குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 15, 2016

ரகசிய வன்முறை - உயிரோசையில் வெளிவந்த பதிவு - மீள்பார்வை

நானும் எனது நண்பரும் சென்னை செல்ல இரயிலில் டிக்கட் பதிவு செய்தோம். எனக்கு நடக்க இயலாது என்பதால் கன்செஸன் சர்டிஃபிகேட் மூலம் டிக்கெட் பதிவு செய்தேன். மூன்றாம் வகுப்பு ஏசி. அதென்னவோ தெரியவில்லை. கன்செஸன் என்றால் சன்னலோரம் தான் இடம் கிடைக்கும். நடைபாதையின் ஓரமாக நடப்போர் எல்லோரும் இடித்து இடித்து ஒரு வழியாகி விடுவோம். ஊனமுற்றோருக்கு மத்திய அரசின் தொடர் வண்டித்துறை செய்யும் உபகாரம் இது.

இரவு உணவு அருந்தலாம் என்று பார்த்தால், கைகழுவ இயலவில்லை. சன்னல்கள் எல்லாம் அடைபட்டு இருந்தது. கழிவறை சென்று கழுவி வந்தால், மீண்டும் கையை கீழே வைக்க வேண்டும். சரிப்பட்டு வராது என்றபடியால் வாழைப்பழமும் பாலும் சாப்பிட்டுவிட்டு படுத்தாகிவிட்டது. நடுநிசி ஒரு மணி இருக்கும். இயற்கை உபாதை அழைக்க, மெதுவாகத் தவழ்ந்து கழிவறை சென்றேன். அங்கே.... மூத்திரமும், மலமும் சந்தனம் போல ஒட்டிய பாத்ரூம். சாக்கடை போல பார்த்ததும் வாந்தி வருவது போல இருந்தது. அதற்குள் எப்படிச் செல்வது. உபாதையைக் கழிப்பது? நொந்து கொண்டேன்.

வருத்தத்துடன் படுக்கைக்குத் திரும்பி வந்து, இயற்கை உபாதையைக் கழிக்க இயலாமல் தூங்கவும் இயலாமல் நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். ஒரு மணியிலிருந்து விடிகாலை வரை அடிவயிறு கட்டிக் கொண்டு விண் விண்ணென்று வலி உசிரை எடுத்தது. விடிகாலையில் சென்னைக்கு வந்தாகி விட்டது. இரயில் நின்ற பிளாட்பாரத்திலிருந்து வெளியில் செல்ல வேண்டும். போர்டரை அழைத்து சக்கர நாற்காலி கிடைக்குமா என்றார் என் நண்பர். அது எங்கோ இருக்கும். எனக்குத் தெரியாது என்றார். நண்பருக்கு டென்ஷனாகி விட்டது. ஸ்டேசன் மாஸ்டரிடம் கேட்கலாம் என்று சென்றார். நான் அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்துவிட்டேன். விடிகாலைக் குளிர் உடம்பில் பட்டு சில்லிப்பை ஏற்படுத்தியது. ஆனால் வலியின் காரணமாக எப்போது வெளியில் செல்வோம் இயற்கை உபாதையைக் கழிப்போம் என்ற அவஸ்தைதான் என்னைப் பீடித்திருந்தது. சேரைத் தேடிப்போன நண்பர் வெறுங்கையோடு வந்தார். சார் ஒருத்தரும் பதிலே பேச மாட்டேன் என்கிறார்கள் என்றார். போர்ட்டரைக் கூப்பிட்டு அவருக்கு ஏதாவது காசு கொடுங்கள். சேரைக் கொண்டு வந்து தருவார் என்றேன்.

