குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, September 14, 2016

கிட்டி

கிட்டி என்றவுடன் கிட்டிப்புள் என்று நினைத்து விடாதீர்கள். இது வேறு. இது ஒரு கொலைகார ஆயுதம். மாட்டினால் உயிர் நிச்சயம் போய் விடும். இரக்க உணர்வே இல்லாமல் இதுவரையில் கோடிக்கணக்கான உயிர்களை பலி கொண்டிருக்கிறது இந்த ஆயுதம். அப்படி என்ன ஆயுதம் அது என்று நினைப்பீர்கள்.

இதோ இந்த புகைப்படத்தைப் பாருங்கள். ( கிட்டியில் சிக்கிய எலிகள் )

வீட்டில் நூறு கிட்டிக்கு மேல் இருந்தது. பின்னர் கொக்கு பிடிப்பதற்கு என்று தனி வலையொன்று இருந்தது. எல்லாம் வீணாகப் போய் விட்டன. கதிர் பால் பிடித்து நிற்கையில் இந்த எலிகள் நெல் மணிகளை கடித்து குதறி விடும். அதற்காக வயல் வரப்புகளில் உளுந்தை நட்டு வைப்போம். அது காய் பிடிக்கையில் எலிகள் தொந்தரவு கொஞ்சம் குறையும். இருப்பினும் வருடா வருடம் இந்தக் கிட்டியை வைத்து எலிகளைக் கொல்வது வழக்கம்.

காவிரியில் தண்ணீர் வராது. வந்தாலும் போதாது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்ற நிலையில் சாப்பாட்டுக்கு நெல் வருமா என்றும் தெரியவில்லை.

காவிரி நதி நீர் ஒப்பந்தம் 1824ல் கையெழுத்து இடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1974ம் ஆண்டு காலாவதியானது. அதற்கு முன்பு வரை பங்கீட்டில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. மேற்கண்ட ஒப்பந்தத்தை நீடிக்க முயற்சித்த போது கர்நாடகா எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதுமட்டுமல்ல அப்போது இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது. காமராஜர் ஆட்சியிலிருந்தார். அப்போதே இந்த ஒப்பந்தத்தை நீடித்திருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிருக்கவே முடியாது. அதை அனைவரும் மறந்து விட்டனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் காவிரி நதீ  நீர் பங்கீட்டுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஆண்டிற்கு 393லிருது 414 டிஎம்சியும், கர்நாடகாவிற்கு 239லிருந்து 261 டிஎம்சியும் வழங்கும்படி உத்தரவிட்டிருந்தார். அதையும் கர்நாடகா மறுத்து விட்டது.

1991 அன்று காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிற்காக முன்னாள் கர்நாடகா முதல்வர் பங்காரப்பாவும், வட்டாள் நாகராஜ் மற்றும் மறைந்த நடிகர் ராஜ்குமார் ஆகிய மூவரும் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் மிகப் பெரும் வன்முறையை தூண்டி நடத்தினார்கள். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

2007ம் வருடம் பிப்ரவரி மாதம் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் முயற்சியினால் காவிரி ஆணையம் தமிழகத்து 419 டிஎம்சி தண்ணீரையும், கர்நாடகாவிற்கு 217 டிஎம்சி தண்ணீரையும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரையும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அன்றைக்கும் கர்நாடகா தண்ணீர் தர மறுத்தது. 

இதற்கிடையில் கபினி, ஸ்வர்ணாவதி, கேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளை கர்நாடகா கட்டி காவிரி நீரினைத் தேக்கி வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காமல் உபரி நீரை மட்டும் வெளியேற்றி வந்து கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் போராடி தீர்ப்பு பெற்று வந்திருக்கிறார் நம் முதலமைச்சர். எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்தன. நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. பல தீர்ப்புகள் உத்தரவுகள் வழங்கப்பட்டன. இருந்தாலும் காவிரி நதி நீரைப் பங்கிடுவதில் கர்நாடகா செய்யும் செயல் அட்சர சுத்தமான சட்ட மீறல் என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் வேண்டியதில்லை. பேச்சு வார்த்தையில் நீதி கிடைத்தும் அதை கர்நாடகா நிறைவேற்றவில்லை என்கிற போது கோர்ட்டை நாடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?

தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழர்களின் சொத்துக்கள் சூரையாடப்படுகின்றன. அகதிகளாக தமிழகம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இனி என்ன நடந்து சரியாகப் போகின்றது எனத் தெரியவில்லை. இனி யார் சொல்லி கர்நாடகா கேட்கப்போகின்றது என்றும் தெரியவில்லை. தீர்ப்புச் சொன்னால் அதை நிறைவேற்றுவது போல நிறைவேற்றுகின்றார்கள். ஆனால் அடுத்த பக்கம் அழிக்கின்றார்கள். இது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது வைக்கப்படும் தாக்குதல் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

தமிழகத்தில் கலவரம் ஏற்பட நம் அரசு அனுமதிக்கவில்லை. கடும் நடவடிக்கைகளை எடுக்கிறது. நாம் நம் கடமையைச் செய்வோம். பாரதப் பிரதமர் இருக்கிறார், நீதிபதிகள் இருக்கின்றார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. 

ஆனானப்பட்ட எத்தனையோ அக்கிரமங்களைச் செய்தோர் கதி என்ன என்று வரலாறு பக்கம் பக்கமாய் பதிவு செய்திருக்கிறது. இனி என்ன சொல்ல இருக்கிறது? 

கிட்டிகள் இனி எலியைப் பிடித்து தான் ஆக வேண்டும். ஆனால் எலிகளுக்கு உணவு?


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.