எனது நண்பரின் நண்பர் திரு.மாதேஷ் என்பவர் புகைப்படக்கலைஞர். நடிகை ஹீராவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். பிளாக்கில் இருக்கும் புகைப்படத்தினை எடுத்தவர் அவர் தான். மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்.
ஒரு நாள் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்டினார். குறுஞ்செய்தி என்ற தலைப்பினைப் பதிவு செய்து ரெஜிஸ்டர் ஆஃப் நியூஸ்பேப்பர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் அது.
அவருக்குப் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் தலைப்பினைப் பதிவு செய்து விட்டார்.
“சார் எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் புத்தகம் வெளியிடுவது நீங்கள் தான், நீங்கள் என்ன முடிவு செய்தாலும் எனக்கு முழுச்சம்மதம். புத்தகம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தால் போதும், நீங்கள் தான் முழுவதும் பார்க்க வேண்டும்” என்று என்னிடம் விடாது கேட்டுக் கொண்டிருந்தார். என்னிடம் நான்கு வருட நட்பில் இருந்ததால் அவருக்கு உதவுகிறேன் என்றுச் சொல்லி விட்டேன். மாதமிருமுறை இதழ் அது. எனக்குத் தெரிந்த நன்கு அறிமுகமான நண்பர்களை ஆசிரியர் குழுவில் இணைத்து ஒரு குழுவினையும் உருவாக்கினேன்.
இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கோரல்டிராவில் டெம்ப்ளேட் தயார் செய்து ஒவ்வொரு பதிவுகளாக ஏற்றி டிசைன் செய்தேன். கருத்துப் பெட்டகமாக, கொஞ்சம் கிளுகிளுப்பாக (வியாபாரத்திற்காக) இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் கட்டுரைகளை இணைத்தேன். இதழ் பெயர் குறுஞ்செய்தி. ஆகவே அதற்கேற்ற வகையில் செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்ற நினைவில் முதன் முதலாக பத்திரிக்கையை டிசைன் செய்யும் ஆர்வத்தில் முழு ஈடுபாட்டுடன் செய்தேன். குறுஞ்செய்தி புத்தகத்தினை இரண்டே நாட்களில் வடிவமைத்தேன்.
ஒரு சில நண்பர்களிடம் கட்டுரைகளை பெற்று இணைத்தேன். முழு வடிவமைப்பும் செய்தேன். தலையங்கமும் நானே எழுதினேன். அனைத்தும் முடிந்து புத்தகப்பதிப்பாளரைத் தேடிப்பிடித்து முப்பத்தைந்து பக்கங்கள் வெறு மூன்று ரூபாய்க்கு ஒரு புத்தகத்தினைப் பதிப்பிக்க கட்டணம் பேசி ஆயிரம் புத்தகங்களுக்கு ஆர்டரும் கொடுத்தேன்.
(முதல் இதழ்)
(இரண்டாம் இதழ்)
பின் அட்டை விளம்பரத்தை திருப்பூர் யுவராஜ் அவர்கள் பெற்று அதற்குரிய கட்டணத்தையும் கொண்டு வந்து கொடுத்தார்.
முதல் புத்தகத்தினை எனக்கும் மாதேசுக்கும் நட்பு வட்டத்தில் இருந்த நண்பரை வெளியிடச் செய்தேன். ஆயிரம் புத்தகங்கள் பிரிண்ட் செய்து வெளிவந்தது. அனைவருக்கும் கொடுத்தேன்.
ஒரு புத்தகத்தை வடிவமைக்கு பக்கத்துக்கு ரூபாய் 500 கேட்டார்கள். 35 பக்கத்துக்கு கிட்டத்தட்ட 15000 ரூபாய் கொடுக்க வேண்டும். அதை இவரால் கொடுக்க முடியாது. புத்தகத்தினை பிரிண்ட் செய்வதற்கு தனியே கட்டணம் வேறு கொடுக்க வேண்டும்.எழுதுபவர்கள் இலவசமாக எழுதினால் கூட மொத்தச் செலவும் கிட்டத்தட்ட ரூபாய் 20000 ஆகும். இதையெல்லாம் நானே எந்த விதக்கட்டணமும் இன்றிச் செய்தேன்.
என்னால் ஒரு இதழை வெகு குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து, பதிப்பித்து வெளியிட முடியும் என்கிற தைரியம் வந்து விட்டது. அரசிடம் அனுமதி பெறுவது எப்படி? என்ற அனுபவமெல்லாம் கிடைத்து விட்டது.
முதல் இதழுக்காக ஒரு வாரம், அடுத்த இதழுக்காக மூன்று நாட்கள் அவ்வளவுதான் விஷயம். பிரிண்ட் ஆக இரண்டு நாட்கள். இதழை வெளியிட வைத்து விட்டேன்.
பத்திரிக்கைத் தொழில் என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று புரிந்து கொண்டேன். எதிர்காலத்தில் என் மனதுக்குள் இருக்கும் அட்டகாசமான மாத இதழ் கான்செப்டை உருவாக்கம் செய்ய இந்த அனுபவம் எனக்கு கைகொடுக்கும்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.