதுதான் இங்கு இருக்கும் சட்டம்.
சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பார்த்தீர்களா?
கடன் வாங்கியவர் கிரையம் கொடுத்தவர் மீது மோசடி வழக்குத் தொடுக்கலாம். ஆனால் தலைமீது தொங்கும் இந்தக் கத்தியெனும் வழக்குக்கு என்ன பதில் சொல்ல முடியும்?
கடன் வாங்கியவர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு விடும். அதுமட்டுமா, தீராத பழி வேறு.
ஆகவே நண்பர்களே, ஒரு சொத்தினை வாங்கும் முன்பு லீகல் ஒப்பீனியன் என்பதும், டைட்டில் டிரேஸ்ஸிங் என்பதும் வெகு முக்கியம் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.
குறிப்பு: சொத்துக்களின் லீகல் டிரேஸ்ஸிங் மற்றும் ஒப்பீனியன் ஆகியவைகளை எமது நிறுவனம் வழங்கும்.
Sunday, April 5, 2020
வெற்றியடைய சூட்சும ரகசியம்
இமயமலை, நேபாளம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழல் அவர்கள் தினமும் உணவு தேடுவதாகத்தான் இருக்கின்றன. உணவைத் தேடுவது, அதற்காக உழைப்பது தான் அவர்களின் முதல் வேலை. பிறகு உண்பது, உல்லாசம், உறக்கம், ஆட்டம், பாட்டமாய் வாழ்க்கை சுகத்தில் கழிகின்றது. பல யுடியூப் வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன. அவைகளைத் தேடிப் பிடித்துப் பாருங்கள். அங்கு வசிப்பவர்கள் நோய் நொடி இன்றி சர்வசாதாரணமாக 100 வயதுக்கும் மேல் வாழ்கிறார்கள்.
ஒரு ஜப்பானியன் போல அமைதியாக, எளிமையாக, வலிமையாக, அன்பாக வாழ துவங்கினேன். வெற்றி பெறுவது எங்கனம்? வாழ்க்கையின் போக்கிற்குத் தகுந்தவாறு எப்படி தொடர்வது என்று ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.
ஜப்பானியரின் வாழ்க்கையில் ‘டீ அருந்துவது’ என்பது ஒரு சமுதாய வழக்கம். அமைதியாக காலை மடக்கி அமர்ந்து அரைத்த பச்சைத் தேயிலைத் தூளில் சுடுநீர் விட்டு வடிகட்டிய தேநீரை அவர்கள் மகத்தான ஒரு மவுனத்தின் மூலம் அருந்துவார்கள்.
என் குரு நாதர் வெள்ளிங்கிரி சுவாமியின் வாக்கியம், ”பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”. இது ஏதோ ஒரு சாதாரண வாக்கியம் என்று நினைத்து விடாதீர்கள். பேச்சைக் குறைத்து விட்டு, உயிர் நாதமெனும் மூச்சைக் கவனி என்கிறார். கவனி என்பதுதான் எல்லாவற்றுக்குமான ஆரம்பப் புள்ளி.