குரு வாழ்க ! குருவே துணை !!

Tuesday, September 27, 2016

சித்தர்கள் சாபம் பலிக்குமா? உண்மைச் சம்பவம்

ஆஸ்ரமத்திற்குச் நானும் மனையாளும் எட்டு மணி வாக்கில் கிளம்பினோம். செல்வபுரம் வழியாக பேரூர் சாலையில் பயணித்தோம். பள்ளிகள் விடுமுறையாதலால் வாகன நெருக்கடி இல்லை. ஆங்காங்கே அவசர கோலமாக சாலைகள் செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் வருகிறது அதுவும் உள்ளாட்சித் தேர்தல். ஆஸ்ரமம் சென்று சேர்ந்தோம்.

அருமையான அமைதி. அன்பர்கள் குறைவாக இருந்தனர். சாமியுடன் கொஞ்ச நேரம் இல்லற வாழ்வியல் சண்டைகள் போட்டு விட்டு, இரண்டு மணி நேரம் சுவாமியின் எதிரில் அமர்ந்து விட்டேன். மனதுக்கு அமைதி வேண்டும். எண்ணங்களே இல்லாத மனம் ஒரு துளி நேரம் இருந்தாலும் அதை விட இன்பம் ஏதுமில்லை. 

கண்ணை மூடி விட்டால் சினிமா நடிகையில் ஆரம்பித்து பக்கத்து வீட்டுப் பருவச் சிட்டு வரை சிந்தனை ஓடுகிறது. சிறிது நேரத்தில் ஒபாமாவுடன் உரையாட ஆரம்பித்து மன்மோகன் சிங்கிடம் 2ஜி கேள்விகள் கேட்கிறது. நேற்றுச் சாப்பிட்ட வடை சரியில்லை என்று இனி அந்தப் பக்கம் போகக் கூடாது என்று அடுத்த நொடியில் டீக்கடைக்குச் சென்று விடுகிறது மனசு. நொடிப்பொழுதும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் சிந்தனையை நிறுத்தி வெற்று மனதாகி விட்டால் இந்தப் பிரபஞ்சத்துடன் எப்படி ஒரு ஆலமரம் இணைந்து நிற்கிறதோ அது போல இணைந்து விட்டால். புத்தன் சும்மாவா ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து ஞானம் பெற்றார்?

எழுத நன்றாக வருகிறது. ஆனால் இந்த மனதை அடக்கிட என்ன செய்தாலும் அது நம்மை அடக்கி விடுகிறது. நொடிப்பொழுதும் அடங்காது ஆட்டம் போடும் இந்தப் பொல்லா மனது குரு நாதரின் முன்னே மகுடிக்கு நின்றாடும் பாம்பு போல ஆடி அடங்கி விடும்.

சுவாமியிடம் பிரார்த்தனை செய்தால் போதும். ’அந்தப் பக்கமாகப் போ எல்லாம் சரியாகி விடும்’ என்று வழி காட்டி விடுவார். இல்லையென்றால் எவரையாவது கூட அனுப்பி கரை சேர்த்து விடுகிறார். அதற்கெல்லாம் பிராப்தம் வேண்டுமென நினைக்காதீர்கள். உங்களுக்கு மனது வேண்டும்.

ஜோதி சுவாமியுடன் வழக்கம் போல பேச ஆரம்பித்தேன். ஆஸ்ரமத்திற்கு வரும் ஒருவர் சமீபத்தில் அகால மரணம் அடைந்தார். அவருக்கு ரசவாதம் கைகூடி இருந்தது. ரசத்தைக் கட்டும் வித்தையை அவர் பழுதறக் கற்றிருந்தார். 

“ரசமும் மூலிகையும் வாங்க காசு கொடுங்கள். ஒரு கிலோ சுத்த வெள்ளிக்கட்டி தருகிறேன். விற்று சம்பாதித்துக் கொள்ளுங்கள்” என்று என்னிடம் அந்த அகால மரணம் அடைந்தவர் கேட்டார். மறுத்து விட்டேன்.

