குரு வாழ்க ! குருவே துணை !!

Sunday, September 18, 2016

430 ரூபாயும் கம்மங்கூழும்

காலையில் கணிப்பொறியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த போது கருகும் வாடை அடித்தது. கணிப்பொறியில் எஸ்.எம்.பி.எஸ்ஸில்  இருந்த ஃபேன் ஓடவில்லை. ஹீட் காற்றை வெளித்தள்ளும் அந்த ஃபேன் ஸ்ட்ரைக் செய்திருந்தது. உடனடியாக கணிப்பொறியை நிறுத்தி கழட்டினேன். 

கிட்டத்தட்ட 3000 கணிப்பொறிகளை வடிவமைத்த அனுபவம் இருக்கிறது. நாவல் நெட்வேர் (Novel Netware), விண்டோஸ் எண்டி ( Windows NT) போன்ற நெட்வொர்க் சாஃப்ட்வேர்களை இணைத்து சாரதா நிகேதன் சயின்ஸ் காலேஜ் ஃபார் விமன் கல்லூரியில் பெண்களுக்கு கணிணிப்பாடம் எடுத்திருக்கிறேன். அமராவதிப்புதூர் பெண்கள் கல்லூரியில் 20 கணிணிகளை வடிவமைத்து புது லேப்பையே உருவாக்கிய அனுபவம் வேறு. அக்குவேறு ஆணி வேராக பிரித்து மேய்ந்து விடும் பழக்கம் உண்டு. 

பூண்டி கல்லூரியில் படித்த போது புரபசர் நீலமேகம் அவர்களிடம் மதர்போர்டு டிசைன் செய்யப் பாடம் படித்தேன். அப்போதெல்லாம் 1992களில் விண்டோஸ் 3.1 தான் வெளிவந்திருந்தது. விண்டோஸ் பற்றி எழுத ஆரம்பித்ததும்  சமீபத்தில் நம்ம பில்கேட்ஸ் ஆப்பிளிடமிருந்து காப்பியடித்த கிராபிக்கல் யூசர் இண்டர்ஃபேஸ் கான்செப்ட் பற்றி ஏதோ ஒரு டிவியில் பார்த்த புரோகிராம் நினைவுக்கு வந்து விட்டது. பில்கேட்ஸ் கூட ஆப்பிளின் கான்செப்டை பார்த்து மிரண்டு காப்பியடித்துதான் விண்டோஸ் என்றார்கள். அது கிடக்கட்டும். ஜெயித்தவனை மட்டும் தான் இந்த உலகம் பாராட்டுகிறது. எப்படி ஜெயித்தான் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. பணத்தினை மட்டுமே வைத்து இந்த உலகம் மனிதனின் தரத்தை எடை போடுகிறது.


காலையில் நூறடி ரோட்டில் இருக்கும் கடைகள் ஒவ்வொன்றாய் ஃபேன் வாங்க விசாரிக்க ஆரம்பித்தேன். அனைவரும் முன்பெல்லாம் வந்தது இப்போது வருவதில்லை என்ற பதிலையே டெம்ப்ளேட்டாகச் சொல்ல ஆரம்பித்தனர். பத்து கடைகள் விசாரித்தேன். கிடைக்கவில்லை. பின்னர் வெரைட்டிஹால் ரோட்டிலிருக்கும் எலக்ட்ரானிக்ஸ் கடைகளுக்குச் சென்று விசாரித்தால் அனைவரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள். ஐம்பது ரூபாய் ஃபேனுக்கு 500 ரூபாய் செலவழிக்க வேண்டுமா என்ற யோசனையில் மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். கிடைக்கவே இல்லை. 

வெயில் வேறு, டிராபிக் வேறு. கசகசவென வியர்வை கொட்ட ஆரம்பித்தது. எரிச்சலில் மரைக்கடைப்பாலம் ரோட்டில் வண்டியைத் திருப்பினேன். குமரன் எண்டர்பிரைசஸ் என்றொரு கடையைப் பார்த்தேன். ஏதோ ஒரு ஆர்வத்தில் அங்கு விசாரித்தால் அந்த ஃபேன் அங்கு இருந்தது. விலை 70 ரூபாய் என்றார்கள். தப்பித்தது 430 ரூபாய். வீணாக 430 ரூபாய் ஏன் செலவு செய்ய வேண்டும்? தேவையில்லை அல்லவா?

வீட்டுக்கு வந்து எஸ்.எம்.பி. எஸ்ஸைப் பிரித்து ஃபேனை மாட்டினேன். அட்டகாசமாக காற்றினை வெளித்தள்ளியது. முடிந்தது பிரச்சினை. இனி ஒரு வருடத்திற்கு பிரச்சினையில்லை. 

புதிய எஸ்.எம்.பி.எஸ்ஸுக்கு 500 ரூபாய் கேட்டார்கள். ஒரு சிறிய ஃபேன் தான் பிரச்சினை. அதை மாற்றி விட்டால் போதும். தேவையற்று ஏன் அனாவசிய செலவு செய்ய வேண்டும்? இந்தச் செலவினை அவசியம் செய்து தான் தீர வேண்டுமா? என்று யோசித்தாலே போதும். தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம்.


( நன்றி பட உதவி : கோவை நேரம் ஜீவா)

வரும் போது காந்திபுரம், பவர்ஹவுஸ் அருகில் இருந்த பாண்டியன் கம்மங்கூழ் கடையில் ஒரு கப் கம்மங்கூழ் குடித்தேன். புளிக்காத தயிரை ஊற்றி வெங்காயம் போட்டு அதில் கொழ கொழவென கம்மங்கூழை ஊற்றித் தருகிறார். அருமையாக இருந்தது. அவசியம் அந்தப் பக்கம் யாராவது செல்ல நேர்ந்தால் குடித்துப் பாருங்கள். கூட்டம் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. மோர் கூட புளிக்காது இருந்தது. இந்தப் பெப்ஸி, கோக் குடிப்பதற்கு இந்தக் கூழைக் குடித்துப் பாருங்கள். நல்ல இரும்புச் சத்து.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.