பெரிய வெங்கல அண்டாவில் நெல்லைக் கொட்டி தண்ணீர் சேர்த்து, அண்டாவின் அகன்ற வாய்ப்பகுதியில் கும்மலாய் குவித்து அதில் தண்ணீரைத் தெளித்து அதன் மீது ஈரச்சாக்கை போட்டு கீழே அடுப்பு மூட்டி எரிய விடுவார்கள். சூடு ஏற ஏற நெல் அவியும் வாசம் பரவும். நெல்மணிகள் வாய் விரித்து இருக்கும். பதம் வந்து விட்டது. தண்ணீரை வடித்து நெல்மணிகளை கல்வாசலில் கொட்டி பரப்பி விட்டால் வெயிலில் காயும். அடிக்கடி காலால் பிரட்டி விட வேண்டும். பின்னர் மதியம் போல குமித்து சாக்குப் போட்டு மூடி வைத்து விட வேண்டும். இப்படியே மூன்று நாட்கள் அவித்த நெல்மணிகள் ஈரம் காய்ந்து விடும். அதை மூட்டையில் கட்டி வடக்கித் தெரு சுப்பையாதேவர் மில்லுக்கு கொண்டு சென்றால் அங்கு அரவை செய்து தவிடு, அரிசி, குருணை என்று தனித்தனியாக சாக்கில் பிடித்து வீட்டுக்கு வந்து விடும்.
35 வருடங்களுக்கு முன்பு பெரும் குடி விவசாயிகள் தான் நெல்லைச் சேகரித்து வைத்து அரிசிச் சோறு உண்பார்கள். விவசாயக்கூலிகள் கூலியாக நெல்மணிகளை மரக்கால் கணக்கில் வாங்கிக் கொள்வார்கள். நானே அளந்து போட்டிருக்கிறேன். மரக்கால் என்றால் நான்கு படிகள் கொண்டவை. வீட்டில் வெங்கல மரக்கால் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிந்து நெல் வாங்குவது நின்று கூலியாகப் பணம் பெற்றுக் கொண்டார்கள்.
தினமும் வீட்டிற்கு நான்கைந்து தர்மம் பெறுபவர்கள் வருவார்கள். ”அம்மா தர்மம் போடுங்கம்மா” என்ற குரல் கேட்டு அடுக்களைக்குள் இருக்கும் அம்மா கிண்ணத்தில் இரண்டு கைப்பிடி அரிசியைக் கொண்டு வந்து போடுவார்கள். இது தினம் தோறும் நடைபெறும் சம்பவம். ஒரு சிலர் சாப்பாடு கேட்பார்கள். வீட்டின் பின்புறம் வரச்சொல்லி பழைய சோறு, பழைய குழம்புடன் மறக்காமல் வெந்தய மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொடுப்பார்கள். பூவரச இலையைக் கொய்து அதை விளக்குமாத்துக் குச்சியால் தைத்து இலைபோல தயாரிப்பார் தர்மம் கேட்பவர். அதில் தான் உணவு போடுவார்கள். ஒரு சிலர் அலுமினியத்தட்டுக்களைக் கொண்டு வருவார்கள்.
(பூம் பூம் மாட்டுக்காரர்)
பூம் பூம் மாட்டுக்காரன் எப்போதாவது வருவான். அழகான காளையை அலங்கரித்து தோளில் தொங்கும் மேளத்தின் இருபக்கமும் வளைந்த இரண்டு குச்சிகளினால் இழுப்பான். அது பூம் பூம் என்று சத்தமிடும். காளை மாட்டின் மீது மாட்டப்பட்டிருக்கும் மணிகள் சத்தமிடும். சிகண்டியை வேறு அடித்து வருவான். வாசலில் வந்து நின்றதும் ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விடுவான். பழைய துணிகள் இருந்தால் கேட்பான். தர்மம் கிடைத்ததும் சென்று விடுவான்.
சாமியார்கள் வருவார்கள், பெண்கள் வருவார்கள், வயதானவர்கள் வருவார்கள். “அம்மா, தர்மம் போடுங்கம்மா!” என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். கல்லூரிக்குச் சென்ற பிறகு அந்த தர்மம் கேட்ட குரல்களும், பூம் பூம் மாட்டுக்காரனையும் நான் இதுவரை பார்க்கவில்லை. இனிப் பார்க்கவும் முடியாது. தர்மம் போடுங்கம்மா என்ற குரலுக்கு இரண்டு கைப்பிடி அரிசியைத்தான் தர்மம் செய்வார்கள். அரிசி கொஞ்சம் கொஞ்சமாக தன் வயத்தை காலத்தின் போக்கில் இழந்து விட்டது.
ஊசி, பாசி என்ற குரல் வாரம் ஒரு முறை கேட்கும். குறத்திகள் அழகான பாவாடை கட்டி, குறுக்கே தாவணி போட்டுக் கொண்டு வருவார்கள். இடது கைப்பக்கமாக துணித் தூளியில் கைக்குழந்தையொன்று உட்கார்ந்திருக்கும். கண் மை, ஊசிகள்,காது குடையும் வஸ்து, பாசிமணிகள் விற்பார்கள். சின்னஞ் சிறு வயதாக இருக்கும் குறத்தி கையில் குழந்தை இருக்கும். நல்ல மஞ்ச மஞ்சளேன்னு இருப்பார்கள். சரோஜாதேவி, பானுமதி, காஞ்சனா என சினிமா பெயர்கள் தான் வைத்திருப்பார்கள். அரிசிக்கு தான் மேற்கண்டவைகளை விற்பார்கள்.
காலத்தின் போக்கில் மறைந்து போன இது போன்ற மனிதர்களும், குடியானவர்களின் தர்மம் செய்யும் போக்கும் இனி எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது. குடியானவன் வாழ்வில் தர்மம் ஒரு பகுதியாக இருந்தது. வீட்டு வாசலுக்கு வரும் எவரும் வெறும் கையோடு அனுப்ப மாட்டார்கள்.
”தர்மம் செய்யுங்கம்மா” என்ற குரல் இப்போது வீட்டின் வாசல்களில் கேட்பதில்லை. அந்தக்காலத்தில் சாமியார்கள், வயதானவர்கள் தர்மம் செய்யுங்கம்மா என்று கேட்டார்கள். இந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமே கோவில்களில் இருக்கும் சாமிகளின் முன்னே நின்று கொண்டு “சாமி எனக்கு அதைக் கொடு இதைக் கொடு” என தர்மம் கேட்கின்றார்கள்.
தர்மம் கேட்பது நிற்கவில்லை. ஆட்கள் தான் மாறி விட்டார்கள்.