போர்ட்டரிடம், "என்ன கேட்கிறீங்க?" என்றார் நண்பர். அம்பது ரூவாய் கேட்டார். நண்பர் சரி என்று சொல்ல, எங்கோ இருந்த நாற்காலி சடக்கென்று என் முன்னே வந்தது. நமக்கு அதில் உட்கார்ந்து அனுபவம் இல்லையாதலால், போர்ட்டரின் அன்பு மிரட்டல்களை வாங்கிக் கொண்டு எழும்பூர் இரயில் நிலையத்தின் வாசலில் இறக்கப்பட்டேன்.

ஊனமுற்றோருக்கென வைக்கப்பட்டிருக்கும் சக்கர நாற்காலிகளை காசு கொடுக்காமல் கண்ணிலேயே காட்ட மாட்டார்கள் ரயில்வே போர்ட்டர்கள். ஏதாவது ஒரு புண்ணியவான் சக்கர நாற்காலியினைக் கொடுத்தால் போர்ட்டர்கள் வந்து பிடுங்கிக் கொள்வார்கள். அடையாள அட்டையைக் காட்டு. டிக்கெட்டைக் காட்டு. பணம் கொடுத்துவிட்டு எடுத்துச் செல் என்றெல்லாம் பேசுகின்றனர் ரயில்வே ஸ்டேஷனில்.

ஊருக்குத் திரும்பும் பொருட்டு நான் சென்ற வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் எழும்பூர் இரயில் நிலையத்துக்கு வந்து ஏழு மணி அளவில் வந்து சேர்ந்து, ரயில் நிலையத்தின் படியில் அமர்ந்தேன். இரயிலில் ஏற, கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். எனது நண்பர் சக்கர நாற்காலியினை எங்காவது பிடித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். பத்து மணிக்கு இரயில் புறப்பட்டுவிடும். அதற்குள் ரயிலில் ஏறிவிட வேண்டும். மணி ஒன்பது இருபது அதுவரையிலும் சக்கர நாற்காலியினைத் தேடிச்சென்ற நண்பர் வரவில்லை. எங்கே சென்றாரிவர் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ஓட்டை நாற்காலியினை வியர்க்க விறுவிறுக்கத் தள்ளிக் கொண்டு வந்தார் நண்பர். நாற்காலி கிடைத்த கதையினைச் சொன்னார்.

யாரோ ஒரு ஸ்டேசன் மாஸ்டரிடம் நாற்காலி வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். தருகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாற்காலியினைக் கொடுத்து இருக்கிறார். அதற்குள் போர்ட்டர் வந்து எதுக்கு நாற்காலியினை எடுக்கின்றீர்கள் என்று எடுக்க விடாமல் தடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் டெபுட்டி ஸ்டேசன் மாஸ்டர் உயர்திரு பாஸ்கர் என்பவர் நண்பரிடம் இந்த நாற்காலி விஐபிக்கு மட்டும் தான் தருவோம் என்று சொல்லி எடுத்த நாற்காலியினைப் பிடுங்கி உள்ளே வைத்துவிட்டாராம். அந்தச் சமயத்தில் அங்கு வந்த வேறொரு போர்ட்டர் அந்த நாற்காலியினை எடுத்துச் சென்று விட்டாராம். அதற்கு டெபுட்டி ஸ்டேஷன் மாஸ்டர் பாஸ்கர் ஒன்றும் சொல்ல வில்லையாம். நண்பருக்கு என்ன செய்வது என்று தடுமாற்றம். அப்போது அங்கு வந்த விஜயகுமார் என்ற ஸ்டேசன் சிக்னல் இன்சார்ஜ் ஒரு ஓட்டை நாற்காலியினைத் தந்து இருக்கிறார். கால் ஒடிந்த நாற்காலி கால்கள் இல்லாத எனக்குக் கிடைத்தது. என்னைப் போலவே அந்த நாற்காலியும் ஊனமுற்றது. அதில் என்னை அமர வைத்து, நண்பர் இரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு தள்ளிச் சென்றார். நண்பர் வியர்வையில் குளித்து இருந்தார். நாற்காலியின் சக்கரம் சுழலாமல் சண்டித்தனம் செய்தது. தள்ளி வரும் போது பாதையில் விலகாமல் இருந்த ஒருவரின் மீது இலேசாக இடித்து விட அவர் சண்டைக்கு வந்துவிட்டார். அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தார் எனது நண்பர், இரு ஊனமுற்றவர்களுடன். ஒரு வழியாக இரயிலில் இருவரும் ஏறிவிட்டோம்.

