குரு வாழ்க ! குருவே துணை !!

Thursday, September 8, 2016

தாய் மொழி என்று அழைக்காதீர்கள்

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்திற்காக ஆன்லைனில் செய்தால் ரிஜெக்டட் என்றே வருகிறது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பிரச்சினை. ஆகையால் கோவை பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தின் வளாகத்தில் இருக்கும் ஏஜென்சியை அணுகினேன். ஐம்பது ரூபாய் கட்டணம் பெறுகின்றார்கள். பெட்ரோல் செலவு வேறு. மதியம் உணவுச் செலவு வேறு. எப்படியும் இருநூறைத்தாண்டி விடுகிறது. இதுவே தின வேலைக்குச் செல்பவராக இருந்தால் ஒரு நாள் சம்பளம் போய் விடும். 

தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற இங்குள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் அப்ளை செய்ய வேண்டுமாம். சித்ராவில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகம் நார்மலாக பாஸ்போர்ட் அப்ளை செய்பவர்களுக்கானதாம். இரண்டு அலைச்சல்.

எனக்கு பாஸ்போர்ட் ரினிவல் செய்யும் போது ஆன்லைனில் புக்கிங்க் செய்தேன். அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்ததும் நேரில் சென்றேன். கைரேகை, போட்டோ எடுத்தார்கள். கட்டணத்தை அங்கேயே செலுத்தி விட்டேன். பதினைந்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வீடு வந்து சேர்ந்து விட்டது. 

இந்த வளாகத்தில் இருந்த ஒரு ஏஜென்சியில் ஆன் லைன் அப்ளை செய்வதற்கும், இன்ன பிற வேலைகளுக்கும் 2500 ரூபாய் ஆகும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒருவர். அப்படியா என வாயில் ஈ போவது கூட தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தார் கசங்காத சட்டை போட்டு விரைப்பாக நின்றவர். 

அப்போது ஒரு காரிலிருந்து காச் மூச்சென்று சத்தம் கேட்டது. என்னவென்று திரும்பிப் பார்த்தால் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்மணி ஆகியோர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி என்னைப் பார்ப்பதும் பின்னர் ஆங்கிலத்தில் அந்தக் குழந்தைகளை திட்டுவதுமாக இருந்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாடுகின்றாராம். நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேனாம். இது தெரியாத அந்தக் குழந்தைகள் இருவரும் தமிழில் அம்மா, அம்மா எனப் பேச ஆரம்பிக்க அதற்கும் திட்டு விழுகிறது. என்ன சொல்லித் திட்டுகிறார் தெரியுமா? ”லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க வைக்கின்றேன், தமிழிலா பேசுகின்றீர்கள்?”.

அதன் பிறகு அந்தக் குழந்தைகள் இருவரும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தனர். அந்தப் பெண்மணியின் புருஷன் என்னிடம் வந்து பேசினார். ”நீங்கள் தமிழரா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ”நான் பச்சைத் தமிழன்” என்று பெருமையாகச் சொன்னார். 

நதிகளுக்கு பெண்கள் பெயர்களை வைத்திருக்கிறோம், நாட்டையே தாய் நாடு என்கிறோம். மொழியை தாய் மொழி என்கிறோம். அம்மா என்றால் பெரும்பான்மையான பெண்களுக்கு கசக்கிறது. மம்மி என்று தான் அழைக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். கிராமத்திலிருக்கும் பெண்களை விடுங்கள். நகரத்தில் இருக்கும் பெண்கள் என்ன செய்கின்றார்கள் என்று யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

தமிழில் பேசினால் என்ன? ஏன் அதைக் கூடச் செய்ய தயங்குகின்றார்கள் இந்தப் பெண்கள்? வெற்று ஈகோவினால் என்ன கிடைக்கப்போகின்றது? இந்த தற்பெருமையினால் கிடைக்கப்போகும் பயன் தான் என்ன? ஒன்றுமில்லை. வெற்றுப்பெருமை.

தாய் மொழி என்று இனிச் சொல்லவே கூடாது என நினைத்தேன். இந்த எரிச்சலில் இருந்த போது குஜராத் சிங் ஒருவர் வெகு அழகாக போனில் யாரோ ஒருவருடன் தமிழில் பேசிக் கொண்டே நடந்து சென்றார். சில்லென்று இருந்தது.

தமிழை யாரும் வளர்க்க வேண்டாம். தமிழால் தான் பலரும் பிழைக்கின்றார்கள் என்ற சிந்தனை மேலோட வீட்டுக்குத் திரும்பினேன்.

தமிழ்ப் பெண்களே, வீட்டிலிருக்கும் போது உங்கள் குழந்தைகளைத் தமிழில் பேச வையுங்கள். தமிழ் பேப்பரை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். ஆங்கிலம் என்பது வயிற்றுப் பிழைப்புக்கு என தெளிவாகச் சொல்லிக் கொடுங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள உதவுங்கள். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவை அம்மா என்று தான் அழைத்தீர்கள் என்பதினை மறந்து விடாதீர்கள். எங்கெங்கும் ஆங்கிலத்தில் பேசுவது அடிமைத்தனம். வேலையின் போது, படிக்கும் போது ஆங்கிலத்தில் பேசினால் போதுமே. 

கணபதி, பாரதி நகரில் இருக்கும் கிராமத்துக்கடையில் ராகிக்களியும், காரப்புளிக்குழம்பும், மிளகாய் வற்றலும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.  ”சார், கருவாட்டுக்குழம்பு இருக்கிறது, அதையும் பார்சல் செய்து தரவா?” என கேட்டார்கள். 35 வயது வரை சாப்பிட்ட கருவாட்டுக்குழம்பின் வாசம் திடீரெனெ நினைவுக்கு வர பெருமூச்சு தான் வெளிப்பட்டது. சென்று வா கருவாட்டுக்குழம்பே என மனம் அதற்கு விடை கொடுத்து நீண்ட நாட்களாகி இருந்தன.

ஆதார் கார்டில் முகவரி மாற்ற செய்ததில் மீண்டும் ஒரு தவறு நேர்ந்திருக்கிறது. இன்றைக்கும் மறுபடியும் செல்ல வேண்டும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.