ரசக்கட்டு தெரிந்தவுடன் அந்த ஆள் தங்கம் வரைக்கும் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். வெளியில் நோய்க்கு மருந்து அளிக்கிறேன் என்றுச் சொல்லி ரகசியமாக இந்த ரசக்கட்டு வேலையைச் செய்து பணம் சம்பாதித்து, பெரும் பணத்தைச் சேர்த்து வந்திருக்கின்றார். பணம் வந்தால் பத்தும் பறந்து போகும். இவருக்குப் பதினொன்றும் போய் விட்டது.

சுவாமி ”இந்த வேலையெல்லாம் செய்யாதே” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் ”பின் ஏன் சித்தர்கள் ரசக்கட்டு வித்தையைச் சொன்னார்கள் ?” என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார். 

தபஸ் செய்யும் மனிதன் சிறு அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அவனால் வேலை ஏதும் செய்ய முடியாது. அதற்காக குண்டுமணி அளவு தங்கம் செய்து அதை விற்று உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ரசக்கட்டு வித்தையைச் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் அதை வைத்து பொருள் தேடினால் அவர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் அவர் கேட்கவில்லை.

விளைவு சின்னஞ்சிறு வயதில் அகால மரணம். கோடி கோடியாய் சேர்த்து வைத்திருக்கும் சொத்தினால் என்ன பிரயோஜனம்? ஆடிய ஆட்டம் முடிந்தது. 

”சாமி, சித்தர்கள் சாபம் பலிக்குமா?” என்றேன்.

“ஆமாம் ஆண்டவனே, நிச்சயம் பலித்து விடும். மனித சமுதாயம் நல்வாழ்வு வாழ, நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வு வாழத்தான் சித்தர்கள் எந்தப் பிரதிபலனும் பாராமல் சித்த ரகசியங்களை மனிதர்களுக்குச் சொல்லிச் சென்றார்கள். அதை வைத்து பொருள் தேட ஆரம்பித்தால் இப்படித்தான் ஆகும். இப்படி ஆரம்பித்தவர்கள் வாழ்க்கை எல்லாம் சீரழிந்து சிதைந்து போய் விடும் ஆண்டவனே!” என்றார்.

சித்தர்கள் சாபம் பலித்தே விட்டது. என் வாழ்க்கையில் நான் அனுபவ பூர்வமாக கண்டு கொண்ட உண்மைச் சம்பவம் இது.

சித்தர்கள் பெயரைச் சொல்லக்கூட தகுதி வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்கு சித்தர்கள் பெயர்களை அடைமொழியாக்கி பல்வேறு அக்கிரமங்கள் செய்கின்றார்கள். மருந்து விற்கின்றார்கள். மூலிகைகள் விற்கின்றார்கள். இந்த மூலிகைகளை காசு வாங்கிக் கொண்டா பூமி தருகின்றது? செய்யும் செயலில் தர்மம், நீதியும், நியாயமும் இருக்க வேண்டும், 

இன்றைய மருத்துவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை விசாரித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் படும் துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

சேலம் பக்கம் மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுப்பார்கள். அந்த மருந்து கொடுப்பவர்களுக்கு மறு நாள் அந்த நோய் பீடித்து விடும். அவர்கள் மருந்து சாப்பிட்டு நோய் தீரத் தீர மறுபடியும் மருந்து கொடுத்து வருகின்றார்கள். அவர்கள் கோடி கோடியாய் பணம் கேட்கவில்லை. 

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் என பல உண்மைச் சம்பவங்களை எழுதி இருக்கிறேன். தொடர்ந்து எழுத நினைத்தேன். முடியவில்லை. ஏனென்றால் அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாத கொடூரங்கள் கொண்டவை. என்ன தங்கம் இப்படி எழுதுகின்றாரே நம்பவா முடியும் என்று நீங்கள் கேட்பீர்கள். உதாரணம் சொல்கின்றேன்.

இரண்டு பெண்கள். இரண்டு அதர்மம். நடந்தது என்னவென்று மஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் படித்துக் கொள்ளுங்கள். முடிவு என்ன? பேரழிவு நடந்தது அல்லவா? 

இப்போது தர்மம் நின்று கொல்லாது. அன்றே கொல்கிறது! 

சித்தர்கள் பெயரைச் சொல்லி பொருள் பறிப்போர் சித்தர் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிந்து கொள்ள இப்பதிவினை எழுதியிருக்கிறேன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.