இந்திய அரசு மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகிறது, மக்களே தங்களின் தேவைகளுக்காகப் பணிசெய்யும் ஆட்களைத் தேர்வு செய்து எங்களுக்குத் தேவையான வசதிகளை நாங்கள் கொடுக்கும் வரிப்பணத்தின் மூலமாக செய்து தாருங்கள் என்றும், அப்படிச் செய்யும் வேலைக்கு எங்களது வரிப்பணத்திலிருந்து சம்பளமும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார்கள். அப்படி என்ன வரி கொடுக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பீர்கள். இருந்தாலும் சொல்லுகிறேன் கேளுங்கள் உயர்திரு பாஸ்கர் அவர்களே.... கேளுங்கள்.....!

புரபஸனல் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ், கஸ்டம் டியூட்டி, இன்கம் டாக்ஸ், முனிஸபல் டாக்ஸ், ஃபயர் டாக்ஸ், எக்ஸைஸ் ட்யூட்டி, ஸ்டாஃப் புரபஸனல் டாக்ஸ், டர்னோவர் டாக்ஸ், கேஷ் ஹேண்ட்லிங்க் டாக்ஸ், ஃபுட் அண்ட் எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ், ஃப்ரிஞ் பெனிஃபிட் டாக்ஸ், சர்வீஸ் டாக்ஸ், கிஃப்ட் டாக்ஸ், வெல்த் டாக்ஸ், எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ், ஸ்டாம்ப் டுயூட்டி, ரெஜிஸ்ட்ரேஷன் டாக்ஸ், சர் சார்ஜ், எடுகேஷனல் டாக்ஸ், சொத்து வரி என்று தொட்டதுக்கெல்லாம் டாக்ஸ், டாக்ஸ்.... வரி.. வரி...வரி.... முட்டை வாங்கினாலும் வரி... புண்ணாக்கு வாங்கினாலும் வரி. இப்படி எங்களது உழைப்பில் கிடைக்கும் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெருவது அரசு ஊழியர்களாகிய நீங்கள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மக்களாகிய எங்களின் வரிப்பணத்தில் இரயில்கள் எங்களுக்காக விடப்படுகிறது. அதை நிர்வாகம் செய்ய உங்களைப் போன்றவர்களை நாங்கள் எங்களுடைய வேலைக்காரராகப் பணி அமர்த்துகிறோம். அப்படிப்பட்ட பொதுமக்களின் வேலைக்காரராகிய தாங்கள் விஐபிக்கு என்று ஒரு சட்டமும், சாதாரண மக்களுக்கு என்று ஒரு சட்டமும் இருப்பதாகச் சொல்வது என்ன நியாயம்? அந்தச் சட்டத்தையும் இயற்றுவது நாங்கள்தான் என்பது தெரியுமா உங்களுக்கு. மந்திரியாகட்டும், பிரதமராகட்டும் அவரெல்லாம் பொதுமக்களின் வேலைக்காரர்கள். பொதுமக்களுக்குப் பணி செய்ய பொது மக்களால் அமர்த்தப்பட்டவர்கள். டெபுட்டி மாஸ்டரும் பொது மக்களின் ஊழியர்தான் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் ஏதேனும் இருக்கிறதா?

நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை டாக்ஸ் என்ற போர்வையில் வசூலித்து வரும் பணத்தில் சம்பளம் வாங்கி உங்கள் குடும்பத்துக்குச் சோறு போடும் நீங்கள் எங்களுக்குச் செய்யும் கொடுமைக்கு அளவே இல்லையா?

