குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, September 28, 2016

அன்னபூரணி தாய்


கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் தங்கி விவேகாநந்தா மெட்ரிக் பள்ளியில் கணிணி ஆசிரியராகவும், சாரதா நிகேதன் சயின்ஸ் காலேஜ் ஃபார் விமன் கல்லூரியின் கம்யூட்டர் துறையில் சிஸ்டம் அனலிஸ்ட் மற்றும் அட்மினிஸ்ட்ரேசனாக வேலை செய்து வந்து கொண்டிருந்தேன். சுவாமி ஆத்மானந்தாவிடம் இரண்டு காண்டசா கிளாசிக் கார்கள் இருந்தன. அப்போது அம்பாசிடர் மற்றும் காண்டசாக்கள் மற்றும் மாருதி 800 கார்கள் பிரபலம்.

நானும் சாமியும் அடிக்கடி சாரதா கல்லூரிக்குச் செல்வோம். ஆஸ்ரமத்தில் இருப்போர் கடுப்புடன் பார்ப்பார்கள். அலுவலக கம்யூட்டர் அல்லது பிரிண்டர் அல்லது லேப் கம்யூட்டர் ஏதாவது பிரச்சினையில் இருக்கும். அத்துடன் வாரம் தோறும் கல்லூரிப் பெண்களுக்கு கணிப்பொறி கிளாஸ் எடுக்க வேண்டும். காரைக்குடி அமராவதிப்புதூரில் இருக்கும் சாரதா நிகேதன் பெண்கள் கல்லூரிக்கும் அடியேன் தான் கணிப்பொறியியல் துறைக்கு அட்மின்ஸ். அடிக்கடி சாமியுடன் காண்டசாவில் பயணிப்போம். 


(திருப்பராய்துறை தபோவனம் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர்)

திருச்சி செல்லும் சாலையில் சுவாமி சித்பவானந்தர் அமைத்திருக்கும் திருப்பராய்துறை தபோவனத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். அருகில் இருக்கும் ராமகிருஷ்ண  குடில் வேறு. தபோவனம் வேறு. தபோவனத்தில் இருந்த சித்பவானந்தரின் சீடர் பிரம்மசாரி ராமசாமி தான் குடிலின் நிறுவனர்.

(ராமகிருஷ்ணர் குடில் நிறுவனர் பிரம்மச்சாரி ராமசாமி அடிகளார்)

இரண்டு நிறுவனங்களுக்கும்  அப்போதே ஏதோ பிரச்சினை இருந்தது என்றுச் சொல்லிக் கொண்டார்கள். உண்மையா என்று தெரியவில்லை. சுவாமி சித்பவானந்தரின் இன்னொரு சீடர் தான் சுவாமி ஆத்மானந்தர். கரூருக்கு வந்து பசுபதிபாளையத்தில் ஐந்து பள்ளிகள் மற்றும் சாரதாபுரி எனும் இடத்தில் அமைந்த சாரதா நிகேதன் கல்லூரியையும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அத்துடன் பெண்கள் கல்லூரியில் சுமார் 150 அனாதை பெண்களையும், ஆஸ்ரமத்தில் சுமார் 100 மாணவர்களையும் ஆதரித்து படிக்க வைத்து, உடை கொடுத்து வளர்த்து வந்தார். 

(சுவாம் ஆத்மானந்தர் - அமராவதிபுதூர் கல்லூரி விழாவின் போது)

சுவாமி சித்பவானந்தர் உயிருடன் இருக்கும் வரையில் பிரச்சினை இல்லை. அவர் காலமானதும் தபோவனத்துக்கும் சுவாமி ஆத்மானந்தருக்கும் பிரச்சினை ஆரம்பித்தது. சுவாமி ஆத்மானந்தர் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தபோவனத்தின் பெயரில் தான் பதிவு செய்து வைத்திருந்தார். மேற்படி நிறுவனங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்தார். ஆனால் உண்மையான உரிமையாளர்கள் தபோவனத்தினர். சட்டம் அதைத்தான் சொல்லும். அதைத்தான் சொல்லியது.

கரூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடந்து அது தபோவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு எழுதியது. சுவாமியைக் கைது செய்து விடும் அளவுக்கு நிலமை தீவிரமானது. ஆசிரமவாசிகள் பரபரப்பாயினர். என்ன நடக்குமோ என்று கவலையடையத் தொடங்கினர். அடியேனுக்கு சுவாமியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு அனுமதி உண்டு. அவர் எந்த வேலையிலிருந்தாலும் அடியேன் நேரடியாக சுவாமியின் அறைக்குச் சென்று விடுவேன். எனக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

சாமியைப் பார்க்கச் சென்றேன். 

“என்னப்பா! ஏதும் வேண்டுமா?” என்றார்.

”சாமி, கைது என்று பேசிக் கொள்கின்றார்களே?” என்றேன். 

சிரித்துக் கொண்டே,”அன்னபூரணி பார்த்துக் கொள்வாள், நீங்க போய் சாப்பிட்டு விட்டு தூங்குங்க” என்றுச் சொல்லி தேங்காய் லட்டு ஒன்றினை எனக்கு கொடுத்தார். 

பரபரப்பாய் இருந்த சுவடு அடுத்த நாள் இல்லை. அவரைக் கைது செய்ய யாரும் வரவில்லை. அன்று சுவாமி சொன்ன வார்த்தைப் பலித்தது.  

மிகவும் குறைந்த விலையில் தமிழகத்தில் உள்ள பல ஏழைகள் தினம் தோறும் வயிறார உணவு உண்கின்றார்கள். பத்து ரூபாய் இருந்தால் போதும் அம்மா உணவகத்தில் வயிறு நிறையச் சாப்பிட்டு விடலாம். ஒரு வெகு சாதாரணமான குடும்பம் வெகு சொற்பமான தொகையில் தங்களின் பசியைப் போக்கி விடலாம். 100 யூனிட் வரை மின்கட்டணம் கூட இல்லை. 

இருபத்தைந்து கிலோ அரிசி இலவசமாய் கிடைக்கிறது. முப்பது ரூபாய்க்கு துவரம் பருப்பு ரேசனில் கிடைத்து விடுகிறது. அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு அரசு தன்னால் முடிந்த வரை எத்தனையோ லட்சோப லட்சம் மக்களுக்கு பசிப்பிணியை தீர்க்கிறது. அதற்கு காரணமாய் இருப்பது நம்ம முதல்வர் அம்மா அவர்கள்.

காமராஜர் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து பெரும் புகழ் பெற்றார். ஆனால் அம்மா ஏழைகளுக்கு மட்டுமல்ல பள்ளிக் குழந்தைகளுக்கும் பல சுவை உணவளித்து வருகிறார். அன்னமிடுதல் என்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை. பசிப்பிணியை தினம் தோறும் தீர்த்துக் கொண்டிருக்கிறார். அம்மா என்ற சொல் அவருக்கு மட்டுமே பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டும்.

அம்மா அவர்கள் வாழும் அன்னபூரணித் தாய். அன்னபூரணித்தாயின் பூரண நல் ஆசியுடன் விரைவில் நலம் பெறுவார் என பிரார்த்தனை செய்து கொள்வோம்.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.