விஐபின்னா யாருங்க? தலையில் மூன்று கண்களும், ஐந்து கால்களும் மூன்று வயிறுகளும் உடைய விநோத ஜந்துவா? அந்த விஐபியும் எங்களால் தான் விஐபியாகி இருக்கின்றார் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா ?

மஹாத்மா காந்தியைத் தேசத்தலைவராகக் கருதும் இந்தியாவில் பொதுமக்களாகிய கஸ்டமர் என்ற எங்களைப் பற்றியும் நீங்கள் எங்களுக்கு யார் என்பது பற்றியும் சொல்லி இருப்பது மத்திய அரசு ஊழியராகிய உங்களுக்குத் தெரியுமா? தெரியாது எனில் கீழே படித்துப் பாருங்கள்.

A customer is the most important visitor on our premises.
He is not dependent on us.
We are dependent on him.
He is not an interruption of our work.
He is the purpose of it.
He is not an outsider to our business.
He is part of it.
We are not doing him a favour by serving him.
He is doing us a favour by giving us the opportunity to do so.
- மஹாத்மா காந்தி

எங்களுக்கு உதவத்தானே அரசாங்கப் பணியாளர்களாகிய நீங்கள் இருக்கின்றீர்கள். அரசியல் சட்டத்தில் விஐபிக்கு ஒரு நடை முறையும் என்னைப் போன்ற ஊனமுற்றோருக்கென ஒரு நடை முறையும் பின்பற்ற வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கின்றதா? சொல்லுங்கள் எழும்பூர் நிலைய டெபுட்டி ஸ்டேஷன் மாஸ்டர் பாஸ்கர் அவர்களே... சொல்லுங்கள். 

உங்கள் மகனோ அல்லது மகளோ என்னைப்போல இருந்து எனது அனுபவம் போல அவர்களுக்கு நடந்தால் தாங்கள் மகிழ்ச்சியாய் இருப்பீர்களா? சொல்லுங்கள்.. தர்மம் சூட்சுமமானது அய்யா. நின்று கொல்லும். உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். என்னை வதைத்த தாங்கள், உலகையே படைத்து ஆண்டு கொண்டிருக்கும் இறைவனால் வதைக்கப்படுவது நிச்சயம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று படித்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா டெபுட்டி ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களே. ஹிட்லர், முஸொலினி நிலை எல்லாம் என்ன? வரலாற்றைப் படித்திருப்பீர்களே... மறந்துவிட்டீர்களா ?

பொதுமக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் என்னைத் துன்பத்தில் ஆழ்த்திய பாஸ்கர் அவர்களை அவர் எனது பணியாளர் என்ற வகையில் ஏதாவது செய்யத்தான் இயலுமா? ஏதாவது கம்ப்ளைண்ட் கொடுத்தால் நடவடிக்கைதான் எடுப்பார்களா? இந்திய அரசு பொதுமக்களின் அரசு என்று எழுத்தளவில் தான் இருக்கின்றது. நடைமுறை என்பது வேறாக இருக்கிறது. சட்டங்கள் சட்டப்புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சட்டங்களை சினிமாவில் ஹீரோக்கள் காப்பாற்றுவார்கள். எங்கே? யாராவது ஒருவர் ஒரு அரசு ஊழியரைக் குற்றம் சுமத்திப் பாருங்கள். கம்ப்ளெயிண்ட் கொடுத்தவருக்கு என்னென்ன தொல்லைகள் கொடுக்க முடியுமோ அத்தனை தொல்லைகளையும் தருவார்கள் வேறு வேறு ரூபத்தில்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றி எழுதப்பட வேண்டும். இல்லையெனில் உங்களைப் போன்ற மக்களின் வேலைக்காரர்கள் எஜமானர்களாகிய எங்களை வதைப்பது என்றும் மாறப்போவதில்லை.

சாதாரண பொது மக்களையே உதாசீனப்படுத்தும் அரசு ஊழியர்கள் ஊனமுற்றோருக்குச் செய்யும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. வாயில்லா ஜீவன்களைத் துன்பத்தில் ஆழ்த்தினால் அதைக் கேட்கவும் ஒரு இயக்கம் இருக்கிறது. ஆனால் ஊனமுற்றவர்களுக்கு என்ன இருக்கிறது? எண்ணற்ற துறைகள் அரசால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை எல்லாம் என்ன செய்து கிழித்து விட்டன. அந்த அனுபவத்தையும் சொல்கிறேன் கேளுங்கள் பாஸ்கர் அவர்களே.....

கல்லூரியில் படிக்கும் போது சமூக நலத்துறை மூன்று சக்கர நாற்காலி வழங்கியது. அலுவலகம் எங்கோ ஓரிடத்தில் இருந்தது. அதைச் சென்றடையவே ஏகப்பட்ட காசும், உடல் துன்பமும் பட்டேன். கொடுத்த வண்டியின் மூன்று சக்கரங்களில் காற்றும் இல்லை ஒழுங்காக இணைக்கப்படவும் இல்லை. வண்டியைக் கொடுத்துவிட்டு மாலையில் விழா நடக்கவிருக்கும் விழாத் திடலுக்கு வந்துவிடுமாறும், அங்கு வண்டியினை மந்திரிகள் தருவார்கள் என்றும் சொன்னார்கள். சமூக நல அலுவலகத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்தது. வண்டியினை அருகில் இருக்கும் சைக்கிள் கடைக்காரரிடம் கொடுத்து ரிப்பேர் செய்து தரச் சொல்லி அதை உருட்டிக் கொண்டு அந்த விழா நடந்த இடத்திற்குச் சென்ற பின்பு அங்கு வந்த சில அதிகாரிகள் வண்டியைப் பூட்டி சாவியினை எடுத்துச் சென்றுவிட்டனர். மாலை நான்கு மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை வண்டியிலேயே உட்கார்ந்து கொண்டு இயற்கை உபாதை, பசி, இடுப்பு வலி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு காத்திருந்தேன். என் அருகில் பெண் ஒருவர் வண்டியின் மீது அமர்ந்திருந்தார். அவரின் நிலைமையை எண்ணிப் பாருங்கள் வாசகர்களே. மந்திரிகள் வந்தார்கள். பேசினார்கள். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சென்றுவிட்டார்கள். அதிகாரிகள் வந்து சாவியினைக் கொடுத்துவிட்டு மந்திரிகளுக்கு வேறு வேலைகள் இருப்பதால் சென்றுவிட்டார்கள் என்று சொல்லிச் சென்றார்கள். அதன் பிறகு வண்டியினை எடுத்துக் கொண்டு ஊர் சென்று சேர வேண்டும். எப்படி முடியும். ஊரே உறங்கிக் கொண்டிருக்கும். யாரைப் பிடித்து என்ன செய்ய இயலும். கிடைத்த இடத்தில் நான் படுத்துக் கொள்வேன். என்னுடன் வந்த அந்தப் பெண்ணின் நிலைமை? இப்படி எங்களை வதைத்த இரு மந்திரிகளின் நிலைமை என்ன ஆனது தெரியுமா? இன்று அவர்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டு மண்ணுக்குள் சென்றுவிட்டார்கள்.

இன்னுமொரு சம்பவத்தில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கணிப்பொறி உதவியாளர் பணி இடம் இருப்பதாகக் கேள்விப்பட்டு மனு கொடுக்கச் சென்ற போது, அங்கிருந்த அதிகாரிகள் அப்படி ஏதும் இல்லை என மறுத்துவிட்டனர். அந்தப் பதவி காலியாய் இருக்கிறது என்று அங்கு வேலை செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார். அரசாங்கப் பதவிகளையும் விலைக்கு விற்கின்றீர்களே... இதெல்லாம் நியாயமாகப் படுகிறதா உங்களுக்கு...

ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்க வருமாறு அறிவிப்பு செய்தனர். நண்பருடன் சென்ற போது, போட்டோ எடுக்கப் பணம் கேட்டனர். அதற்கென்று தனியார் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் வந்திருந்தார். பணம் கொடுத்தாகிவிட்டது. அட்டையில் பெயர் எழுதிய பின்னர், கலெக்டர் ஆஃபீஸில் இருந்து ஆறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அரசு மருத்துவ மனையில் இருக்கும் எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்று கையெழுத்து வாங்க வேண்டுமாம். அதன் பின்னர் தான் அட்டை செல்லும் என்று கூசாமல் சொல்கின்றனர்.. எங்கு சென்றாலும் கஸ்டப்படுத்தப்படும் , உதாசீனப்படுத்தப் படும் ஊனமுற்றவர் என்ன பாவம் செய்தார்கள். அரசு அதிகாரிகளே, என்னைப் போன்றோரைப் பார்த்தால் கொஞ்சம் விஷம் கொடுத்து விடுங்களேன். புண்ணியமாகப் போகும்.

இப்படி அரசால் துரத்தித் துரத்தி அடிக்கப்படும் என்னைப் போன்றவர்களின் மனத்துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஊனமாகப் பிறந்ததுதான் குற்றமா ? குற்றமெனில், அரசாங்கமே எங்களைக் கருணைக் கொலை செய்து விடலாம் அல்லவா ? உயிரோடு வைத்து வேதனை செய்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லாமல் கொல்லுவதுதான் அரசாங்கத்துக்கு வாடிக்கையா ?

ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தாராம். வரலாறு சொல்கிறது. அது உடல் துன்பம் பாஸ்கர் அவர்களே. அது உடல் துன்பம். மனத்துன்பம் இருக்கிறதே அது நரகம் அய்யா... நரகம்.. மனவேதனை மனிதனின் உச்சக்கட்ட துன்பம் பாஸ்கர் அவர்களே....

உயர்திரு பாஸ்கர் அவர்களே, உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, மக்கள் சேவைக்கு வந்து வசதியாக அதை மறந்து விட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் உங்களைக் குற்றம் சொல்லி இனி என்ன ஆகப்போகிறது. ஒன்றும் இல்லை. நான் பட்ட வேதனை வேதனைதான். ஆனால் அந்த வடு இன்னும் மாறவில்லை. இனிமேலாவது என்னைப் போன்றவர்கள் வந்தால் அவருக்கு நாற்காலி கொடுத்து உதவி செய்யுங்கள். அதுதான் எனக்குத் தேவை.

இந்தப் பதிவைப் படிக்கும் எனதருமை நண்பர்களே....

பாவத்தின் சுமைகளை சுமந்து கொண்டு, அரசால் புறக்கணிக்கப்பட்ட, எந்தச் சுகத்தையும் அனுபவித்தும் பார்க்க முடியாத, வேதனையிலும் வெந்து கொண்டு, என்று சாவு வரும் என்று காத்துகொண்டு இருக்கும் ஊனமுற்ற உள்ளங்கள் தவழ்ந்து வரும் போது, பாதையில் குறுக்கிடாமல் சற்று விலகி நின்று அவர்கள் செல்ல வழி விட்டால், எனது இந்தக் கட்டுரைக்கு ஒரு அர்த்தம் உண்டு. என்ன செய்வீர்களா ?

குறிப்பு : பொத்தாம் பொதுவாகக் குற்றம் சொல்வது எனக்குப் பிடிக்காது என்பதால் எனக்குத் துன்பமிழைத்த பாஸ்கர் அவர்களின் பெயரைக் குறிப்பிடும்படி அமைந்து விட்டது.


08-12-2008 அன்று எழுதப்பட்ட பதிவு.

இந்தப் பதிவிற்கு “ரகசிய வன்முறை” என்று தலைப்பிட்டு உயிரோசையில் வெளியிட்ட மனுஷ்யபுத்திரனுக்கு நன்றி.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.